Tuesday, August 28, 2007

சா பாலோ நோக்கி

பிரேசிலுக்கு போவது முதல் தடவை இல்லையென்றாலும், போகும் வழி புதிது: மும்பை- ஜொகனஸ்பர்க்-சா பாலோ.

சென்னையிலிருந்து ப்ரான்க்பர்ட் அல்லது லண்டன் சென்று அங்கிருந்து சா பாலோ செல்லலாம். ஆனால் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ இரண்டுமே நரகங்களாகிவிட்ட இந்த நாட்களில் இவற்றை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கிறேன். எனவே, எனது பயண அமைப்பாளர், ட்ராவல் மாஸ்டர்ஸின் சயனம் புதிய வழியை பரிந்துரைத்த போது அது மும்பை வழி என்பதை பொருட்படுத்தாமல் சரி சொன்னேன். மும்பையில் தங்க வேண்டிய 8 மணி நேரத்தைக் கணக்கில் சேர்க்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா மூலமாக பிரேசில் செல்வது, ஐரோப்பா செல்வதை விட தூரமும் நேரமும் குறைவு.

மும்பையிலிருந்து ஜொகனஸ்பர்க் ஆறாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் எட்டு மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க்கிலிருந்து சா பாலோ ஏழாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் ஒன்பது மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இடைத் தங்கல். சகல வசதிகளோடும், குறைவான நெரிசலுடனும், நட்புடன், இனிமையாகப் பேசும் தென்னாப்பிரிக்கர்களுடனும் இருக்கும் ஜொகனஸ்பர்க் விமான நிலையம் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ, பாரிஸ் டீகால் மூன்றையும் விட ஆயிரம் மடங்கு உயர்வு.

இப்போதுதான் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க ஏர்வேய்ஸைப் பயன்படுத்துகிறேன். பொழுதுபோக்கு என்ற ஒன்றை மட்டும் தவிர்த்து, மற்ற அத்தனை அம்சங்களிலும் ஐரோப்பிய, அமெரிக்க விமான சேவைகளை விஞ்சுகிறது இந்த ஏர்வேய்ஸ்.

மும்பை- ஜொகனஸ்பர்க் விமானம் கால்வாசி காலியாக இருந்தது வசதியாக இருந்தது. ஜொகனஸ்பர்க்-சா பாலோ நிறைந்திருந்தது. எனக்கு பக்கத்தில் குண்டூரிலிருந்து வந்து பங்களூரு கோவான்சிசில் பணிபுரியும் பிரசாத், அவர் சமீபத்தில் மணமுடித்த அதே கோவான்சிசை சேர்ந்த லதா. இருவரும் இரண்டாண்டுகளுக்கு பெருவில் பணியாற்றப் போகிறார்களாம். பெரு தலைநகர் லிமாவில் உள்ள ஃபிடலிட்டி வங்கி இவர்களது நிறுவனத்தின் மென்பொருளை வாங்கியிருக்கிறதாம். அது தொடர்பான சேவை விவகாரத்திற்காக செல்கிறார்களாம். “ஸ்பானிஷ் தெரியுமா?” என்றதற்கு “பொக்யிட்டோ” (ரொம்பக் கொஞ்சம்) என்று சிரித்தார் பிரசாத். பெரு மாதிரி ஒரு நாட்டில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தால் ஸ்பானிஷ் தானாக வந்துவிடும்.

சா பாலோ விமான நிலையம் பிரமாண்டமானது. ஒரு கணிசமான நடைக்குப் பின்னர் குடியுரிமை சோதனைக்கு வந்தோம். பிரேசிலின் குடியுரிமை சோதனை ரொம்ப எளிமையானது. பிரேசில் நாட்டவராக இருந்தால் ஒருவர் நின்று கடவுச் சீட்டை பரிசோதிக்கிறார். ஆளின் முகத்தையும், கடவுச் சீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிடுகிறார். பிறகு நட்பாகவோ, தமாஷாகவோ ஏதாவது பேசிக் கொண்டே அனுப்பி விடுகிறார். வெளிநாட்டினர் மட்டும் வரிசையில் நின்று, அதிகாரிகளிடம் சென்று சோதிக்கப்பட வேண்டும். அதிலும், மற்ற தென்னமரிக்க நாடுகளில் செய்வது போல் இந்திய பாஸ்போர்ட் என்றால் ஒரு வித சந்தேகத்துடன் ஆராய்வது எல்லாம் கிடையாது. கடவுச் சீட்டையும், விசாவையும் துரிதமாக சரிபார்த்து விட்டு, புன்னகையுடன் ஒரு சீல். அவ்வளவுதான்.

அலுப்பு தட்டிய சிவாஜி

27 ஆகஸ்ட் 2007 அதிகாலை 2 மணி
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

இரண்டாண்டுகளுக்கு முன் இந்த விமான நிலையத்தை உபயோகப்படுத்தும்போது ஏற்பட்ட சில்லறை சிரமங்களால், இதைத் தவிர்த்து விட்டு சென்னை வழியாகவே வான் பயணம் மேற்கொள்ளுவதை நாடி வந்திருக்கிறேன். இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் மறுபடியும் மும்பை.

கடந்த முறைக்கு மும்பை விமான நிலையத்தில் சில, நல்ல மாற்றங்கள். நெரிசல் குறைந்தது போலிருக்கிறது. கடந்த முறை கைப்பைகள் பரிசோதிக்கும் வரிசையில் 50-60 பேர். அவர்களில் பந்தா துளிகூட காட்டாது பொறுமையாக நின்றிருந்த ரத்தன் டாட்டாவும் உண்டு. இம்முறை குடியுரிமை சோதனையில் கூட கூட்டமில்லை. பதினாறு அதிகாரிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் போய் நின்றவுடன் அழைத்தார்கள். என்னை சோதித்த நீலப் புடவை உடுத்திய பெண் அதிகாரி என்னையும், என் கடவுச் சீட்டையும் ரொம்ப சந்தேகமாக பார்த்தார். பல கேள்விகள் கேட்டார். திருப்தியில்லாமல்தான் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதித்தது போல் தோன்றியது.

சிவாஜியின் பயணிகள் காத்திருப்பு கூடம் மகா விசாலமாக இருக்கிறது. வசதியற்ற நாற்காலிகளில் பலர் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். பார்த்தவுடன் பசியடங்கி விடும் வகையில் காட்சியளிக்கும் சாண்ட்விச்களையும், அக்காமாலா பானங்களையும் விற்கும் இரு கடைகள், டாலரை 39.75 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, அதையே 44.50 ரூபாய்க்கு விற்கும் இரு அந்நிய செலாவணிக் கடைகள், சுங்கவரி விலக்கு பெற்ற பொருட்களை விற்கும், கொஞ்சமும் ஆர்வத்தைத் தூண்டாத இரு கடைகள் – இப்படி பயணிகளோடு சேர்ந்து அரைத் தூக்கத்திலிருக்கிறது விமான நிலையம். கடந்த முறை ஏற்பட்ட எரிச்சல் மாறி, இந்த முறை அலுப்புதான் தட்டியது.

அடுத்த முறையாவது இந்த விமான நிலையம் நல்ல அனுபவத்தை தரலாம் என்ற நம்பிக்கையோடு விமானம் நோக்கி நடந்தேன்.

Saturday, August 25, 2007

கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

கி. ராஜநாராயணன் அவர்களது கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்க தொடங்கியது பற்றி இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்திய பயணங்களின் போது அதை எடுத்துச் சென்று வாசித்து முடித்து விட்டேன்.

கி.ரா. கட்டுரைகள் என்ற தலைப்பில் அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இத் தொகுப்பு 487 பக்கங்கள் கொண்டது. முதல் பதிப்பு 2002ல் வெளியாகியிருக்கிறது. 275 ரூ.

கி.ரா. கடந்த சுமார் 46 வருடங்களாக ஆக்கிய பல படைப்புகளை கோர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். கட்டுரை என்று தலைப்பில் இருந்தாலும் சில படைப்புகள் கதை வகை. உதாரணம்: பிள்ளையார்வாள். ஏற்கனவே சொன்னபடி முக்கால்வாசிக் கட்டுரைகளிலே ஏதாவது ஒரு கதையாவது இருக்கும். நூலின் இறுதியில் அமைந்திருப்பது ஒரு நீண்ட நேர்காணல். “பஞ்சுவின் கேள்விகளும் கி.ரா.வின் பதில்களும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த அத்தியாயம் எங்கே, எப்போது செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் இல்லை. இது இந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு குறை. சில படைப்புகளில் எந்தக் கால கட்டத்தில் எங்கே வெளியானது என்ற குறிப்புகள் இல்லை. இன்னொரு குறை இப்படைப்புக்களை தொகுத்தவர்கள் என்ன அடைப்படையில் அவற்றை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் என்று யூகிக்க முடியவில்லை. சில படைப்புகள், உதாரணமாக தி.க.சி. அவர்களைப் பற்றிய குறிப்புகள், வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மற்றவை காலம், பொருள் தவறி ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.

