Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Monday, October 29, 2007

தலித்திய விமர்சனம்

கடந்த வார இறுதியில் வாசித்தது ராஜ் கௌதமன் எழுதிய “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” (காலச்சுவடு பதிப்பகம், 2005 வெளிவந்த இரண்டாவது பதிப்பு, ரூ 90).

இப் புத்தகத்தை வாங்கியதற்கு பல காரணங்கள் உண்டு. ராஜ் கௌதமன் அவர்களை “சிலுவைராஜ் சரித்திரம்” என்ற அவரது நூலின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்டேன். சுயசரிதையினடிப்படையில் பின்னப்பட்ட புதினமான அந்நூல் என்னுடைய மனதைக் கவரவே, தொடர்ந்து அவரது “காலச்சுமை” என்ற நூலையும் வாங்கி வாசித்தேன். இது “சிலுவைராஜ் சரித்திரம்” நூலின் தொடர்ச்சியே. இந்த இரண்டு நூல்களும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளில் சிலவற்றை நான் புரிந்து கொள்ள உதவி செய்யவே, ராஜ் கௌதமன் எழுத்துக்களை மேலும் வாசிக்கும் எண்ணம் எழுந்தது. கூடவே, நமது சமூகத்தில் சாதியமைப்பின் எதிர்காலம் பற்றி எனது மனதில் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும் கேள்விகளில் சிலவற்றிற்காவது “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” நூலில் விடைகள் இருக்கலாம் என்று தோன்றியது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

“தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” 15 கட்டுரைகள் அடங்கிய 185 பக்கப் புத்தகம். 1991லிருந்து 2002 முடிய எழுதப்பட்ட கட்டுரைகள் கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று ரணஜித் குகா என்பவர் எழுதிய ஆங்கில நூலின் சுருக்கமான தமிழ் தொகுப்பு. ஒன்பது நூல் விமர்சனங்கள். இவை தவிர இரண்டு கட்டுரைகள் தீவிர இலக்கியம் சார்ந்தவை. இவற்றில் “பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்” என்பதையும், “குடும்பம், பெண்ணியம்” ஆகிய இரண்டு கட்டுரைகளையும் என்னால் வாசிக்க முடியவில்லை. மிகவும் செறிவு வாய்ந்த என் கபாலத்திற்குள் மிகவும் செறிவு வாய்ந்த அக் கட்டுரைகள் இறங்க மறுத்து விட்டன.

“தலித்தியப் பார்வையில் பாரதி,” “காலம் பார்த்து வந்த ‘தோட்டியின் மகன்’,” “புனித ஆறுமுகம்” மற்றும் “புதுமைப்பித்தன்: விமர்சனமும் சாதியமும்” ஆகிய நான்கும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகள். ராஜ் கௌதமனின் எள்ளல் தெறிக்கும் உற்சாக நடை எல்லாக் கட்டுரைகளிலும் இருக்கிறதென்றாலும், அது உச்சாணியை எட்டுவது “ஒரு டவுசர் கிழிந்த கதை” என்ற கடைசிக் கட்டுரையில்தான். அக்கட்டுரையின் பொருளுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கதை நடக்கும் ஊர்தான் எனது முன்னோர்களின் கிராமம். அந்த டவுசரின் வலது காலை அணிந்திருந்தவர்கள்தான் எனது முன்னோர்கள். இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.

நூலின் முதல் கட்டுரையான “தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்” என்ற கட்டுரை தேசிய விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் வழிவந்த இலக்கிய முயற்சிகள் எல்லாம் தலித் சமுதாயத்தை ஒடுக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டன என்று சொல்லிவிட்டு, தலித் இலக்கியம் என்றால் என்ன என்று வரையிட முயற்சி செய்கிறது:

எல்லா வகையிலுமுள்ள ஒடுக்கு முறைகளை எதிர்த்து, இனி தனக்குக் கீழ் ஒடுக்குவதற்கு எதுவும் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்குடைய இலக்கியத்தைத்தான் தலித் இலக்கியம் என்று கூறலாம்” என்று சொல்லி விட்டு “இனியொரு சாதியோ, மதமோ, குடும்பமோ, சுரண்டலோ உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம். இத்தகைய அரசியலை மேற்கொண்ட, கருத்தியல் ரீதியில் தலித்துக்களான அனைவராலும் இத்தகு தலித் இலக்கியத்தைப் படைக்க முடியும்” என்கிறது இக் கட்டுரை.

