Monday, November 19, 2007

ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன், நாலு மடங்கு ரேட்டுக்காரன்

பெங்களுர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து கேரளா வழியாக பெங்களூர் செல்கிறது.

அட்டவணையில் குறிப்பிட்டபடியே காலை 10:55க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது.

பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன. நானிருந்த பெட்டியில் நானும், கன்னியாகுமரியிலிருந்து ஏறியிருந்த ஒரு வட இந்தியக் குடும்பம் மட்டுமே. பகல் நேர பயணம் என்பதால் அலுவல் சம்பந்தமாக வாசித்து குறிப்பெடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து விரித்துப் போட வசதியான தனிமை. மதியம் 12:30க்கு திருவனந்தபுரம் வந்தடைந்தது. தூரம் 90 கி.மீ. என்றாலும், நெரிசலான சாலை வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் அடைய இப்போதெல்லாம் இரண்டு மணி நேரங்கள் ஆகி விடுகிறது.

திருவனந்தபுரத்தில் கொஞ்சம் பேர் ஏறினர். வர்கலாவில் எதிர்பார்த்தது போலவே ஒரு இளம், வெள்ளைக்கார தம்பதி ஏறியது. முதுகில் சுமந்து வந்த பெரு மூட்டைப் பொதியை இறக்கி வைத்து விட்டு, ஒரு டான் ப்ரௌன் நாவலையும், ஒரு ப்ரிட்டானியா பிஸ்கட் பொட்டலத்தையும் பிரித்துக் கொண்டு இரண்டையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்தது. கொல்லம் போன்ற தெரிந்த ஊர்கள் வழியாகவும், கருநாகப்பள்ளி போன்ற தெரியாத, திகிலூட்டும் பேர்கள் கொண்ட ஊர்கள் வழியாகவும் பயணம் தொடர்ந்தது. சங்கனாசேரி வரை எனது நீண்ட இருக்கைக்கும், எதிரேயுள்ள இருக்கைக்கும் போட்டியில்லை.

சங்கனாசேரியில் ஒரு பிரமாண்டமான சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகளோடு ஏறினார். எனக்கு எதிரான இருக்கை அவர்களுக்கு. துருதுருவென்று இருந்த பையன் – 4 வயதிருக்கும் – பெயர் ஜோ. சற்று அமைதியாக 7 வயதான பெண் – பெயர் ரீட்டா. உள்ளே நுழைந்து, அமர்ந்த அடுத்த நொடி பேச ஆரம்பித்து விட்டான் ஜோ. ரீட்டாவும் அதிகம் தாமதிக்கவில்லை. ரீட்டா கையில் ஒரு இளம்சிவப்பு நிறக் காகிதம். அதில் பெங்களூர் எக்ஸ்பிரசின் கால அட்டவணை அச்சிடப்பட்டிருந்தது. மிகத் தெளிவான ஆங்கிலேயே உச்சரிப்பில்:

“ஜோ உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நான் இதில் இந்த ரயில் இது வரை கடந்து வந்த நிலையங்களையெல்லாம் அடித்து விடுகிறேன், சரியா?” என்று சொல்லி விட்டு, ஒவ்வொரு நிலையமாக அடித்துக் கொண்டே வந்து, சரி அடுத்த நிலையம் “கோட்டயம்” என்றாள். பிறகு அடித்து விட்ட நிலையங்களையெல்லாம் இந்தியில் எண்ணி விட்டு “அம்மா, இந்த ரயில் 20 நிலையங்களைத் தாண்டி வந்து விட்டது” என்றாள்.

“கோட்டயத்திற்குப் பிறகு பெங்களூரா?” என்றான் ஜோ.

“இல்லை, நாளைக் காலையில்தான் பெங்களூர்”

“நான் மேலே போகலாமா?”

“போகலாம், ஆனால் மேலேயும், கீழேயும் போய் விட்டு வந்து விட்டு இருக்கக் கூடாது”

“வந்தால்?”

“அப்புறம் மேலே அனுப்ப மாட்டேன்”

பிள்ளைகள் இருவரும் மேலே செல்ல எத்தனிக்க

“இன்னொரு விஷயம் மேலே சிவப்பு நிறத்தில் சங்கிலி ஒன்று இருக்கிறதல்லவா. அதைத் தொடக்கூட முயற்சி செய்யாதே”

“தொட்டால்?”

