Showing posts with label வலைப்பதிவுகள். Show all posts
Showing posts with label வலைப்பதிவுகள். Show all posts

Sunday, May 8, 2011

சவுக்கு இணையதளம்: ஒரு மதிப்பீடு

சவுக்கு இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். சவுக்கு தளம் தோற்றுவிக்கப்பட்டபோது அதற்கு ஆதரவாக ஒரு பதிவெழுதினேன். அது இங்கே. ஒன்பது மாதங்கள் கழித்து சவுக்கு தளத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன்?

சவுக்கு தளம் இன்னமும் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டு வருகிறது. சவுக்கு சங்கரின் துணிச்சல் ஒரு பக்கம். அவரது கருத்துக்களும், எழுத்து நடையும் இன்னொரு பக்கம். பல நேரங்களில் அவரது தகவல்களும், கணிப்புகளும் சரியாக இருப்பது மற்றொரு பக்கம். புலனாய்வுப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் எல்லாப் பத்திரிகைகளை விடவும் சவுக்கு தளம் துல்லியமாக விஷயங்களைச் சொல்கிறது என்றே கருதுகிறேன். சங்கர் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை சோ தனது ஆண்டு விழாவில் சொல்லுமளவுக்கு அவரது எழுத்துத் திறன் அமர்க்களமாக உள்ளது.

ஜாபர் சேட் என்ற ஒரு காவல் அதிகாரியைக் குறிவைத்து அதிகமாகத் தாக்குவது, சில சமயங்களில் விமர்சனங்களில் நாகரீக எல்லையை மீறுவது போன்றவை அவ்வப்போது நெருடலாக அமைகின்றன. இருந்தாலும், அவற்றையும் தாண்டி இந்த தளம் சிறப்புடன் வளர்ந்து வருகின்றது.

தமிழகத் தேர்தல் முடிந்தவுடன் சவுக்கு “புதிய ஆட்சியில் ஜெ என்னென்ன செய்ய வேண்டும்?” என்று வாசகர்கள் கருதுவதை எழுதியனுப்பச் சொல்லியிருந்தார். ஜெ பற்றி சமீபத்தில் வைகோ என்ன சொன்னாரோ (அவர் மாறவுமில்லை, மாறப் போவதுமில்லை), அதுதான் எனது அனுமானமும். எனவே, சவுக்கிடம் கேட்டுக் கொள்ளப் போவது ஒன்றுதான்: திமுகவிற்கு மாற்று அதிமுக; அதிமுகவிற்கு மாற்று திமுக என்ற பூஜ்யக் கூட்டல் கழித்தல் விளையாட்டிலிருந்து (zero sum game) தமிழகத்திலிருந்து அடுத்த தேர்தலிலாவது விடுவிக்க உங்களாலானதைச் செய்யுங்கள்.

Monday, October 15, 2007

எலியும் சுண்டெலியும், மணிரத்னத்தின் குரு, அகத்தியனின் அம்னீசியா

இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமை கூட தபால் போட முடியாமல் போய் விட்டது. தீவிரமான பணியின் காரணமாக அல்ல; தீவிரமான விடுமுறையின் காரணமாக. பிள்ளைகளுக்கு காலாண்டு விடுமுறை. அதே நாட்களில் எனக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருக்க வேண்டிய கட்டாயம். எனவே மற்ற விடுமுறைகளில் ஏற்படுவது போன்ற “எங்கே போவது” என்பதை தீர்மானிக்கும் குழப்பங்கள் இல்லாத விடுமுறை.

சென்னையில் பிள்ளைகளுக்கென்று பல திருத்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சத்யம் திரையரங்க வளாகம். அங்கே, மேற்கத்திய திரையரங்களுக்கு இணையான ஸ்டுடியோ 5 மற்றும் 6 டிகிரிசில் திரைப்படம் பார்ப்பது எனக்கும் உவப்பான ஒன்றே. ஆனால் இம் முறை குழந்தைகளுக்கான திரைப்படமான ராட்டாட்டூயி (Ratatouille) நாங்கள் பார்க்க விரும்பிய தினத்தில் சத்யம் எலைட்டில் போடப்படுவதாக சத்யத்தின் இணைய தளமான www.thecinema.in சொன்னது. முதலில் சத்யம் எலைட் என்பது சத்யம் வளாகத்திற்குள் இன்னொரு அரங்கமோ என்று நினைத்தேன். போன பிறகுதான் தெரிந்தது சத்யம் அரங்கத்தின் பால்கனிதான் சத்யம் எலைட் என வழங்கப்படுகிறது என.