இவ்வளவு விரிவாக சொன்ன பிறகும் தலித்திய இலக்கியம் என்றால் என்ன என்பதை என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியாததற்கு என் கபால ஓட்டின் செறிவு ஒரு காரணமென்றாலும், “எவர்தான் ராஜ் கௌதமன் அவர்கள் தலித் இலக்கியம் புனைவோருக்கு விதிக்கும் மிகக் கடினமான தகுதியினை எட்ட முடியும்?” என்ற மலைப்பும் ஒரு காரணம். இன்னொரு இடத்தில் (தலித்தியப் பார்வையில் பாரதி, பக்கம் 149) “சாதி, அரசியல், நாடு, இனம், மொழி, மதம், பால், பொருளாதாரம் முதலிய பல்வேறு நிலைகளில் ஏதாவது ஒரு சிலவற்றால் மனிதர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்களே” என்கிறார். இதனுடைய இன்னொரு பக்கம், எவ்வளவுதான் ஒடுக்கப்பட்டாலும், மனிதன் தன் தன்மையிலேயே ஒடுக்குபவனாகவும் இருக்கிறான். இது மனிதனுக்கு மட்டுமல்ல மனுசிக்கும் பொருந்துவதுதான். எனவேதான் ராஜ் கௌதமன் அவர்களின் தகுதிக்கு உட்பட்டு யார் இலக்கியம் படைக்க முடியும் என்று தோன்றுகிறது. மேலும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம் என்பதும் விவாதத்திற்குரியதாகிறது. இம் மூன்றில் மதமும், குடும்பமும் உருவாகதபடி செய்வதன் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே. ஒரு வேளை சுரண்டலுக்குட்படுத்தும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடியான செயல்பாட்டையே ஆசிரியர் குறிப்பிடுகிறாரோ என்னவோ. மூன்றாவது வரையறையான தலித்துகள்தான் தலித் இலக்கியத்தைப் படைக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பது மட்டுமே எனக்கு தெளிவாக புரிகிறது.

தலித் இலக்கியம் பற்றி ஒரு தெளிவான பார்வை ராஜ் கவுதமன் அவர்களது கட்டுரையில் எனக்கு கிட்டவில்லை என்பதற்கு இக்கட்டுரை எழுதப்பட்ட காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். இது எழுதப்பட்ட 1991ல் தலித் இலக்கியம் என்று ஒன்று உருவாக்கப்படவில்லை என்றே ராஜ் கவுதமன் கருதுகிறார். இல்லாத ஒன்றைப் பற்றி தெளிவான பார்வையை எப்படி உருவாக்க முடியும்? ஆனால் பிற்காலத்தில் தலித்திய இலக்கியம் உருவெடுக்க ஆரம்பித்தபின் தனது கருத்துக்களை தெளிவு படுத்தியிருக்கலாம். தனது குறுகிய முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்:

இங்கு பிரசுரமாகும் கட்டுரைகளில் நான் கை வைக்கவில்லை. அந்தந்தக் காலத்தில் வெளிவந்த தடயங்கள் இருக்கட்டும் என்பது என் விருப்பம். இந்தப் பத்தாண்டு காலத்தில் சில கருத்துக்களை நான் மாற்றிக் கொண்டிருக்கலாம்; சில வளர்க்கப்பட்டிருக்கலாம்; சில கைவிடப்பட்டிருக்கலாம்

இருக்கலாம், ஆனால் புத்தகத்தின் தலைப்பை வலியுறுத்தும் முதல் கட்டுரையிலாவது, குறைந்த பட்சம் ஒரு பின்குறிப்பு மூலமாகவாவது தனது கருத்துக்களை ஆசிரியர் தெளிவு படுத்தியிருந்திருக்கலாம். அல்லது பின்னர் எழுதப்பட்ட “புனித ஆறுமுகம்”, “சனதருமபோதினி: சின்னக் கதையாடல்கள்” போன்ற விமரிசனங்களிலாவது தலித் இலக்கியம் என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கியிருக்கலாம்.

“புனித ஆறுமுகம்” என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். இமையம் என்பவர் எழுதி, க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஆறுமுகம்’ என்ற புதினத்தின் விமர்சனமே இக்கட்டுரை. தலித் ஒருவன் நாயகனாக இருப்பதால் ஒரு நூல் தலித் இலக்கியமாகி விட முடியாது என்பது இக்கட்டுரையில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் இருக்கிறதாக கருதுகிறேன். இக்கட்டுரையை நான் தமிழில் படித்த நூல் விமர்சனங்களில் சிறப்பானதாகக் கருதுகிறேன். தவறுகளைக் காணும் போது, நாவலாசிரியர் தனது படைப்புச் சுதந்திரத்தை முன்னிட்டு தப்பிப்போக இடமுள்ள இடங்களில் கூட அவரை நழுவ விடாமல் நறுக்கென்று தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்யும் ராஜ் கவுதமன், நாவலின் சிறப்புக்களையும் வெகு உற்சாகமாக பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. இதைப் போன்றே, அல்லது இதை விடச் சிறப்பாகவே புதுமைப்பித்தன் அவர்களது மற்றும் புதுமைப்பித்தன் பற்றிய படைப்புக்களையும் அணுகியிருக்கிறார். புதுமைப்பித்தன் மீது ராஜ் கவுதமனுக்கு ஒரு பெரும் கிறக்கமே இருக்கிறது இக்கட்டுரைகளில் புலனாகிறது. இருப்பினும், அவர் மீது கறாரான விமர்சனங்களை வைக்க தயங்குவதில்லை. புதுமைப்பித்தன் ஸ்ரீராமாநுஜலு நாயுடு என்பவரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதினார் சொல்லிவிட்டு, இது புதுமைப்பித்தனுக்கும் பொருந்தும் என்கிறார்.

