Showing posts with label பார்த்தது. Show all posts
Showing posts with label பார்த்தது. Show all posts

Sunday, June 13, 2010

ஏழாவது மாவட்டத்தில் எனது நாள்


ஜூன் 13, 2010.ஞாயிறு காலை. எட்டரை மணி.

ஹோசிமின் நகர் விமான நிலையம் எங்களது விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் தவிர வேறு யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. விசா வழங்கும் பிரிவு அசமஞ்சமாக இயங்கிக் கொண்டிருந்தது.

விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது வழக்கமான ஹோசிமின் நகரின் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், வழக்கமான வாகன நெரிசல் இல்லை.

விடுதி ஒழுங்கு செய்தவர்கள் வாகனமும் அனுப்பியிருந்தார்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால், நான் விடுதி எங்கே இருக்கிறதென்று கவனிக்கவில்லை. வழக்கமாக விடுதிகள் அனைத்துமே டிஸ்ட்ரிக்ற் 1 என்று அழைக்கப்படும் ஹோசிமின் நகரின் சைகான் நதியை ஒட்டிய நகர் பகுதியிலேயே அமைந்திருக்கும். இந்த முறையும் அப்படியேதான் என்று நினைத்து வந்திருந்தேன். ஓட்டுநர் டிஸ்ட்ரிக்ற் 1 செல்லும் பாதையை விட்டு விலகிய ஒரு பாலத்தில் ஏறியபோதுதான் வேறெங்கோ விடுதி ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்று புரிய வந்தது.

10-15 நிமிடங்களில் விசாலமான வீதிகளும், வானைத் தொடும் கட்டங்களும், கடைகளும் நிறைந்த சிங்கப்பூர் போன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். விடுதிக்குப் போன பிறகு முகவரியைக் கவனித்தால், அது டிஸ்ட்ரிக்ற் 7 என்று சொன்னது. கூகுளைத் தட்டி டிஸ்ட்ரிக்ற் 7 பற்றிக் கேட்டேன். இது சமீபத்தில் அமைக்கப்பட்ட ஒரு நகரமாம். கொரியர்களும், ஜப்பானியர்களும் இங்கு பெருமளவு வசிக்கிறார்களாம். இங்குள்ள விடுதிகளில் மேற்கத்திய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தங்குவதால், இங்கு பல பார்களும், ரெஸ்தாரந்துகளும் உள்ளனவாம்.

எனக்கு ஒரு தொழில் கண்காட்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அக் கண்காட்சி எஸ்.ஈ.சி.சி. என்னும் சைகான் எக்சிபிஷன் & கன்வென்ஷன் சென்ற்றரில் நடைபெறுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இதே கண்காட்சி டிஸ்ட்ரிக்ற் 1ல் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்ற போது சென்றிருக்கிறேன். அந்த இடம்தான் எஸ்.ஈ.சி.சி. என்று நினைத்திருந்தேன். ஆனால், எஸ்.ஈ.சி.சி. விடுதியிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்குள்ளேயே இருந்தது. போகிற வழியில் டாக்சியை நிறுத்தி ஏடிஎம்மிலிருந்து 20 லட்சம் டாங் எடுத்துக் கொண்டேன் (ஒரு ரூபாய் இன்றைய கணக்கில் 435 டாங். குறைந்தபட்ச நோட்டு 1000 டாங். 1000, 2000, 5000, பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம், ஒரு லட்சம், ஐந்து லட்சம் என்று கலர், கலராக அடித்து வைத்திருக்கிறார்கள்).

கண்காட்சி முடிந்து, சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து, சற்று நேரம் உறங்கி விட்டு, மாலை 6 மணிக்கு வெளியில் நடக்கச் சென்றேன். தெருவிற்கு தெரு விடுதிகளும், பார்களும், உணவகங்களும்தான். நானிருக்கும் விடுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கணேஷ் வட இந்திய தென் இந்திய உணவகம் என்று ஒன்றைக் கண்டேன். உள்ளே போகத் தோன்றவில்லை. எதிர்ப்புறம் ஒரு திறந்தவெளி உணவகத்தில், பிரமாண்டமான திரையில் ஸ்லோவேனியாவும், அல்ஜீரியாவும் கால்பந்து ஆடுவதைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே போய் உட்கார்ந்தேன்.

இந்த உலகக் கோப்பையில் நான் பார்த்த முதல் முழு ஆட்டம் இதுதான். வரைபடத்திலே எங்கே இருக்கிறதென்று சரியாக தெரியாத இரு நாடுகள் ஆடுவதைப் பார்ப்பதன் சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த அணியையும் ஆதரிக்க வேண்டியதில்லை, ஆட்டத்தை மட்டும் ரசித்தால் போதும். இரண்டுமே ஏறக்குறைய சமமான அணிகள்தான், ஆனால் ஸ்லோவேனியாவின் கை லேசாக ஓங்கியிருந்தது. ஓவர்டைமில் ஒரு கோல் போட்டு ஸ்லோவேனியாதான் வென்றது.

இரவுணவு: இஞ்சியும் வெங்காயமும் போட்டு சோயா சாஸிலே அவிக்கப்பட்ட கொடுவா மீன், பாக்சோய் என்ற சீன முட்டைக்கோசு, சாதம், மாம்பழ ஜூஸ். ஒரு வேளையாவது ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற முனைப்பில் பெறப்பட்ட உணவு. சோயா சாஸிலே மறைந்திருந்த சமைக்கப்படாத முழு மிளகாயைக் கடித்து விட்டு நான் சொரிந்த கண்ணீரைப் பார்த்து விட்டு பரிசாரகருக்கே இரக்கம் வந்து, பக்கத்தில் வந்து போதும் என்கிற வகையில் தண்ணீரை தம்ளரில் நிரப்பிக் கொண்டேயிருந்தார்.

