Saturday, August 25, 2007

கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

கி. ராஜநாராயணன் அவர்களது கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்க தொடங்கியது பற்றி இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்திய பயணங்களின் போது அதை எடுத்துச் சென்று வாசித்து முடித்து விட்டேன்.

கி.ரா. கட்டுரைகள் என்ற தலைப்பில் அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இத் தொகுப்பு 487 பக்கங்கள் கொண்டது. முதல் பதிப்பு 2002ல் வெளியாகியிருக்கிறது. 275 ரூ.

கி.ரா. கடந்த சுமார் 46 வருடங்களாக ஆக்கிய பல படைப்புகளை கோர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். கட்டுரை என்று தலைப்பில் இருந்தாலும் சில படைப்புகள் கதை வகை. உதாரணம்: பிள்ளையார்வாள். ஏற்கனவே சொன்னபடி முக்கால்வாசிக் கட்டுரைகளிலே ஏதாவது ஒரு கதையாவது இருக்கும். நூலின் இறுதியில் அமைந்திருப்பது ஒரு நீண்ட நேர்காணல். “பஞ்சுவின் கேள்விகளும் கி.ரா.வின் பதில்களும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த அத்தியாயம் எங்கே, எப்போது செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் இல்லை. இது இந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு குறை. சில படைப்புகளில் எந்தக் கால கட்டத்தில் எங்கே வெளியானது என்ற குறிப்புகள் இல்லை. இன்னொரு குறை இப்படைப்புக்களை தொகுத்தவர்கள் என்ன அடைப்படையில் அவற்றை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் என்று யூகிக்க முடியவில்லை. சில படைப்புகள், உதாரணமாக தி.க.சி. அவர்களைப் பற்றிய குறிப்புகள், வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மற்றவை காலம், பொருள் தவறி ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.

வெகுஜன வாசிப்பின் மூலமாக கி.ரா.வை தெரிந்து கொண்ட என் போன்றவர்களுக்கு இந்த தொகுப்பு கி.ரா.வின் சிந்தனைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை தெரியப்படுத்துகிறது. 1970ல் தீவிர பொதுவுடமை சித்தாந்தத்தின் உச்சக்கட்ட கிடுக்கிப்பிடியில் அவருக்கு பிச்சைக்காரன் கூட லெனினை நினைவு படுத்துகிறான் (“நமக்கு இப்போது ஒரு லெனின் வேண்டும்” பக்கங்கள்: 88-92). பிறகு (எப்போது என்று தெரியவில்லை), தி.க.சி.யைப் பற்றி எழுதும் போது இப்படி எழுதுகிறார் (பக்கம் 359):

“நாங்கள் அவரோடு பழகிய காலத்தில் எங்கள் மண்டைக்குள்ளேயும் ஒரு “பண்ணிக்குட்டி” இருந்தது; அரசியல்ப் பண்ணிக்குட்டி! திறந்த மனசோடு நாங்கள் அவரை அணுகவிடவில்லை அது. … இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரொம்ப.”

இருப்பினும், வாழ்வைப் பற்றி; மக்கள் கலைகளைப் பற்றி, அதிலும் குறிப்பாக இசையைப் பற்றி, மக்களின் மொழிகள்; பழக்க வழக்கங்கள் பற்றி; கி.ரா.வின் ஆவல், அவற்றை எழுத அவர் தேர்ந்தெடுத்த நடை, அவற்றை சொல்வதிலுள்ள நேர்மை ஆகியவை இறுதி வரை மாறவில்லை. நமக்குள் இருக்கும் ரசிகனைத் தட்டியெழுப்பி, தனது ஆத்மாவை திறந்து காட்டி, நமது வரவேற்பரையிலோ, சாப்பாடு மேசையிலோ அமர்ந்து பேசுவது போல சுலபமான மொழியிலே பேச இவரைப் போல் எவருண்டு என்றுதான் தோன்றுகிறது கி.ரா.வின் கட்டுரைகளை மூடி வைக்கும் போது.