ஸ்ரீராமாநுஜலுநாயுடு கதை சொல்வதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த்தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞர் என்பதை நாம் மறந்து விடுகிறோமா? அம்மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்

இந்தப் பார்வை ராஜ் கவுதமனுக்கு வாய்த்திருப்பது அவரது விமரிசனங்களிலெல்லாம் வெளிப்படுகிறது. “தலித்தியப் பார்வையில் பாரதி” என்ற கட்டுரையில் அவர் பாரதியை மூன்று நிலைகளில் பார்க்கின்றார். ஒன்று, தான் பிறந்த சாதியின் கொள்கைக்கு மாறான கொள்கையை பின்பற்றியதால் அந்த சாதியால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பாரதி. இரண்டாவது, சொந்தச் சாதியின் ஒடுக்குமுறைகளைக் கடுமையாக விமர்சித்த பாரதி. மூன்றாவது, தலித் விடுதலை பற்றிய ஆர்வம் கொண்ட பாரதி. இரண்டாவது, மூன்றாவது அணுகுமுறைகளில் பாரதியின் கருத்துக்களில் இருந்த பிழைகளை சுட்டிக் காட்டத் தயங்கவில்லை. அவரது காலத்தின் பிடிக்குள்ளிருந்து பாரதியால் முற்றிலுமாக மீள முடியவில்லை என்றும், வருணம், சாதிபேதம் பற்றி இந்து அறிவுலகம் கூறி வந்ததை பாரதியும் பிரதிபலித்தார் என்று கூறும் ராஜ் கௌதமன், சமத்துவத்தை நிலவ வேண்டும் என்பதில் பாரதியிடம் வெளிப்படுத்திய விதத்தை “உள்ளார்ந்த ஆர்வத்தை, நேர்மையை, ஒரு குழந்தையின் கபடமின்மையை, ஒரு கவிஞனின் கனவை, ஒரு பித்தனின் கற்பனையை யாராலும் சந்தேகிக்க முடியாது” என்று விவரிப்பது ராஜ் கௌதமனின் உள்ளத்தைத் திறந்து கொட்டும் வார்த்தைகளாகத் தோன்றுகிறது.

தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும், நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்.” என்று முதல் கட்டுரையில் வரைந்த தலித்திலக்கியத் தகுதியனடிப்படையில் ராஜ் கௌதமனின் “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” தலித்திலயக்கியம் ஆகாது. இப்புத்தகம் சுகமான வாசிப்பனுபவத்தைத் தருவது மட்டுமல்ல, தனது நிதானமான, அறிவுபூர்வமான பார்வையிலும், அழகான, தெளிவான நடையிலும், ஆங்காங்கு கொப்பளிக்கின்ற குறும்பிலும், உற்சாகத்திலும், உணர்விலும் வாசிப்பவர்களிடம் செறிவான கருத்துத் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

தமிழ் பேராசிரியர் என்பதாலோ என்னவோ, சில நூல் விமர்சனங்களில் நூலில் கண்ட சிறு பிழைகளை கூட குறிப்பிட ராஜ் கௌதமன் மறப்பதில்லை. ஒரு நூலின் ஒற்றுப் பிழைகள் கூட கடும் கண்டனத்துக்குள்ளாகின்றன. அது போன்றே, காலச்சுவடு நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் இந் நூலில் முதல் கட்டுரையில் பின்குறிப்புகள் ஒன்று (குறிப்பு எண் 5) விட்டுப் போனது, குறிப்பு எண் 13 வரை குழப்பங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
Posted by Picasa

