Sunday, August 5, 2007

இந்த வாரம் முழுவதும் பாலியில்

புவியியலில் தட்டுத் தடுமாறுபவர்களுக்கு சிறு குறிப்பு: பாலி என்பது இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. இந்தோனேசியாவின் பிரதான தீவாகிய ஜாவா தீவிற்கு வடகிழக்கில் ஒரு சிறிய தீவு. காரில் ஒரு ஐந்து மணி நேரத்திற்குள் தீவை சுற்றி வந்து விடலாம். பவழப்பாறைகள் சூழ்ந்த தீவு. வெண்மணல் கடற்கரை. அடர்ந்த நீலக் கடல். எரிமலைகள் உமிழ்ந்த கரும்பாறைகள் பொடிந்து உருவான வளமான மண். வஞ்சகமில்லாமல் பெய்யும் மழை. விளைவாக எங்கும் பசுமை. கடவுள் ஓரவஞ்சனையாக சில இடங்களுக்கு எல்லாவித அழகையும் கொடுக்கும் வழக்கம் உண்டல்லவா. அதில் இதுவும் ஒன்று.

பாலியின் அழகைக் காண வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். கண்டால் மட்டும் போதாது என்று கண்டபடி கொண்டாட்டமும் போடுகிறார்கள். இப்படிக் கொண்டாட்டம் போடுபவர்களுக்கு குண்டு போட இந்தோனேசியாவின் மற்ற தீவுகளிலிருந்து தீவிரவாதிகள் வருகிறார்கள். இரண்டு தடவை வெடித்த குண்டுகளால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து இப்போது மறுபடியும் பெருகி வருகிறது. மழை குறைவான, மிதமான வெப்பம் கொண்ட ஜூலை-அக்டோபர்தான் இங்கு சீசன். அரைகுறை ஆடைகளோடு, கரையில் படுத்துறங்கவா, அலையில் சாகசம் செய்யவா, அடியில் மூழ்கி பவழப்பாறைகளைப் பார்க்கவா என்று வெள்ளைக்காரர்கள் திரிகிறார்கள். ஆங்காங்கே ஜப்பான், கொரிய, சீன சுற்றுலாப் பயணிகளும் உண்டு.

பாலியின் தெற்குப் பகுதியில்தான் பிரதானமான கடற்கரைகள் உள்ளன. நான் இம்முறை தங்கியது கிழக்கு நோக்கிய சனூர் கடற்கரை. கரையிலிருந்து ஒரு 300 மீட்டர்கள் தூரம் ஆழமில்லா கடல் (ஆனால் பாறைகள் அடியில் இருப்பதால் சுலபமாக கடக்க முடியவில்லை). அதன் பின்னர் திடீரென ஆழம் 30 அடிக்கு அதிகரிக்கிறது. அங்குதான் பவழப்பாறைகள் உள்ளன.

சனூர் தவிர நுசதுவா, ஜிம்பரன், குட்டா என்று பல கடற்கரைகள் உள்ளன. நுசதுவாவில் இரண்டாண்டுகளுக்கு முன் தங்கியிருக்கிறேன். நம்மூர் கன்னியாகுமரி போல் தென்முனை என்பதால் சுற்றிலும் கடலைப் பார்க்கலாம். ஜிம்பரனில் வரிசையாக உணவகங்கள் உள்ளன. எல்லா உணவகங்களிலும் உயிரோடு மீன், இறால், நண்டு வைத்திருக்கிறார்கள். எது வேண்டுமென்று தெரிவு செய்தால், எடை போட்டு, அவித்து, வறுத்து, பொரித்து, சுட்டு – உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி சமைத்து – பரிமாறுவார்கள். இந்தோனேசியர்களுக்கு மீனைச் சுட்டு, அதாவது grill செய்து சாப்பிடுவது பிடிக்கும் போல. ஜாவாவிலும் சரி, பாலியிலும் சரி எங்கு பார்த்தாலும் ‘இங்கு இக்கான் பக்கார் கிடைக்கும்” என்று போர்டுகள் கூப்பாடு போடுகின்றன. பஹாசா மொழியில் இக்கான் என்றால் மீன்; பக்கார் என்றால் சுடுவது என்பதாம். பசியோடு இருக்கும் போது சுடு சாதம், சம்பல் என்றழைக்கப்படும் சட்னி/பச்சடி கலவைகள், சூடான இக்கான் பக்கார் கொண்டா, கொண்டா என்று இழுக்கிறது.

குட்டாதான் பாலியில் பிரபல இடம். குட்டா கடற்கரையில் ஆதவன் மறையும் காட்சி அருமையாக இருக்குமாம். எனக்கு இது வரை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. குட்டாவில் இரவு கேளிக்கை விடுதிகள் பிரபலம். குண்டுகள் வெடித்தது இங்கேதான். இம்முறை ஒரு இரவு குட்டாவிலிருக்கும் ஒரு ஜப்பானிய உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம். இன்னொரு முறை பக்கத்திலிருக்கும் கொரிய உணவகத்திற்கு. அவ்வளவுதான் குட்டா அனுபவம்.