Thursday, June 10, 2010

சிங் டா, சீனா: சிறு குறிப்புகள்



இந்தியாவிற்கு மீன் கொத்தி

சிங்கப்பூருக்கு புலி

சீனாவிற்கு சிங் டா

இவையெல்லாம் அந்தந்த நாட்டின் பிரபலமான பியர் வகைகள்.

Tsing Tao என்ற பியரின் பெயர் அது தயாரிக்கப்படும் ஊரின் பெயரிலேயே இருக்கிறது. பீகிங்கை, பெய்ஜிங் என்று உச்சரிப்பு மாற்றம் செய்தது போல ட்சிங் ற்றா இப்போது ஷிங் டா (Qing Dao) என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் வட பசிபிக் கரையில் ஷாண்டோங் மாநிலத்தில் இருக்கிறது இந்த நகரம்.

மே 30 முதல் ஜூன் 6 வரை இந்த ஊரில் இருந்தேன்.

பெய்ஜிங்கிலிருந்து ஒரு மணி நேர விமானப் பயணம். தரை இறங்குமுன் விமானம் அதிகக் காற்றில் தள்ளாடியது. ரொம்ப மெதுவாக, ஜாக்கிரதையாக தரை இறக்கினார் விமானி. காலை பத்து மணிக்கு இரவு பத்து மணி போல வானம் இருண்டிருக்க, குளிரான ஊதல் காற்று வீசி, அடர்த்தியாக மழை தொடங்கியது. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் விமானத்திற்கு பிறகு தரையிறங்க முயற்சித்த விமானங்களெல்லாம் வேறு, வேறு இடங்களுக்கு திசை திருப்பப்பட்டன.

விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு அரை மணி நேரப் பயணம். நான் சென்ற மாநாட்டிற்கு செல்பவர்கள் 8 பேர் ஒரே விமானத்தில் வந்திறங்கினோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதால் ஒரு பெரிய வேனை அமர்த்திக் கொண்டு விடுதிக்கு சென்றோம். தாய்லாந்திலிருந்து வந்திருந்த டாக்டர் சூட்டிமா பத்தாண்டுகளுக்கு முன்னால் ஷிங் டா வந்திருக்கிறார். அடையாளம் தெரியாமல் நகரம் வளர்ந்து விட்டது என்றார்.

விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து கடல் காட்சி அருமையாக இருந்தது (புகைப்படம்).

மறுநாள் என்னுடைய உரை ஒன்று இருந்தது. மதிய உணவிற்குப் பின், என் உரையை சீனத்தில் மொழிபெயர்ப்பவரோடு சந்தேகங்களை விளக்கி விட்டு, அறைக்கு வந்து மாலை 4 மணி போல் படுக்கையில் சாய்ந்து சில நொடிகளில் உறங்கி விட்டேன். எழுந்த போது இருண்டு விட்டது. கைக்கடிகாரம் 8 மணி காட்டியது. முகத்தைக் கழுவி, உடை மாற்றிக் கொண்டு கீழே போனால், விடுதி உணவகம் மூடும் நேரம் இரவு 8 என்றிருந்தது. “என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மலேசிய நண்பர் டாக்டர் விங் கியோங் வந்தார். அவரோடு இருவர் வந்தார்கள். ஆஸ்திரேலியா யுனிவர்சிட்டி ஆஃப் டாஸ்மேனியாவில் சபாடிக்கல் போயிருந்தபோது பழக்கமான அங்குள்ள மாணவர்கள் என்றார். இருவருமே யூடாஸில் பிஎச்.டி படிக்கிறார்கள். மாணவர் ஒன்று இந்தியர் போல இருந்தார். பெயர் பஷீர். இந்திய மூதாதையர், மரூஷியஸ்காரர். மாணவர் இரண்டு, ரமீஸ், சிரியாக்காரர். எடுத்த எடுப்பிலேயே தோழமையாகப் பழகினார்கள்.

வெளியே எங்காவது சாப்பிடலாம் என்று புறப்பட்டோம். ஒரு கடலுணவு சாப்பிடும் இடம் நன்றாக இருக்கும் என்று டாக்சிக்காரர் அழைத்துச் சென்றார். விங்கிடம் சீன மொழி பேசுவீர்களா என்றேன் (அவர் மலேசிய சீனர்). கொஞ்சம், கொஞ்சம் சமாளிக்கலாம் என்றார். ஆனால் ரமீஸ் நன்றாக சீனம் பேசுவார் என்றார். ரமீஸ் தைவானில் படித்திருக்கிறார். கடலுணவு ரெஸ்தாரந்தில் ரமீஸ் உணர்ச்சிவசப்பட்டு நிறைய விலையுயர்ந்த மீன் வகைகளை, குறிப்பாக பெரிய, பெரிய இறால்களை வாங்கி விட்டார். தலைக்கு 2500 ரூபாய்க்கு சமமான தொகை பில்லாக வந்து விட்டது.

விடுதிக்கு வந்த பிறகு கைக்கடிகாரம் பார்த்தேன்: இரவு பதினொரு மணி. விடுதிக் கடிகாரம் 10 என்று காட்டியது. தாய்லாந்தில் கடிகாரத்தை மாற்றியமைத்த நான் சீனா வந்த பிறகு ஒரு மணி நேரம் கூட்டி வைக்க மறந்தது புரிந்தது.

மறுநாளிலிருந்து மாநாட்டிற்கு போய் வருவது, தனிப்பட்ட சந்திப்புகள் என்று எல்லோருமே பிசியாகி விட்டோம். மாநாட்டிற்கு வந்த 600 பேரையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, நீளமான ஓலை போலிருந்த படத்தைச் சுருட்டி, கலையழகு மிக்க ஒரு நீள்செவ்வக பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார்கள்.