“ஒருவர் வந்து உன்னை ரயிலிலிருந்து தூக்கி வீசி விடுவார்”

பிள்ளைகள் மேல் பெர்த்திற்குப் போனார்கள். அம்மா என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

“பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்?”

“டெல்லியில்”

“ஓ…”

எனது ‘ஓ’வில் இருந்த குழப்பம் அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். “இங்கிலாந்தில் நெடுநாட்கள் இருந்து விட்டு இந்தியா திரும்பி ஆறு மாதமாகிறது”

“இந்திய வாழ்க்கை எப்படியிருக்கிறது?”

“பழகத் தொடங்கி விட்டோம்”

“சொந்த ஊர் சங்கனாசேரியா?”

“ஆமாம். பெங்களூர் வரைக்குமா?”

“இல்லை, எர்ணாகுளம் வரையில்தான். அங்கு ஒரு தொழில் ரீதியாக ஒரு பட்டறை”

எர்ணாகுளம் வந்தது.

எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். தமிழ்நாட்டில் இருப்பது போல் “சார் ஆட்டோ வேணுமா?” தொந்தரவுகள் கிடையாது. வேண்டுமென்றால் ஆட்டோவை அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

“சாருக்கு எவிட போணும்?”

“ரீஜெண்ட் அவென்யூ”

என் சூட்கேஸை வாங்கி ஆட்டோவில் வைத்தார் ஓட்டுநர். நான் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. மீட்டர் போடவில்லை.

“மீட்டரா, ஃபிக்சட் ரேட்டா?”

“30 ருப்பீஸ்”

தமிழ்நாட்டில் 30 ருப்பீஸ் என்றால் 5 நிமிடப் பயணம். கேரளாவில் சுமார் 10 நிமிடமாவது ஆனது.

ரீஜண்ட் அவென்யூ எம்.ஜி. ரோட்டில் இருக்கும் ஒரு நான்கு நட்சத்திர விடுதி. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் பிரமாதமாக இருந்திருக்க வேண்டும். இப்போது வயது தெரிகிறது. விசாலமான, வசதியான, தூய்மையான அறைகள். குறை சொல்ல முடியாத, ஆனால் விஷேஷமில்லாத உணவு.

சனிக்கிழமை இரவு பட்டறைக்கு வந்தவர்களையெல்லாம் எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து புறப்பட்ட ஒரு படகில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள். கப்பல்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியில் ரசிக்க என்று அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால், குளிருமில்லாமல், அனலுமில்லாமல் நிலவிய மிதமான சூழல் நன்றாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் சூடாக சுட்டு பரிமாறப்பட்ட ஆப்பங்களை மீன் கறியோடு வெட்டினார்கள்.

ஞாயிறு மாலை கொச்சியின் பிரதான சுற்றுலாத் தளங்களான மட்டாஞ்சேரிக்கும், ஃபோர்ட் கொச்சினுக்கும் சென்றேன். எர்ணாகுளத்தையும், மட்டாஞ்சேரியையும் பெரியாறின் இரண்டு கிளைகள் பிரிக்கின்றன. மட்டாஞ்சேரி ஒரு பெரிய மீனவ கிராமம். அதன் ஒரு புறத்தில் யூதர்கள் வசித்து, காலி செய்த தெருக்களில், வீடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கலைப் பொருட்கள், புராதனப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறியிருக்கின்றன. பல கடைகள் வழக்கமான மரச்சிற்பங்கள், கம்பளங்கள், பாஷ்மினா கம்பளி போர்வைகள் விற்கின்றன. சிலவற்றில் அதி நூதனமான பொருட்கள் இருக்கின்றன. ஒரு கடையில் 100 அடி நீளமான ஒரு சுண்டன் வள்ளத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு கடையில் உலகத்திலேயே பெரிய வார்ப்பு என்று ஒரு மகா பெரிய உருளியை செய்து வைத்திருக்கிறார்கள். அதில் அல்வா கிண்டினால் சுண்டன் வள்ளத்துக்காரர்கள்தான் அவர்களது துடுப்பை வைத்து கிண்டி விட வேண்டும். அம்மாம் பெரிசு.

