Sunday, April 10, 2011

தேர்வு செய்யப்பட்ட சிலர்: ஜெயமோகனின் சமீபத்திய அபத்தத்திற்கு ஒரு பதில்

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் என்பதில் எனக்கு எந்த ஐயங்களும் கிடையாது. இணையத்தில் அவரை வாசிக்கத் தொடங்கு முன்னரே பதிப்பில் அவரை வாசித்து வந்திருக்கிறேன். இப்போது இணையத்திலும் வாசிக்கிறேன். எனது வாசிப்பு வேகத்தை விட அவர் எழுதும் வேகம் அதிகம் என்பதால் சில சமயங்களில் அவரது எல்லா படைப்புகளையும் வாசிக்க முடியவில்லை. ஆனால் பெரும்பாலானவற்றை வாசித்து விடுகிறேன். அவரது எழுத்துக்களிலிருந்து நான் பல விஷயங்களில் அறிவும் தெளிவும் பெற்றிருக்கிறேன். ஆனால் அவரது பல கருத்துக்களில் எனக்கு முரண்பாடும் உண்டு.
தேர்வு செய்யப்பட்ட சிலர்” என்ற தலைப்பில் ஜெயமோகன் சமீபத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார். அபத்தங்களும், அரைவேக்காட்டுத்தனமும், ஆபத்தும் நிறைந்த ஒரு பதிவு அது. அதற்கான எதிர்வினைகள் நான் அறிந்த மட்டிலும் திருப்திகரமானதாக இல்லை. எனவேதான் இந்த பதிவு.

முதலில் ஜெயமோகன் என்ன நோக்கத்திற்காக இந்தக் கட்டுரையை எழுதினார் என்று பார்க்கலாம். கூர்மையான அறிவும், நுண்ணுணர்வும் கொண்டவர்கள் தங்கள் குறைபாடுகளைக் காரணமாகக் காட்டி தாங்கள் அடைய வேண்டிய இலக்கைத் தவற விட்டு விடக் கூடாது என்று அறிவுறுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம். அந்த நோக்கத்தில் குறையொன்றுமில்லை. இது புதிதான ஒரு கருத்துமில்லை. யேசு ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஒரு எசமானன் தன் வேலையாட்கள் மூன்று பேரை அழைத்து ஒருவனிடம் 10 காசு, இன்னொருவனிடம் 5 காசு, இன்னொருவனிடம் ஒரே ஒரு காசு கொடுத்து விட்டு வெளியூர் செல்கிறார். திரும்பி வந்து கணக்கு கேட்கிறார். 10 காசு, 5 காசு வாங்கினவர்கள் கொடுக்கப்பட்ட பணத்தை முதலீடு செய்து இரட்டிப்பாக்கி விட்டார்கள். ஒரு காசு வாங்கினவன் ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி, அந்த ஒரு காசையே திருப்பிக் கொடுக்கிறான். “டேய் நீ அந்த ஒரு காசை வட்டிக்காரனிடம் கொடுத்திருந்தால் வட்டியாவது கிடைத்திருக்குமே” என்று எசமானன் அவனைக் கடிந்து கொள்கிறார். யேசு சொன்னது காசைப் பற்றி அல்ல, நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளைப் பற்றியே என்று கிறிஸ்வர்கள் நம்புகிறார்கள். ஜெயமோகன் சொல்வதும் இதுவே.

தன்னுடைய நோக்கத்தை விவரித்து எழுதும் போது ஜெயமோகன் முன் வைக்கும் கருத்துக்களில் ஒன்று கூரிய அறிவுத் திறனும் நுண்ணுணர்வும் கொண்ட மக்கள் மொத்த மானுட இனத்தில் அரை சதவீதம்தான் என்கிறார். இந்த அரை சதவீதக் கணக்கை அவர் எங்கேயிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. அறிவுத் திறனை ஐ.க்யூ பிரதிபலிக்குமென்றால், கூரிய அறிவுத் திறன் கொண்டவர்கள் சுமார் ஐந்து சதவிகிதம் இருக்கலாம். நுண்ணுணர்வை அளக்க தேர்வுகள் எதுவும் கிடையாதென்று நினைக்கிறேன். எப்படியானாலும் அறிவுத் திறன், கலைத் திறன்கள் நபருக்கு, நபர் வேறுபடுகிறது என்பது உண்மை.

மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் தவிர ஜெயமோகனின் பதிவில் தெரிவதெல்லாம் அபத்தமும், அரைவேக்காட்டுத்தனமும் நிறைந்த ஆபத்தான கருத்துக்களே. அவற்றின் சாராம்சம் என்னவென்றால், மனிதப் பண்பாடு உருவானதற்கும், தொடர்வதற்கும் ஒரே காரணம் கூரிய அறிவுத் திறனும், நுண்ணுணவர்வும் கொண்ட கொஞ்சம் பேரே; பெரும்பான்மையான மக்களுக்கும் மனிதப் பண்பாடு உருவாகி, தொடர்வதற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை என்பது. “மானுட இனத்தில் ஏதேனும் ஒரு வகையில் அதன் பண்பாட்டுக்காக, அதன் மேன்மைக்காக ஒரு துளியேனும் பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் அரை சதவீதத்துக்கும் கீழேதான். அவர்கள் தான் நாம் காணும் இந்த ஒட்டுமொத்த மானுட பண்பாட்டையே உருவாக்கியவர்கள்” என்று சொல்லி விட்டு தன்னுடைய கருத்தின் நீட்சியாக “மீதிப்பேர் பிறந்து உழைத்து உண்டு குழந்தை பெற்று வளர்த்து மறைபவர்கள். மானுட இனத்தின் தொடர்ச்சியை நீட்டிப்பதை தவிர அவர்களுக்கு இயற்கை எந்த பொறுப்பையும் அளிக்கவில்லை” என்கிறார் அவர்.

பண்பாடு என்ற சொல் பரந்த பொருளுள்ள ஒன்று. ஜெயமோகன் மேற்கண்ட பதிவில் பண்பாடு என்பதைக் கலாச்சாரம் என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறார். தமிழ் விக்கிப்பீடியா “பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.” என்கிறது. இந்த வரையறயைத்தான் ஜெயமோகனும் பயன்படுத்துகிறார் என்பதை அவர் பதிவிலும், அப் பதிவிற்கு விளைந்த பின்னூட்டங்களுக்கு அவர் அளித்த பதில்களிலும் உள்ள பல்வேறு எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

ஆக, ஜெயமோகனின் நம்பிக்கையின்படி வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு, மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் எனப் பரந்துள்ள மானுடப் பண்பாட்டிற்கு 99.5 சதவிகித மக்கள் ஆற்றும் பங்கு பூஜ்யம். நமது ஆலயங்களிலுள்ள அர்ச்சகர்கள், நமது பள்ளிகளிலுள்ள ஆசிரியர்கள், நமக்கு உணவளிக்க பூமியுடன் போராடும் உழவர்கள், நமது இல்லத்தைப் பேணி, வேளாவேளைக்கும் உணவளிக்கும் தாய்மார்கள்-- இவர்களெல்லாம் நமது பண்பாட்டிற்கு ஆற்றும் பங்கு வெறும் பூஜ்யம். என்ன ஒரு மூடத்தனமான கருத்து என்று தோன்றுகிறதல்லவா?

மானுடப் பண்பாடு என்பதை நாம் முதன்முதலாக நம் பெற்றோரிடமிருந்து அறிகிறோம். இதுதான் அது என்ற வாய்வழி விளக்கமாக அல்ல. செய்முறை உதாரணங்களின் மூலம். பெரியோரை மதிக்க வேண்டும்; வீட்டிற்கு வருவோரை முகம் மலர வரவேற்க வேண்டும்; வந்தனம் செய்ய வேண்டும் என்று அறிவது பெற்றோரிடத்துதான். அவர்கள் கேட்டு ரசிக்கும் இசை, சிலாகிக்கும் திரைப்படக் காட்சிகள் என்பவற்றிலிருந்துதான் நமது கலாரசனை தொடங்கியிருக்கிறது. காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக பண்பாடு இப்படித்தான் கடந்து வந்திருக்கிறது. இந்தப் பணியைச் செய்பவர்களைத்தான் “மானுட இனத்தின் தொடர்ச்சியை” நீட்டுவதைத் தவிர வேறு பொறுப்பில்லாதவர்கள் என்று சிறுமைப்படுத்துகிறார் ஜெயமோகன். பின்னாளில் அரவிந்தன் நீலகண்டன் என்ற மிகுந்த பணிவன்பு கொண்ட பெருமகன் ஒருவர் வந்து “இந்த சாதாரணர்களின் விந்துக் கொடிகளிலிருந்துதானே ஏதோ ஒரு தலைமுறையில் அசாதாரணர்கள் உருவாகிறார்கள்” என்பதே “இந்த சாதாரணர்களின் இருப்புக்கான நியாயம் ஆகிறதல்லவா?” என்று கேட்கிறார். ஜெயமோகனும் “ஆம், அது உண்மையான ஒரு பார்வை. அதைத்தான் தொடர்ச்சியை நிலைநிறுத்தல், கட்டமைப்பாக ஆகிநிற்றல் என்று சொல்கிறேன். நித்யா போன்ற ஒருவரின் அம்மாவுக்கு வரலாற்றில் உள்ள இடம் அதுதான்.” என்கிறார். ஞான மரபென்னும் ஜீராவில் ஊறிய குலாப் ஜாமூன்களே, பண்பாட்டின் தொடர்ச்சியை நிலைநிறுத்தலும், கட்டமைப்பாக ஆகிநிற்றலும் பிள்ளையைப் பெற்றுப் போடுவதால் மட்டும் வந்து விடுவதல்ல. சந்தேகமிருந்தால் ஒன்று செய்யுங்களேன். நீங்கள் சொல்லும் சாதாரணர்களெல்லாம் திருமணம் போன்ற பண்பாட்டுச் செயல்களை மறந்து விட்டு, அவர்களுக்கு நீங்கள் நியமித்துள்ள இனப்பெருக்கக் கடமையில் மட்டும் ஈடுபட வற்புறுத்துங்கள். “பிறவியிலேயே அறிவும் நுண்ணுணர்வும்” கொண்ட குழந்தைகள் சுயம்புவாக உருவாகி பண்பாட்டைத் தொடரட்டும். நடக்குமா இது? இப்போது சொல்லுங்கள் குலாப் ஜாமூன்களே, வெறும் மானிட இனத்தின் தொடர்ச்சியும் பண்பாட்டை உருவாக்குபவர்களைப் பெற்றுக் கொடுப்பது மட்டும்தானா the so called சாதாரணர்களின் கடமை? பண்பாட்டின் நீட்சிக்கு அவர்கள் பங்காற்றுவதே கிடையாதா?