செர்ஜியோ வழக்கம் போல் மாநாட்டு விடுதியில் தங்காமல் ஷாங்ரிலாவில் தங்கினார். நாளொன்றுக்கு அறைக்கு குறைந்தபட்சமாக 12,000 ரூபாய் வசூலிக்கும் விடுதி. அவர் தங்கியிருந்த அறைக்காரர்களுக்கென்று விடுதி உச்சியில் ஒரு லவுஞ்ஜ் இருக்கிறது. மாலை 5 முதல் 7:30 வரை இலவச உணவு, பானங்கள். இரண்டு தினங்கள் நானும், ப்ரேசிலிய நண்பரான டானியலும் செர்ஜியோ விடுதிக்காக செலுத்தும் பணம் வீணாகமல் பார்த்துக் கொண்டோம்.

ஒரு நாள் இரவு மாநாட்டு நண்பர்கள் பலர் பியர் தெருவிற்குப் போகிறோம் என்று அழைத்துச் சென்றார்கள். வைன் தெரு, பியர் தெரு என்று இரண்டு தெருக்கள் ஷிங் டாவில் உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளின் போது படகு விடும் போட்டிகள் ஷிங் டாவில் நடத்தப்பட்டன. அப்போது நிர்மாணிக்கப்பட்டவையே இந்த தெருக்கள். 800-1000 மீட்டர் நீளமான தெருவில் நூற்றுக்கணக்கான பார்கள். ஒரு பிட்சர் பியர் சுமார் 150 ரூபாய். (விடுதியில் 300 மிலி பாட்டில் 150 ரூபாய்). கேட்க வேண்டுமா, மக்கள் பியரில் குளித்தார்கள். நானும், போர்ச்சுகல் நண்பர் பெட்ரோவும், அவரது போர்ச்சுக்கல் நண்பர்களும் கொலோனியலிசம், மெகல்லன், கோவா பற்றியெல்லாம் இரவு 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் கிளம்பும் போதும், நார்வே குழுவினர் அரட்டை அடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலை 4:30க்குத்தான் திரும்பியதாக மறு நாள் சொன்னார்கள்.

சீனாவில் டாக்சி வாடகை சொற்பம். ஐம்பது ரூபாய் குறைந்தபட்சம். 5-10 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடங்கள் 100 ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது. எல்லா டாக்சி ஓட்டுநர்களும் உபதொழில் ஒன்றை வைத்துள்ளார்கள். பாக்கெட்டிற்குள்ளிருந்து பெண்கள் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்து மசாஜ் வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

இறுதிநாள் இரவு பெரிய உணவு விருந்து. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்த உணவு விருந்துதான் பிரசித்தி பெற்றது. மாநாடு முடிந்த பிறகும் பேசப்படும் விஷயம் இது. உதாரணமாக 1998ல் இந்த மாநாடு ஜப்பானில் நடைபெற்ற போது, ஒரு மிகப் பெரிய நீலத் துடுப்பு சூரை மீனை (ப்ளு ஃபின் ட்யூனா) விருந்திற்கு கொண்டு வந்து, ஷஷிமி முறையில் பச்சையாக வெட்டி பரிமாறினார்கள். இந்த மாநாட்டில் விதவிதமான சீன உணவுகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தன. ஊர்வன, மிதப்பன, நீந்துவன, ஓடுவன, பறப்பன, கடிப்பன என்று ஒரு 20-25 ஐட்டங்கள். என் பக்கத்தில் ஒரிசாவிலிருந்து வந்த ஒரு விஞ்ஞானியும், ஆந்திராவிலிருந்து வந்திருந்த டாக்டர் அஜய் பாஸ்கர் என்ற நண்பரும். ஒரிசாக்காரர் மாடு, பன்றி சாப்பிடமாட்டார் என்பதால் பரிமாறப்படும் ஒவ்வொரு அயிட்டமும் என்னது என்பதை தெரிந்து சொல்லும் பணி எங்கள் இருவர் மேலும் விழுந்தது. சீன கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு பெண் பாட்டுப் பாடினார். சீன பாரம்பர்ய சங்கீதம் தொண்டையிலிருந்து என்னென்ன சப்தங்களை வேறு வேறு ஸ்தாய்களில் உருவாக்க முடியும் என்பதைக் காண்பிப்பது போலிருந்தது. ஒரு கட்டத்தில் உச்ச ஸ்தாயில் காதைப் பிளந்து விடும் ஓலமாக அது மாற எங்கள் மேசையிலிருந்த நார்வேஜியன் ஒருவர் காதைப் பொத்திக் கொண்டு வெளியே எழுந்து போய் விட்டார்.

அடுத்த நாள் இரவு இன்ற்றர் கான்ற்றினென்றல் விடுதியில் நடந்த நிகழ்ச்சியையும், தனி விருந்தையும் முடித்து விடுதிக்கு திரும்பினோம். ஷிங்டாவின் பிரதான சாலையெங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் பல்வேறு ஒளி மாயாஜாலங்களில் மூழ்கியிருந்தன. என்னருகில் அமர்ந்திருந்த எகிப்திய-கனேடிய அடெல், சீனா ஒரு வளரும் நாடு என்பதை நம்ப முடியவில்லை என்றார். இருபது ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதுதான். ஷாங்ரிலா லவுஞ்சிலிருந்து மாலை 5:30 மணிக்கு பார்த்த போது, மஞ்சள் ஹெல்மட் அணிந்த நூறு பணியாளர்கள் ஒரு உயரமான கட்டிடத்திற்கு மேல் நின்று எறும்புகள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். சீனர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்தை மிகவும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறொரு விருந்தில் என்னருகில் அமர்ந்திருந்தவர் சீனர் என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் எந்த மாநிலத்திலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் “நான் இங்கிருந்தல்ல. தைவான்” என்றார். நான் விளையாட்டாக “அதுவும் சீனாவின் ஒரு மாநிலம்தானே” என்றேன். விருந்தை நடத்தும் சீன நண்பர் அவர் இடத்திலிருந்து உணர்ச்சிவசப்ப்பட்டு எழுந்து வந்து என் கோப்பையோடு, அவரது கோப்பையை க்ளிங் செய்தார். முகமெல்லாம் சிரிப்பு அவருக்கு. அந்த அளவிற்கு தங்கள் நாடு மீது வெறியாக இருக்கிறார்கள் சீனர்கள்.