வெகுஜன வாசிப்பின் மூலமாக கி.ரா.வை தெரிந்து கொண்ட என் போன்றவர்களுக்கு இந்த தொகுப்பு கி.ரா.வின் சிந்தனைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை தெரியப்படுத்துகிறது. 1970ல் தீவிர பொதுவுடமை சித்தாந்தத்தின் உச்சக்கட்ட கிடுக்கிப்பிடியில் அவருக்கு பிச்சைக்காரன் கூட லெனினை நினைவு படுத்துகிறான் (“நமக்கு இப்போது ஒரு லெனின் வேண்டும்” பக்கங்கள்: 88-92). பிறகு (எப்போது என்று தெரியவில்லை), தி.க.சி.யைப் பற்றி எழுதும் போது இப்படி எழுதுகிறார் (பக்கம் 359):

“நாங்கள் அவரோடு பழகிய காலத்தில் எங்கள் மண்டைக்குள்ளேயும் ஒரு “பண்ணிக்குட்டி” இருந்தது; அரசியல்ப் பண்ணிக்குட்டி! திறந்த மனசோடு நாங்கள் அவரை அணுகவிடவில்லை அது. … இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரொம்ப.”

இருப்பினும், வாழ்வைப் பற்றி; மக்கள் கலைகளைப் பற்றி, அதிலும் குறிப்பாக இசையைப் பற்றி, மக்களின் மொழிகள்; பழக்க வழக்கங்கள் பற்றி; கி.ரா.வின் ஆவல், அவற்றை எழுத அவர் தேர்ந்தெடுத்த நடை, அவற்றை சொல்வதிலுள்ள நேர்மை ஆகியவை இறுதி வரை மாறவில்லை. நமக்குள் இருக்கும் ரசிகனைத் தட்டியெழுப்பி, தனது ஆத்மாவை திறந்து காட்டி, நமது வரவேற்பரையிலோ, சாப்பாடு மேசையிலோ அமர்ந்து பேசுவது போல சுலபமான மொழியிலே பேச இவரைப் போல் எவருண்டு என்றுதான் தோன்றுகிறது கி.ரா.வின் கட்டுரைகளை மூடி வைக்கும் போது.

இப் புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள் வெறும் வாசிப்பு சுகத்திற்கு மட்டுமின்றி. பல வாழ்வியல் பாடங்களும் இவற்றில் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று “முதுமக்களுக்கு” என்ற கட்டுரை (பக்கம் 347-353). இதில் பொய்யாளி நாயக்கர் என்று ஒருவர் வருகிறார். கண் ரெப்பைகள் நரைத்த வயோதிகரான இவருக்கு ஒன்பது பிள்ளைகள். திருமணத்திற்குப் பின் பிள்ளைகளை கண்டிப்பாக தனிக்குடித்தனம் செய்ய அனுப்பி வைத்தவர். சொத்தை பத்துப் பங்கு வைத்து பிள்ளைகளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு தனக்கும் மனைவிக்குமாக ஒரு பங்கு வைத்து வாழ்பவர். பிள்ளைகள் கூட இருந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு, “பிள்ளைகங்கிறது சொத்துக்கும் வாரீசுக்கும்தான்; பாசத்துக்கு இல்ல” என்பவர். பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் பாசமானவர்கள் என்பது இவரது கருத்து. இதைப் பற்றி கேட்கும் போது பாச உறவு என்பது செடியின் வேரைப் போல் கீழ் நோக்கித்தான் போகும்; தண்டைப் போல் மேல் நோக்கிப் போகாது என்கிறார். அதையே விளக்கமாக “நீ உன் பிள்ளைக பேர்ல பிரியமா இருக்க; அது போல அவங்க தன்னுடைய பிள்ளைக பேர்ல பிரியமா இருக்காங்க. அது – அந்தப் பிரியம் – உன்னெ நோக்கி வராது. இதுதான் நெசம்” என்கிறார். கூடவே இவரது தத்துவங்கள் கி.ரா.வின் மொழியிலேயே:

-- பிள்ளகயிட்ட ரொம்பத்தான் செல்லங் கொஞ்சக்கூடாது பாத்துக்க. “தேனைத் தொட்டயோ, நீரைத் தொட்டயோ’ன்னு இருக்கணும் பாத்துக்க.

-- இந்தச் சொத்தெல்லாம் ஒனக்குத்தான், இந்த வீடெல்லாம் ஒனக்குத்தாம்னு எந்த அப்பன், ஆத்தா பிள்ளைகயிட்டச் சொல்லுதாங்களோ அந்த அப்பனையும், ஆத்தாளையும் கட்டாயம் அந்த வீட்டெ விட்டுத் துரத்தாம இருக்க மாட்டாங்க.

-- நா எப்படிக் கஷ்டப்பட்டு இந்த வீட்டெக் கட்டுனனே நாங்க எப்படி அரும்பாடு பட்டு இந்தச் சொத்தெச் சேத்தமோ இது போல சம்பாதிச்சு வீட்டெ நீங்க கட்டிக் கிடணும்னு சொல்லணும்

-- கஷ்டத்தச் சொல்லி பிள்ளெகள வளக்கணும். “நா இருக்கும்போது உனக்கென்னடா”ன்னு பிள்ளைகள வளக்கிற அப்பனும் ஆத்தாளும் கடைசிக் காலத்துல நிம்மண்டு நாயக்கரும் பெஞ்சாதியும் பிச்சை எடுத்து செத்தது போலத்தான் சாக வேண்டி வரும்.

பல குடும்பங்களில் நடப்பவற்றைப் பார்க்கும் போது பொய்யாளி நாயக்கர் சொன்னது 100க்கு 100 உண்மை என்றுதான் தோன்றுகிறது.

பி.கு: கடந்த சென்னை புத்தக விழாவிலே கி.ரா.வைத் தாத்தா என்று அடைமொழி கொடுத்து விளித்திருந்தார்கள். இந்தப் பட்டத்தை அவருக்கு யார் அளித்தது; அதை அவர் மனதாற ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் கி.ரா.வை தாத்தா என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு சமவயது நண்பராகத்தான் எனக்கு இருபது வயதிருக்கும் போதுதான் தோன்றினார். இருபதாண்டுகள் கழித்தும் அப்படித்தான் தோன்றுகிறது. அப்புறம் இந்த தாத்தா முறையெல்லாம் எதற்கு என்றும் புரியவில்லை. கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் ஒரு நாள்: செராங்கூன் ரோடு


சிங்கப்பூரின் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கப்படும் தமிழர்கள் நிறைந்த பகுதியை கீறிச் செல்லும் பிரதான சாலைதான் செராங்கூன் ரோடு. செராங்கூன் சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்தவர்களுக்கு பொருட்களை விற்கும் பலவிதக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. பல்வேறு வெள்ளைக்காரர்கள் பெயர்களைத் தாங்கிய செராங்கூனின் கிளைச் சாலைகளிலும் இந்தியக் கடைகள் மலிந்திருக்கின்றன. துணிகள், உடுப்புகள், நகைகள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பத்திரிகைகள், குறுந்தகடுகள், உணவகங்கள் என்று வரிசையாக கடைகள். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக முஸ்தஃபா காம்ப்ளெக்ஸ் என்றழைக்கப்படும் பேரங்காடி. சிங்கப்பூரின் புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலும் செராங்கூன் சாலையில்தான் உள்ளது.

நான் முதலும், கடைசியுமாக செராங்கூன் வந்தது 1989ல். பிறகு பலமுறை சிங்கப்பூர் வந்தாலும் செராங்கூன் வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது நண்பர் சிங்கப்பூரில் வேறு பகுதியில் வசித்ததால் செராங்கூன் வர முடியவில்லை. இப்போது பெராக் ஹோட்டலில் இருந்ததால் செராங்கூன் சென்று பார்க்க விரும்பினேன். சில சில்லறை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் தேவைப்பட்டன. முஸ்தாஃபா சென்று அவற்றைப் பார்வையிடவும் வேண்டியிருந்தது.