சில ஆண்டுகளுக்கு முன் முதலாவது ஹாரி பாட்டர் பார்க்க சத்யம் அரங்கம் சென்றோம். வசதியில்லாத இருக்கைகள், தெளிவில்லாத ஒலியனுபவம் என்று அவ்வளவு திருப்திகரமாக அந்த அனுபவம் அமையவில்லை. ஆனால், இப்போது அரங்கத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சத்யம் எலைட் செல்லும் வழியில் ஜப்பானிய உள்ளலங்கார அமைப்புகளைச் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. சத்யம் இணைய தளத்திலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம் (செக்யூரிட்டி செர்ட்டிபிகேட் எக்ஸ்பைர்ட் என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டு செய்தேன்). இருக்கைகளை தெரிவு செய்யலாம் (ரூ 10 கட்டணமாகச் செலுத்தி இதையும் செய்தேன்). நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டு இருக்கைக்கு வரவழைக்கலாம் (சோம்பேறித்தனத்திற்கும் ஒரு அளவிருக்கறபடியால் இதை செய்யவில்லை). நுழைவுச் சீட்டுகளை அச்சடித்துக் கொள்ளலாம் (இதைச் செய்யாமலிருக்க முடியாது. அரங்க வாசலில் நமது அச்சடித்த காகிதத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் நுழைவுச் சீட்டை கொடுத்து விடுகிறார்கள்).

ராட்டாட்டூயி அலுப்பு தட்டுகிற படம். “ஏண்டா வந்தோம்” என்ற அளவிற்கல்ல, “கொடுத்த 500 ரூபாய்க்கு வேறு ஏதாவது படம் பார்த்திருக்கலாமே” என்ற எண்ணத்தையும், ஓரிரண்டு கொட்டாவிகளையும் அவ்வப்போது எழுப்பும் அளவிற்கு அலுப்பு தட்டுகிறது. காரணங்கள் பல. ஒன்று, கடந்து 3-4 ஆண்டுகளாக வெளிவந்து, வெற்றி பெற்ற அனிமேஷன் படங்களின் சூத்திரத்தை அப்படியே பின்பற்றுகிறது இந்தக் கதை. கதை சொல்ல வரும் நன்னெறிகளும் டிட்டோ: விடா முயற்சியின் மேன்மை; நட்பின் இலக்கணம்; இத்யாதி, இத்யாதி. இந்த பரிட்சயம் அலுப்பைத் தூண்டுகிறது. இன்னொரு காரணம்: இந்தப் படத்தில் மனிதர்களாக வருகிறவர்கள் அத்தனை பேரும் படு சீரியசான பேர்வழிகள். எலிகளைத் துரத்த துப்பாக்கியைத் தூக்கும் கிழவியிலிருந்து, சிடுசிடு முகத்து சமையல் கலை விமர்சகன் வரை. சிரிக்க மறுக்கிறவர்களால் சிரிக்க வைக்கவும் முடியாது. எலி நாயகனும், அவரது தம்பியும், அப்பாவும் சிரிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: எவ்வளவுதான் நெருங்கிய சொந்தக்காரர்கள் ஆனாலும் சுண்டெலிக்கு இருக்கிற க்யூட்னெஸ் (எ.கா: மிக்கி மவுஸ், டாம் (&ஜெரி), ஸ்டூவர்ட் லிட்டில்) எலிக்கு கிடையாது. கூடவே, இப்படி சொல்வதற்காக உலகம் என்னை பிற்போக்குவாதியாக நிராகரித்தாலும் பரவாயில்லை, ஆனால் சமையல் கலையில் ஒரு எலி வல்லுநர் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரே படத்திற்கு 500 ரூபாயை விரயம் செய்து விட்ட படியால் இனிமேல் படங்கள் ஒன்று டிவியில், அல்லது டிவிடியில் என்று தீர்மானித்தோம். மணிரத்னத்தின் “குரு”வை ஒரு முறை திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் போது விமானத்தில் அரைகுறையாகப் பார்த்திருந்தேன். இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் உதவியோடு கதை புரிந்தது. பிடித்திருந்தது. எனவே, படத்தை மீண்டும், முழுதாக, தமிழில் அனுபவிக்க எண்ணி, மோசர் பேயரின் விசிடி வட்டில் வந்ததை ஸ்பென்சர் ஃபுட்சில் மளிகை சாமான்கள் வாங்கும் போது 28 ரூபாய்க்கு வாங்கினேன்.

இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் ஓட படத்தை ரசித்த அளவுக்கு தமிழில் ரசிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் படத்தில் உபயோகப்படுத்தப்படும் தமிழ். குஜராத்தின் உடைகளும், உடல் மொழியும் நிறைந்த மனிதர்கள் திருநெல்வேலி் தமிழில் பேசுவது அபத்தமாக இருக்கிறது. கதை ஆரம்பமாகும் பகுதி இலஞ்சி, திருநெல்வேலி ஜில்லா என்று திரையில் போடுவது இந்த அபத்தத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. பூவரசம் பூ போன்ற ஒரு பெரிய மலரை எடுத்து காதில் செருகுகிற உணர்வுதான் ஏற்படுகிறது.

2007ன் தொடக்கத்தில் வந்த “குரு”விற்கு இணையத்தில், குறிப்பாக பதிவு தளங்களில் பல விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. என் கவனத்தை ஈர்த்தது பினாத்தல்கள் என்ற பதிவு தளம் (http://penathal.blogspot.com), குறிப்பாக: http://penathal.blogspot.com/2007/01/16-jan-2007.htmlv. மணிரத்னம் திருந்தவே மாட்டாரா என்று அலுத்துக் கொள்ளும் பதிவர், “குரு” எப்படி மணிரத்னத்தின் சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிறது என்று விபரமாக சொல்கிறார். மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ரை அறிமுகம் – இரண்டு பாடல்களும் எனக்கும் ம.ர.வின் பழைய படங்களை ஞாபகப்படுத்தியது உண்மையே. அது போலவே, “நல்லவனா, கெட்டவனா?” கேள்வியும். ஆனால், மணிரத்னத்தின் படைப்புகளை ஒரு சூத்திரத்திற்குள் அடக்க முயலும் பார்வையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சூத்திரத்திற்குள் முடியும் என்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்” மற்றும் “ஆய்த எழுத்து” ஆகியவற்றை எங்கே நிறுத்துவது. வரலாற்றை, குறிப்பாக சமீப கால வரலாற்றை சொல்ல முடிவது சுலபமல்ல. அதுவும் “சிவாஜி” போன்ற படங்களை ஓட வைக்கும் தமிழ் ரசிக கூட்டத்தில் இது போன்ற படங்களை வணிக ரீதியாக வெற்றி பெற வைப்பது சுலபமே அல்ல (வேண்டுமானால் ஞானராஜசேகரிடம் கேட்டுப் பாருங்கள்). இந்த ரீதியிலும், படம் அலுக்க வைக்காமல் ஓடுகிறது என்ற வகையிலும் “குரு” வெற்றிதான்.

திருபாய் அம்பானி வாழ்க்கையில் நடந்த அதைக் காண்பிக்கவில்லை, இதைக் காண்பிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமாகாது. எல்லாவற்றையும் காண்பிக்க வேண்டுமானால் படம் 10-12 மணிநேரமாவது ஓட வேண்டும். அப்போதும் இதே குறையைச் சொல்ல ஆட்கள் இருப்பார்கள். திருபாய் அம்பானியின் வாழ்க்கையின் மூலக்கூறு ஒன்றே ஒன்றுதான். அது, ஏற்கனவே உள்ளே சென்று வெற்றி பெற்றவர்கள், மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று பூட்டி வைத்திருந்த இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பிற்குள் அம்பானி முன்னர் எவரும் செய்திராத அளவு தந்திரத்தோடும், உக்கிரத்தோடும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றியடைந்தார். இதை இந்தப் படம் சாதாரண பார்வையாளனுக்கு கூட வெற்றிகரமாகக் காண்பிக்கிறது என்றே கருதுகிறேன்.

மூன்றாவதாக பார்த்தது கலைஞர் டிவியில் “செல்வம்” என்ற படம். பார்க்க வேண்டும் என்று பார்த்ததல்ல. போட்ட நேரத்தில் தொலைக்காட்சி முன்னர் இருந்த தற்சமயம்தான் காரணம். தலைப்பெல்லாம் முடிந்த பிறகுதான் பார்க்க ஆரம்பித்தோம். ஆரம்பக் காட்சிகள் வித்தியாசமாக இருக்க, “இது என்ன படம்?” என்ற ஆர்வம்தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. தமிழ் திரைப்படங்களில் அநியாயத்திற்கு குதறப்பட்ட மனநல நிலைமைகளில் ஒன்றான அம்னீசியா இந்தப் படத்தில் நடு நாயகம் செலுத்துகிறது.

அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட செல்வம் என்ற இளைஞன் (நடிகர் நந்தா) உண்மையில் யார் என்ற கேள்விக்கான விடையை நோக்கிய பயணம்தான் இந்தப் படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது. நடிகர் நந்தா சிறப்பாக நடித்திருக்கிறார். இயலாமை தரும் கோபம் மற்றும் சோகம், இவற்றோடு இளமை தரும் வேகம் மூன்றையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மருத்துவர்களில் ஒருவரான நடிகை உமாவின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக அவரது காதலைச் சொல்லும் காட்சி. தொடக்க காட்சிகளில் வரும் மருத்துவமனைக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன (சிகிட்சைக்கு பலமுறை பணம் கொடுக்க முன்வரும் நந்தாவிடம் “அது வேண்டாம்” என்று மறுக்கும் மருத்துவர் தவிர).

இப்படி விறுவிறுப்பாக செல்லும் படம் செல்வம் யாரென்று தெரிந்ததும் தூய்மையான அபத்தங்களின் திசையில் பயணிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இயக்குநர் அகத்தியனுக்கும் முன்பாதிப் படத்தைப் பற்றி அம்னீசியா ஏற்பட்டிருக்கலாமோ?

Sunday, August 12, 2007

கடந்த வாரத்தில் தமிழ் பதிவுலகம்

தமிழ்மணத்தில் சேர்ந்தபின் பல தமிழ் பதிவுகளை அறிய நேர்ந்துள்ளது. பதிவுலகத்தின் மொழியும் மெல்ல, மெல்ல புரிந்து வருகிறது. கருவிப் பட்டை போன்ற சில சொற்கள் உடனே புரிந்து விடுகின்றன. பல மரமண்டையில் இறங்க நேரமாகின்றன. இளவஞ்சியிடம் “மறுமொழி” என்றால் என்ன என்று கேட்க வேண்டியதாயிற்று. “கும்மி” என்பது பாரதி பெண் விடுதலை பெற்றவுடன் அடிக்க சொன்ன வகையினது அல்ல என்று தெரிகிறது. ஆனால் “மொக்கை” – சவரன் செய்யும் வகையினதா என்பது தெளிவாகவில்லை.

கடந்த வாரம் தமிழ்மணம் சென்னையில் நடந்த பதிவர் வட்டக் கூட்டத்தில் மாலன் பேசிய பேச்சைக் குறித்த சர்ச்சைகளில் பரபரப்பாக இருந்தது. நானும் தமிழனல்லவா? எனவே இது போன்ற சர்ச்சைகளில், அதிகமாகப் புரிந்து கொள்ளாமல், ஆழமாகப் போகாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஏதாவது கூறவேண்டுமல்லவா? கூறி விடுகிறேன்.
கோபம், கண்ணீர், கேலி, கிண்டல், இயலாமை, தன் விளக்கம், சுய இரக்கம், கலப்படமில்லாத உளறல் கலந்த மாலன் சர்ச்சையின் இரு துருவங்களுக்குமிடையில் தெளிவாக புலப்படுவது ஒன்றே ஒன்று. அது நாம் விதிகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கும் அளவுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ள தீவிரமாக மறுப்பது.

முதலில் மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த கருத்துக்கள். இணையத்தில் நன்னடத்தை என்பது என்னைப் பொறுத்த வரை க்ரெடிட் கார்டு திருடாமலிருப்பது; ஸ்பாம் அனுப்பாமலிருப்பது. கருத்துக்களை சொல்வதில் நன்னடத்தை எங்கே வருகிறது என்று தெரியவில்லை. பதிய நினைத்ததை மட்டற்ற சுதந்திரத்தோடு பதிவதில்தான் இணையத்தின் பேராற்றலே இருக்கிறது. திரட்டியில் வருவதால் நீ எழுத நினைத்ததை எழுதாதே என்பதன் அடிப்படை ரொம்ப பலவீனமாக இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது அம்மணமாக இருக்க தயங்காதவன், மனைவி கூட இருக்கும் போது பெர்முடாஸ் தேடுவான் என்னும் வாதம் சிந்திக்க வைக்கிறது. ஆனால் சிந்தனையின் இறுதியில் என்ன தோன்றுகிறதென்றால்: பெர்முடாஸ் போடுபவர்கள் போடட்டும்; பெர்முடாஸ் போட விரும்பாதவர்கள் அப்படியே இருக்கட்டும்; ஏன் பெர்முடாஸ் போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள் கூட அப்படியே இருக்கட்டும். கோட், சூட் போட்டவன், வேட்டி கட்டினவன், லுங்கி அவிழ்ந்தது தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பவன், பெர்முடாஸ் போட்டாலும் நாடாவைக் கட்டாதவன் என்று அத்தனை பேருக்கும் சம வாய்ப்புகள் தரும் இடங்கள் இந்த உலகில் அதிகமில்லை. அவற்றில் இணையமும் ஒன்று. இதை மாற்ற யாரால் முடியும்? இந்த நிலைமைக்கு அஞ்சி சிலர் இணையத்தை புறக்கணிப்பது, பாறையை உதைத்த கழுதை காலாகத்தான் முடியும்.

மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த ஆழமற்ற வாதங்களை விட அவர் கூறிய இலங்கைத் தமிழர் பாஸ்போர்ட் விவகாரம் ஆய்பூய் ஆக்கப்பட்டிருக்கிறது. மாலன் பேச்சின் மூல உரையைப் படிக்கும் போது இது ஒரு பெரிய விவகாரமே அல்ல என்பது தெளிவாகிறது. கண்டனமல்ல, விமர்சனம் கூட அல்ல, ஒரு சாதாரண ஒப்பிடலைக் கூட தாங்க இயலாதவர்களும், அவர்களைத் தாங்கிப் பிடிப்பவர்களும் போடும் ஓலங்கள் பெரிதுபடுத்த தகுதியற்றவை. ‘நன்னடத்தை’ விதிகள் மூலம் இணையத்தின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தலாம் என்று ஒரு சாரார் கனவு கண்டால், கூக்குரலிடுவதன் மூலம் மாற்றுக் கருத்துக்களை கேட்காமல் பண்ணலாம் என்று மறு சாரார் எண்ணுகிறார்கள் போலும். இவ்விரண்டு குழுக்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் பதிவு செய்யும் இணையமோ அகழ்வார்ப் பொறுக்கும் பூமி போல் இருக்கிறது; இருக்கும்.

Friday, July 27, 2007

இரண்டாவது தபால்: ஒரு முன்னுரை

எனது இரண்டாவது ஞாயிறு தபால் வெள்ளியன்றே வருகிறது. காரணம் வரும் ஞாயிறு முழுவதற்கும் பல பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

எனது வலைப் பதிவுகளை தொடங்கு முன்னர், மற்றவர்களது வலைப் பதிவுகளை அத்தனை கவனமாக வாசித்ததில்லை. குறிப்பாக தமிழில். எனவே, இந்த வாரம் மற்றவர்களது வலைப் பதிவுகளை வாசிக்க தொடங்கினேன். http://ilavanji.blogspot.com தான் நான் தொடங்கிய இடம். முற்றுப் பெற்றதும் அங்கேதான். அவ்வளவு சுவையான பதிவுகள் அங்கே உள்ளன. ‘தனித்துவமானவன், உங்களைப் போலவே” என்று வெளிப்புறத்தில் சுய கேலியாக, ஆனால் சற்று யோசித்தால் யதார்த்தமான தன் விளக்கம், இளவஞ்சியின் படைப்புக்கள் அத்தனையிலும் பிரதிபலிக்கிறது.

நான் தபாலை அறிமுகப்படுத்தி அனுப்பிய மின்மடலுக்கு பதிலாக இளவஞ்சி:
“தமிழ்ப்பதிவுலகம் எனும் குளத்தில் தொபுக்கடீரென குதித்ததற்கும், வரும் காலங்களில் மூழ்கி பல முத்துக்கள் எடுக்கவும் வாழ்த்துக்கள்!

மூன்று பதிவுகள் ஆன பிறகு தமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள். பல படிப்பாளர்களை சென்றடைய இது உதவும். சுட்டி http://www.thamizmanam.com/user_blog_submission.php
என்று சொல்லியிருந்தார்.

எனவே, இந்த வார தபால்களை பதிந்து விட்டு தமிழ்மணத்தில் இத் தளத்தை இணைப்பதாக திட்டம்.

இந்த வார தபாலில் ஒரு மாற்றம். கடந்த முறை பல விஷயங்களை ஒரே பதிவாக செய்தது போலல்லாமல் ஒவ்வொன்றையும் தனித் தனியாக செய்கிறேன். ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக தலைப்பு கொடுப்பது, பின்னர் உள்ளடக்கம் தயாரிப்பது எளிதாக இருக்கும் என்ற காரணத்தினால்தான் இந்த மாற்றம்.