Sunday, October 9, 2011

எஸ். ராமகிருஷ்ணனின் அருமையான ஒரு பத்தி

உயிர்மை இதழில் எஸ். ராமகிருஷ்ணன் திரைப்படங்களைப் பற்றி ஒரு பத்தி எழுதத் தொடங்கியிருக்கிறார். சமீபத்திய இதழில் நான் படித்த கட்டுரை நன்றாக இருந்தது. பாலச்சந்தர் திரைப்படப் பாடல்கள் பற்றியும், சாவித்திரி இயக்கிய தமிழ்த் திரைப்படம் தோல்வியடைந்தது குறித்ததுமான அலசல்கள்தான் இந்தத் தவணை. பின்னதில் இதுவரை கேள்விப்பட்டிராத விபரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

---

பாரதியார் முக்கியமான ஒரு கவிஞர்; ஆனால் அவரை மகாகவி என்று அழைக்க முடியாது என்று ஜெயமோகன் அவரது தளத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சிந்தனைக்குரிய விவாதம். பாரதியின் கவிதைகளைக் கேட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாரதி பாடல்கள் தொகுப்பினைக் கேட்டேன். “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” பாடலில் “வானையளப் போம் கடல்மீனை யளப்போம்” என்ற போது இந்த மனிதர் மகாகவியோ இல்லையோ, தன் காலத்திற்கு முப்பது, நாற்பது ஆண்டுகள் தாண்டிச் சிந்தித்த ஒரு அற்புதமான மனிதன் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது.

---

தி சிம்ப்சன்ஸ்” இருபத்தி இரண்டாவது சீசன் டிவிடி கிடைத்தது. கிட்டத்தட்ட அத்தனை எபிசோடுகளையும் பார்த்து விட்டேன். 1989 முதல் இன்று வரை தொடர்ந்து தொலைக்காட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நகைச்சுவைக் கார்ட்டூன் தொடர் இன்னும் இரண்டாண்டுகள் வரைக்கும் செல்லலாம் என்கிறார்கள். கார்ட்டூன் பாத்திரங்களுக்காக பின்னணி பேசுபவர்கள் ஒரு 20 நிமிட எபிசோடுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய்களுக்கு சமமான டாலர்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதை இப்போது ஒன்றரை கோடி ரூபாய்களாக குறைத்து விட்டார்களாம். பார்வையாளர்கள் குறைந்து வருவதால் வருமானம் போதவில்லையாம்.

ஹாலிவுட் திரைப்படங்களைப் பற்றியும், மற்ற அயல் நாட்டு திரைப்படங்களைப் பற்றியும் தமிழ் ஊடகங்களில் (இணையம் உட்பட) எழுதப்படுகின்றது. ஆனால் அயல்நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி அதிகமாக எழுதப்படுவதுபோல் தெரியவில்லை. அமெரிக்காவில் திரைப்படங்களுக்கு நிகரான ஒரு கலை வணிக முயற்சியாக தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கின்றன. பல தொடர்கள் திரைப்படங்களை விட வெற்றியை அடைகின்றன. இத் தொடர்கள் இப்போது நம் நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்படுவதால் இவற்றைப் பற்றி யாராவது எழுதினால் நன்றாக இருக்கும்.

Sunday, October 2, 2011

யாருடையது அரசு?

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டும் போது பிரதமர் ஒன்று சொன்னார்: பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் ஆபத்திற்குள்ளாகியிருக்கிறதென்று. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே சட்டம் இயற்றும் உரிமை இருக்கிறது. அண்ணா ஹசாரே போன்றவர்கள் நேரடிப் போராட்டம் மூலம் அந்த உரிமையைஒ கைப்பற்றுவது ஆபத்தில் முடியும் என்பதே அவரது கருத்தின் விளக்கம். அவருடைய கருத்தோடு உடன்படுவதும், முரண்படுவதும் இப் பதிவிற்கு அப்பாற்பட்டது. நமது மக்களாட்சி முறை உண்மையிலேயே பிரதிநிதித்துவ முறைதானா என்று கேட்பது இப் பதிவின் நோக்கங்களில் ஒன்று.