பெராக் ஹோட்டலில் இருந்து நடையாக சுங்கே வந்து செராங்கூனில் திரும்பும் போது ஒருவர் – ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இந்தியர் – வந்து முஸ்தாஃபா எங்கே இருக்கிறதென்று சொல்ல முடியுமா என்று கேட்டார். நானும் அங்கேதான் போக வேண்டும், எனக்கும் வழி தெரியாது, யாரிடமாவது கேட்போம் என்று அங்கிருந்த ஒருவரிடம் இரண்டு பேரும் வழி கேட்டு விட்டு நடந்தோம்.

அபிஷேக் – அதுதான் என் சக நடைபயணியின் பெயர் – திருவான்மியூரிலிருந்து வருகிறார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலயில் பொறியியல் படித்து விட்டு நேஷனல் யூனிவர்சிடி ஆஃப் சிங்கப்பூரில் பயோ எஞ்சினியரிங்கில் முனைவர் படிப்பு படிக்க வந்திருக்கிறார். இளங்கலையிலிருந்து நேராக முனைவர். முனைவர் பட்டம் பெற நான்காண்டுகளாகுமாம்.

செராங்கூனில் முஸ்தஃபா பேரங்காடியை நோக்கி செல்லும் பாதையில் கடந்த 16 ஆண்டுகளிலும் பெரியதாக மாற்றம் ஏதும் இருப்பதாகப்படவில்லை. முஸ்தாஃபா காலத்திற்கேற்ப பெரிதளவு மாறியிருக்கிறது. கடையை பெரிய அளவில் விரிவுபடுத்தி, தளம் தளமாக, எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி காய்கறி, மளிகை வரை அத்தனையையும் வைத்திருக்கிறார்கள். எனக்கு அங்கு வாங்க வேண்டியது மிகவும் குறிப்பாக சில பொருட்கள். அவற்றை வாங்கிக் கொண்டு நகர ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆயிற்று.

வெளியில் வந்ததும் பசித்தது. முஸ்தஃபாவை சுற்றி, சுற்றி சாப்பாட்டுக் கடைகள்தான். உடுப்பி, செட்டிநாடு, பிஸ்மில்லா பவன்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, வயிறு பஞ்சாபி உணவு கேட்டது. முஸ்தாஃபின் செராங்கூன் சென்டருக்கு அடுத்துள்ள தந்தூரி ரெஸ்டாரண்டை முயற்சித்தேன். கொடுத்த 34 வெள்ளிகளுக்கு சாப்பாடு சுமார்தான்.

திரும்பி வரும் வழியில் குறுந்தட்டுக் கடை ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கவே உள்ளே ஏறுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பர்தா அணிந்த ஒரு பெண்மணி ரொம்ப நட்பாக “என்ன படம் வேணும், புதுசா, பழசா?” என்றார்.

“புதுசு”

“டிவிடியா, விசிடியா?”

“டிவிடி”

ஒரு வரிசையைக் காண்பித்தார்.

“பருத்திவீரன்”

போனசாக பம்மல் கே சம்பந்தமும் இருக்கும் டிவிடியைக் கொடுத்தார்.

“போக்கிரி வேணுமா?”

“ம்ஹூம்”

“வரலாறு?”

“ம்ஹூஹூம்”

இவரை விட்டால் ஹூக்களை அதிகப்படுத்தும் படங்களைத்தான் அடுக்குவார் என்பதால் “பிரகாஷ்ராஜ், ஜோதிகா படம்…..”

“பச்சைக்கிளி முத்துச்சரம்?”

நினைவுக்கு வந்துவிட்டது. “இல்லை, மொழி”

"அது டிவிடியில் இல்லை. விசிடியில் இருக்கிறது"

தயங்கினேன்.

“நல்ல சுத்தமான பிரிண்ட்”

“சரி கொடுங்க”

இதற்குள் இன்னொருவர் வந்து “புதுசாக என்ன வந்திருக்கிறது?” என்றார்.

“எல்லாம் இருக்கு. ஆனால் சிவாஜி இன்னும் வரவில்லை. இந்த வாரக் கடைசியில் ரிலீஸ் பண்ணுகிறார்களாம்”

நான் எனது தகடுகளுக்கான 25 வெள்ளியைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். 650 ரூபாய்கள். ஆனாலும் இது சட்டபூர்வமான சரக்கு. சிங்கப்பூர் தணிக்கைக் குழு பார்த்து, "பருத்திவீரன்" 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாமென்றும், "மொழி" பெற்றோர்கள் துணையோடு குழந்தைகள் பார்க்கலாமென்றும், அளித்த ஒப்புதல் ஸ்டிக்கர் ஒட்டிய சுத்தமான சரக்கு.

சிங்கப்பூரில் ஒரு நாள்: பெராக், பெராக், பெராக்


சிங்கப்பூர் செல்வது இது முதல் முறை இல்லை. என்றாலும் சில புதிய அனுபவங்கள்.

முதலாவது தங்குமிடம். இது வரை சிங்கப்பூரில் தங்குமிடம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஒரு நெருங்கிய நண்பர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் வீட்டில் தங்குவதை தவிர வேறு எதையும் அனுமதிக்க மாட்டார். இப்போது நண்பர் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதால் தங்குமிடம் ஒன்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பு என் தலையில். வழக்கம் போலவே அந்தப் பொறுப்பை நான் கடைசி நிமிடம் வரை தட்டிக் கழித்தேன். புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னர்தான் பண்டாரிலிருந்து ஹோட்டல் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிய வந்தது சிங்கப்பூரில் முக்கால்வாசி விடுதிகள் நான் தங்க வேண்டிய நாளன்று முழுமையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன என்று. வேறு வழியில்லாமல் எக்ஸ்பீடியா.காம்-ஐ நாட வேண்டியதாயிற்று. எக்ஸ்பீடியா காண்பித்த 7-8 ஹோட்டல்களில் ஒன்றே ஒன்றுதான் அமெரிக்க டாலர் 200க்கும் குறைவு. அந்த ஹோட்டலின் பெயர்: பெராக் ஹோட்டல். லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் செராங்கூன் பகுதியில் உள்ளது என்றும், அங்கு ஏற்கனவே தங்கியவர்கள் இதற்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கி கவுரப்படுத்தியிருந்ததாலும் இங்கேயே தங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

சிங்கப்பூரில் வாடகை ஊர்தியில் ஏறியதும் வாகன ஓட்டியிடம் “பெராக் ஹோட்டல்” என்றேன்.

“அப்படியா, அது எங்கே இருக்கிறது?”

நான் – “பெராக் ரோடு என்று போட்டிருந்தார்கள்”

அவர் – “கேள்விப்பட்டதில்லை”

நான் – “செராங்கூன் சாலை பக்கத்தில் என்று படித்தேன்”

அவர் – “செராங்கூன் ரொம்ப நீளமான சாலை”

இப்படிச் சொன்னவர் வாகனத்தில் இருக்கும் திசைகாட்டியை இயக்கி பெராக் ரோடைத் தேட அங்கும் அது இல்லை. இதற்கிடையில் நான் கணிணியத் திறந்து, ஹோட்டல் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து அவரிடம் சொல்ல, செல்போன் மூலமாக ஹோட்டலைத் தொடர்பு கொண்டு இடத்தைக் கண்டுபிடித்தார்.

இத்தனைக்கும் பெராக் ரோடு ஒதுக்குப்புறம் என்று சொல்ல முடியாது. ஜலன் பெசார் (Jalan Besar) என்கிற பிரதான சாலையும், சுங்கேய் (Sungei) என்கிற இன்னொரு பிரதான சாலையும் சந்திக்கும் இடத்திலிருந்து சுங்கேயில் மேற்கு நோக்கி சென்றால் முதலாவது வலது புறத் திருப்பம்தான் பெராக் ரோடு.