Tuesday, October 2, 2007

காந்தியும் கக்கூசும்

நானும் சுந்தர ராமசாமியும் நடந்து நாகர்கோயிலில் இருளப்பபுரம் போய்ச் சேர்ந்தோம். நெருக்கமான வீடுகள். திறந்த சாக்கடை வாய்கள். குப்பைக் குவியல்கள். எங்கும் மலம் மலம் மலம் … சுந்தர ராமசாமி “பாத்தேளா? சுதந்திரம் கெடைச்சு அம்பது வருஷமாச்சு. இன்னும் கக்கூஸ் போகத் தெரியலை நமக்கு. இந்த ஒரு விஷயத்தால ஹெல்த் பிரச்சினை கெளம்பி நம்ம நாட்டுக்கு வருஷத்தில எவ்வளவு கோடி நஷ்டம்னு கணக்கு போட்டிருக்கோமா? இதைப் பத்திக் கவலைப்பட்ட கடைசி அரசியல்வாதி காந்தி. தேச விடுதலைக்குச் சமானமா கக்கூஸ் போறதைப் பத்திப் பேசிட்டிருந்தார். அவர் ஒரு கிராமத்துக்குப் போறச்ச பின்னால ஒருத்தர் அவரோட டாய்லெட்ட கொண்டு போறார். அதை அவரோட பதாகை மாதிரின்னு டாமினிக் லாப்பியர் அவன் புஸ்தகத்தில சொல்றான். கம்பு வச்சிண்டிருக்க காந்தியை சிலையா நிக்க வைக்கிறோம். கக்கூஸ் க்ளீன் பண்ற குச்சியோட நிக்கிற காந்தியையன்னா வைக்கணும்….அவருக்கு இந்த மக்களோட பிரச்சினை என்னான்னு தெரியும். அதுக்கு உள்ளுணர்வெல்லாம் ஒண்ணும் காரணமில்ல. அவர் இங்கெல்லாம் வந்தார். இந்த ஜனங்க கிட்ட பேசினார். அவ்ளவுதான். இன்னைக்கும் சுதந்திரம் கிடைச்சு அரை நூற்றாண்டுக்கு அப்புறமும் நாம இங்க வர ஆரம்பிக்கலை. நம்ம அரசாங்கம் இந்த மக்களுக்கு கோடிக்கணக்கில பணம் செலவு பண்ணி நலத் திட்டங்களைப் போடறாங்க. ஆனா இவங்க கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேக்கிறதில்ல. வெட்டினரி டாக்டர்னா நம்ம அரசியல்வாதிங்க…இதெல்லாம் ஆடுமாடுங்க….” என்றார். இருளில் ஏதோ ஒரு சாலைக்கு வந்து பஸ் பிடித்து வீடு திரும்பினோம். “இங்க இருந்த அமைப்புகள்லாம் தாறுமாறாப் போச்சு. புதிய அமைப்பை இத்தனை வருஷம் கழிச்சும் சரியா உருவாக்க முடியலை. இந்த அளவுக்குப் பெரிய தேசத்தில கீழ் மட்டத்தை மேல் மட்டம் நேரடியா ஆளணுமானா அந்தத் தொலைவை இணைக்கிற அளவுக்கு அதிபிரமாண்டமான அதிகார வர்க்கம் தேவை. அதை வெள்ளைக்காரன் உருவாக்கினான். நேருவும், அம்பேத்கரும் அதே மையப்படுத்தற போக்கைப் பின்பற்றினதனால அந்த அதிகார அமைப்பு பெரிய பூதம் மாதிரி வளந்து போச்சு. அதுதான் இன்னைக்கு இந்தியாவோட மிகப் பெரிய சாபம். வீட்டு முன்னாடி மரம் நிக்கற மாதிரி அரசாங்கத்துக்குப் பக்கத்தில அதிகார அமைப்பு நிக்கணும். இங்க என்னன்னா மரத்துமேல வீடு இருக்கற மாதிரி இருக்கு…அதை அரசாங்கம் ஒண்ணுமே செய்ய முடியாது, மக்களும் ஒண்ணும் செய்ய முடியாது…உண்மையில் இங்க சுதந்திரம் கிடைச்சது அவங்களுக்கு மட்டும்தான்”

மேற்காணும் பத்தி என் மனதில் நீண்ட நாட்களாகவே நிற்கும் ஒன்று. காந்தி பிறந்த தினமான இன்று இதைப் பதிய விரும்பினேன். இதன் மூலம்: பக்கங்கள் 105-106, ஜெயமோகன் எழுதிய “சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்” புத்தகம். உயிர்மை பதிப்பக தயாரிப்பான இப் புத்தகம் 2005ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலமானபோது வெளியிடப்பட்டது. தமிழில் அஞ்சலியாக எழுதப்பட்டவற்றில் வெகு சிறப்பானது. சுந்தர ராமசாமியின் வாழ்வையும் படைப்புக்களையும் மட்டுமின்றி, அவரது சமகாலத்தில் சமூகத்தைப் பாதித்த நபர்களையும், போக்குகளையும், நிகழ்வுகளையும் பற்றிய அவரது சிந்தனைகளை எடுத்து வைக்கிறது இந்த நூல்.