பாலியின் மையப்பகுதி முழுவதும் மலைப் பிரதேசம். ஒரு நாள் வடக்குப் பகுதியிலிருக்கும் சிங்கராஜா வரை செல்ல வேண்டியதாயிற்று. அடர்ந்த பசுங்காடுகளிக்கிடையில் ஊசிக் கொண்டை வளைவு சாலைகள் வழியாக மூன்றரை நேரப் பயணம். வழியெங்கும் இந்துக் கோவில்கள் தென்படுகின்றன.

பாலியின் இந்து மதம் இந்தியாவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். மந்திர தந்திரம், ஆவி, மூதாதையர் வழிபாடு, உயிர்ப்பலி என்று இந்து மதத்தின் பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கிறது. இதன் வரலாறு – குறிப்பாக இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வந்தது; எப்படி இந்தோனேசியா முழுவதும் பரவிய இஸ்லாமினால் பாதிக்கப்படவில்லை – எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி படித்து விட்டு எழுதுகிறேன். கடந்த ஆண்டு கம்போடியாவிலுள்ள அங்க்கோர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. சோழர்களின் பரம்பரையினர்தான் கம்போடியாவை ஆண்டதாகவும், அங்க்கோரில் தென்படும் பல கோவில்களை (அங்க்கோர் வாட் அவற்றில் புகழ் வாய்ந்த ஒன்று) வடிவமைத்ததாகவும் நமது பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்கள் கூறியதாக ஒரு மங்கலான நினைவு. ஆனால், நான் கம்போடியாவில் வாங்கிப் படித்த புத்தகமொன்றில் அது சோழர்களா, அல்லது ஒரிசாவிலிருந்து வந்தவர்களா என்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். கோவிலுக்குள் இருந்த கல்வெட்டில் ஐ, க, த, ப போன்ற எழுத்துக்களை கண்டுபிடித்து, எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடம் அவற்றை உச்சரிக்க சொல்லி கேட்டுக் கொண்ட போது அவர் அவைகளை ஐ, க, த, ப என்றே உச்சரித்தார். தென்மேற்காசியாவில் இந்திய கலாசார வரலாறு பற்றி தெரிந்து கொள்ள நல்ல புத்தகங்கள் இருந்தால் தெரிவியுங்கள். கையடக்கமான அளவில் இருந்தால் நல்லது.
Posted by Picasa

3 comments:

இளவஞ்சி said...

ஏவிஸ்,

அங்க்கோர் கோவில் படங்கள் எதுவும் எடுக்கவில்லையா?

உங்கள் பதிவில் தமிழ்மணம் மறுமொழிக்கான வசதிகள் செய்யப்படவில்லை என நினைக்கிறேன். இல்லையெனில் இங்கு பாருங்கள்.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelines

ஏவிஎஸ் said...

வஞ்சி,

விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழையின் நடுவில் அங்க்கோர் தரிசனம் செய்தோம். என்னுடைய சைபர் ஷாட் மங்கிய ஒளியில் தரமான புகைப்படங்கள் தருவதில்லை. எனவே புகைப்படங்கள் அதிகமாக எடுக்க இயலவில்லை.

அங்க்கோர் பற்றிய தகவல் கடந்த தபாலில் ஒரு பின்குறிப்பாகவே அமைந்தது. சமயம் வாய்க்கையில் விபரமாக எழுதுகிறேன். அதற்குள் புகைப்படங்களை எப்படி பதிவுகளில் உபயோகிப்பது கற்றுக் கொண்டு விடுவேன் என்று நம்புகிறேன்.

தமிழ்மணம் மறுமொழி என்றால் என்ன போன்ற மூடத்தனமான கேள்விகளை பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். பிளாகரில் நான் உபயோகிக்கும் அடைப்பலகையின் HTMLஐ தமிழ்மணம் கொடுத்த வழிகாட்டுதல்படி திருத்த முயன்றேன். நிரலில் <$BlogItemTitle$> என்பது இல்லை. எனவே இரண்டாவது துண்டை எங்கே ஒட்டுவது என்று புரியவில்லை. எனவே அடைப்பலகையை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதை சரியானபடி திருத்தி அனுப்பினால் மற்ற மாற்றங்களை நானே செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பிற்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.

Anonymous said...

சோழர்கள் ஆட்சிக்குட்பட்டதா பாலி இருந்ததுன்னு எங்கியோ படிச்ச ஞாபகம். கடாரம், சாவகத்தீவு, ஸ்ரீ விஜயம் மாதிரி எதோ ஒரு பேர் இருக்கு. சரியா ஞாபகம் இல்லை