ஃபோர்ட் கொச்சினின் கடற்கரையில் வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம். சீன மீன் பிடி வலைகளுடன் கடல்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. கரையில் பல பழைய கட்டிடங்கள் விடுதிகளாக உருமாறி விட்டன. ஐரோப்பாவில் இருப்பது போல் உணவு விடுதிகளுக்கு வெளியில் உணவுப் பட்டியலை விலைகளுடன் அச்சிட்டு பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் இரண்டு இத்தாலிய உணவு வகைகள், இரண்டு ஃப்ரெஞ்ச் வகைகள், இரண்டு பஞ்சாபி தினுசுகள், சில கேரளா தினுசுகள் என ஒரு அயிட்டத்துக்கு ரூ. 200 முதல் 800 வரை இருக்கின்றன.

நண்பரொருவர் எர்ணாகுளத்தில் பாரத் டூரிஸ்ட் ஹோம் என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கே சாப்பிட்டுப் பார் என்று சொல்லியிருந்ததால் அதை முயற்சி செய்தேன். அது வெஜிடேரியன் என்று தெரியாது. இரவு பஃபே, அதுவும் சாப்பாடு என்று தெரியாது. இரவு முழுச் சாப்பாடு சாப்பிட விரும்பாததால், அந்த விடுதிக்குள்ளேயிருக்கும் காஃபி ஷாப்பில் சப்பாத்தி சாப்பிட்டேன். மிக மிருதுவான சப்பாத்திக்கு ஒரு கொள,கொளா வெண்டைக்காய், உருளைக்கிழங்கு குருமா வைத்து கெடுத்திருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி உணவுப் பொருட்களில் எனக்கிருக்கும் விலைவாசி ஞானக் குறைவை சுட்டிக் காட்டியிருந்தபடியால் இந்த விடுதியில் 3 சப்பாத்தி கொண்ட ஒரு செட் ரூ 35, ஒரு காஃபி ரூ 15 என்பதையும் மனதில் குறித்துக் கொண்டேன்.

இரவு 11 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். 10:30க்கு அவென்யூ ரீஜெண்டில் இருந்து புறப்பட்டேன். ஆட்டோக்காரரிடம் விலை பேசவில்லை. வருவதற்கு ரூ 30. இரவு பத்துக்கு மேல் கிளம்புவதால் 10ஓ, 20ஓ கூட இருக்கலாம் என்று நினைத்தேன். ரயில் நிலையம் சேர்ந்தவுடன் 50 ரூபாய் தாளை நீட்டினேன். எந்த வித தயக்கமும் இல்லாமல் மீதி 20 ரூபாயை எடுத்து நீட்டினார்.

காலை 5:30க்கு நாகர்கோவில். நிலைய வாசலுக்கு வருவதற்கு முன்னே “சார், ஆட்டோ வேணுமா?” என்று ஆரம்பித்து விட்டார்கள். கோட்டாறிலிருந்து வெட்டூர்ணிமடம் செல்ல ரூ. 60. இதை விட இரு மடங்கு தூரத்திற்கு கேரளாவில் பாதி விலை. கேட்டால், “காலை வேளை, சவாரி கிடைக்காது, பெட்ரோல் விலை ஏறி விட்டது, மற்ற ஊர்களையும் இங்கேயும் ஒப்பீடு செய்யாதீர்கள்” என்பார்கள். நம்மூர் ஆட்டோக்காரனை விட பக்கத்து மாநில ஓட்டோக்காரன்தான் நியாயமானவனாக பட்டான் எனக்கு.
Posted by Picasa

Monday, November 12, 2007

தீபாவளி கொளுத்திய பட்டாசு நினைவுகள்

நவம்பர் 8, 2007 தீபாவளி

அதிகாலையில் தெருவில் பட்டாசுகள் முழங்கத் தொடங்கி விட்டன. பிள்ளைகள் வழக்கம் போல் வந்து “நாம எப்ப பட்டாசு விடப் போகிறோம்?” என்று ஆரம்பித்து விட்டார்கள். நானும் வழக்கம் போல் “எதுக்காக பட்டாசு?” என்று பதில் புராணத்தை தொடங்கி விட்டேன். வழக்கமான பட்டாசு விரோத காரணங்கள்தான்:


  • காதைக் கெடுக்கும் ஒலி
  • நுரையீரலை நாசமாக்கும் புகை (இந்த ஆண்டில் அவர்களது
  • பாடத்திலேயே க்ரீன் ஹவுஸ் எஃபக்ட், க்ளோபல் வார்மிங் பற்றி சொல்லப்பட்டிருப்பதால் கூடவே அறிவியல் ரீதியான ஒரு பயமுறுத்தலையும் சேர்க்க முடிந்தது)
  • தலைவலியைக் கொடுக்கும் நாற்றம்
  • தீ விபத்து நடந்து உடலோ, பொருட்களோ கருகுவதான அபாயம்

“உங்கம்மாவுக்கு பென்சில் மத்தாப்பு வெடிச்சே கை அப்படி பொத்துட்டுதே” என்று பயமுறுத்த முயன்றால் “ஒரு தடவ அப்படி நடந்தா, எல்லா தடவயும் அப்படியா நடக்கும்?” என்ற மனைவியின் குறுக்குச்சால் காதில் விழாத மாதிரி நடித்துக் கொண்டு காரணங்களை தொடர்ந்தேன்.

  • பட்டாசு வெடிப்பது என்பது காசைக் கரியாக்குவது
  • டம, டம என்று காதைப் பிளக்கும் ஒலியை ரசிப்பது நாகரீகமடைந்த மனிதனின் ரசனையில் இடம் பிடிக்காது

என்று பட்டியல் நீண்டது.

பதின்ம வயதாகப் போகும் புதல்வனுக்கு தந்தையருளும் மந்திரங்களின் மகிமை குறைவது சகஜமென்பதால், நாம் சொல்வதை அவ்வப்போதாவது மதிப்பு கொடுத்து கேட்கும் ஒன்பது வயது மகளையாவது மாற்றி விடலாமென்றால், அவள் “அதாவது டாடி, அந்த திரில தீ வெச்சுட்டு, பட்டாசு வெடிக்கற வைக்கும் ஒரு த்ரில்லிங்கா இருக்கும்ல அதுக்குத்தான் பட்டாசு வெடிக்கிறோம்” என்று புதுசாக வெடியைக் கொளுத்திப் போட்டாள்.

வழக்கம் போலவே இந்த பட்டாசு விவாதம், “சரி, நம்ம சாயங்காலம் பட்டாசு வெடிப்போம்” என்ற தீர்ப்போடு நிறைவுக்கு வந்தது.

அதென்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே பட்டாசுகளின் மீது ஆர்வமில்லாமலேயே நான் வளர்ந்து விட்டேன். சின்ன வயதில் “கைல கால்ல வெடிச்சிடப் போகுது” என்று எங்கம்மா எப்பவும் எச்சரித்து, பொட்டு வெடி தவிர எதையும் வெடிக்க அனுமதிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், வளர்ந்த பிறகும் பட்டாசு மீது ஒரு நாட்டம் வரவேயில்லை.

நான் ஏ.ஐ.டி.யில் படிக்கும் போது அங்குள்ள தமிழ் சங்கத்தினரும், இந்திய சங்கத்தினரும் தீபாவளியை விமரிசையாக கொண்டாடுவர். ஏ.ஐ.டியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நாடு/கலாசார சங்கங்களில் முதன்மையானது தமிழ் சங்கமே. இலங்கை, இந்திய, மலேசிய தமிழர்களோடு, அங்கிருந்த சொற்ப மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்களோடு ஜே, ஜே என்று எப்போதும் தமிழ் சங்கம் இயங்கும். ஏ.ஐ.டி நடுவில் எட்டு கோண அமைப்பில் இருக்கும் “கொரியா ஹவுஸ்” எனப்படும் கட்டடம் ஏறக்குறைய தமிழ் சங்கத்தின் குத்தகையில்தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். வாரத்தில் மூன்று நாள், மாலை 6-9 அந்த கட்டடத்தில் தவறாமல் தமிழ்ப் படம் போடுவார்கள் நம் மக்கள். இது தவிர மாதம் ஒரு முறை கூட்டம், இரவுணவு என்று அசத்துவார்கள். பொங்கல் என்றால் பாங்காக்கில் இருக்கும் தமிழர்களும் வந்து இணைந்து கலைநிகழ்ச்சிகள், மதிய உணவு, என்று செய்து கோலாகலம் பண்ணி விடுவார்கள். சங்கத்தின் பொறுப்பை மூன்று மாதத்திற்கொரு முறை மாற்றியமைக்கப்படும் குழு ஒன்று கவனித்துக் கொள்ளும்.