Saturday, August 25, 2007

கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

கி. ராஜநாராயணன் அவர்களது கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்க தொடங்கியது பற்றி இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்திய பயணங்களின் போது அதை எடுத்துச் சென்று வாசித்து முடித்து விட்டேன்.

கி.ரா. கட்டுரைகள் என்ற தலைப்பில் அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இத் தொகுப்பு 487 பக்கங்கள் கொண்டது. முதல் பதிப்பு 2002ல் வெளியாகியிருக்கிறது. 275 ரூ.

கி.ரா. கடந்த சுமார் 46 வருடங்களாக ஆக்கிய பல படைப்புகளை கோர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். கட்டுரை என்று தலைப்பில் இருந்தாலும் சில படைப்புகள் கதை வகை. உதாரணம்: பிள்ளையார்வாள். ஏற்கனவே சொன்னபடி முக்கால்வாசிக் கட்டுரைகளிலே ஏதாவது ஒரு கதையாவது இருக்கும். நூலின் இறுதியில் அமைந்திருப்பது ஒரு நீண்ட நேர்காணல். “பஞ்சுவின் கேள்விகளும் கி.ரா.வின் பதில்களும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த அத்தியாயம் எங்கே, எப்போது செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் இல்லை. இது இந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு குறை. சில படைப்புகளில் எந்தக் கால கட்டத்தில் எங்கே வெளியானது என்ற குறிப்புகள் இல்லை. இன்னொரு குறை இப்படைப்புக்களை தொகுத்தவர்கள் என்ன அடைப்படையில் அவற்றை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் என்று யூகிக்க முடியவில்லை. சில படைப்புகள், உதாரணமாக தி.க.சி. அவர்களைப் பற்றிய குறிப்புகள், வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மற்றவை காலம், பொருள் தவறி ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.

வெகுஜன வாசிப்பின் மூலமாக கி.ரா.வை தெரிந்து கொண்ட என் போன்றவர்களுக்கு இந்த தொகுப்பு கி.ரா.வின் சிந்தனைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை தெரியப்படுத்துகிறது. 1970ல் தீவிர பொதுவுடமை சித்தாந்தத்தின் உச்சக்கட்ட கிடுக்கிப்பிடியில் அவருக்கு பிச்சைக்காரன் கூட லெனினை நினைவு படுத்துகிறான் (“நமக்கு இப்போது ஒரு லெனின் வேண்டும்” பக்கங்கள்: 88-92). பிறகு (எப்போது என்று தெரியவில்லை), தி.க.சி.யைப் பற்றி எழுதும் போது இப்படி எழுதுகிறார் (பக்கம் 359):

“நாங்கள் அவரோடு பழகிய காலத்தில் எங்கள் மண்டைக்குள்ளேயும் ஒரு “பண்ணிக்குட்டி” இருந்தது; அரசியல்ப் பண்ணிக்குட்டி! திறந்த மனசோடு நாங்கள் அவரை அணுகவிடவில்லை அது. … இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரொம்ப.”

இருப்பினும், வாழ்வைப் பற்றி; மக்கள் கலைகளைப் பற்றி, அதிலும் குறிப்பாக இசையைப் பற்றி, மக்களின் மொழிகள்; பழக்க வழக்கங்கள் பற்றி; கி.ரா.வின் ஆவல், அவற்றை எழுத அவர் தேர்ந்தெடுத்த நடை, அவற்றை சொல்வதிலுள்ள நேர்மை ஆகியவை இறுதி வரை மாறவில்லை. நமக்குள் இருக்கும் ரசிகனைத் தட்டியெழுப்பி, தனது ஆத்மாவை திறந்து காட்டி, நமது வரவேற்பரையிலோ, சாப்பாடு மேசையிலோ அமர்ந்து பேசுவது போல சுலபமான மொழியிலே பேச இவரைப் போல் எவருண்டு என்றுதான் தோன்றுகிறது கி.ரா.வின் கட்டுரைகளை மூடி வைக்கும் போது.