பெராக் ஹோட்டல் “பெராக் லாட்ஜ்” என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓரளவு பெயர் வாய்ந்த விடுதியாக இருந்திருக்கிறது. இடையில் தொய்ந்து, பழையதான ஹோட்டலை இப்போது புதுப்பித்திருக்கிறார்கள். சுவர்களை சரிசெய்து வண்ணம் பூசி, அறைகளுக்கு மிகையில்லாத உள் அலங்காரங்கள் செய்து, மரப்பலகைகள் வேய்ந்த தளங்களை மீண்டும் பளபளப்பாக்கி, தேவைப்படும் இடங்களில் சிவப்பு தள ஓடுகள் பதித்து – மொத்தத்தில் ஒரு ஆடம்பரமில்லாத, ஆனால் தூய்மையையும், எளிமை துலங்கும் ஒரு வித கலையுணர்வையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அறைகளின் அளவுதான் அநியாயத்திற்கு சின்னது. நான் இருந்தது சுப்பீரியர் அறை. ஸ்டாண்டர்ட் அறையை விட சற்று பெரிது என்றார்கள். எனக்கு போதுமானது. இன்னொருவர் இருந்தால் இடைஞ்சலாக இருக்கலாம். கணவன்-மனைவி-குழந்தைகள் என்றால் கட்டாயம் முடியாது. ஆனால் ட்ரிப்பிள் ரூம் என்று பெரிய அறைகளும் உள்ளன.

இந்த இடத்திற்கு எக்ஸ்பீடியா என்னிடம் சுமார் வரிகள் உள்ளிட்டு 118 அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. நேரடியாக பதிந்தால் என்ன வாடகை என்றேன். சிங்கை டாலர்கள் 170 என்றார்கள். அது ஏறக்குறைய 110 அமெரிக்க டாலர்கள் வருகிறது. 2001-ல் 9/11க்குப் பிறகு பான் பசிபிக்கில் (சிங்கப்பூரின் 5 நட்சத்திர விடுதிகளில் ஒன்று) 100 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான வாடகையில் தங்கியிருக்கிறேன். இப்போது நிலைமை மாறி விட்டது. மறுபடியும் சிங்கப்பூரில் தங்குமிட தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.

சிங்கப்பூரில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்குபவர்களுக்கு, குறிப்பாக இந்திய உணவு சாப்பிட விரும்புவர்களுக்கு, முஸ்தாபாவில் பொருட்கள் வாங்க செல்கிறவர்களுக்கு, பெராக் ஹோட்டல் நல்ல தீர்வாக இருக்கும். ஆன் லைன் முன்பதிவு செய்யும் வசதியுடன் உள்ள பெராக் ஹோட்டலின் இணைய தளம்: www.peraklogdge.net.

Sunday, August 12, 2007

கடந்த வாரத்தில் தமிழ் பதிவுலகம்

தமிழ்மணத்தில் சேர்ந்தபின் பல தமிழ் பதிவுகளை அறிய நேர்ந்துள்ளது. பதிவுலகத்தின் மொழியும் மெல்ல, மெல்ல புரிந்து வருகிறது. கருவிப் பட்டை போன்ற சில சொற்கள் உடனே புரிந்து விடுகின்றன. பல மரமண்டையில் இறங்க நேரமாகின்றன. இளவஞ்சியிடம் “மறுமொழி” என்றால் என்ன என்று கேட்க வேண்டியதாயிற்று. “கும்மி” என்பது பாரதி பெண் விடுதலை பெற்றவுடன் அடிக்க சொன்ன வகையினது அல்ல என்று தெரிகிறது. ஆனால் “மொக்கை” – சவரன் செய்யும் வகையினதா என்பது தெளிவாகவில்லை.

கடந்த வாரம் தமிழ்மணம் சென்னையில் நடந்த பதிவர் வட்டக் கூட்டத்தில் மாலன் பேசிய பேச்சைக் குறித்த சர்ச்சைகளில் பரபரப்பாக இருந்தது. நானும் தமிழனல்லவா? எனவே இது போன்ற சர்ச்சைகளில், அதிகமாகப் புரிந்து கொள்ளாமல், ஆழமாகப் போகாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஏதாவது கூறவேண்டுமல்லவா? கூறி விடுகிறேன்.
கோபம், கண்ணீர், கேலி, கிண்டல், இயலாமை, தன் விளக்கம், சுய இரக்கம், கலப்படமில்லாத உளறல் கலந்த மாலன் சர்ச்சையின் இரு துருவங்களுக்குமிடையில் தெளிவாக புலப்படுவது ஒன்றே ஒன்று. அது நாம் விதிகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கும் அளவுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ள தீவிரமாக மறுப்பது.

முதலில் மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த கருத்துக்கள். இணையத்தில் நன்னடத்தை என்பது என்னைப் பொறுத்த வரை க்ரெடிட் கார்டு திருடாமலிருப்பது; ஸ்பாம் அனுப்பாமலிருப்பது. கருத்துக்களை சொல்வதில் நன்னடத்தை எங்கே வருகிறது என்று தெரியவில்லை. பதிய நினைத்ததை மட்டற்ற சுதந்திரத்தோடு பதிவதில்தான் இணையத்தின் பேராற்றலே இருக்கிறது. திரட்டியில் வருவதால் நீ எழுத நினைத்ததை எழுதாதே என்பதன் அடிப்படை ரொம்ப பலவீனமாக இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது அம்மணமாக இருக்க தயங்காதவன், மனைவி கூட இருக்கும் போது பெர்முடாஸ் தேடுவான் என்னும் வாதம் சிந்திக்க வைக்கிறது. ஆனால் சிந்தனையின் இறுதியில் என்ன தோன்றுகிறதென்றால்: பெர்முடாஸ் போடுபவர்கள் போடட்டும்; பெர்முடாஸ் போட விரும்பாதவர்கள் அப்படியே இருக்கட்டும்; ஏன் பெர்முடாஸ் போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள் கூட அப்படியே இருக்கட்டும். கோட், சூட் போட்டவன், வேட்டி கட்டினவன், லுங்கி அவிழ்ந்தது தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பவன், பெர்முடாஸ் போட்டாலும் நாடாவைக் கட்டாதவன் என்று அத்தனை பேருக்கும் சம வாய்ப்புகள் தரும் இடங்கள் இந்த உலகில் அதிகமில்லை. அவற்றில் இணையமும் ஒன்று. இதை மாற்ற யாரால் முடியும்? இந்த நிலைமைக்கு அஞ்சி சிலர் இணையத்தை புறக்கணிப்பது, பாறையை உதைத்த கழுதை காலாகத்தான் முடியும்.

மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த ஆழமற்ற வாதங்களை விட அவர் கூறிய இலங்கைத் தமிழர் பாஸ்போர்ட் விவகாரம் ஆய்பூய் ஆக்கப்பட்டிருக்கிறது. மாலன் பேச்சின் மூல உரையைப் படிக்கும் போது இது ஒரு பெரிய விவகாரமே அல்ல என்பது தெளிவாகிறது. கண்டனமல்ல, விமர்சனம் கூட அல்ல, ஒரு சாதாரண ஒப்பிடலைக் கூட தாங்க இயலாதவர்களும், அவர்களைத் தாங்கிப் பிடிப்பவர்களும் போடும் ஓலங்கள் பெரிதுபடுத்த தகுதியற்றவை. ‘நன்னடத்தை’ விதிகள் மூலம் இணையத்தின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தலாம் என்று ஒரு சாரார் கனவு கண்டால், கூக்குரலிடுவதன் மூலம் மாற்றுக் கருத்துக்களை கேட்காமல் பண்ணலாம் என்று மறு சாரார் எண்ணுகிறார்கள் போலும். இவ்விரண்டு குழுக்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் பதிவு செய்யும் இணையமோ அகழ்வார்ப் பொறுக்கும் பூமி போல் இருக்கிறது; இருக்கும்.

ப்ரூனே வந்தேன்


 

பிரிட்டிஷாரால் போர்னியோ என்றும் மலாய்காரர்களால் கலிமான்றான் என்றும் அழைக்கப்படும் தீவை மூன்று நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. வடக்குப் பாகத்தின் பெரும்பகுதி, கிழக்கு மலேசியாவின் சாரவாக், சாபா மாநிலங்கள். தெற்குப் பாகம் இந்தோனேசியாவின் கலிமான்றான். சாரவாக், சாபாவுக்கு நடுவில் ஒரு சிறு கீற்று ப்ரூனே. எரி எண்ணெயும், வாயுவும் கொழிக்கும் ஒரு சிறு நாடு.