இந்த முன்னேற்றத்தின் விலையாக அவர்கள் கொஞ்சம் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. யூட்யூப், ஃபேஸ்புக், ப்ளாகர் எதுவும் அங்கு அணுக முடியாது. அதனால்தான் இந்த தபால் வியாழன்று வெளியாகிறது.

தாய்லாந்தின் தாக்சினுக்கு ஆசிரியர் ஜெயலலிதாவா?


மே 29- சுவர்ணபூமி விமான நிலையத்தில் கால் பதித்த போது பாங்காக்கில் அமைதி நிலவ ஆரம்பித்து சில நாட்களே ஆகியிருந்தது. எப்போதும் ஜேஜே என்றிருக்கும் விமான நிலையம் அரவமில்லாமல் கிடந்தது. வெளிநாட்டவர் நுழைவு, சுங்கம் ஆகிய வழமைகளை சில நிமிடங்களில் முடித்துக் கொண்டு வெளியேறினேன். பாங்காக்கிலிருந்து சீனப் பயணம் தொடங்க 13 மணிநேரங்களே இருந்தபடியால், சுவர்ணபூமி பக்கத்திலேயே எக்ஸ்பீடியா மூலமாக க்ரேட் ரெசிடென்ஸ் என்ற ஒரு விடுதியை பதிந்து வைத்திருந்தேன். அவர்கள் அனுப்பி வைத்த வாகனம் எக்சிட் 4ல் இருக்கும் என்றபடியால் நேரடியாக அங்கு சென்று விடுதிக்குப் போனேன். காரில் ஐந்து நிமிடம் ஆகிறது. ரேட் 600 ரூ. கடந்த முறை சுவர்ணபூமி நிலையத்திற்குள்ளேயே 4 மணிநேரத்திற்கு 3000 ரூ கொடுத்து தங்கியதை நொந்து கொண்டேன்.

க்ரேட் ரெசிடென்சில் இருந்த சிறிய உணவகத்திலேயே மதிய உணவிற்கு மீனும் சோறும். தாய்லாந்தில் எந்த உணவகத்திலும் இதை நம்பி சாப்பிடலாம். சாப்பாட்டிற்குப் பிறகு நகர் விஜயம். வாடகை வாகனம் 600 ரூ கேட்டார்கள். நான் அறைக்கே 600தான் தருகிறேன் என்று பேரம் பேசி 400 ரூபாயாக்கினேன். போகும் போது டாக்சி ஓட்டுநர் நண்பராகி விட்டபடியால், எனக்காக நகரிலேயே 4-5 மணிநேரம் காத்திருந்து, திரும்பவும் கொண்டு வந்து விட்டார்.

கேமராவை எடுத்து படம் எடுக்க முற்பட்டால் அதற்குள்ள மெமரி கார்டை ப்ரூனேயிலேயே விட்டு விட்டு வந்து விட்டேன் என்று தெரிந்தது. போகிற வழியில் சிட்லோம் சென்ட்ரலில் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். பாங்காக்கில் எனக்குப் பிடித்த ஷாப்பிங் தலம் இந்த சிட்லோம் சென்ட்ரல்தான். எதிர்பார்த்ததைவிட சென்ட்ரலில் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் உள்ளூர் மக்கள்தான். சிவப்புச் சட்டை தொந்தரவுகள் முடிந்ததால் நிம்மதியாக வெளியே வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கூடவே சிட்லோமிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற சென்ட்ரல் வேர்ல்டு (தென் மேற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய மால் என்கிறார்கள்) கலவரத்தில் எரிக்கப்பட்டு விட்டதால் கூட இந்த சென்ட்ரலில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கலாம்.

சென்ட்ரலில் இருந்து வான்ரயிலில் சுக்கும்வித். மார்ச் முதல் வாரம் பாங்காக் வந்திருந்தபோது அங்கிருக்கும் எனது வழமையான தையல்காரர் ஜஸ்விந்தர் சிங்கிடம் (Barrons, நானா வான்ரயில் நிலையத்திற்கு கீழ், லாண்ட்மார்க் ஹோட்டல் எதிர்புறம்) துணிகள் தைக்க கொடுத்திருந்தேன். மார்ச் நான்காவது வாரம் பாங்காக் திரும்பப் போகும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அந்த ஏற்பாட்டை சிவப்புச் சட்டைக்காரர்கள் ரத்து செய்து விட்டார்கள்.