அரசியல் சாசனத்தின்படி நமது மக்களாட்சி முறை பிரதிநிதித்துவ முறையே. அதாவது, தொகுதிவாரியாக தேர்ந்தேடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் பிரதமரையும், முதல்வரையும் நியமிக்கின்றனர் (உள்ளாட்சி அரசுகளின் தலைவர்கள் மட்டும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் முறை ஏன் ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை). ஆனால், இந்த பிரதிநிதித்துவ சமாச்சாரம் ஒரு சம்பிரதாயமாகத்தான் இருக்கிறது. உண்மையில் நடப்பது என்னவென்றால் மக்கள் பெரும்பாலும் ஆட்சியை இன்ன கட்சியோ, அல்லது நபரோ நடத்த வேண்டுமென்று முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறார்கள். அதன் அடிப்படையில்தான் தொகுதிக்கான பிரதிநிதிக்கு வாக்குகள் விழுகின்றன.

நேருவின் காலத்தில் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளாராக ஒரு கழுதை நிறுத்தப்பட்டால் கூட வெற்றி பெற்று விடும் என்று சொல்லப்பட்டது; காமராஜ் பி. சீனிவாசனிடம் தோற்றது; இரா. செழியன் வைஜயந்தி மாலாவிடம் தோற்றது; இவையத்தனையும் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையை நாம் உல்டாவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதன் சாட்சியங்கள். இது நாம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதுதான். அடிப்படையில் நாம் என்ன செய்கிறோம் என்றால் நமது பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒரு கட்சியின் தலைமையிடம் விட்டுக் கொடுத்து விடுகிறோம். ஒருவர் நமக்கு நல்ல பிரதிநிதியாக இருப்பார் என்ற அடிப்படையிலா ஒரு கட்சியின் தலைமை வேட்பாளர்களை நிறுத்தும்? யார் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள், யாரால் தேர்தலில் போட்டியிடத் தேவையான பணம், ஆள்பலம் ஆகியவற்றை அளிக்க முடியும் என்று பார்த்துதானே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனால்தான் முரட்டு பக்தர்களும், முட்டாள் செல்வந்தர்களும் நமது பிரதிநிதிகளாக்கப்பட்டு வருகின்றார்கள். பாராளுமன்றம் ஒன்று கூச்சலும், குழப்பமுமாக இருக்கிறது, அல்லது தூங்கி வழிகிறது. சட்டமன்றத்தில் ஒரு பக்கம் ஜால்ரா சத்தம், இன்னொரு பக்கம் ஏதாவதொரு சாக்குப் போக்கு சொல்லி வெளிநடப்புகள்.

என்று நாம் நமது பிரதிநிதிகளை அவர்கள் தகுதியின் அடிப்படையில் மட்டும் தெரிவு செய்கிறோமோ, அன்றுதான் நமது ஆட்சி உண்மையாகவே தொடங்கும்.

--

லீ குவான் யூவிற்கு இன்னமும் சிங்கப்பூரில் ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகள் இருப்பதில் நம்பிக்கையில்லை. சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலிலும் ஆளுங்கட்சி எதிர்பார்த்ததிற்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளது. மாற்றுக் கட்சிகள் எவையும் ஆளுங்கட்சிக்கு சவால் விடவே முடியாது என்ற நம்பிக்கை இப்போது தகர்ந்து வருகிறது. லீ குவான் யூவின் கருத்து என்னவென்றால், ஆட்சியை நடத்த வெகு திறமைசாலிகள் தேவைப்படுகின்றார்கள். சிங்கப்பூரில் உள்ள ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையில் அப்படிப்பட்ட வெகு திறமைசாலிகள் ஒரேயொரு கட்சியில் இருக்குமளவு எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். லீ குவான் யூவின் இந்தக் கருத்தோடு உடன்படலாம், முரண்படலாம், ஆனால், அவரது சிந்தனை நிச்சயம் பாராட்டிற்குரியதே. நமது மாநிலக் கட்சிகள் எவற்றிலும் திறமையாக மாநில நிர்வாகத்தை நடத்தும் நபர்கள் இருபது பேராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

--

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் முதல்வர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தை வாசித்தேன். வெற்று அரசியல்தான் அதில் பெரிதாகத் தெரிகிறது. “எனது அரசு” என்று மறுபடியும், மறுபடியும் அதில் சொல்கிறார் முதல்வர். சட்டமன்றத்திலும், விழாக்களிலும், பேட்டிகளிலும் கூட “எனது அரசு” என்றுதான் சொல்கிறார் அவர். ஒரு மக்களாட்சியில் அரசு மக்களுடையதென்றும், அதன் நிர்வாகம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதென்றும் நான் நினைக்கிறேன். எனவே, “மக்களுடைய அரசு”, “என் நிர்வாகம்” என்று ஒரு முதல்வர் குறிப்பிடுவதே சரியாகவும் இருக்கும், மக்கள் அபிமானத்தையும் பெறும்.