இப் புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள் வெறும் வாசிப்பு சுகத்திற்கு மட்டுமின்றி. பல வாழ்வியல் பாடங்களும் இவற்றில் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று “முதுமக்களுக்கு” என்ற கட்டுரை (பக்கம் 347-353). இதில் பொய்யாளி நாயக்கர் என்று ஒருவர் வருகிறார். கண் ரெப்பைகள் நரைத்த வயோதிகரான இவருக்கு ஒன்பது பிள்ளைகள். திருமணத்திற்குப் பின் பிள்ளைகளை கண்டிப்பாக தனிக்குடித்தனம் செய்ய அனுப்பி வைத்தவர். சொத்தை பத்துப் பங்கு வைத்து பிள்ளைகளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு தனக்கும் மனைவிக்குமாக ஒரு பங்கு வைத்து வாழ்பவர். பிள்ளைகள் கூட இருந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு, “பிள்ளைகங்கிறது சொத்துக்கும் வாரீசுக்கும்தான்; பாசத்துக்கு இல்ல” என்பவர். பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் பாசமானவர்கள் என்பது இவரது கருத்து. இதைப் பற்றி கேட்கும் போது பாச உறவு என்பது செடியின் வேரைப் போல் கீழ் நோக்கித்தான் போகும்; தண்டைப் போல் மேல் நோக்கிப் போகாது என்கிறார். அதையே விளக்கமாக “நீ உன் பிள்ளைக பேர்ல பிரியமா இருக்க; அது போல அவங்க தன்னுடைய பிள்ளைக பேர்ல பிரியமா இருக்காங்க. அது – அந்தப் பிரியம் – உன்னெ நோக்கி வராது. இதுதான் நெசம்” என்கிறார். கூடவே இவரது தத்துவங்கள் கி.ரா.வின் மொழியிலேயே:

-- பிள்ளகயிட்ட ரொம்பத்தான் செல்லங் கொஞ்சக்கூடாது பாத்துக்க. “தேனைத் தொட்டயோ, நீரைத் தொட்டயோ’ன்னு இருக்கணும் பாத்துக்க.

-- இந்தச் சொத்தெல்லாம் ஒனக்குத்தான், இந்த வீடெல்லாம் ஒனக்குத்தாம்னு எந்த அப்பன், ஆத்தா பிள்ளைகயிட்டச் சொல்லுதாங்களோ அந்த அப்பனையும், ஆத்தாளையும் கட்டாயம் அந்த வீட்டெ விட்டுத் துரத்தாம இருக்க மாட்டாங்க.

-- நா எப்படிக் கஷ்டப்பட்டு இந்த வீட்டெக் கட்டுனனே நாங்க எப்படி அரும்பாடு பட்டு இந்தச் சொத்தெச் சேத்தமோ இது போல சம்பாதிச்சு வீட்டெ நீங்க கட்டிக் கிடணும்னு சொல்லணும்

-- கஷ்டத்தச் சொல்லி பிள்ளெகள வளக்கணும். “நா இருக்கும்போது உனக்கென்னடா”ன்னு பிள்ளைகள வளக்கிற அப்பனும் ஆத்தாளும் கடைசிக் காலத்துல நிம்மண்டு நாயக்கரும் பெஞ்சாதியும் பிச்சை எடுத்து செத்தது போலத்தான் சாக வேண்டி வரும்.

பல குடும்பங்களில் நடப்பவற்றைப் பார்க்கும் போது பொய்யாளி நாயக்கர் சொன்னது 100க்கு 100 உண்மை என்றுதான் தோன்றுகிறது.

பி.கு: கடந்த சென்னை புத்தக விழாவிலே கி.ரா.வைத் தாத்தா என்று அடைமொழி கொடுத்து விளித்திருந்தார்கள். இந்தப் பட்டத்தை அவருக்கு யார் அளித்தது; அதை அவர் மனதாற ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் கி.ரா.வை தாத்தா என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு சமவயது நண்பராகத்தான் எனக்கு இருபது வயதிருக்கும் போதுதான் தோன்றினார். இருபதாண்டுகள் கழித்தும் அப்படித்தான் தோன்றுகிறது. அப்புறம் இந்த தாத்தா முறையெல்லாம் எதற்கு என்றும் புரியவில்லை. கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

Saturday, August 11, 2007

உள்ளூர்பட்சிணி



தாவரபட்சிணி … தாவரங்களை சாப்பிடுபவர்

மிருகபட்சிணி … மிருகங்களை சாப்பிடுபவர்

உள்ளூர்பட்சிணி … உள்ளூரை சாப்பிடுபவர் அல்ல

உள்ளூரில் விளையும் தாவரங்கள், மிருகங்களை மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களைத்தான் உள்ளூர்பட்சிணி என்கிறார்கள். நம்மூரில் அப்படி பிடிவாதம் பிடிப்பவர்கள் இன்னும் வரவில்லை. அமெரிக்காவில் வந்து விட்டார்கள். ஆங்கிலத்தில் இவர்களது பெயர்: Locovore. பார்பரா கிங்சால்வர் (Barbara Kingsolver) என்ற ஒரு உள்ளூர்பட்சிணியும் அவரது குடும்பமும் எழுதியிருக்கும் “Animal Vegetable Miracle: A Year of Food Life”ஐ தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பார்பரா அம்மையாரும், அவரது குடும்பமும் அரிசோனா மாநிலத்தின் டூசோன் (Tucson) நகரத்திலிருந்து வர்ஜினியா மாநிலத்திற்கு நகர்ந்து ஒரு ஆண்டு முழுவதும் தங்கள் வீட்டுத் தோட்டத்திலும், சுற்றியுள்ள விளைநிலங்களிலும் உற்பத்தியாகும் உணவை மட்டும் உண்டு வாழும் அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதைவிட தங்கள் நம்பிக்கைகளை வாசகர்கள் தலையில் ஆழமாகத் திணித்து விட வேண்டும் என்ற முனைப்பு புத்தகத்தின் பக்கங்களெங்கும் துடிக்கிறது.