ஜஸ்விந்தர் புலம்பித் தள்ளினார். அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். வருடத்தில் ஒரு தடவை ஜஸ்விந்தர் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனிக்கெல்லாம் போய் ஆர்டர் எடுத்துக் கொண்டு வந்து தைத்து கூரியரில் அனுப்பி வைப்பார். இது தவிர பாங்காக்கிற்கு வரும் ஐரோப்பியர்கள் வேறு. யூரோ படுத்து விட்டதால் அவர்கள் வியாபாரம் ஏற்கனவே குறைந்து விட்டது. இதில் சிவப்புச் சட்டைக்காரர்கள் வேறு பயணிகளை பயமுறுத்தி விட்டார்கள். சிவப்புச் சட்டை பிரச்சினைக்கு தாக்சின்தான் காரணம் என்றார். அப்புறம், ரகசியமாக தாக்சின் எங்கேயிருந்து தேர்தலில் வெற்றி பெறும் தந்திரத்தைப் படித்தார் தெரியுமா என்றார். எனக்குத்தான் அந்த ரகசியம் தெரியுமே. “இந்தியாவா?” என்றேன். “ஆமாம், என்னுடைய ரெஸ்தாரந்தில் (துணிக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி உணவகமும் வைத்திருக்கிறார்) இந்தியாவிலிருந்து வந்த ஆட்கள் தாக்சினுக்கு அரசியல் ஆலோசகர்களாக செயல்பட வந்திருக்கிறோம் என்று பல தடவை சொல்லியிருக்கிறார்கள்” என்று அசைக்க முடியாத ஆதாரத்தையும் வைத்தார். ஜஸ்விந்தர் சில தலைமுறைகளாக தாய்லாந்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருடத்திற்கு ஓரிரு முறை இந்தியா போய் வந்தாலும் அவருக்கு அங்குள்ள நிலவரங்களெல்லாம் அத்துப்படியாக தெரியாது. “ஒரு பெண்மணி, பெயர் ஏதோ நிதாவோ என்னதோ அவர்தானே பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கத்தை தொடங்கி வைத்தாராமே” என்றார். ஓ, இது நம்மூர் அம்மையார் பெயர் போல இருக்கிறதே என்று தோன்றியதால் பெயரைச் சொன்னேன். ரொம்ப உற்சாகமாக “ஆமாம், ஆமாம், அந்தப் பெயர்தான்” என்று ஆமோதித்தார். “அந்த அம்மையார் முதல் தடவை ஆட்சியில் இருக்கும் போது இந்தியாவில் இல்லாமலிருக்க எனக்கு கொடுத்து வைத்திருந்தது. இரண்டாவது முறை தேர்தல் முடிந்த பிறகுதான் அங்கு சென்றேன். ஏதோ இடைத் தேர்தல்களில் எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இப்போது ஓட்டுப் போட பணம் கொடுப்பதை தொழில்முறையாக அமல் படுத்தி விட்டார்கள்” என்றேன்.

உண்மையில் தாக்சின் மாடல், ராஜசேகர ரெட்டியின் மாடல் மற்றும் தற்போதைய தமிழகத்தின் மாடல் எல்லாமே ஒன்றுதான். இதில் ஏழை மக்களுக்கு இன்சூரன்ஸ், மருத்துவ உதவி என்று உபயோகமான காரியங்களும் உண்டு; தேவையில்லாத இலவசங்கள், நேரடி பண விநியோகம் என்று அப்பட்டமான ஓட்டிற்கு லஞ்சம் வழங்குவதும் உண்டு.

விடுதிக்கு திரும்பி வரும்போது ஓட்டுநர் எரிந்து போயிருந்த சென்ட்ரல் வேர்ல்டைக் காண்பித்தார். பக்கத்திலிருக்கும் இன்னும் பணக்காரத்தனமான சயாம் பாரகனை விட்டு விட்டு இதை ஏன் எரித்தார்கள் என்று கேட்டேன். “அபிசித் குடும்பம் சென்ட்ரல் கடைகளின் உரிமையாளர்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்” என்றார். அபிசித் தற்போதைய பிரதமர், இங்கிலாந்தில் படித்த கெட்டிக்கார இளைஞர். “அபிசித் எப்படி?” என்றேன். “good, good man” என்றார். “சுதெப்?” “bad, very bad man” என்றார். சுதெப் அபிசித்தின் துணைப் பிரதமர், இவர் மேல்தான் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு மிகுந்த கோபம். பிறகு நான் கேட்காமலேயே “தாக்சின் very, very good” என்று இரண்டு கட்டை விரல்களையும் தூக்கிக் காட்டிச் சொன்னார்.

Saturday, February 13, 2010

புலிக்கு முன்னால் வந்த கிலி

பிப்ரவரி 8 ஹோச்சிமின் நகரில் வந்திறங்கிய போது சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான தயாரிப்புகள் தீவிரமடைந்திருந்தன.

உலகெங்கிலும் சீனர்கள் (இதில் கலாசார ரீதியாக வியட்நாமியர்களும் அடங்குவர்) தங்கள் புத்தாண்டை அக்கறையாக கொண்டாடுகிறார்கள். ஒரு வாரமோ, இரண்டு வாரங்களோ விடுமுறை எடுத்துக் கொண்டு, பிறந்த ஊருக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி விட்டுத்தான் மறு வேலை பார்க்கிறார்கள்.

மஞ்சளும், வெளிர் மற்றும் அடர் சிவப்பு நிறங்களும்தான் வியட்நாமின் புத்தாண்டு நிறங்கள். ஹோச்சிமின் நகரின் தெருக்களும், கடைகளும், வீடுகளும் இந்த நிறத்து மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாலை வேளைகளில் பிரதான சாலைகளெல்லாம் மக்கள் கூட்டத்தால் தளும்புகின்றன.

ஹோச்சிமின் நகர் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் ஒரு ஊர். இதில் முக்கால்வாசிப் பேரின் பூர்வீகம் ஹோச்சிமின் நகருக்கு வெளியே. வழக்கமாக ஹோச்சிமின் நகருக்குள் வருபவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். இப்போது தத்தம் பூர்வீக கிராமங்களை நோக்கி நகரை விட்டு வெளியே பயணிப்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். ஹோச்சிமின் நகரிலிருந்து மேக்காங் ஆற்றைக் கடக்கும் வின் லாங் படகுத் துறையில் சாதாரணமாக 15-20 நிமிடம் காத்திருந்தால் போதுமானது. இப்போது 3 மணி நேரம் காக்க வேண்டியுள்ளது.

நாளை (பெப்ரவரி 14) பிறக்கும் புத்தாண்டு புலியின் ஆண்டு. பன்னிரண்டு ஆண்டு சுழற்சியில் வரும் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினை வரும்; குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கிலியைக் கிளப்பி விட்டு விட்டார்கள். எனவே புத்தாண்டு பிறக்கு முன்னே திருமணங்கள் நடத்த ஒரே பரபரப்பு.

