Sunday, November 27, 2011

வேர்க்கடலையும் பாலும்


டாக்டர் காலின் கேம்பல் என்பவர் எழுதியுள்ள ஒரு புத்தகம் 5 இலட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றுள்ளது. இது ஊட்டச்சத்து (nutrition) துறையில் ஒரு சாதனை என்கிறார்கள்.

அமெரிக்காவில் அதிக அளவில் பால் உற்பத்தியாகும் விஸ்கான்சின் மாநிலத்தில் மாட்டுப் பண்ணை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் கேம்பல். கால்நடை மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொள்கிறார். ஆனால் அந்த ஆர்வம் ஊட்டச் சத்துத் துறைக்கு மாறுகிறது. கோர்னல் பல்கலைக்கழகத்தில் ஊட்டச் சத்துத் துறையில் முனைவர் பட்டம் பெறுகிறார்.

முனைவர் பட்டம் முடித்த பின்னர் அவருக்கு ஒரு பணி வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊட்டச்சத்து ஆய்வு தொடர்பானது அது. அந்த நாட்டில் புரதச் சத்து உண்ணுவதை அதிகரிக்கும் நோக்கத்தில் வேர்க்கடலை உண்ணுவது ஊக்குவிக்கப்படுகிறது. வேர்க்கடலை உண்ணுவது அதிகரிக்கிறது. கூடவே, கல்லீரல் புற்றுநோயும் அதிகரிக்கிறது. இரண்டிற்கும் தொடர்பிருக்க வாய்ப்புகள் உண்டு. வேர்க்கடலையைப் பாதிக்கும் ஒரு பூஞ்சைக் காளான் உற்பத்தி செய்யும் அஃப்லோடாக்சின் எனும் வகை நச்சு, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. எனவே, இது தொடர்ப்பாக ஆய்வு செய்ய டாக்டர் கேம்பல் அழைக்கப்படுகிறார்.

டாக்டர் கேம்பல் பிலிப்பைன்ஸில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களைப் பார்க்கிறார். அவருக்கு ஒன்று புலனாகிறது. கல்லீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைக் குடும்பத்துக் குழந்தைகளை விட, வசதியான குடும்பத்துக் குழந்தைகளே.

இதைப் பற்றி சிந்திக்கும் போது, அவருக்கு தான் ஏற்கனவே வாசித்த ஒரு ஆய்வுக் கட்டுரை நினைவுக்கு வருகிறது. அந்த ஆய்வு இந்தியாவில், பஞ்சாபில் நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் எலிகளுக்கு பூஞ்சைக் காளான் நச்சை உணவில் சேர்த்துக் கொடுக்கிறார்கள். பிறகு எலிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஒரு குழுவிற்கு குறைந்த புரதச் சத்துள்ள உணவு. மற்றொன்றிற்கு அதிக புரதச் சத்துள்ள உணவு. அதிகப் புரதச் சத்து உட்கொண்ட எலிகள் அத்தனையும் கல்லீரல் புற்று நோயால் செத்து விடுகின்றன. குறைந்த புரதம் உட்கொண்ட எலிகள் எவையும் சாகவே இல்லை. இந்த ஆய்வு வெளியான காலத்தில் சர்ச்சைக்குள்ளான ஒன்று. துறை வல்லுநர்கள் அனைவரும் அதிகப் புரதம் கொண்ட எலிகளே புற்றுநோயை வலுவாக எதிர்த்திருக்கும் என்று நம்பினார்கள். இந்திய ஆய்வாளர்கள் ஆய்வில் தவறிழைத்து விட்டதாக பரவலாக சொல்லப்பட்டது.

டாக்டர் கேம்பலுக்கு பிலிப்பைன்ஸ் புள்ளிவிபரம் பார்த்த பிறகு. இந்திய ஆய்வு சரியானதாகவே படுகிறது. மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இந்திய ஆய்வில், புரதச் சத்து எதிலிருந்து பெறப்பட்டதென்று பார்க்கிறார்.  அது கேசின் என்ற பொருளிலிருந்து பெறப்பட்டது. கேசின், வே என்பன பசுவின் பாலின் இரு பிரதான புரதங்கள். எனவே, அஃப்லோடாக்சின் நச்சு உட்கொண்ட உயிரினங்கள் கேசின் உட்கொள்ளும் போது புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறதா என்று ஆராயத் தொடங்குகிறார். அதிகரிக்கிறது என்பதையும், இன்னும் பல, தொடர்பான கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்.

இதற்கிடையில் சீனாவில் ஒரு பெரிய அளவிலான கள ஆய்வில் ஈடுபடுகிறார். சீன மக்களின் உணவுப் பழக்கங்களும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்களையும் குறித்த பல்லாண்டு காலக்கட்டத்தில், பல்லாயிரம் மக்களிடம் சர்வே எடுத்து செய்யப்பட்ட ஒரு ஆய்வு. அந்த ஆய்வின் முடிவுதான் “The China Study: The Most Comprehensive Study of Nutrition Ever Conducted And the Startling Implications for Diet, Weight Loss, And Long-term Health” என்ற ஐந்து லட்சம் பிரதிகள் விற்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் முக்கியச் செய்தி: இறைச்சி, மீன், முட்டை, பால் என்று மிருகங்களிடமிருந்து பெறப்படும் எல்லா உணவு வகைகளும் மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பன, எனவே, மனிதன் நலமுடன் வாழ வேண்டுமென்றால் தாவர உணவிற்கு மாற வேண்டும் என்பதே. புறக்கணிக்க முடியாத ஆதாரங்கள் கொண்ட இச் செய்தியை எளிதாகப் புறக்கணிக்க இயலாது.

