Sunday, August 12, 2007

ப்ரூனே வந்தேன்


 

பிரிட்டிஷாரால் போர்னியோ என்றும் மலாய்காரர்களால் கலிமான்றான் என்றும் அழைக்கப்படும் தீவை மூன்று நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. வடக்குப் பாகத்தின் பெரும்பகுதி, கிழக்கு மலேசியாவின் சாரவாக், சாபா மாநிலங்கள். தெற்குப் பாகம் இந்தோனேசியாவின் கலிமான்றான். சாரவாக், சாபாவுக்கு நடுவில் ஒரு சிறு கீற்று ப்ரூனே. எரி எண்ணெயும், வாயுவும் கொழிக்கும் ஒரு சிறு நாடு.

பாலியிலிருந்து ப்ரூனேக்கு நேரடியாக விமான சேவை இருப்பது எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்தது. ப்ரூனேயின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சம் (கன்னியாகுமரி மாவட்ட ம.தொ.வில் நான்கில் ஒரு பங்கு). ப்ரூனேக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தொழில் சம்பந்தமாக செல்பவர்கள். பாலிக்கு செல்கிறவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பவர்கள். இதில் பாலிக்கும், ப்ரூனேக்கும் இடையில் விமானம் விடக் கூடிய அளவு பயணிகள் எப்படிக் கிடைக்கிறார்கள்; ஒரு வேளை ரொம்ப சின்ன விமானமாக இருக்கலாம். அல்லது, விமானத்தில் கூட்டமிருக்காது; ஹாயாக பயணம் செய்து கொண்டு போகலாம் என்ற நினைத்துக் கொண்டு விமான நிலையம் வந்தேன். இரண்டு கணிப்புகளும் தவறாக இருந்தது. ராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் இயக்கிய ஏர்பஸ் A320 விமானம் 150 பயணிகளை ஏற்றிச் செல்வது; முழுவதும் நிறைந்திருந்தது. பல வெள்ளைக்கார யுவதிகள் பாலியின் கடற்கரைகளில் அணிந்த உடுப்புகளை அதிகம் மாற்றாமலே விமானம் ஏறியிருந்தார்கள். ப்ரூனேயில் இவர்களை எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்ற கவலையோடுதான் பயணம் செய்தேன். பெரும்பாலான கவலைகளைப் போலவே இந்தக் கவலையும் தேவையில்லாதுதான் என்பது பிறகு தெரிய வந்தது.

பண்டார் செரி பெகவான் – இதுதான் ப்ரூனேயின் தலைநகர். சுருக்கமாக பண்டார் என்றழைக்கிறார்கள். பண்டார் விமான நிலையத்தில், விமானத்திலிருந்து வருகையை நோக்கிப் போகும் வழியில் பராக்கு பார்த்துக் கொண்டே (அல்லது எதையோ நினைத்துக் கொண்டே) செம்மறி ஆடாக எனக்கு முன்னால் சென்றவர்களோடு ட்ரான்சிட் தளத்திற்குள் நுழைந்து விட்டேன். தவறை உணர்ந்து திரும்பிப் போக எத்தனித்தால் கதவு ஒரு வழியாகத்தான் திறக்கும் என்று தெரிகிறது. அதாவது, உள்ளே வரலாம். வெளியே போக முடியாது. நல்ல வேளையாக கதவிற்கு அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒருவரை அழைத்து, கதவைத் திறக்க சைகை காட்ட, அவரும் மறுப்பேதும் சொல்லாமல் திறந்து விட்டார்.

பண்டாரின் வருகை தளம் காலியாக காற்றாடிக் கிடந்தது. குடியுரிமை சோதிப்பில் முக்காடு அணிந்த நான்கு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். எனது கடவுப் புத்தகத்தில் கலர், கலராக ரப்பர் ஸ்டாம்புகள் குத்தி அனுப்பினர். சுங்கவரிக்காரர் தூரத்திலிருந்தே கையசைத்து விட்டார் சோதனை தேவையில்லை என்று. ஆக மொத்தத்தில் நான் வந்த விமானத்தில் ப்ரூனே வந்தது 10 பேருக்கும் குறைவுதான். மற்ற பயணிகளெல்லாம் ப்ரூனேயிலிருந்து பாங்காக், சிங்கப்பூர், கோலாலம்பூர் என்று வழியிறங்கிச் செல்லும் பயணிகள் போல.