நான் பொறுப்புக் குழுவிலிருக்கும் போது வந்த தீபாவளியில் பெரிய அளவில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது (இந்த முடிவிலிருந்து அந்தப் பொறுப்புக் குழுவில் என் குரலுக்கு இருந்த மதிப்பையும், மரியாதையையும் அறிந்து கொள்வீர்களாக). பொறுப்புக் குழுவிலிருந்த மற்றவர்களில் சிலர்: அன்புமொழி (சேலத்தைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஜப்பான் சென்று அங்கேயே தங்கிவிட்டதாக கேள்வி), ராமநாராயணன் (கோவையைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஓக்லஹாமா சென்று அங்கேயே வெகு நாட்களாக இருந்தார், இப்போது தொடர்பில்லை), மற்றும் பரம் (குலாலம்பூரைச் சேர்ந்த இவர் இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை) ஆகியோருடன் நானும் பட்டாசு வாங்கும் முயற்சியில் இறங்கினோம்.

முதலாவது ஏ.ஐ.டி.க்கு தெற்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் ரங்சிட் என்னும் இடத்தில் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அது பாங்காக்கின் பாஹ்யோலிதின் துரித நெடுஞ்சாலை டான் முவாங் விமான நிலையத்தோடு நின்று விட்ட காலம். இப்போது அந்த சாலை வடக்கே ஏ.ஐ.டியையும் தாண்டி எங்கோ சென்று விட்டது. விளைவாக ரங்சிட் ஒரு பெரிய நகராக உருப்பெற்று விட்டது. ஆனால் அந்தக் கால ரங்சிட் ஒரு சிறு கிராமம். உள்ளே இருபது, இருபத்து ஐந்து கடைகள் கொண்ட ஒரு தெரு உண்டு. அங்கே பட்டாசைத் தேடிப் போனோம்.

கடைத் தெருவுக்கு போன பிறகுதான் எங்களுக்கு ஒரு பெரிய ஞானோதயம் ஏற்பட்டது. அது, பட்டாசிற்கு தாய் மொழியில் (அதாவது தாய்லாந்தின் மொழியில்) பெயர் என்ன என்பதை விசாரிக்காமலேயே வந்து விட்டோம் என்பது. பாங்காக் நகரிலேயே ஆங்கிலம் பேசுபவர்களை விளக்கெண்ணெய் ஊற்றித்தான் தேட வேண்டும். ரங்சிட்டில் ஆங்கிலம் புரிந்து கொள்பவர்களைக் கண்டுபிடிப்பதை இன்றைய இளைஞர்களின் பாஷையில் சொல்லப் போனால்: “சான்சே இல்லை.”

சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், முடிந்த வரை முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு கடையில் ஏறி:

“கூன், க்ராக்கர்ஸ் மீ மாய்னா?” (ஐயா, பட்டாசு இருக்கிறதா?”

“அலோய்னா?” (அப்படின்னா? – இதைக் கேட்ட விதம் “என்ன உளறுகிறாய்?”)

“க்ராக்கர்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை சொன்னால் கேட்பவருக்கு ஆங்கிலம் புரிந்து விடுகிற மாதிரி நாம்.

“க்ராக்கார்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை நாம் சொன்னதை திருப்பிச் சொன்னால் ஆங்கிலம் புரிந்து கொள்கிற மாதிரி அவர்.

இது சரிப்படாது என்று அன்புமொழிக்கு தோன்றி விட்டது.

“கூன்” (ஐயா) என்று கடைக்காரரை விளித்து விட்டு ஊமை பாஷையில் பேச ஆரம்பித்து விட்டார். ஒரு விரலை நீட்டி (அதுதான் பட்டாசாம்), பிறகு ஒரு கை தீப்பெட்டி, மறு கையை அதில் உரசி தீக் கொளுத்துகிறமாதிரி பாவலா செய்து, விரலில் வைத்து, “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரரின் இரு புருவங்களின் இடையே போடப்பட்ட வியப்பு முடிச்சு இந்தக் குரங்கு சேட்டையைப் பார்த்த பிறகும் அவிழவில்லை. அவர் “இந்த கிறுக்கனுங்க என்னதான் சொல்ல வரானுங்க?” என்ற கடுமையான சிந்தனையில்தான் இருந்தார்.