பாலியிலிருந்து ப்ரூனேக்கு நேரடியாக விமான சேவை இருப்பது எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்தது. ப்ரூனேயின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சம் (கன்னியாகுமரி மாவட்ட ம.தொ.வில் நான்கில் ஒரு பங்கு). ப்ரூனேக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தொழில் சம்பந்தமாக செல்பவர்கள். பாலிக்கு செல்கிறவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பவர்கள். இதில் பாலிக்கும், ப்ரூனேக்கும் இடையில் விமானம் விடக் கூடிய அளவு பயணிகள் எப்படிக் கிடைக்கிறார்கள்; ஒரு வேளை ரொம்ப சின்ன விமானமாக இருக்கலாம். அல்லது, விமானத்தில் கூட்டமிருக்காது; ஹாயாக பயணம் செய்து கொண்டு போகலாம் என்ற நினைத்துக் கொண்டு விமான நிலையம் வந்தேன். இரண்டு கணிப்புகளும் தவறாக இருந்தது. ராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் இயக்கிய ஏர்பஸ் A320 விமானம் 150 பயணிகளை ஏற்றிச் செல்வது; முழுவதும் நிறைந்திருந்தது. பல வெள்ளைக்கார யுவதிகள் பாலியின் கடற்கரைகளில் அணிந்த உடுப்புகளை அதிகம் மாற்றாமலே விமானம் ஏறியிருந்தார்கள். ப்ரூனேயில் இவர்களை எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்ற கவலையோடுதான் பயணம் செய்தேன். பெரும்பாலான கவலைகளைப் போலவே இந்தக் கவலையும் தேவையில்லாதுதான் என்பது பிறகு தெரிய வந்தது.

பண்டார் செரி பெகவான் – இதுதான் ப்ரூனேயின் தலைநகர். சுருக்கமாக பண்டார் என்றழைக்கிறார்கள். பண்டார் விமான நிலையத்தில், விமானத்திலிருந்து வருகையை நோக்கிப் போகும் வழியில் பராக்கு பார்த்துக் கொண்டே (அல்லது எதையோ நினைத்துக் கொண்டே) செம்மறி ஆடாக எனக்கு முன்னால் சென்றவர்களோடு ட்ரான்சிட் தளத்திற்குள் நுழைந்து விட்டேன். தவறை உணர்ந்து திரும்பிப் போக எத்தனித்தால் கதவு ஒரு வழியாகத்தான் திறக்கும் என்று தெரிகிறது. அதாவது, உள்ளே வரலாம். வெளியே போக முடியாது. நல்ல வேளையாக கதவிற்கு அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒருவரை அழைத்து, கதவைத் திறக்க சைகை காட்ட, அவரும் மறுப்பேதும் சொல்லாமல் திறந்து விட்டார்.

பண்டாரின் வருகை தளம் காலியாக காற்றாடிக் கிடந்தது. குடியுரிமை சோதிப்பில் முக்காடு அணிந்த நான்கு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். எனது கடவுப் புத்தகத்தில் கலர், கலராக ரப்பர் ஸ்டாம்புகள் குத்தி அனுப்பினர். சுங்கவரிக்காரர் தூரத்திலிருந்தே கையசைத்து விட்டார் சோதனை தேவையில்லை என்று. ஆக மொத்தத்தில் நான் வந்த விமானத்தில் ப்ரூனே வந்தது 10 பேருக்கும் குறைவுதான். மற்ற பயணிகளெல்லாம் ப்ரூனேயிலிருந்து பாங்காக், சிங்கப்பூர், கோலாலம்பூர் என்று வழியிறங்கிச் செல்லும் பயணிகள் போல.

பண்டார் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரும் வழியிலெல்லாம் 10 அடிக்கு ஒரு முறை ப்ரூனே சுல்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு 61 வயது பிறந்த நாள் சமீபத்தில்தான் கொண்டாடினார்களாம். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனர்களை எல்லா இடங்களிலும் தொங்க விட்டிருந்தார்கள். அவரைப் பார்த்தால் 61 வயது என்று மதிக்க முடியாது. 20 வயது இளமையாகத் தெரிகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் வயதில் 30 குறைந்த ஒரு மலேசிய தொலைக்காட்சி அறிவிப்பாளரை இரண்டாவது மனைவியாக மணம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் உலகத்தின் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தவர். பில் கேட்ஸை கார்லோஸ் ஸ்லிம் முந்திவிட்ட இந்தக் காலத்தில் கொஞ்சம் பின் தங்கி விட்டார். அவருடைய தம்பி, இளவரசர் ஜெப்ரி, ப்ரூனே முழுக்க கட்டிடங்களை எழுப்புகிறேன் என்று கொஞ்சம் பில்லியன்களை ஆற்றில் போட்டு விட்டாராம். இருந்தாலும் சுல்தானின் இப்போதைய சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்களாம். ஐந்து அல்லது ஆறு சைபருக்கு மேல் கொண்ட எண்கள் அனைத்துமே என் மூளையை மழுங்கடித்து விடுவதால் 10 பில்லியன் டாலர் என்பது ரூபாயில் எத்தனை என்றெல்லாம் எழுத விரும்பவில்லை. ஒரு டாலருக்கு 9000 ருப்பையா கொண்ட இந்தோனேசியாவில் மனக்கணக்காக கரன்சி மாற்றி, மாற்றி மண்டை காய்ந்து இப்போதுதான் வந்திருக்கிறேன்.

ப்ரூனே மக்கள் பொதுவாக எந்த விஷயத்திலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்று படுகிறது. நிதானமாக நடக்கிறார்கள்; பேசுகிறார்கள்; வண்டியோட்டுகிறார்கள். எப்போதும் ஒரு வித புன்னகை முகத்தில் தவழ்கிறது. கீழ் நிலைகளில் லஞ்சம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் திருட்டு போன்ற சிறு குற்றங்கள் பரவலாக நடைபெறுகின்றன. அரசாங்கம் விமரிசிக்கப்படுவதை விரும்பவதில்லை என்று இணையதளங்களில் படித்தேன். ஆனால், ப்ரூனேயைக் கடுமையாக விமரிசிக்கும் இணையதளங்களைக் கூட இங்கிருந்து அணுக முடிகிறது. எனவே, சீனா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது ப்ரூனேயில் இணைய சென்சார் கெடுபிடிகள் குறைவு என்றே நினைக்கிறேன்.

கலிமன்றான் தீவு தாவர, மிருக வளம் மிக்க ஒன்று. பசுமைமாறாக் காடுகள், சதுப்பு நிலக்காடுகள் எங்கும் செழித்து பரந்திருக்கின்றன. சாலையில் ஓரிடத்தில் 3-4 அடி நீளம் கொண்ட ஒரு உடும்பைக் (monitor lizard) காப்பாற்ற வாகனத்தின் சாரதி ப்ரேக் அடித்தார். நம்மூரில் முரண்டு பிடித்துக் கொண்டு வளரும் செம்பனைகள் (red palms) இங்கு காடுகளில் எங்கும் 30-40 அடிகள் வளர்ந்து நிற்கின்றன. பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் நீராவியில் நிற்பதைப் போன்ற வெப்பநிலை இருக்கிறது. காலை 8 மணிக்கு மேல் மாலை 7 மணி வரை வெளியில், அதிலும் வெயிலில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்க முடிவதில்லை.

பகலெல்லாம் கொடுமையான வெயில் அடிப்பதால் இரவில்தான் மனித நடமாட்டம் தென்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) இரவு கெடாங் மால் பக்கம் போகலாம் என்று நண்பர் ஒருவர் அழைத்துக் கொண்டு போனார். இரவு 9 மணி. கெடாங் மால் பகுதியில் வண்டியை நிறுத்த இடமில்லாத அளவுக்கு கூட்டம். ப்ரூனேயில் இருக்கும் நான்கு லட்சம் மக்களும் ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதிக்கு வந்து விட்டார்கள் போல. பசியோடு அரை மணி நேரம் பார்க்கிங் தேடி அலுத்துப் போய், வெளியே வந்து வேறு இடத்தில் சாப்பிட்டோம்.

ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஹாஜி ஹசன்னல் போல்க்கியா முசாய்தீன் வாதுல்லா, அதாவது இப்போதைய சுல்தானின் தந்தை ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஓமர் அலி மூன்றாவது சைபுதீனின் நினைவாக எழுப்பப்பட்ட மசூதியின் இரவுத் தோற்றமே மேலே கண்டது. ஆமாம், இந்த ஹிஸ் மெஜஸ்டியை தமிழில் எழுதுவது எப்படி: ராஜ ராஜ ராஜ மார்த்தண்ட ராஜ குல திலக ராஜ குலோத்துங்க ….?
Posted by Picasa

Saturday, August 11, 2007

உள்ளூர்பட்சிணி



தாவரபட்சிணி … தாவரங்களை சாப்பிடுபவர்

மிருகபட்சிணி … மிருகங்களை சாப்பிடுபவர்

உள்ளூர்பட்சிணி … உள்ளூரை சாப்பிடுபவர் அல்ல

உள்ளூரில் விளையும் தாவரங்கள், மிருகங்களை மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களைத்தான் உள்ளூர்பட்சிணி என்கிறார்கள். நம்மூரில் அப்படி பிடிவாதம் பிடிப்பவர்கள் இன்னும் வரவில்லை. அமெரிக்காவில் வந்து விட்டார்கள். ஆங்கிலத்தில் இவர்களது பெயர்: Locovore. பார்பரா கிங்சால்வர் (Barbara Kingsolver) என்ற ஒரு உள்ளூர்பட்சிணியும் அவரது குடும்பமும் எழுதியிருக்கும் “Animal Vegetable Miracle: A Year of Food Life”ஐ தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பார்பரா அம்மையாரும், அவரது குடும்பமும் அரிசோனா மாநிலத்தின் டூசோன் (Tucson) நகரத்திலிருந்து வர்ஜினியா மாநிலத்திற்கு நகர்ந்து ஒரு ஆண்டு முழுவதும் தங்கள் வீட்டுத் தோட்டத்திலும், சுற்றியுள்ள விளைநிலங்களிலும் உற்பத்தியாகும் உணவை மட்டும் உண்டு வாழும் அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதைவிட தங்கள் நம்பிக்கைகளை வாசகர்கள் தலையில் ஆழமாகத் திணித்து விட வேண்டும் என்ற முனைப்பு புத்தகத்தின் பக்கங்களெங்கும் துடிக்கிறது.

அமெரிக்காவின் உணவுப் பொருட்கள் விளையுமிடத்திலிருந்து, உண்ணப்படும் இடத்தை அடைய சராசரியாக 1000-1500 மைல்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காகும் எரி பொருள் செலவு ஊதாரித்தனத்தின் உச்சக்கட்டமாகும். எனவே உள்ளூர் விளைபொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது இவர்களின் நம்பிக்கைகளில்/வாதங்களில் ஒன்று.

உணவைப் பதப்படுத்தி தொலைதூரங்களுக்கு அனுப்பவது அந்த உணவின் சத்தைக் குலைக்கிறது. அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைப்பதை விட அதிக வருமானம் அதை பதப்படுத்தி, அனுப்பி, வியாபாரம் செய்யும் பெரிய நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கிறது. இப்படியாக வேறு சில வாதங்களும் கூடவே வைக்கப்படுகின்றன.

இந்த உள்ளூர்பட்சிணி வாதங்களில் சிலவற்றை ஏற்றுக் கொள்ளலாம்; சிலவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் நம் உணவுகள் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இம்மாதிரி புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.

சிறு வயதில் எங்கள் சமையலறையின் தலைமை நிர்வாகி எங்கள் ஆச்சி (அம்மாவின் அம்மா). அன்றாடம் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது, உணவுப் பொருட்களை வாங்குவது, ஒரு வேலைக்காரியின் ஒத்தாசையுடன் சமைத்து, பரிமாறுவது அனைத்தும் அவர்களின் அதிகாரத்திற்குக் கீழ்தான்.

காலை ஒரு 10 மணியளவில் ஒரு அகன்ற பனையோலைக் கூடையில் காய்கறிகளைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி வருவார். அந்தக் கூடையில் என்னென்ன இருக்கும் என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் ஆச்சி குறிப்பாக சில பக்கத்து ஊர் காய்கறிகளைப் பற்றி வினவுவது இன்னும் நினைவிருக்கிறது.

ஒன்று, தருவைக்குளம் தக்காளி. பருநெல்லிக் கனிகளை ஒத்த அளவிலும், வடிவிலும் இருக்கும் சிறு உருண்டையான தக்காளிப் பழங்கள். இவை தருவைக்குளம் என்ற ஊரில் விளைந்தது என்று கணிக்கிறேன். எல்லா நேரங்களிலும் கிடைக்காது. நான் சிறுவனாக இருந்த போது மட்டுமே இந்தியாவில் இவற்றை சாப்பிட்டிருக்கிறேன். பிறகு, இது வரை இந்த வகைப் பழங்களை நம்மூரில் கண்டதில்லை. வெளிநாடுகளில் கிடைக்கும் செர்ரி தக்காளி வகை இதையொத்ததாக தோன்றுகிறது. ஆனால், நம்மூர் தருவைக்குளம் தக்காளிக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள இப்போது ஆவலாக இருக்கிறது.

இரண்டாவது, குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய். இளம் பச்சையாக, நடுத்தர அளவில், குண்டாக இருக்குமென்று நினைவு. காரல் இல்லாமல் ருசியாக இருக்கும் என்று ஆச்சி சொல்வார்கள். அவர்கள், இந்த மாதிரிக் காய்கறிகளை விசாரித்து, வினவும் விதமே அந்த காய்கறிகளுக்காக நாக்கில் எச்சில் ஊற வைத்து விடும். குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய் இன்னும் அந்த ஊரில் கிடைக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்.

இப்போது யோசிக்கும் போது அந்தந்த ஊர் காய்கறிகளை அங்கங்கே சாப்பிடும்போதுதான் சுவையாக இருக்கிறது. கோடை வந்துவிட்டால் சென்னை முழுவதும் மாம்பழங்கள் குவிந்து விடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பங்கனபள்ளி வகையைச் சேர்ந்தவை. சென்னையில் இருக்கும் வரை இந்த வகையின் தரத்தைக் குறித்து எனக்கு மேலான அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால், ஒரு முறை நெல்லூரில் இந்த வகையை சாப்பிட்டு விட்டு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டேன். பங்கனபள்ளி பழம் நெல்லூரில் இப்படி சுவைத்தால், அல்போன்சா ரத்தினகிரியிலும், இமாம்பசந்த் அது எங்கே விளைகிறதோ அங்கும் எப்படி சுவைக்கும் என்று எண்ணுகிறேன்.

காய்கறிகள், பழங்கள் மட்டுமல்ல, பால், மாமிசம், முட்டை, ஏன் மீன் வகைகளில் கூட இடத்திற்கு இடம் ருசி வேறுபடுகிறது. குமரி மாவட்டத்திற்கு குடி பெயர்ந்தபிறகு, சென்னையில் மீன் வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார், குமரி மாவட்டத்தில் கிடைக்கும் வஞ்சிரம் மீன்தான் இந்தியாவிலேயே ருசியில் சிறந்ததென்று. இன்னும் அதை சோதித்துப் பார்க்கும் தருணம் வரவில்லை. ஏனோ, வஞ்சிரம் மீனை மெச்ச என் நாவுக்கு முடியவில்லை.

நாஞ்சில் நாட்டு உணவுகளின் விற்பன்னராகிய நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையில் ஆரல்வாய்மொழியில் கிடைக்கும் தண்டங்கீரையைப் பற்றி கவிமணி ஒரு வெண்பாவே எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். நான் அந்த வெண்பாவையும் பார்த்ததில்லை. என் வீட்டிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் ஆரல்வாய்மொழியின் கீரையையும் பார்த்ததில்லை. ஆனால், ஆரல்வாய்மொழி அருகிலுள்ள ஒரு இடத்தில் கீரை விதை வாங்கி வீட்டில் விதைத்திருக்கிறோம். அது வாரமலர் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் ஒரு புதுக்கவிதைக்காவது தகுதியானதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
Posted by Picasa

Sunday, August 5, 2007

இந்த வாரம் முழுவதும் பாலியில்

புவியியலில் தட்டுத் தடுமாறுபவர்களுக்கு சிறு குறிப்பு: பாலி என்பது இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. இந்தோனேசியாவின் பிரதான தீவாகிய ஜாவா தீவிற்கு வடகிழக்கில் ஒரு சிறிய தீவு. காரில் ஒரு ஐந்து மணி நேரத்திற்குள் தீவை சுற்றி வந்து விடலாம். பவழப்பாறைகள் சூழ்ந்த தீவு. வெண்மணல் கடற்கரை. அடர்ந்த நீலக் கடல். எரிமலைகள் உமிழ்ந்த கரும்பாறைகள் பொடிந்து உருவான வளமான மண். வஞ்சகமில்லாமல் பெய்யும் மழை. விளைவாக எங்கும் பசுமை. கடவுள் ஓரவஞ்சனையாக சில இடங்களுக்கு எல்லாவித அழகையும் கொடுக்கும் வழக்கம் உண்டல்லவா. அதில் இதுவும் ஒன்று.