அடுத்தது, பண்பாட்டின் நீட்சி மட்டும்தானா the so called சாதாரணர்கள் பண்பாட்டிற்காற்றும் பங்கு? இல்லையே. அறிவும், நுண்ணுணர்வும் கொண்ட சிறுபான்மை அசாதாரணர்கள் பண்பாட்டை உருவாக்கலாம். ஆனால் அந்தப் பண்பாட்டை போஷிக்கும் அரசியல், சமூக கட்டமைப்புகள், அவற்றிற்கான நாளாநாள் நிர்வாகம், அனைத்திற்கும் மேலாக அந்தப் பண்பாட்டின் சின்னங்களை பராமரிக்கும் பணிகள் அத்தனையிலும் பெரும்பான்மையான சாதாரணர்களுக்கு கடமைகள் இருக்கின்றன.அவர்களில் பலர் அதை தங்கள் வாழ்வின் வழியாகவே, முழுப் பிரக்ஞையுடனும், ஈடுபாட்டுடனும், மனப்பூர்வமான ஒப்புதலுடனுமே செய்கிறார்கள். தஞ்சைப் பெரிய கோயிலோ, தாஜ்மஹாலோ அறிவும், நுண்ணுணர்வும் கொண்ட சில சிற்பிகளினால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். அறிவும், நுண்ணுணர்வும் கொண்ட ஒரு மன்னனால் நிதியும், நிர்வாகமும் வழங்கப்பட்டிருக்கலாம். போர்க் கைதிகளும், அடிமைகளும் சில பணிகளில் நிர்பந்தத்தின் மூலம் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கலைச் சின்னங்கள் முழுச் செயலாக்கம் பெற்றது பெரும்பான்மையான சாதாரணர்களாலேயே.

சாதாரணர்கள் பண்பாட்டிற்கு ஆற்றும் மூன்றாவது பங்கு மற்றெல்லாவற்றையும் விட முக்கியமானதாகும். யோசித்துப் பார்த்தால், எது பண்பாடு என்று வரையறை செய்பவர்களே அவர்கள்தான். அறிவும், நுண்ணுணர்வும் கொண்ட சிறுபான்மை அசாதாரணர்கள் பண்பாட்டை உருவாக்கலாம். ஆனால், அதைப் பண்பாடு என்று சாதாரணர்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அது பண்பாடு ஆகிறது. அவர்கள் நிராகரித்தால் அது வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு தள்ளப்படுகிறது. அவர்கள் இது என் பண்பாடு, இன்னொரு பண்பாடு வந்து அதை மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று பற்றித் தழுவிக் கொள்ளும் போதுதான் அந்தப் பண்பாடு காக்கப் படுகிறது. எனது பண்பாட்டில் சில அம்சங்களில் குறைகள் உள்ளன, மற்றொரு பண்பாட்டில் இருக்கும் சில அம்சங்கள் அதைச் சமப்படுத்தாலாம் என்று அந்தப் பண்பாட்டு அம்சங்களை ஏற்றுக் கொள்ளும் போது பண்பாடு மாற்றம் பெருகிறது. இலக்கியம், இசை, மத நம்பிக்கைகள், கல்வி முறைகள் என்று ஒவ்வொரு பண்பாட்டுத் தளத்திலும் எனது கருத்தை நிரூபிக்கும் ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சற்றே சிந்திக்கும் யாருக்கும் அவை புலப்படும் என்பதால் விவரிக்கவில்லை.

