Saturday, August 11, 2007

உள்ளூர்பட்சிணி



தாவரபட்சிணி … தாவரங்களை சாப்பிடுபவர்

மிருகபட்சிணி … மிருகங்களை சாப்பிடுபவர்

உள்ளூர்பட்சிணி … உள்ளூரை சாப்பிடுபவர் அல்ல

உள்ளூரில் விளையும் தாவரங்கள், மிருகங்களை மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களைத்தான் உள்ளூர்பட்சிணி என்கிறார்கள். நம்மூரில் அப்படி பிடிவாதம் பிடிப்பவர்கள் இன்னும் வரவில்லை. அமெரிக்காவில் வந்து விட்டார்கள். ஆங்கிலத்தில் இவர்களது பெயர்: Locovore. பார்பரா கிங்சால்வர் (Barbara Kingsolver) என்ற ஒரு உள்ளூர்பட்சிணியும் அவரது குடும்பமும் எழுதியிருக்கும் “Animal Vegetable Miracle: A Year of Food Life”ஐ தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பார்பரா அம்மையாரும், அவரது குடும்பமும் அரிசோனா மாநிலத்தின் டூசோன் (Tucson) நகரத்திலிருந்து வர்ஜினியா மாநிலத்திற்கு நகர்ந்து ஒரு ஆண்டு முழுவதும் தங்கள் வீட்டுத் தோட்டத்திலும், சுற்றியுள்ள விளைநிலங்களிலும் உற்பத்தியாகும் உணவை மட்டும் உண்டு வாழும் அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதைவிட தங்கள் நம்பிக்கைகளை வாசகர்கள் தலையில் ஆழமாகத் திணித்து விட வேண்டும் என்ற முனைப்பு புத்தகத்தின் பக்கங்களெங்கும் துடிக்கிறது.

அமெரிக்காவின் உணவுப் பொருட்கள் விளையுமிடத்திலிருந்து, உண்ணப்படும் இடத்தை அடைய சராசரியாக 1000-1500 மைல்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காகும் எரி பொருள் செலவு ஊதாரித்தனத்தின் உச்சக்கட்டமாகும். எனவே உள்ளூர் விளைபொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது இவர்களின் நம்பிக்கைகளில்/வாதங்களில் ஒன்று.

உணவைப் பதப்படுத்தி தொலைதூரங்களுக்கு அனுப்பவது அந்த உணவின் சத்தைக் குலைக்கிறது. அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைப்பதை விட அதிக வருமானம் அதை பதப்படுத்தி, அனுப்பி, வியாபாரம் செய்யும் பெரிய நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கிறது. இப்படியாக வேறு சில வாதங்களும் கூடவே வைக்கப்படுகின்றன.

இந்த உள்ளூர்பட்சிணி வாதங்களில் சிலவற்றை ஏற்றுக் கொள்ளலாம்; சிலவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் நம் உணவுகள் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இம்மாதிரி புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.

சிறு வயதில் எங்கள் சமையலறையின் தலைமை நிர்வாகி எங்கள் ஆச்சி (அம்மாவின் அம்மா). அன்றாடம் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது, உணவுப் பொருட்களை வாங்குவது, ஒரு வேலைக்காரியின் ஒத்தாசையுடன் சமைத்து, பரிமாறுவது அனைத்தும் அவர்களின் அதிகாரத்திற்குக் கீழ்தான்.

காலை ஒரு 10 மணியளவில் ஒரு அகன்ற பனையோலைக் கூடையில் காய்கறிகளைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி வருவார். அந்தக் கூடையில் என்னென்ன இருக்கும் என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் ஆச்சி குறிப்பாக சில பக்கத்து ஊர் காய்கறிகளைப் பற்றி வினவுவது இன்னும் நினைவிருக்கிறது.