அமெரிக்காவின் உணவுப் பொருட்கள் விளையுமிடத்திலிருந்து, உண்ணப்படும் இடத்தை அடைய சராசரியாக 1000-1500 மைல்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காகும் எரி பொருள் செலவு ஊதாரித்தனத்தின் உச்சக்கட்டமாகும். எனவே உள்ளூர் விளைபொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது இவர்களின் நம்பிக்கைகளில்/வாதங்களில் ஒன்று.

உணவைப் பதப்படுத்தி தொலைதூரங்களுக்கு அனுப்பவது அந்த உணவின் சத்தைக் குலைக்கிறது. அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைப்பதை விட அதிக வருமானம் அதை பதப்படுத்தி, அனுப்பி, வியாபாரம் செய்யும் பெரிய நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கிறது. இப்படியாக வேறு சில வாதங்களும் கூடவே வைக்கப்படுகின்றன.

இந்த உள்ளூர்பட்சிணி வாதங்களில் சிலவற்றை ஏற்றுக் கொள்ளலாம்; சிலவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் நம் உணவுகள் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இம்மாதிரி புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.

சிறு வயதில் எங்கள் சமையலறையின் தலைமை நிர்வாகி எங்கள் ஆச்சி (அம்மாவின் அம்மா). அன்றாடம் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது, உணவுப் பொருட்களை வாங்குவது, ஒரு வேலைக்காரியின் ஒத்தாசையுடன் சமைத்து, பரிமாறுவது அனைத்தும் அவர்களின் அதிகாரத்திற்குக் கீழ்தான்.

காலை ஒரு 10 மணியளவில் ஒரு அகன்ற பனையோலைக் கூடையில் காய்கறிகளைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி வருவார். அந்தக் கூடையில் என்னென்ன இருக்கும் என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் ஆச்சி குறிப்பாக சில பக்கத்து ஊர் காய்கறிகளைப் பற்றி வினவுவது இன்னும் நினைவிருக்கிறது.

ஒன்று, தருவைக்குளம் தக்காளி. பருநெல்லிக் கனிகளை ஒத்த அளவிலும், வடிவிலும் இருக்கும் சிறு உருண்டையான தக்காளிப் பழங்கள். இவை தருவைக்குளம் என்ற ஊரில் விளைந்தது என்று கணிக்கிறேன். எல்லா நேரங்களிலும் கிடைக்காது. நான் சிறுவனாக இருந்த போது மட்டுமே இந்தியாவில் இவற்றை சாப்பிட்டிருக்கிறேன். பிறகு, இது வரை இந்த வகைப் பழங்களை நம்மூரில் கண்டதில்லை. வெளிநாடுகளில் கிடைக்கும் செர்ரி தக்காளி வகை இதையொத்ததாக தோன்றுகிறது. ஆனால், நம்மூர் தருவைக்குளம் தக்காளிக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள இப்போது ஆவலாக இருக்கிறது.

இரண்டாவது, குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய். இளம் பச்சையாக, நடுத்தர அளவில், குண்டாக இருக்குமென்று நினைவு. காரல் இல்லாமல் ருசியாக இருக்கும் என்று ஆச்சி சொல்வார்கள். அவர்கள், இந்த மாதிரிக் காய்கறிகளை விசாரித்து, வினவும் விதமே அந்த காய்கறிகளுக்காக நாக்கில் எச்சில் ஊற வைத்து விடும். குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய் இன்னும் அந்த ஊரில் கிடைக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்.

இப்போது யோசிக்கும் போது அந்தந்த ஊர் காய்கறிகளை அங்கங்கே சாப்பிடும்போதுதான் சுவையாக இருக்கிறது. கோடை வந்துவிட்டால் சென்னை முழுவதும் மாம்பழங்கள் குவிந்து விடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பங்கனபள்ளி வகையைச் சேர்ந்தவை. சென்னையில் இருக்கும் வரை இந்த வகையின் தரத்தைக் குறித்து எனக்கு மேலான அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால், ஒரு முறை நெல்லூரில் இந்த வகையை சாப்பிட்டு விட்டு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டேன். பங்கனபள்ளி பழம் நெல்லூரில் இப்படி சுவைத்தால், அல்போன்சா ரத்தினகிரியிலும், இமாம்பசந்த் அது எங்கே விளைகிறதோ அங்கும் எப்படி சுவைக்கும் என்று எண்ணுகிறேன்.