பாலியின் அழகைக் காண வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். கண்டால் மட்டும் போதாது என்று கண்டபடி கொண்டாட்டமும் போடுகிறார்கள். இப்படிக் கொண்டாட்டம் போடுபவர்களுக்கு குண்டு போட இந்தோனேசியாவின் மற்ற தீவுகளிலிருந்து தீவிரவாதிகள் வருகிறார்கள். இரண்டு தடவை வெடித்த குண்டுகளால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து இப்போது மறுபடியும் பெருகி வருகிறது. மழை குறைவான, மிதமான வெப்பம் கொண்ட ஜூலை-அக்டோபர்தான் இங்கு சீசன். அரைகுறை ஆடைகளோடு, கரையில் படுத்துறங்கவா, அலையில் சாகசம் செய்யவா, அடியில் மூழ்கி பவழப்பாறைகளைப் பார்க்கவா என்று வெள்ளைக்காரர்கள் திரிகிறார்கள். ஆங்காங்கே ஜப்பான், கொரிய, சீன சுற்றுலாப் பயணிகளும் உண்டு.

பாலியின் தெற்குப் பகுதியில்தான் பிரதானமான கடற்கரைகள் உள்ளன. நான் இம்முறை தங்கியது கிழக்கு நோக்கிய சனூர் கடற்கரை. கரையிலிருந்து ஒரு 300 மீட்டர்கள் தூரம் ஆழமில்லா கடல் (ஆனால் பாறைகள் அடியில் இருப்பதால் சுலபமாக கடக்க முடியவில்லை). அதன் பின்னர் திடீரென ஆழம் 30 அடிக்கு அதிகரிக்கிறது. அங்குதான் பவழப்பாறைகள் உள்ளன.

சனூர் தவிர நுசதுவா, ஜிம்பரன், குட்டா என்று பல கடற்கரைகள் உள்ளன. நுசதுவாவில் இரண்டாண்டுகளுக்கு முன் தங்கியிருக்கிறேன். நம்மூர் கன்னியாகுமரி போல் தென்முனை என்பதால் சுற்றிலும் கடலைப் பார்க்கலாம். ஜிம்பரனில் வரிசையாக உணவகங்கள் உள்ளன. எல்லா உணவகங்களிலும் உயிரோடு மீன், இறால், நண்டு வைத்திருக்கிறார்கள். எது வேண்டுமென்று தெரிவு செய்தால், எடை போட்டு, அவித்து, வறுத்து, பொரித்து, சுட்டு – உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி சமைத்து – பரிமாறுவார்கள். இந்தோனேசியர்களுக்கு மீனைச் சுட்டு, அதாவது grill செய்து சாப்பிடுவது பிடிக்கும் போல. ஜாவாவிலும் சரி, பாலியிலும் சரி எங்கு பார்த்தாலும் ‘இங்கு இக்கான் பக்கார் கிடைக்கும்” என்று போர்டுகள் கூப்பாடு போடுகின்றன. பஹாசா மொழியில் இக்கான் என்றால் மீன்; பக்கார் என்றால் சுடுவது என்பதாம். பசியோடு இருக்கும் போது சுடு சாதம், சம்பல் என்றழைக்கப்படும் சட்னி/பச்சடி கலவைகள், சூடான இக்கான் பக்கார் கொண்டா, கொண்டா என்று இழுக்கிறது.

குட்டாதான் பாலியில் பிரபல இடம். குட்டா கடற்கரையில் ஆதவன் மறையும் காட்சி அருமையாக இருக்குமாம். எனக்கு இது வரை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. குட்டாவில் இரவு கேளிக்கை விடுதிகள் பிரபலம். குண்டுகள் வெடித்தது இங்கேதான். இம்முறை ஒரு இரவு குட்டாவிலிருக்கும் ஒரு ஜப்பானிய உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம். இன்னொரு முறை பக்கத்திலிருக்கும் கொரிய உணவகத்திற்கு. அவ்வளவுதான் குட்டா அனுபவம்.

பாலியின் மையப்பகுதி முழுவதும் மலைப் பிரதேசம். ஒரு நாள் வடக்குப் பகுதியிலிருக்கும் சிங்கராஜா வரை செல்ல வேண்டியதாயிற்று. அடர்ந்த பசுங்காடுகளிக்கிடையில் ஊசிக் கொண்டை வளைவு சாலைகள் வழியாக மூன்றரை நேரப் பயணம். வழியெங்கும் இந்துக் கோவில்கள் தென்படுகின்றன.

பாலியின் இந்து மதம் இந்தியாவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். மந்திர தந்திரம், ஆவி, மூதாதையர் வழிபாடு, உயிர்ப்பலி என்று இந்து மதத்தின் பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கிறது. இதன் வரலாறு – குறிப்பாக இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வந்தது; எப்படி இந்தோனேசியா முழுவதும் பரவிய இஸ்லாமினால் பாதிக்கப்படவில்லை – எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி படித்து விட்டு எழுதுகிறேன். கடந்த ஆண்டு கம்போடியாவிலுள்ள அங்க்கோர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. சோழர்களின் பரம்பரையினர்தான் கம்போடியாவை ஆண்டதாகவும், அங்க்கோரில் தென்படும் பல கோவில்களை (அங்க்கோர் வாட் அவற்றில் புகழ் வாய்ந்த ஒன்று) வடிவமைத்ததாகவும் நமது பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்கள் கூறியதாக ஒரு மங்கலான நினைவு. ஆனால், நான் கம்போடியாவில் வாங்கிப் படித்த புத்தகமொன்றில் அது சோழர்களா, அல்லது ஒரிசாவிலிருந்து வந்தவர்களா என்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். கோவிலுக்குள் இருந்த கல்வெட்டில் ஐ, க, த, ப போன்ற எழுத்துக்களை கண்டுபிடித்து, எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடம் அவற்றை உச்சரிக்க சொல்லி கேட்டுக் கொண்ட போது அவர் அவைகளை ஐ, க, த, ப என்றே உச்சரித்தார். தென்மேற்காசியாவில் இந்திய கலாசார வரலாறு பற்றி தெரிந்து கொள்ள நல்ல புத்தகங்கள் இருந்தால் தெரிவியுங்கள். கையடக்கமான அளவில் இருந்தால் நல்லது.
Posted by Picasa

என் சமையலறையில்

கோழி முட்டையில் பிறந்ததுதான் என் சமையலறை அனுபவம்.

சிறு வயதில் … அநேகமாக 8-9 வயதிருக்குமென நினைக்கிறேன் … தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாக வேண்டும் என்ற சட்டம் எங்கள் வீட்டில் அமல்படுத்தப்பட்டு பலத்த எதிர்ப்பிற்கு உள்ளான நேரம். சட்டத்தின் கடுமையைக் குறைப்பதற்காக அந்த முட்டை நாங்கள் விருப்பப்பட்ட வகையில் சமைத்துக் கொள்ளப்படலாம் என்றும், நாங்களே அதை சமைத்துக் கொள்ளலாம் என்றும் இரு சலுகைகள் வழங்கப்பட்டன.

பச்சையாக பாலில் அடித்து …
அரைகுறையாக அவித்து, ஓட்டின் மேல் துவாரம் செய்து, உப்பும், மிளகும் போட்டு …
முழுவதாக அவித்து, இரண்டாக பிளந்து, உப்பும், மிளகும் தூவி…
முட்டையை உடைத்து ஊற்றி, திருப்பிப் போட்டோ, போடாமலோ பொரித்து எடுத்து …
அடித்த முட்டையில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து ஆமலெட்டாக பொரித்து, அல்லது கிளறி வறுத்து …

இப்படியாக பெரியவர்கள் முட்டை சமைக்கும் முறைகள் எங்களுக்கு அலுத்துப் போனதால், முட்டையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து பொரித்தாலென்ன என்று பரீட்சார்த்த ரீதியாக ஆரம்பித்து, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா மற்றும் கைக்கு கிடைக்கும் பதார்த்தங்களை சேர்த்து பல விஷப் பரிட்சைகளை நடத்தினோம். கடவுள் கிருபையால் உடலுக்கும் பொருளுக்கும் சேதம் விளைவிக்காத அந்த பரிட்சைகள் எப்போது முடிவுக்கு வந்தன என்பது நினைவில்லை.

