27 ஆகஸ்ட் 2007 அதிகாலை 2 மணி
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை
இரண்டாண்டுகளுக்கு முன் இந்த விமான நிலையத்தை உபயோகப்படுத்தும்போது ஏற்பட்ட சில்லறை சிரமங்களால், இதைத் தவிர்த்து விட்டு சென்னை வழியாகவே வான் பயணம் மேற்கொள்ளுவதை நாடி வந்திருக்கிறேன். இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் மறுபடியும் மும்பை.
கடந்த முறைக்கு மும்பை விமான நிலையத்தில் சில, நல்ல மாற்றங்கள். நெரிசல் குறைந்தது போலிருக்கிறது. கடந்த முறை கைப்பைகள் பரிசோதிக்கும் வரிசையில் 50-60 பேர். அவர்களில் பந்தா துளிகூட காட்டாது பொறுமையாக நின்றிருந்த ரத்தன் டாட்டாவும் உண்டு. இம்முறை குடியுரிமை சோதனையில் கூட கூட்டமில்லை. பதினாறு அதிகாரிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் போய் நின்றவுடன் அழைத்தார்கள். என்னை சோதித்த நீலப் புடவை உடுத்திய பெண் அதிகாரி என்னையும், என் கடவுச் சீட்டையும் ரொம்ப சந்தேகமாக பார்த்தார். பல கேள்விகள் கேட்டார். திருப்தியில்லாமல்தான் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதித்தது போல் தோன்றியது.
சிவாஜியின் பயணிகள் காத்திருப்பு கூடம் மகா விசாலமாக இருக்கிறது. வசதியற்ற நாற்காலிகளில் பலர் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். பார்த்தவுடன் பசியடங்கி விடும் வகையில் காட்சியளிக்கும் சாண்ட்விச்களையும், அக்காமாலா பானங்களையும் விற்கும் இரு கடைகள், டாலரை 39.75 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, அதையே 44.50 ரூபாய்க்கு விற்கும் இரு அந்நிய செலாவணிக் கடைகள், சுங்கவரி விலக்கு பெற்ற பொருட்களை விற்கும், கொஞ்சமும் ஆர்வத்தைத் தூண்டாத இரு கடைகள் – இப்படி பயணிகளோடு சேர்ந்து அரைத் தூக்கத்திலிருக்கிறது விமான நிலையம். கடந்த முறை ஏற்பட்ட எரிச்சல் மாறி, இந்த முறை அலுப்புதான் தட்டியது.
அடுத்த முறையாவது இந்த விமான நிலையம் நல்ல அனுபவத்தை தரலாம் என்ற நம்பிக்கையோடு விமானம் நோக்கி நடந்தேன்.
2 comments:
நீங்கள் சொன்ன மாதிரி நெரிசல் குறைவுதான்.ஆனால் அதே லஞ்சம்.அதே மனோபாவம்.இரண்டு மணி நேர பிடிவாதத்தில் கடைசியில் தோற்றுப் போய் கையிலிருந்த டாலர்களை விடியோ கேமராவுக்காக அழுதுட்டு வந்தேன்.
அவ்வளவு கூட்டம் இருந்தும் சோகமான ஒரு சூழலுடன் அலுப்பு தட்டும் வண்ணம் மும்பை விமான நிலையம் இருப்பது ஏன் என நானும் பலமுறை யோசித்து இருக்கிறேன் ஒன்றும் புரியவில்லை.
Post a Comment