காய்கறிகள், பழங்கள் மட்டுமல்ல, பால், மாமிசம், முட்டை, ஏன் மீன் வகைகளில் கூட இடத்திற்கு இடம் ருசி வேறுபடுகிறது. குமரி மாவட்டத்திற்கு குடி பெயர்ந்தபிறகு, சென்னையில் மீன் வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார், குமரி மாவட்டத்தில் கிடைக்கும் வஞ்சிரம் மீன்தான் இந்தியாவிலேயே ருசியில் சிறந்ததென்று. இன்னும் அதை சோதித்துப் பார்க்கும் தருணம் வரவில்லை. ஏனோ, வஞ்சிரம் மீனை மெச்ச என் நாவுக்கு முடியவில்லை.

நாஞ்சில் நாட்டு உணவுகளின் விற்பன்னராகிய நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையில் ஆரல்வாய்மொழியில் கிடைக்கும் தண்டங்கீரையைப் பற்றி கவிமணி ஒரு வெண்பாவே எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். நான் அந்த வெண்பாவையும் பார்த்ததில்லை. என் வீட்டிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் ஆரல்வாய்மொழியின் கீரையையும் பார்த்ததில்லை. ஆனால், ஆரல்வாய்மொழி அருகிலுள்ள ஒரு இடத்தில் கீரை விதை வாங்கி வீட்டில் விதைத்திருக்கிறோம். அது வாரமலர் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் ஒரு புதுக்கவிதைக்காவது தகுதியானதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
Posted by Picasa

Friday, July 27, 2007

கி. ராஜநாராயணன் கட்டுரைகள்

மேற்படித் தலைப்பில் அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் 2007 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. இன்னமும் வாசிக்கப்படாமலே அலமாரியில் உட்கார்ந்து கொண்டிருந்தது. இந்த ஞாயிற்றுக்கிழமை வேலையிருப்பதால், வியாழன் மதியத்திற்கு மேல் ஒரு சின்ன விடுப்பு எடுத்துக் கொண்டு, புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். தொகுதிகளாக கட்டுரைகள் அடங்கிய இம்மாதிரி புத்தகங்களில் ஒரு வசதி. எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் வாசிக்க தொடங்கலாம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டே வாசிக்க ஆரம்பித்ததால், கனமான இப் புத்தகத்தின் நடுவிலிருந்து தொடங்கினேன்.

கட்டுரைகள் என்று தலைப்பு கொடுத்திருந்தாலும், இப்புத்தகத்தில் கட்டுரைகளை விட நிறைய கதைகள் இருக்கின்றன. குட்டிக் குட்டிக் கதைகள். பல இடங்களில் சேகரிக்கப்பட்ட நாட்டுப் புறக் கதைகள். அக் கதைகள் உருவான கதைகள். அவை சொல்லப்பட்ட கதைகள். அவை பதிவு செய்யப்பட்ட கதைகள். ராஜநாராயணனின் சொந்தக் கதைகள். அவற்றில் அவரது நண்பர்கள் சொல்லும் கதைகள். இப்படியாக கட்டுரைக்குள்ளே கதைகள், கதைகளுக்குள்ளே கதைகள் என்று போகிறது. கதைகளைத் தவிர இசை, நாடகம், இலக்கியம், வரலாறு, மக்கள் பழக்க வழக்கங்கள் என்று அனைத்தும் ராஜநாராயணின் திறமையான ஆக்கத்தால், அவருக்கே உரித்தான சுவைகளோடு சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒரு இடத்தில் மக்கள் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்து உணவுப் பழக்க வழக்கங்களுக்குள் நுழைந்து விடுகிறார் ராஜநாராயணன். சாப்பாட்டு ராமன் என்ற பெயர் எப்படி வந்தது என்ற விளக்கமும், ஒரு விருந்தில் பதமான சூட்டில் போளிகள் வாழை இலையில் எப்படி விழுந்து கொண்டே இருக்கின்றன என்பதையும் சாப்பிட்டுக் கொண்டே வாசித்தேன். அன்று பாகற்காய் தீயலும், கேரட் துவரனும், பொரித்த மீனுமான மதியச் சாப்பாடு இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டே சாப்பிட்டதில் இன்னும் ருசித்தது. கூடவே வெளியே, லேசான தென்கிழக்குப் பருவ மழைச் சாரல். ரொம்ப சொகமான வியாழன் மதியம்ங்க அது.