இந்த முதல் அனுபவத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து, கல்லூரி நாட்களில் மீண்டும் கரண்டியைப் பிடிக்க நேரிட்டது. நான் படித்த மீன்வள அறிவியலில், சுமார் இரண்டு பருவங்கள் (அப்போதெல்லாம் ஒரு பருவம் என்பது மூன்று மாதங்கள் கொண்ட ட்ரைமெஸ்டர்) மீன் வகைகளை பல விதங்களில் பதப்படுத்துவது பற்றி படிக்க வேண்டும். உறைய வைப்பது (ஃப்ரீசிங்), டப்பாக்களில் அடைப்பது (கேனிங்) என்று பலவகையான முறைகளை கற்றுத் தருவார்கள். மீன்கள் தவிர இறால், நண்டு, சிப்பி வகைகள் (ஓயிஸ்டர், மசல்ஸ்), கணவாய் (ஸ்குயிட்) என்று பலவித கடலுணவுகளை தயார் செய்ய வேண்டி வந்தது. ஆனால், வீட்டில் மூன்று வேளை திவ்யபோசனம் கிடைத்து வந்ததால் சமையலறைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை.

அந்தக் கட்டாயம் ஏற்பட்டது இளநிலை முடித்து விட்டது முதுநிலைப் படிப்பிற்காக வெளிநாடு சென்ற போதுதான். நான் சென்றது ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்றழைக்கப்படும் ஏ.ஐ.டி. தாய்லாந்தில் பாங்க்காக்கில் இருக்கிறது. விமான நிலையத்திலிருந்து அழைத்துப் போன நண்பர் ஜான் தோமஸ் அன்று இரவு விருந்து என்று ஒரு தாய் உணவகத்திற்கு கூட்டிச் சென்று விட்டார். நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன, மிதப்பன என்று சகலவகையான ஜீவராசிகளையும் உள்ளடக்கிய சுவையான விருந்து அது. இந்திய, சீன உணவு தயாரிப்பின் மிகச் சிறந்த அம்சங்களை உள்ளடக்கியதுதான் தாய் உணவு என்றுதான் அன்று கருதினேன்; இன்று வரை கருதுகிறேன். அப்பாடா, நம்மூர் சாப்பாடு கிடைக்க விட்டால் கூட இந்த உணவை சாப்பிட்டு சமாளித்து விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் அன்று இரவு அறைக்கு திரும்பி வந்தேன், மறுநாளே அந்த நம்பிக்கை குலையப் போகிறது என்று தெரியாமலே.

ஏ.ஐ.டியில் மாணவர்களுக்கு இரண்டு வகையான உறைவிடங்கள் கொடுக்கப்பட்டன. தனித் தனி அறைகள் கொண்ட நான்கு மாடிக் கட்டங்கள், அல்லது தளமொன்றிற்கு மூன்று அறைகள் + வரவேற்பரை & சமையலறை கொண்ட இரண்டு தள அபார்ட்மெண்ட்கள். இந்திய துணைக்கண்டலத்திலிருந்து அங்கிருந்த மாணவர்கள் பெரும்பாலோர் அபார்ட்மெண்ட்களை நாடினர். காரணம் அங்கு நம் விருப்பப்படி சமையல் செய்து கொள்ளலாம். நம்மூர் சமையல் செய்து கொடுக்க அங்கு 4-5 தாய் பெண்களும் இருந்தனர். ஒரு பெண் 2-3 அபார்ட்மெண்ட்டில் சமைப்பது வழக்கம். பத்து மணிக்கு வேலையை ஆரம்பித்து சைவர்களின் அபார்ட்மெண்டில்: சாம்பார், பொரியல், ரசம்; அசைவம் சாப்பிடும் இடங்களில்: மீன், கோழி, நண்டு, இறால் என்று வரிசையாக ஆக்கி வைத்து விட்டு நாம் சாப்பிட வரும் போது காணாமல் போய் விடுவர். பிறகு மதியம் 3 மணிக்கு வந்து துவைத்து, இஸ்திரி போட்ட துணிகளை அறைகளில் வைத்து விட்டு, அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு போவார்கள். மாலை 4 மணிக்கு ராச்சமையல் ஆரம்பித்து விடுவார்கள். மாலை ஆறு மணிக்கெல்லாம் ஹாட் பாட்டில் சப்பாத்தியோ, பூரியோ, ஆலு பரோட்டாவோ, சித்ரான்னங்களோ தயாராக இருக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் ஒரு fairy tale போல நடக்கும் இந்த மந்திர, மாய சமையல் ஞாயிறு மட்டும் கிடையாது.

முதல் நாளிரவு சுவையான தாய் உணவை சாப்பிட்டு விட்டு, மறு நாள் ஞாயிறு பெரும் எதிர்பார்ப்புடன் ஏ.ஐ.டி.யின் உணவகத்திற்கு சென்ற எனக்கு கிட்டியது பெருத்த ஏமாற்றமே. முதல் நாள் நாங்கள் ருசித்து சாப்பிட்ட உணவு வகைகளையே ஏ.ஐ.டி. உணவகம் சகிக்க முடியாத சுவையில் ஆக்கியளித்திருந்தது. என்னோடு சாப்பிட வந்திருந்த நண்பர் வி.எம்.பி. என்றழைக்கப்பட்ட வி.எம். பாலசுப்பிரமணியம் (தற்போது ஓஹாயோ ஸ்டேட் பல்கலையில் உணவுத் துறையில் பேராசிரியராக இருக்கிறார்) சைவர். இந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு பேசாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதமும், தயிரும் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்படியாக மறுபடியும் சமையலறையில் மீண்டும் நுழைய ஒரு வாய்ப்பு கிட்டியது.

இதற்கிடையில் அங்கிருந்த தமிழ் குழாமில் ஏற்கனவே சமையல் தெரிந்தவர்கள் சில பேர் இருந்தார்கள். பி.கே என்றழைக்கப்பட்ட மல்லிகார்ஜீனன் பரமேஸ்வரகுமார் (இப்போது வர்ஜினியா டெக்கில் பேராசிரியராக இருக்கிறார்) மோர்க்குழம்பு வைப்பார். சென்னையிலிருந்து வந்திருந்த நாகேஷின் சிறப்பு வத்தக் குழம்பு + வெண்டைக்காய் பொரியல். எல்லாவற்றுக்கும் மேலே ‘தவசிப்பிள்ளை’ என்று சிறப்புப் பட்டம் கொடுக்கப்பட்டு, எல்லோராலும் அண்ணாச்சி அன்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி கணபதி (தற்போது திருச்சி வேளாண் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்). ஒரு மூட் வந்ததென்றால் சாம்பார், பொரியல், பச்சடி, துவையல் என்று சமைத்து, ஏ.ஐ.டி. பண்ணைக்கு சென்று வாழை இலை பறித்து வந்து விருந்தே போட்டு விடுவார்.

மேலே சொன்ன நண்பர்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்து நானும் சமையல் கற்று வந்தேன். ஆரம்பத்தில் பெரும்பாலும் சைவச் சமையல்தான். அப்புறம் அது அலுத்துப் போய், அசைவச் சமையல் முயன்று பார்த்தோம். கடைக்குப் போய் கோழி வெட்டி வாங்கி வந்தோம். கணபதி, நான், மற்றும் விருதுநகரிலிருந்து நண்பர் அரவிந்தன் (சமீபத்தில் சென்னை எஸ்.எஸ்.என் பொறியல் கல்லூரியில் கணிணித் துறை தலைவராக இருந்ததாக கேள்வி) மூவரும் வெட்டி, சுத்தம் செய்யப்பட்ட கோழியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அது தன்னை எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற முறையை சொல்லும் என்று எதிர்பார்த்தோமோ என்று தெரியவில்லை. மவுனத்தை கணபதிதான் உடைத்தார்:

“எல்லாக் குழம்பு வகைகளுக்கும் புளி வேண்டும்”

அடுத்தாற்போல் அரவிந்தன் சொன்னார்:
“கோழிக்கு மஞ்சள் தடவ வேண்டும். மஞ்சள் நல்ல ஆண்ட்டிசெப்டிக்”

நானும் ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா, எனவே “தேங்காயை அரைத்து கறியில் ஊற்றுவார்கள்” என்றேன்.

கணபதி புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்கினார். அரவிந்தன் மஞ்சளை தடவினார். நான் தேங்காய் மற்றும் மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்தேன். கொதித்து வந்த புளிநீரில் கோழியை போட்டு அவித்து, மசாலாவைக் கூட்டி இறக்கினோம். ஒரு வாய் சாப்பிட முடியவில்லை.

கோழி சமைக்க கற்றுக் கொள்ள ரங்காவுக்கு திருமணம் ஆக வேண்டியிருந்தது. அந்த அனுபவத்தை அப்புறமாக தொடருகிறேன்.