ராமநாராயணனுக்கு இதை ஸ்கெட்ச் போட்டு காண்பித்தால்தான் புரியும் என்று தோன்றியது. ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். அன்புமொழி வாயால் சொன்னதை படமாக வரைந்தார். தீ வைத்து, பட்டாசு வெடித்ததை படமாக விளக்கும் போது, அன்புமொழி மீண்டும் ஒரு எஃபக்டுக்காக “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரர் மூளையிலும் அந்த நேரம் பட்டாசு வெடித்திருக்க வேண்டும். அவர் முகம் 1000 வாட் பல்பு போட்ட மாதிரி பிரகாசமானது.

“ஓ, பட்டாஸ்?” என்றாரே பார்க்கலாம்.

அடப்பாவி பட்டாசுக்கு தாய்லாந்திலும் பெயர் பட்டாசுதானா என்று நாங்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்தக் கடையில் மட்டுமல்ல, ரங்சிட் முழுக்க பட்டாஸ் கிடைக்கவில்லை என்பதும், பாங்காக் சென்று சைனா டவுணிலோ, வேறெங்கோ சென்று பட்டாஸ் வாங்கி தீபாவளிக்கு வெடித்தோம் என்பதும் இந்த தீபாவளி நினைவில் பின்குறிப்புகள்.

Saturday, November 3, 2007

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தேவையா?

பால் அட்வெல் (Paul Attewell) நியூயார்க்கின் சிற்றி பல்கலையிலும் (City University of New York) காதரீன் நியூமேன் (Katherine Newman) நியூ ஜெர்சியிலுள்ள ப்ரின்ஸ்டன் பல்கலையிலும் (Princeton University) சமூகவியல் பேராசிரியர்கள். இவர்கள் இருவரும் இணைந்து இந்தியாவில் இரண்டாண்டு காலமாக ஆராய்ச்சி பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களது ஆய்வு இந்திய செய்தித் தாள்களில் வரும் தனியார் நிறுவன வேலை விளம்பரங்களுக்கு விண்ணப்பம் செய்ததிலிருந்து தொடங்கியது. எல்லாமே பட்டதாரி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி கொண்ட வேலைகள். அனுப்பட்டது ஒரு விண்ணப்பமல்ல; 4800 விண்ணப்பங்கள். வேறு வேறு புனை பெயர்களில். அந்தப் பெயர்கள் மூன்று வகைப்பட்டவை. ஒரு வகை உயர்ந்த சாதிக்காரர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள். இன்னொரு வகை இஸ்லாமிய பெயர்கள். பிறிதொரு வகை தலித்திய பெயர்கள். மூன்று வகையான புனை பெயர்கள் கொண்டவர்களுக்கும் சமமான கல்வி, மற்றும் பிற தகுதிகளே குறிப்பிடப்பட்டன. அதாவது பெயரைத் தவிர மற்றனைத்து விஷயங்களிலும் இந்த கற்பனை நபர்கள் ஒருவருக்கொருவர் சமம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வந்தன. தனியார் நிறுவனங்கள், சாதி, மத அடிப்படையில் தகுதி பார்ப்பதில்லையென்றால், எல்லோரும் ஒரே அளவில்தானே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும்? அதுதான் இல்லை. உயர்சாதிப் பெயர்களைக் கொண்டவர்கள் 100 பேர் அழைக்கப்பட்டார்கள் என்றால், தலித் பெயர்களைக் கொண்டவர்கள் சுமார் 66 பேர் அழைக்கப்பட்டார்கள்; இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டவர்கள் சுமார் 33 பேர் மட்டுமே அழைக்கப்பட்டார்கள்.

இதுவே, தனியார் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையில் நிலவும் ஒதுக்கலை (discrimination) அறிவியல் பூர்வமாக நிறுவிய முதல் முயற்சி. தனியார் நிறுவனங்கள் சொல்லிக் கொள்வது போல் அவர்கள் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையிலான ஒதுக்கலும், துவேஷங்களும் இல்லை என்பதும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதும் இந்த ஆய்வு முடிவுகளினடிப்படையில் தீவிரமாக மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியவை. இந்த ஆய்வு விரைவில் பிரசுரிக்கப்படவுள்ளது. இது பிரசுரமானவுடன் இட ஒதுக்கீட்டு அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.