Monday, October 15, 2007

எலியும் சுண்டெலியும், மணிரத்னத்தின் குரு, அகத்தியனின் அம்னீசியா

இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமை கூட தபால் போட முடியாமல் போய் விட்டது. தீவிரமான பணியின் காரணமாக அல்ல; தீவிரமான விடுமுறையின் காரணமாக. பிள்ளைகளுக்கு காலாண்டு விடுமுறை. அதே நாட்களில் எனக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருக்க வேண்டிய கட்டாயம். எனவே மற்ற விடுமுறைகளில் ஏற்படுவது போன்ற “எங்கே போவது” என்பதை தீர்மானிக்கும் குழப்பங்கள் இல்லாத விடுமுறை.

சென்னையில் பிள்ளைகளுக்கென்று பல திருத்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சத்யம் திரையரங்க வளாகம். அங்கே, மேற்கத்திய திரையரங்களுக்கு இணையான ஸ்டுடியோ 5 மற்றும் 6 டிகிரிசில் திரைப்படம் பார்ப்பது எனக்கும் உவப்பான ஒன்றே. ஆனால் இம் முறை குழந்தைகளுக்கான திரைப்படமான ராட்டாட்டூயி (Ratatouille) நாங்கள் பார்க்க விரும்பிய தினத்தில் சத்யம் எலைட்டில் போடப்படுவதாக சத்யத்தின் இணைய தளமான www.thecinema.in சொன்னது. முதலில் சத்யம் எலைட் என்பது சத்யம் வளாகத்திற்குள் இன்னொரு அரங்கமோ என்று நினைத்தேன். போன பிறகுதான் தெரிந்தது சத்யம் அரங்கத்தின் பால்கனிதான் சத்யம் எலைட் என வழங்கப்படுகிறது என.

சில ஆண்டுகளுக்கு முன் முதலாவது ஹாரி பாட்டர் பார்க்க சத்யம் அரங்கம் சென்றோம். வசதியில்லாத இருக்கைகள், தெளிவில்லாத ஒலியனுபவம் என்று அவ்வளவு திருப்திகரமாக அந்த அனுபவம் அமையவில்லை. ஆனால், இப்போது அரங்கத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சத்யம் எலைட் செல்லும் வழியில் ஜப்பானிய உள்ளலங்கார அமைப்புகளைச் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. சத்யம் இணைய தளத்திலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம் (செக்யூரிட்டி செர்ட்டிபிகேட் எக்ஸ்பைர்ட் என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டு செய்தேன்). இருக்கைகளை தெரிவு செய்யலாம் (ரூ 10 கட்டணமாகச் செலுத்தி இதையும் செய்தேன்). நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டு இருக்கைக்கு வரவழைக்கலாம் (சோம்பேறித்தனத்திற்கும் ஒரு அளவிருக்கறபடியால் இதை செய்யவில்லை). நுழைவுச் சீட்டுகளை அச்சடித்துக் கொள்ளலாம் (இதைச் செய்யாமலிருக்க முடியாது. அரங்க வாசலில் நமது அச்சடித்த காகிதத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் நுழைவுச் சீட்டை கொடுத்து விடுகிறார்கள்).

ராட்டாட்டூயி அலுப்பு தட்டுகிற படம். “ஏண்டா வந்தோம்” என்ற அளவிற்கல்ல, “கொடுத்த 500 ரூபாய்க்கு வேறு ஏதாவது படம் பார்த்திருக்கலாமே” என்ற எண்ணத்தையும், ஓரிரண்டு கொட்டாவிகளையும் அவ்வப்போது எழுப்பும் அளவிற்கு அலுப்பு தட்டுகிறது. காரணங்கள் பல. ஒன்று, கடந்து 3-4 ஆண்டுகளாக வெளிவந்து, வெற்றி பெற்ற அனிமேஷன் படங்களின் சூத்திரத்தை அப்படியே பின்பற்றுகிறது இந்தக் கதை. கதை சொல்ல வரும் நன்னெறிகளும் டிட்டோ: விடா முயற்சியின் மேன்மை; நட்பின் இலக்கணம்; இத்யாதி, இத்யாதி. இந்த பரிட்சயம் அலுப்பைத் தூண்டுகிறது. இன்னொரு காரணம்: இந்தப் படத்தில் மனிதர்களாக வருகிறவர்கள் அத்தனை பேரும் படு சீரியசான பேர்வழிகள். எலிகளைத் துரத்த துப்பாக்கியைத் தூக்கும் கிழவியிலிருந்து, சிடுசிடு முகத்து சமையல் கலை விமர்சகன் வரை. சிரிக்க மறுக்கிறவர்களால் சிரிக்க வைக்கவும் முடியாது. எலி நாயகனும், அவரது தம்பியும், அப்பாவும் சிரிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: எவ்வளவுதான் நெருங்கிய சொந்தக்காரர்கள் ஆனாலும் சுண்டெலிக்கு இருக்கிற க்யூட்னெஸ் (எ.கா: மிக்கி மவுஸ், டாம் (&ஜெரி), ஸ்டூவர்ட் லிட்டில்) எலிக்கு கிடையாது. கூடவே, இப்படி சொல்வதற்காக உலகம் என்னை பிற்போக்குவாதியாக நிராகரித்தாலும் பரவாயில்லை, ஆனால் சமையல் கலையில் ஒரு எலி வல்லுநர் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரே படத்திற்கு 500 ரூபாயை விரயம் செய்து விட்ட படியால் இனிமேல் படங்கள் ஒன்று டிவியில், அல்லது டிவிடியில் என்று தீர்மானித்தோம். மணிரத்னத்தின் “குரு”வை ஒரு முறை திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் போது விமானத்தில் அரைகுறையாகப் பார்த்திருந்தேன். இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் உதவியோடு கதை புரிந்தது. பிடித்திருந்தது. எனவே, படத்தை மீண்டும், முழுதாக, தமிழில் அனுபவிக்க எண்ணி, மோசர் பேயரின் விசிடி வட்டில் வந்ததை ஸ்பென்சர் ஃபுட்சில் மளிகை சாமான்கள் வாங்கும் போது 28 ரூபாய்க்கு வாங்கினேன்.

இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் ஓட படத்தை ரசித்த அளவுக்கு தமிழில் ரசிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் படத்தில் உபயோகப்படுத்தப்படும் தமிழ். குஜராத்தின் உடைகளும், உடல் மொழியும் நிறைந்த மனிதர்கள் திருநெல்வேலி் தமிழில் பேசுவது அபத்தமாக இருக்கிறது. கதை ஆரம்பமாகும் பகுதி இலஞ்சி, திருநெல்வேலி ஜில்லா என்று திரையில் போடுவது இந்த அபத்தத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. பூவரசம் பூ போன்ற ஒரு பெரிய மலரை எடுத்து காதில் செருகுகிற உணர்வுதான் ஏற்படுகிறது.

2007ன் தொடக்கத்தில் வந்த “குரு”விற்கு இணையத்தில், குறிப்பாக பதிவு தளங்களில் பல விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. என் கவனத்தை ஈர்த்தது பினாத்தல்கள் என்ற பதிவு தளம் (http://penathal.blogspot.com), குறிப்பாக: http://penathal.blogspot.com/2007/01/16-jan-2007.htmlv. மணிரத்னம் திருந்தவே மாட்டாரா என்று அலுத்துக் கொள்ளும் பதிவர், “குரு” எப்படி மணிரத்னத்தின் சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிறது என்று விபரமாக சொல்கிறார். மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ரை அறிமுகம் – இரண்டு பாடல்களும் எனக்கும் ம.ர.வின் பழைய படங்களை ஞாபகப்படுத்தியது உண்மையே. அது போலவே, “நல்லவனா, கெட்டவனா?” கேள்வியும். ஆனால், மணிரத்னத்தின் படைப்புகளை ஒரு சூத்திரத்திற்குள் அடக்க முயலும் பார்வையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சூத்திரத்திற்குள் முடியும் என்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்” மற்றும் “ஆய்த எழுத்து” ஆகியவற்றை எங்கே நிறுத்துவது. வரலாற்றை, குறிப்பாக சமீப கால வரலாற்றை சொல்ல முடிவது சுலபமல்ல. அதுவும் “சிவாஜி” போன்ற படங்களை ஓட வைக்கும் தமிழ் ரசிக கூட்டத்தில் இது போன்ற படங்களை வணிக ரீதியாக வெற்றி பெற வைப்பது சுலபமே அல்ல (வேண்டுமானால் ஞானராஜசேகரிடம் கேட்டுப் பாருங்கள்). இந்த ரீதியிலும், படம் அலுக்க வைக்காமல் ஓடுகிறது என்ற வகையிலும் “குரு” வெற்றிதான்.

திருபாய் அம்பானி வாழ்க்கையில் நடந்த அதைக் காண்பிக்கவில்லை, இதைக் காண்பிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமாகாது. எல்லாவற்றையும் காண்பிக்க வேண்டுமானால் படம் 10-12 மணிநேரமாவது ஓட வேண்டும். அப்போதும் இதே குறையைச் சொல்ல ஆட்கள் இருப்பார்கள். திருபாய் அம்பானியின் வாழ்க்கையின் மூலக்கூறு ஒன்றே ஒன்றுதான். அது, ஏற்கனவே உள்ளே சென்று வெற்றி பெற்றவர்கள், மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று பூட்டி வைத்திருந்த இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பிற்குள் அம்பானி முன்னர் எவரும் செய்திராத அளவு தந்திரத்தோடும், உக்கிரத்தோடும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றியடைந்தார். இதை இந்தப் படம் சாதாரண பார்வையாளனுக்கு கூட வெற்றிகரமாகக் காண்பிக்கிறது என்றே கருதுகிறேன்.

மூன்றாவதாக பார்த்தது கலைஞர் டிவியில் “செல்வம்” என்ற படம். பார்க்க வேண்டும் என்று பார்த்ததல்ல. போட்ட நேரத்தில் தொலைக்காட்சி முன்னர் இருந்த தற்சமயம்தான் காரணம். தலைப்பெல்லாம் முடிந்த பிறகுதான் பார்க்க ஆரம்பித்தோம். ஆரம்பக் காட்சிகள் வித்தியாசமாக இருக்க, “இது என்ன படம்?” என்ற ஆர்வம்தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. தமிழ் திரைப்படங்களில் அநியாயத்திற்கு குதறப்பட்ட மனநல நிலைமைகளில் ஒன்றான அம்னீசியா இந்தப் படத்தில் நடு நாயகம் செலுத்துகிறது.

அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட செல்வம் என்ற இளைஞன் (நடிகர் நந்தா) உண்மையில் யார் என்ற கேள்விக்கான விடையை நோக்கிய பயணம்தான் இந்தப் படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது. நடிகர் நந்தா சிறப்பாக நடித்திருக்கிறார். இயலாமை தரும் கோபம் மற்றும் சோகம், இவற்றோடு இளமை தரும் வேகம் மூன்றையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மருத்துவர்களில் ஒருவரான நடிகை உமாவின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக அவரது காதலைச் சொல்லும் காட்சி. தொடக்க காட்சிகளில் வரும் மருத்துவமனைக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன (சிகிட்சைக்கு பலமுறை பணம் கொடுக்க முன்வரும் நந்தாவிடம் “அது வேண்டாம்” என்று மறுக்கும் மருத்துவர் தவிர).

இப்படி விறுவிறுப்பாக செல்லும் படம் செல்வம் யாரென்று தெரிந்ததும் தூய்மையான அபத்தங்களின் திசையில் பயணிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இயக்குநர் அகத்தியனுக்கும் முன்பாதிப் படத்தைப் பற்றி அம்னீசியா ஏற்பட்டிருக்கலாமோ?