பண்டார் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரும் வழியிலெல்லாம் 10 அடிக்கு ஒரு முறை ப்ரூனே சுல்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு 61 வயது பிறந்த நாள் சமீபத்தில்தான் கொண்டாடினார்களாம். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனர்களை எல்லா இடங்களிலும் தொங்க விட்டிருந்தார்கள். அவரைப் பார்த்தால் 61 வயது என்று மதிக்க முடியாது. 20 வயது இளமையாகத் தெரிகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் வயதில் 30 குறைந்த ஒரு மலேசிய தொலைக்காட்சி அறிவிப்பாளரை இரண்டாவது மனைவியாக மணம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் உலகத்தின் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தவர். பில் கேட்ஸை கார்லோஸ் ஸ்லிம் முந்திவிட்ட இந்தக் காலத்தில் கொஞ்சம் பின் தங்கி விட்டார். அவருடைய தம்பி, இளவரசர் ஜெப்ரி, ப்ரூனே முழுக்க கட்டிடங்களை எழுப்புகிறேன் என்று கொஞ்சம் பில்லியன்களை ஆற்றில் போட்டு விட்டாராம். இருந்தாலும் சுல்தானின் இப்போதைய சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்களாம். ஐந்து அல்லது ஆறு சைபருக்கு மேல் கொண்ட எண்கள் அனைத்துமே என் மூளையை மழுங்கடித்து விடுவதால் 10 பில்லியன் டாலர் என்பது ரூபாயில் எத்தனை என்றெல்லாம் எழுத விரும்பவில்லை. ஒரு டாலருக்கு 9000 ருப்பையா கொண்ட இந்தோனேசியாவில் மனக்கணக்காக கரன்சி மாற்றி, மாற்றி மண்டை காய்ந்து இப்போதுதான் வந்திருக்கிறேன்.

ப்ரூனே மக்கள் பொதுவாக எந்த விஷயத்திலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்று படுகிறது. நிதானமாக நடக்கிறார்கள்; பேசுகிறார்கள்; வண்டியோட்டுகிறார்கள். எப்போதும் ஒரு வித புன்னகை முகத்தில் தவழ்கிறது. கீழ் நிலைகளில் லஞ்சம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் திருட்டு போன்ற சிறு குற்றங்கள் பரவலாக நடைபெறுகின்றன. அரசாங்கம் விமரிசிக்கப்படுவதை விரும்பவதில்லை என்று இணையதளங்களில் படித்தேன். ஆனால், ப்ரூனேயைக் கடுமையாக விமரிசிக்கும் இணையதளங்களைக் கூட இங்கிருந்து அணுக முடிகிறது. எனவே, சீனா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது ப்ரூனேயில் இணைய சென்சார் கெடுபிடிகள் குறைவு என்றே நினைக்கிறேன்.

கலிமன்றான் தீவு தாவர, மிருக வளம் மிக்க ஒன்று. பசுமைமாறாக் காடுகள், சதுப்பு நிலக்காடுகள் எங்கும் செழித்து பரந்திருக்கின்றன. சாலையில் ஓரிடத்தில் 3-4 அடி நீளம் கொண்ட ஒரு உடும்பைக் (monitor lizard) காப்பாற்ற வாகனத்தின் சாரதி ப்ரேக் அடித்தார். நம்மூரில் முரண்டு பிடித்துக் கொண்டு வளரும் செம்பனைகள் (red palms) இங்கு காடுகளில் எங்கும் 30-40 அடிகள் வளர்ந்து நிற்கின்றன. பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் நீராவியில் நிற்பதைப் போன்ற வெப்பநிலை இருக்கிறது. காலை 8 மணிக்கு மேல் மாலை 7 மணி வரை வெளியில், அதிலும் வெயிலில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்க முடிவதில்லை.

பகலெல்லாம் கொடுமையான வெயில் அடிப்பதால் இரவில்தான் மனித நடமாட்டம் தென்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) இரவு கெடாங் மால் பக்கம் போகலாம் என்று நண்பர் ஒருவர் அழைத்துக் கொண்டு போனார். இரவு 9 மணி. கெடாங் மால் பகுதியில் வண்டியை நிறுத்த இடமில்லாத அளவுக்கு கூட்டம். ப்ரூனேயில் இருக்கும் நான்கு லட்சம் மக்களும் ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதிக்கு வந்து விட்டார்கள் போல. பசியோடு அரை மணி நேரம் பார்க்கிங் தேடி அலுத்துப் போய், வெளியே வந்து வேறு இடத்தில் சாப்பிட்டோம்.

ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஹாஜி ஹசன்னல் போல்க்கியா முசாய்தீன் வாதுல்லா, அதாவது இப்போதைய சுல்தானின் தந்தை ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஓமர் அலி மூன்றாவது சைபுதீனின் நினைவாக எழுப்பப்பட்ட மசூதியின் இரவுத் தோற்றமே மேலே கண்டது. ஆமாம், இந்த ஹிஸ் மெஜஸ்டியை தமிழில் எழுதுவது எப்படி: ராஜ ராஜ ராஜ மார்த்தண்ட ராஜ குல திலக ராஜ குலோத்துங்க ….?
Posted by Picasa

1 comment:

வடுவூர் குமார் said...

போற் வழியில இங்க இறங்கி அப்படியே எட்டிப்பார்த்திட்டு போயிருக்கலாம் அல்லவா!!
சரவாக்கில் நல்ல இடங்கள் உள்ளன,சுற்றிப்பாருங்கள்.