இறுதியாக, இந்த “சாதாரணர்கள்” பண்பாட்டை உருவாக்குவதேயில்லையா? கி. ராஜநாராயணன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை மக்கள் காணச் செல்லும் போது, சிறு கல் ஒன்றை அங்கே ஒரு நினைவிற்காக தூக்கிப் போட்டுப் போவார்களாம். நாளடைவில் இப்படிப் போடப்பட்ட கற்கள் ஒரு மாபெரும் குவியலாக மாறி கட்டபொம்மனுக்கு ஒரு நினைவுச் சின்னமாக விளங்கியதாம். பின்னாளில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்துப் புகழ் பெற்ற போது, அந்தக் கல் குவியலை அப்புறப்படுத்தி விட்டு ஒரு கட்டபொம்மன் சிலையை நிறுவினாராம். ராஜநாராயணன் கோபமாகச் சொல்வார்: மக்கள் தாமாக உருவாக்கிய ஒரு நினைவுச் சின்னத்தை எப்படி அப்புறப்படுத்தலாம் என்று. இப்படித்தான் சிறு, சிறு கற்களாகவும் சாதாரணர்கள் தாமாகவே பண்பாட்டை உருவாக்கி எழுப்பலாம். எழுப்பியுமிருக்கிறார்கள். தகுதியும் பொறுப்புமில்லாததாக ஜெயமோகனால் கணிக்கப்படும் இந்தப் பாமரர்கள் தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அறிஞர்களோடும், இலட்சியவாதிகளோடும் சேர்ந்து ரத்தமும் கண்ணீரும் சிந்தி, அறிந்தோ, அறியாமலோ பண்பாட்டின் உடன்பணியாளர்களாக இருந்திருக்கிறார்கள் துனிசியாவில் உயிர்த் தியாகம் செய்து மக்கள் எழுச்சியை உருவாக்கியவர்களைப் போல. அவர்களை பண்பாட்டைச் “சுவைத்து களித்து” அதன் பின்னுள்ள தியாகத்தை “அறியாமல் அதன் மேல் வாழ்வார்கள்” என்று தாழ்த்துவதை ஜெயமோகனின் அறியாமையின் அடையாளமாகவே நான் காண்கிறேன்.

ஜெயமோகன் எழுதுகிறார்: “இருபத்தைந்து வருடம் முன்பு நான் ஒருநாள் ஒரு நூலகத்தில் இருந்து வெளியே வந்து தெருவில் செல்லும் பெரும் கூட்டத்தை பார்த்து சட்டென்று மன அதிர்ச்சி அடைந்தேன். அவரில் எவருக்குமே மானுடம் இத்தனை காலம் சேர்த்து வைத்துள்ள ஞானத்தின் துளிகூட தெரியாது. அவர்கள் எவரும் எதையும் சிந்திப்பவர்கள் அல்ல. இளமையில் அவர்களுக்கு பிறப்பில் தற்செயலாக எது கிடைக்கிறதோ எதை சூழல் அவர்கள் மேல் ஏற்றுகிறதோ அவைதான் அவர்கள். அவர்கள் அடைவதென்று ஏதுமில்லை. பிரம்மாண்டமான ஒரு பரிதாபம் என் தொண்டையை அடைத்தது. உண்மையில் அன்று நான் கண்ணீர் மல்கினேன்.”

இன்று நானும் கண்ணீர் மல்குகிறேன். ஏனென்றால் ஜெயமோகன் காணும் அந்தப் பாமரர் பெரும்கூட்டத்தில் என்னுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வருகிறார்கள். பூமேடை, கெத்தேல் சாகிப், கறுத்தான், புத்தகப் பதிப்பாளர் வீட்டு ஆச்சி போன்றவர்களும் தென்படுகிறார்கள். அந்த சாதாரணர்களின் அசாதாரண செயல்கள் நான் வாழும் பண்பாட்டின் உயிரினை வெளிப்படுத்தும் துளிர்கள். அந்தப் பெருமிதக் கண்ணீரூடே ஒரு பரிதாபக் கண்ணீர்த் துளியும் உண்டு. அஃது அந்த சாதாரணர்களை ஜெனித்த அசாதாரணர் ஜெயமோகனின் அசாதாரண அறியாமைக்காக.