Saturday, September 15, 2007

ஆட்டம் விறுவிறுப்பு, முடிவு அசமஞ்சம்



இருபது-20தான் எதிர்கால கிரிக்கெட்டின் அடையாளம். மூன்று மணி நேர ஆட்டம். முழுவதும் விறுவிறுப்பு. ஆட்டம் முழுவதையும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. புவியியல் ரீதியாக கிரிக்கெட் வளர்ந்து வருவதையும், ஆட்டத்தின் இந்த புதிய அமைப்பையும் வைத்துப் பார்க்கும் போது, ஒலிம்பிக்சில் கூட கிரிக்கெட் விளையாடப்படலாம் என்ற நம்பிக்கை உண்டாகிறது. பார்த்தது

கல்லூரி நாட்களுக்குப் பிறகு இரவில் கண் விழித்து முழு ஆட்டத்தையும் பார்த்தது இந்தியா-பாகிஸ்தானின் முதல் உலகக் கோப்பை இருபது-20தான். ஆர்.பி. சிங்கும், ஸ்ரீசாந்தும் பந்து வீசிய லட்சணத்தில் காரியம் கெட்டு பாகிஸ்தான் வெல்வது நிச்சயம் என்று ஏற்பட்ட சமயத்தில், பதானும், அகர்கரும், ஹர்பஜனும் பந்தைக் கையிலெடுத்து வயிற்றில் பால் வார்த்தனர். இந்தியா வெல்வது நிச்சயம் என்று கொஞ்சம் ஆசுவாசமாக நாற்காலியில் சாய்ந்தால் மிஸ்பா நாலும், ஆறுமாக அடித்து பாலுக்குள் புளியை ஊற்றிக் கலக்கினார். காரியம் கெட்டே விட்டது என்ற கடைசி இறுதி இரண்டு பந்துகளில் பாகிஸ்தான் குளறுபடி செய்து ஆட்டம் 141-141 என்று சமம். வீட்டில் அனைவரும் தூங்குகிறார்கள் என்பதால் தொலைக்காட்சியை ஊமையாக்கி ஆட்டத்தைப் பார்த்ததில் இந்த மாதிரி இழுபறிக்கெல்லாம் இருபது-20 ஒரு தீர்வு வைத்திருக்கிறது என்று தெரியாமலே தூங்கப் போய் விட்டேன்.

காலையில் மனைவியிடம் “தெரியுமா, இருபது-20ல் முதல் இழுபறி ஆட்டம். அதை இரவு இரண்டரை வரை பார்த்து விட்டுத்தான் தூங்கினேனாக்கும்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வந்த வானொலி செய்தி “தென்னாப்பிரிக்காவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து சூப்பர் எட்டுக்குள் நுழைந்தது” என்று சொல்லி மூக்குடைத்தது. கிரிக்கின்ஃபோ சென்று பார்த்தால் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி என்று சொல்லியது. அது என்ன பவுல் அவுட் என்பது பகல் நேரத்தில் ஈஎஸ்பிஎன் விளையாட்டின் முக்கிய காட்சிகளை காட்டிய போதுதான் புரிந்தது.

ஸ்டம்புகளுக்குப் பின்னால் விக்கெட் கீப்பர். ஆனால் துடுப்பாட்டக்காரர் கிடையாது. ஒவ்வொரு அணியிலிருந்தும் ஐந்து பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாறி, மாறி பந்து வீசுகிறார்கள். வீச்சாளர் ஸ்டம்பைத் தாக்கி விட்டால் அணிக்கு ஒரு புள்ளி. கால்பந்து டை ப்ரேக்கரின் கலப்படமில்லாத காப்பி. சேவாக், ஹர்பஜன், உத்தப்பா என்று மூன்று பந்து வீச்சாளர்களுமே லெக் ஸ்டம்பைத் தூக்க, பாகிஸ்தானின் மூன்று பந்து வீச்சாளர்களுமே ஸ்டம்பைத் தாக்காமல் கோட்டை விட்டார்கள். இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி.

கிரிக்கின்ஃபோவில் பாகிஸ்தானின் வீரர்களுக்கு இந்த டை ப்ரேக்கர் ஆட்ட முறை புரியவில்லை என்பது போல போட்டிருந்தார்கள். இதில் புரிய என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. தன்னந்தனியாக வில்லனிடம் மாட்டிக் கொண்ட தங்கை நடிகையைப் போல எந்தவித பாதுகாப்பில்லாமல் ஸ்டம்ப் இருக்கிறது. பந்து வீசச் சொல்கிறார்கள். ஸ்டம்பைக் காலி செய்வது தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. முதலாவது ஸ்டம்பைக் காலி செய்த சேவாக்கை எல்லா இந்திய வீரர்களும் கொண்டாடினார்கள். இவையெல்லாம் பார்த்த பின்னும் என்ன குழப்பம் என்பதுதான் நமக்கு குழப்பம்.

எப்படியிருந்தாலும் மூன்று மணி நேரம் பரபரப்பாக ஆடப்பட்ட ஒரு ஆட்டம் இப்படி அசமஞ்சத்தனமாக முடிவுக்கு வந்தது வருத்தம்தான். இந்தியா தோற்றிருந்தால் இன்னும் அதிகமாக வருத்தம் இருந்திருக்கும். நல்ல வேளையாக தோனி ஆர்.பி. சிங்கையும், ஸ்ரீசாந்தையும் டை பிரேக்கரில் பந்து வீச விடவில்லை.

பி.கு: மழையினால் ரத்து செய்யப்படுகிற ஆட்டங்களுக்கு தீர்வு காண இரண்டு அணிகளையும் புக் கிரிக்கெட் விளையாட விடலாமே என்ற ஆலோசனையை இருபது-20க்கு கொடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
Posted by Picasa