ஒன்று, தருவைக்குளம் தக்காளி. பருநெல்லிக் கனிகளை ஒத்த அளவிலும், வடிவிலும் இருக்கும் சிறு உருண்டையான தக்காளிப் பழங்கள். இவை தருவைக்குளம் என்ற ஊரில் விளைந்தது என்று கணிக்கிறேன். எல்லா நேரங்களிலும் கிடைக்காது. நான் சிறுவனாக இருந்த போது மட்டுமே இந்தியாவில் இவற்றை சாப்பிட்டிருக்கிறேன். பிறகு, இது வரை இந்த வகைப் பழங்களை நம்மூரில் கண்டதில்லை. வெளிநாடுகளில் கிடைக்கும் செர்ரி தக்காளி வகை இதையொத்ததாக தோன்றுகிறது. ஆனால், நம்மூர் தருவைக்குளம் தக்காளிக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள இப்போது ஆவலாக இருக்கிறது.

இரண்டாவது, குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய். இளம் பச்சையாக, நடுத்தர அளவில், குண்டாக இருக்குமென்று நினைவு. காரல் இல்லாமல் ருசியாக இருக்கும் என்று ஆச்சி சொல்வார்கள். அவர்கள், இந்த மாதிரிக் காய்கறிகளை விசாரித்து, வினவும் விதமே அந்த காய்கறிகளுக்காக நாக்கில் எச்சில் ஊற வைத்து விடும். குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய் இன்னும் அந்த ஊரில் கிடைக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்.

இப்போது யோசிக்கும் போது அந்தந்த ஊர் காய்கறிகளை அங்கங்கே சாப்பிடும்போதுதான் சுவையாக இருக்கிறது. கோடை வந்துவிட்டால் சென்னை முழுவதும் மாம்பழங்கள் குவிந்து விடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பங்கனபள்ளி வகையைச் சேர்ந்தவை. சென்னையில் இருக்கும் வரை இந்த வகையின் தரத்தைக் குறித்து எனக்கு மேலான அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால், ஒரு முறை நெல்லூரில் இந்த வகையை சாப்பிட்டு விட்டு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டேன். பங்கனபள்ளி பழம் நெல்லூரில் இப்படி சுவைத்தால், அல்போன்சா ரத்தினகிரியிலும், இமாம்பசந்த் அது எங்கே விளைகிறதோ அங்கும் எப்படி சுவைக்கும் என்று எண்ணுகிறேன்.

காய்கறிகள், பழங்கள் மட்டுமல்ல, பால், மாமிசம், முட்டை, ஏன் மீன் வகைகளில் கூட இடத்திற்கு இடம் ருசி வேறுபடுகிறது. குமரி மாவட்டத்திற்கு குடி பெயர்ந்தபிறகு, சென்னையில் மீன் வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார், குமரி மாவட்டத்தில் கிடைக்கும் வஞ்சிரம் மீன்தான் இந்தியாவிலேயே ருசியில் சிறந்ததென்று. இன்னும் அதை சோதித்துப் பார்க்கும் தருணம் வரவில்லை. ஏனோ, வஞ்சிரம் மீனை மெச்ச என் நாவுக்கு முடியவில்லை.

நாஞ்சில் நாட்டு உணவுகளின் விற்பன்னராகிய நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையில் ஆரல்வாய்மொழியில் கிடைக்கும் தண்டங்கீரையைப் பற்றி கவிமணி ஒரு வெண்பாவே எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். நான் அந்த வெண்பாவையும் பார்த்ததில்லை. என் வீட்டிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் ஆரல்வாய்மொழியின் கீரையையும் பார்த்ததில்லை. ஆனால், ஆரல்வாய்மொழி அருகிலுள்ள ஒரு இடத்தில் கீரை விதை வாங்கி வீட்டில் விதைத்திருக்கிறோம். அது வாரமலர் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் ஒரு புதுக்கவிதைக்காவது தகுதியானதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
Posted by Picasa

1 comment:

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Tharuvaikulam