Sunday, November 13, 2011

பாற்கடலில் மீன்


கடந்த வாரம் சில நாட்கள் கம்போடியாவில். அங்கோர் வாட் பார்க்கப் போனேன். முன்னர் ஒரு முறை சென்ற போது கடுமையான மழை. இம்முறை கடுமையான வெயில். பெரிய அளவில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. முகப்புக் கோபுரத்தை வலையால் மூடி வேலை பார்த்து வருகிறார்கள். சுற்று மண்டபச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற சிற்பக் காட்சிகளை பெரும்பாலும் புனரமைப்பு செய்து விட்டார்கள். உச்சிக் கோபுரத்திற்கு மேலேறும் ஒடுங்கிய, செங்குத்தான, ஆபத்து மிகுந்த கற்படிகளின் மீது ஏறுவதை தடை செய்து விட்டார்கள். பதிலுக்கு, சற்று பத்திரமான மரப்படிகளை நிர்மாணித்திருக்கிறார்கள். கைப்பிடியும் அமைத்திருக்கிறார்கள். மேலேறிப் பார்த்தால் அங்கோர் வாட்டின் சுற்றுப்புறம் முழுமையாகத் தெரிகிறது. சுகமாகக் காற்றும் வீசுகிறது.
சுற்று மண்டபச் சுவர்களில் உள்ள சிற்பச் சித்திரக் காட்சிகளை உச்சிக் கோபுரத்திலிருந்து இறங்கும் வழியில் மறுபடியும் ஒரு முறை பார்த்தேன். மொத்தம் நான்கு நீள் சுவர்களிலும் தலா ஒரு காட்சி: பாற்கடலை தேவர்களும், அரசர்களும் கடைந்து அமுதம் எடுப்பது; மகாபாரத யுத்தம்; நரகம்; மன்னன் இரண்டாம் ஜெயவர்மனின் ஆட்சிச் சிறப்பு. இவற்றில் பாற்கடல் கடையும் சித்திரக்காட்சியில் கண்ணில் பட்டது பாற்கடலில் துள்ளிக் கொண்டிருக்கும் மீன்கள். இது வரைக்கும் பாற்கடல் என்பது பால் நிரம்பிய ஒரு கடல் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் அது நீர் நிரம்பிய கடல் என்று புரிந்தது. கூகுளாம்மனிடம் விசாரித்தபோது ஸ்ரீமத் பாகவத்தில் பாற்கடலில் மீன் மட்டுமல்ல திமிங்கிலங்களும், பாம்புகளும் இருந்தன என்று சொல்லப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கோர் வாட் பாற்கடலில் மீன்களோடு, முதலைகளும், சிங்கத்தலை கொண்ட டிராகன்களும் தண்ணீரில் நெளிந்து கொண்டிருந்தன. மீன்களைக் கூர்ந்து பார்க்கும்போது மூன்று இனங்களைப் பெரும்பாலும் காண நேர்ந்தது: கெண்டை, கெளுத்தி வகைகளோடு featherback என்று அழைக்கப்படும் Notopterus மீன்களும்.
மறுநாள் தோன்லே சாப் ஏரிக்குச் சென்றிருந்தேன். தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி தோன்லே சாப். ஆசியாவின் ஜீவ நதிகளில் ஒன்றான மேக்காங்கின் கிளை நதி ஒன்றுடன் தோன்லே சாப் இணைந்திருக்கிறது. திபெத்தின் மலைகளில் உருகும் பனியும், மேக்காங் பயணிக்கும் நிலங்களில் பெய்யும் மழையும் சேர்ந்து மேக்காங் ஆறு பெருகும் போது, உபரியான நீர் கிளைநதி மூலம் தோன்லே சாப்பை நிரப்பி 2700 சதுர கி.மீ பரப்பளவுள்ள ஏரியை 16,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ளதாக மாற்றுகிறது. மேக்காங்கில் நீர் மட்டம் குறையும் போது இந்த உபரிச் சேமிப்பு மறுபடியும் நதிக்கே சென்று விடுகிறது. அங்கோர் வாட்டின் சிற்பிகளுக்கு தோன்லே சாப்பும் அதிலுள்ள உயிரினங்களுமே பாற்கடலாகவும், அதிலுள்ள மீன்களும், முதலைகளுமாகத் தோன்றியிருக்கலாம். தோன்லே சாப் படகுப் பயணத்தை முடிக்கும் தருவாயில், கெளுத்தி மீன்களைப் பிடித்து உயிருடன் சந்தைக்குக் கொண்டு வந்து கொண்டிருந்த படகொன்றைப் புகைப்படமெடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பரந்த நீர்ப்பரப்பில், குளிர்ந்த காற்றில், மாலை மங்கும் அந்த அமைதியான தருணம் மறக்க முடியாதது.