Sunday, July 31, 2011

காவல் நிலையத்தில் கால் மேல கால்: திருநெல்வேலி பெருமாள்புரம் நிலையத்தில் ஒரு அனுபவம்

திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஒரு நிர்பந்தம்.

பாஸ்போர்ட்டில் பக்கங்கள் தீர்ந்து போனதால் புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருந்தேன். ப்ரூனே இந்தியத் தூதரகம் முகவரி கேட்டது. ப்ரூனே முகவரியைக் கொடுத்தேன். அதை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். இந்தியாவிலும் நிரந்தர முகவரி வேண்டுமாம். எனவே, அதைக் கொடுத்தேன். கொடுத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்னுடைய பெற்றோர் அழைத்தார்கள். “இங்கே முகவரி சரியானதா என்று விசாரிக்க போலீசார் வந்திருக்கிறார்கள். நீ வீட்டில் இல்லையென்பதால் காவல் நிலையத்திற்கு வரச் சொல்கிறார்கள். கூடவே உன் பெயர் முழுமையாக எழுதப்படவில்லை. புகைப்படமும் நகலில் தெளிவாக இல்லை.” சந்தர்ப்பவசமாக நானும் ஒரு வாரத்தில் இந்தியா வருவதால் நானே வந்து பிரச்சினையை சரி செய்கிறேன் என்றேன். இந்தியத் தூதரகத்தைக் கூப்பிட்டு டெல்லியிலிருந்து திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்ட நகலில் உள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொன்னேன். நாங்கள் சரி செய்து விடுகிறோம் என்றார்கள்.

திருநெல்வேலி வந்த மறுநாள் பெருமாள்புரம் காவல் நிலையம் சென்றேன். சம்பந்தப்பட்ட எழுத்தரிடம் பேசினேன். அவர் என்னுடைய தற்போதைய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முதலானவற்றை பரிசோதித்து விட்டு, அவற்றின் நகலையும், புகைப்படம் ஒன்றையும் கொடுத்தால் அவற்றை டெல்லிக்கு அனுப்பி விடுவதாக சொன்னார். விஷயம் முடிந்ததென்று வீட்டிற்கு வந்து விட்டேன். பத்து நாட்கள் கழித்து ப்ரூனே தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. உங்கள் பாஸ்போர்ட் வந்து விட்டது. பெற்றுக் கொள்ளுங்கள் என்று. நான் இந்தியாவில் இருக்கும் தகவலைச் சொல்லி, ப்ரூனே வரும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

கடந்த வாரம் சென்னை சென்றிருந்தேன். திருநெல்வேலியிலிருந்து தொலைபேசி. மீண்டும் முகவரியை சரிபார்க்க வேண்டுமென்கிறார்கள். எனக்குப் புரிந்தது. நான் ப்ரூனே தூதகரத்தில் தெரிவித்திருந்தேனில்லையா: டெல்லியிலிருந்து தெளிவில்லாத நகலை திருநெல்வேலிக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார்கள் என்று. அதை சரி செய்ய மற்றொரு நகலை அனுப்பியிருப்பார்கள். அதன் பேரில் மறுபடியும் ஒரு முறை முகவரியை சரி செய்கிறார்கள்.
நேற்று (30.7.11) சென்னையிலிருந்து வந்ததும் மறுபடியும் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்குப் போனேன். இந்த முறை அவர்கள் கேட்கப் போகும் எல்லா ஆவணங்களையும் தயாராக எடுத்துக் கொண்டு போனேன். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் யாரும் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்கள். 10 நிமிடத்தில் வந்து விடுவார்கள். இங்கே உட்காருங்கள் என்று ஒரு நாற்காலி கொடுத்தார்கள். அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் ஒரு ஜீப் வந்தது. வெளியே சில அதட்டல்கள் கேட்டன. வாயிலில் நின்றிருந்த காவலாளி விரைப்பானார். இரண்டு மூன்று காக்கிச் சட்டை போலிஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள். வாயில் காவலாளி துப்பாக்கியை உயர்த்தி இப்படியும், அப்படியுமாக சுழற்றி ஒரு விதமான வித்தை செய்தார். போலிஸ்காரர்கள் உள்ளே போய் விட்டார்கள். ஒருவர் என்னிடம் ஒரு ரெஜிஸ்தரைத் தூக்கிக் கொண்டு வந்து “பேர் என்ன?” என்றார். சொன்னேன். பாஸ்போர்ட் விபரங்கள் சரிபார்க்கும் அறைக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போய் புகைப்படத்தை வாங்கி உரிய இடத்தில் ஒட்டினார். அந்த நேரத்தில் என்னை முதலில் சந்தித்த ஏட்டு, “என்ன பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட எழுத்தர் வந்து விட்டாரா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் எட்டிப் பார்த்தவர் “இன்ஸ்பெக்டர்லா” என்று சொல்லிக் கொண்டே பின் வாங்கினார்.

“ஓ, இந்த இன்ஸ்பெக்டர் வந்ததால்தான் இத்தனை தடபுடலா?” என்று நினைத்துக் கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை ரெஜிஸ்தரில் ஒட்டிய காவலாளி “இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் “ஒங்க பேர் என்ன?” என்றார் அதட்டலாக. சொன்னேன். காவலாளியிடம் “நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். ரைட்டர் வந்ததும் பாத்துக்குவார்” என்றார்.

நான் திரும்பி வரவேற்புப் பகுதிக்கு வந்து அமர்ந்து கொண்டேன். ஒரு சாதாரண சம்பிரதாயத்தைத் தாமதமாக்கும் இன்ஸ்பெக்டர் சவடால், ஏற்கனவே காத்திருந்த அலுப்பு இரண்டும் எரிச்சலை உருவாக்கின. காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வரவேற்புப் பகுதிக்கு வந்தார். என்னைப் பார்த்து கோபமாக “நீங்க என்ன வேலை பாத்துக்கிட்டு இருக்கீங்க? எதுக்காக இங்க நாற்காலில உக்காந்திருக்கீங்க?” என்றார்.

எனக்கு கோபம் வந்து விட்டது. “இது பொது மக்கள் உட்காரும் இடம். நானென்ன தரையிலா உட்கார வேண்டும்?” என்றேன்.

“இங்க கால் மேல கால் போட்டு ஒக்காரக் கூடாது”

“அப்டின்னு எந்த ரூல் புக்ல போட்டிருக்கு. காண்பிங்க. நான் அதுல சொல்ற மாதிரி ஒக்கார்றேன்”

இன்ஸ்பெக்டர் கோபத்தின் உச்சிக்குப் போய் விட்டார்.

“நீ யாரு?” என்று ஒருமையில் கத்தியபடி முன்னேறி வந்தார். இதற்குள் இரண்டு மூன்று காவலர்கள் வந்து இரண்டு பேருக்கும் நடுவில் நின்று கொண்டார்கள்.

“நீ கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கறது ரெஸ்பெக்ட் கிடையாது. இங்கிருந்து வெளியே போ” என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

“இங்கிருந்து வெளியே போகச் சொல்ல உங்களால் சொல்ல முடியாது” என்று நான் ஆரம்பிக்க சுற்றியிருந்த காவலர்கள் “சார் வெளிய போயிடுங்க சார்” என்று என்னிடம் சொல்ல ஆரம்பிக்க, “நான் போறேன். ஆனால் இத இப்படியே நான் விடுடறதா இல்லை” என்றபடி இன்ஸ்பெக்டர் பெயர்ப் பலகையை பார்த்தேன். “ஆர். பொன்னரசு” என்று போட்டிருந்தது. “பொன்னரசுதானே உங்க பெயர்” என்றேன். “ஆமா, உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிக்க” என்றார் அவர்.

இப்ப என்ன பண்ண முடியுங்கறத பத்தி யோசிச்சுட்டிருக்கிறேன்.

இந்த இன்ஸ்பெக்டர் சொல்வது போல கை கட்டி வாய் பொத்தி அந்தக் காவல் நிலையத்தில் நிற்க வேண்டிய எந்த வித நிர்பந்தமும் எனக்குக் கிடையாது.

நான் என்ன கொலை செய்தேனா, கொள்ளை அடித்தேனா, அல்லது ஒரு சிறிய தவறையாவது செய்தேனா? கிடையாது. சுமார் ரூ 4000 இந்திய அரசிற்கு கட்டணமாகக் கட்டி எனது உரிமையான ஒரு பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருக்கிறேன். அதன் ஒரு பகுதிதான் இந்த முகவரி சரி பார்ப்பது. அதற்காகத்தான் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அங்கே பொது மக்கள் உட்காரும் பகுதி என்று ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் அமர்ந்திருக்கிறேன். இந்த இன்ஸ்பெக்டரின் அறைக்குள் போயோ வேறெந்த பகுதியிலோ அமரவில்லை. எனக்கு கால் மேல் கால் போட்டு அமருவது வசதியாக இருக்கிறது. அரை மணி நேரமோ கூடுதலாகவோ அமரும் போது அப்படித்தான் அமர முடியும்.

வெளி நாட்டில் இருந்தாலும், இந்தியாவில் நான் செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டுகிறேன். அது வருமான வரியாக இருந்தாலும் சரி, விற்பனை மற்றும் சேவை வரிகளாக இருந்தாலும் சரி. நானும், அந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சகல சக இந்தியர்களும் செலுத்தும் வரி வருமானத்தில்தான் நமது அரசு நடக்கிறது. காவல் துறைக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. காவல் துறையினருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. சட்டத்தை மதித்து நடக்கும் எவருக்கும் காவல் துறை பணியாளே தவிர எஜமானன் அல்ல. சட்டத்தை மீறுபவர்கள் கூட காவல்துறைக்கு அடிமைகளாவதில்லை. அவர்களைக் கூட மனிதாபிமானத்துடன்தான் நடத்த வேண்டும் என்பதே விதிமுறை.

இருப்பினும் காவல் துறையில் இருப்பவர்கள் பலர் தங்களை மக்களின் எஜமானன்களாக நினைத்துக் கொள்கிறாரார்களென்றால், மமதையாக நடந்து கொள்கிறார்களென்றால், அதற்குக் காரணம் சாமான்யர்களாகிய நாம் அவர்களை அப்படி நடத்த விடுவதே. இவர்களது நினைப்பிற்கெதிராக எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படுமென்றால் இவர்கள் வழிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.

இன்று மாலை என்னோடு கல்லூரியில் படித்து, தமிழகக் காவல் துறையில் உயரிய பதவிகள் ஒன்றில் இருப்பவரோடும், ஊடகத் துறையிலும், நீதித் துறையிலும் முன்னணியில் விளங்கும் ஒரு நண்பவரோடும் இது குறித்து ஆலோசிக்க உள்ளேன். அதன் பின் செய்யவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒரு தபால் போடுவேன்.