இப் புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள் வெறும் வாசிப்பு சுகத்திற்கு மட்டுமின்றி. பல வாழ்வியல் பாடங்களும் இவற்றில் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று “முதுமக்களுக்கு” என்ற கட்டுரை (பக்கம் 347-353). இதில் பொய்யாளி நாயக்கர் என்று ஒருவர் வருகிறார். கண் ரெப்பைகள் நரைத்த வயோதிகரான இவருக்கு ஒன்பது பிள்ளைகள். திருமணத்திற்குப் பின் பிள்ளைகளை கண்டிப்பாக தனிக்குடித்தனம் செய்ய அனுப்பி வைத்தவர். சொத்தை பத்துப் பங்கு வைத்து பிள்ளைகளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு தனக்கும் மனைவிக்குமாக ஒரு பங்கு வைத்து வாழ்பவர். பிள்ளைகள் கூட இருந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு, “பிள்ளைகங்கிறது சொத்துக்கும் வாரீசுக்கும்தான்; பாசத்துக்கு இல்ல” என்பவர். பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் பாசமானவர்கள் என்பது இவரது கருத்து. இதைப் பற்றி கேட்கும் போது பாச உறவு என்பது செடியின் வேரைப் போல் கீழ் நோக்கித்தான் போகும்; தண்டைப் போல் மேல் நோக்கிப் போகாது என்கிறார். அதையே விளக்கமாக “நீ உன் பிள்ளைக பேர்ல பிரியமா இருக்க; அது போல அவங்க தன்னுடைய பிள்ளைக பேர்ல பிரியமா இருக்காங்க. அது – அந்தப் பிரியம் – உன்னெ நோக்கி வராது. இதுதான் நெசம்” என்கிறார். கூடவே இவரது தத்துவங்கள் கி.ரா.வின் மொழியிலேயே:

-- பிள்ளகயிட்ட ரொம்பத்தான் செல்லங் கொஞ்சக்கூடாது பாத்துக்க. “தேனைத் தொட்டயோ, நீரைத் தொட்டயோ’ன்னு இருக்கணும் பாத்துக்க.

-- இந்தச் சொத்தெல்லாம் ஒனக்குத்தான், இந்த வீடெல்லாம் ஒனக்குத்தாம்னு எந்த அப்பன், ஆத்தா பிள்ளைகயிட்டச் சொல்லுதாங்களோ அந்த அப்பனையும், ஆத்தாளையும் கட்டாயம் அந்த வீட்டெ விட்டுத் துரத்தாம இருக்க மாட்டாங்க.

-- நா எப்படிக் கஷ்டப்பட்டு இந்த வீட்டெக் கட்டுனனே நாங்க எப்படி அரும்பாடு பட்டு இந்தச் சொத்தெச் சேத்தமோ இது போல சம்பாதிச்சு வீட்டெ நீங்க கட்டிக் கிடணும்னு சொல்லணும்

-- கஷ்டத்தச் சொல்லி பிள்ளெகள வளக்கணும். “நா இருக்கும்போது உனக்கென்னடா”ன்னு பிள்ளைகள வளக்கிற அப்பனும் ஆத்தாளும் கடைசிக் காலத்துல நிம்மண்டு நாயக்கரும் பெஞ்சாதியும் பிச்சை எடுத்து செத்தது போலத்தான் சாக வேண்டி வரும்.

பல குடும்பங்களில் நடப்பவற்றைப் பார்க்கும் போது பொய்யாளி நாயக்கர் சொன்னது 100க்கு 100 உண்மை என்றுதான் தோன்றுகிறது.

பி.கு: கடந்த சென்னை புத்தக விழாவிலே கி.ரா.வைத் தாத்தா என்று அடைமொழி கொடுத்து விளித்திருந்தார்கள். இந்தப் பட்டத்தை அவருக்கு யார் அளித்தது; அதை அவர் மனதாற ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் கி.ரா.வை தாத்தா என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு சமவயது நண்பராகத்தான் எனக்கு இருபது வயதிருக்கும் போதுதான் தோன்றினார். இருபதாண்டுகள் கழித்தும் அப்படித்தான் தோன்றுகிறது. அப்புறம் இந்த தாத்தா முறையெல்லாம் எதற்கு என்றும் புரியவில்லை. கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

No comments: