Thursday, June 10, 2010

சிங் டா, சீனா: சிறு குறிப்புகள்இந்தியாவிற்கு மீன் கொத்தி

சிங்கப்பூருக்கு புலி

சீனாவிற்கு சிங் டா

இவையெல்லாம் அந்தந்த நாட்டின் பிரபலமான பியர் வகைகள்.

Tsing Tao என்ற பியரின் பெயர் அது தயாரிக்கப்படும் ஊரின் பெயரிலேயே இருக்கிறது. பீகிங்கை, பெய்ஜிங் என்று உச்சரிப்பு மாற்றம் செய்தது போல ட்சிங் ற்றா இப்போது ஷிங் டா (Qing Dao) என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் வட பசிபிக் கரையில் ஷாண்டோங் மாநிலத்தில் இருக்கிறது இந்த நகரம்.

மே 30 முதல் ஜூன் 6 வரை இந்த ஊரில் இருந்தேன்.

பெய்ஜிங்கிலிருந்து ஒரு மணி நேர விமானப் பயணம். தரை இறங்குமுன் விமானம் அதிகக் காற்றில் தள்ளாடியது. ரொம்ப மெதுவாக, ஜாக்கிரதையாக தரை இறக்கினார் விமானி. காலை பத்து மணிக்கு இரவு பத்து மணி போல வானம் இருண்டிருக்க, குளிரான ஊதல் காற்று வீசி, அடர்த்தியாக மழை தொடங்கியது. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் விமானத்திற்கு பிறகு தரையிறங்க முயற்சித்த விமானங்களெல்லாம் வேறு, வேறு இடங்களுக்கு திசை திருப்பப்பட்டன.

விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு அரை மணி நேரப் பயணம். நான் சென்ற மாநாட்டிற்கு செல்பவர்கள் 8 பேர் ஒரே விமானத்தில் வந்திறங்கினோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதால் ஒரு பெரிய வேனை அமர்த்திக் கொண்டு விடுதிக்கு சென்றோம். தாய்லாந்திலிருந்து வந்திருந்த டாக்டர் சூட்டிமா பத்தாண்டுகளுக்கு முன்னால் ஷிங் டா வந்திருக்கிறார். அடையாளம் தெரியாமல் நகரம் வளர்ந்து விட்டது என்றார்.

விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து கடல் காட்சி அருமையாக இருந்தது (புகைப்படம்).

மறுநாள் என்னுடைய உரை ஒன்று இருந்தது. மதிய உணவிற்குப் பின், என் உரையை சீனத்தில் மொழிபெயர்ப்பவரோடு சந்தேகங்களை விளக்கி விட்டு, அறைக்கு வந்து மாலை 4 மணி போல் படுக்கையில் சாய்ந்து சில நொடிகளில் உறங்கி விட்டேன். எழுந்த போது இருண்டு விட்டது. கைக்கடிகாரம் 8 மணி காட்டியது. முகத்தைக் கழுவி, உடை மாற்றிக் கொண்டு கீழே போனால், விடுதி உணவகம் மூடும் நேரம் இரவு 8 என்றிருந்தது. “என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மலேசிய நண்பர் டாக்டர் விங் கியோங் வந்தார். அவரோடு இருவர் வந்தார்கள். ஆஸ்திரேலியா யுனிவர்சிட்டி ஆஃப் டாஸ்மேனியாவில் சபாடிக்கல் போயிருந்தபோது பழக்கமான அங்குள்ள மாணவர்கள் என்றார். இருவருமே யூடாஸில் பிஎச்.டி படிக்கிறார்கள். மாணவர் ஒன்று இந்தியர் போல இருந்தார். பெயர் பஷீர். இந்திய மூதாதையர், மரூஷியஸ்காரர். மாணவர் இரண்டு, ரமீஸ், சிரியாக்காரர். எடுத்த எடுப்பிலேயே தோழமையாகப் பழகினார்கள்.

வெளியே எங்காவது சாப்பிடலாம் என்று புறப்பட்டோம். ஒரு கடலுணவு சாப்பிடும் இடம் நன்றாக இருக்கும் என்று டாக்சிக்காரர் அழைத்துச் சென்றார். விங்கிடம் சீன மொழி பேசுவீர்களா என்றேன் (அவர் மலேசிய சீனர்). கொஞ்சம், கொஞ்சம் சமாளிக்கலாம் என்றார். ஆனால் ரமீஸ் நன்றாக சீனம் பேசுவார் என்றார். ரமீஸ் தைவானில் படித்திருக்கிறார். கடலுணவு ரெஸ்தாரந்தில் ரமீஸ் உணர்ச்சிவசப்பட்டு நிறைய விலையுயர்ந்த மீன் வகைகளை, குறிப்பாக பெரிய, பெரிய இறால்களை வாங்கி விட்டார். தலைக்கு 2500 ரூபாய்க்கு சமமான தொகை பில்லாக வந்து விட்டது.

விடுதிக்கு வந்த பிறகு கைக்கடிகாரம் பார்த்தேன்: இரவு பதினொரு மணி. விடுதிக் கடிகாரம் 10 என்று காட்டியது. தாய்லாந்தில் கடிகாரத்தை மாற்றியமைத்த நான் சீனா வந்த பிறகு ஒரு மணி நேரம் கூட்டி வைக்க மறந்தது புரிந்தது.

மறுநாளிலிருந்து மாநாட்டிற்கு போய் வருவது, தனிப்பட்ட சந்திப்புகள் என்று எல்லோருமே பிசியாகி விட்டோம். மாநாட்டிற்கு வந்த 600 பேரையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, நீளமான ஓலை போலிருந்த படத்தைச் சுருட்டி, கலையழகு மிக்க ஒரு நீள்செவ்வக பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார்கள்.

செர்ஜியோ வழக்கம் போல் மாநாட்டு விடுதியில் தங்காமல் ஷாங்ரிலாவில் தங்கினார். நாளொன்றுக்கு அறைக்கு குறைந்தபட்சமாக 12,000 ரூபாய் வசூலிக்கும் விடுதி. அவர் தங்கியிருந்த அறைக்காரர்களுக்கென்று விடுதி உச்சியில் ஒரு லவுஞ்ஜ் இருக்கிறது. மாலை 5 முதல் 7:30 வரை இலவச உணவு, பானங்கள். இரண்டு தினங்கள் நானும், ப்ரேசிலிய நண்பரான டானியலும் செர்ஜியோ விடுதிக்காக செலுத்தும் பணம் வீணாகமல் பார்த்துக் கொண்டோம்.

ஒரு நாள் இரவு மாநாட்டு நண்பர்கள் பலர் பியர் தெருவிற்குப் போகிறோம் என்று அழைத்துச் சென்றார்கள். வைன் தெரு, பியர் தெரு என்று இரண்டு தெருக்கள் ஷிங் டாவில் உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளின் போது படகு விடும் போட்டிகள் ஷிங் டாவில் நடத்தப்பட்டன. அப்போது நிர்மாணிக்கப்பட்டவையே இந்த தெருக்கள். 800-1000 மீட்டர் நீளமான தெருவில் நூற்றுக்கணக்கான பார்கள். ஒரு பிட்சர் பியர் சுமார் 150 ரூபாய். (விடுதியில் 300 மிலி பாட்டில் 150 ரூபாய்). கேட்க வேண்டுமா, மக்கள் பியரில் குளித்தார்கள். நானும், போர்ச்சுகல் நண்பர் பெட்ரோவும், அவரது போர்ச்சுக்கல் நண்பர்களும் கொலோனியலிசம், மெகல்லன், கோவா பற்றியெல்லாம் இரவு 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் கிளம்பும் போதும், நார்வே குழுவினர் அரட்டை அடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலை 4:30க்குத்தான் திரும்பியதாக மறு நாள் சொன்னார்கள்.

சீனாவில் டாக்சி வாடகை சொற்பம். ஐம்பது ரூபாய் குறைந்தபட்சம். 5-10 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடங்கள் 100 ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது. எல்லா டாக்சி ஓட்டுநர்களும் உபதொழில் ஒன்றை வைத்துள்ளார்கள். பாக்கெட்டிற்குள்ளிருந்து பெண்கள் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்து மசாஜ் வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

இறுதிநாள் இரவு பெரிய உணவு விருந்து. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்த உணவு விருந்துதான் பிரசித்தி பெற்றது. மாநாடு முடிந்த பிறகும் பேசப்படும் விஷயம் இது. உதாரணமாக 1998ல் இந்த மாநாடு ஜப்பானில் நடைபெற்ற போது, ஒரு மிகப் பெரிய நீலத் துடுப்பு சூரை மீனை (ப்ளு ஃபின் ட்யூனா) விருந்திற்கு கொண்டு வந்து, ஷஷிமி முறையில் பச்சையாக வெட்டி பரிமாறினார்கள். இந்த மாநாட்டில் விதவிதமான சீன உணவுகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தன. ஊர்வன, மிதப்பன, நீந்துவன, ஓடுவன, பறப்பன, கடிப்பன என்று ஒரு 20-25 ஐட்டங்கள். என் பக்கத்தில் ஒரிசாவிலிருந்து வந்த ஒரு விஞ்ஞானியும், ஆந்திராவிலிருந்து வந்திருந்த டாக்டர் அஜய் பாஸ்கர் என்ற நண்பரும். ஒரிசாக்காரர் மாடு, பன்றி சாப்பிடமாட்டார் என்பதால் பரிமாறப்படும் ஒவ்வொரு அயிட்டமும் என்னது என்பதை தெரிந்து சொல்லும் பணி எங்கள் இருவர் மேலும் விழுந்தது. சீன கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு பெண் பாட்டுப் பாடினார். சீன பாரம்பர்ய சங்கீதம் தொண்டையிலிருந்து என்னென்ன சப்தங்களை வேறு வேறு ஸ்தாய்களில் உருவாக்க முடியும் என்பதைக் காண்பிப்பது போலிருந்தது. ஒரு கட்டத்தில் உச்ச ஸ்தாயில் காதைப் பிளந்து விடும் ஓலமாக அது மாற எங்கள் மேசையிலிருந்த நார்வேஜியன் ஒருவர் காதைப் பொத்திக் கொண்டு வெளியே எழுந்து போய் விட்டார்.

அடுத்த நாள் இரவு இன்ற்றர் கான்ற்றினென்றல் விடுதியில் நடந்த நிகழ்ச்சியையும், தனி விருந்தையும் முடித்து விடுதிக்கு திரும்பினோம். ஷிங்டாவின் பிரதான சாலையெங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் பல்வேறு ஒளி மாயாஜாலங்களில் மூழ்கியிருந்தன. என்னருகில் அமர்ந்திருந்த எகிப்திய-கனேடிய அடெல், சீனா ஒரு வளரும் நாடு என்பதை நம்ப முடியவில்லை என்றார். இருபது ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதுதான். ஷாங்ரிலா லவுஞ்சிலிருந்து மாலை 5:30 மணிக்கு பார்த்த போது, மஞ்சள் ஹெல்மட் அணிந்த நூறு பணியாளர்கள் ஒரு உயரமான கட்டிடத்திற்கு மேல் நின்று எறும்புகள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். சீனர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்தை மிகவும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறொரு விருந்தில் என்னருகில் அமர்ந்திருந்தவர் சீனர் என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் எந்த மாநிலத்திலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் “நான் இங்கிருந்தல்ல. தைவான்” என்றார். நான் விளையாட்டாக “அதுவும் சீனாவின் ஒரு மாநிலம்தானே” என்றேன். விருந்தை நடத்தும் சீன நண்பர் அவர் இடத்திலிருந்து உணர்ச்சிவசப்ப்பட்டு எழுந்து வந்து என் கோப்பையோடு, அவரது கோப்பையை க்ளிங் செய்தார். முகமெல்லாம் சிரிப்பு அவருக்கு. அந்த அளவிற்கு தங்கள் நாடு மீது வெறியாக இருக்கிறார்கள் சீனர்கள்.

இந்த முன்னேற்றத்தின் விலையாக அவர்கள் கொஞ்சம் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. யூட்யூப், ஃபேஸ்புக், ப்ளாகர் எதுவும் அங்கு அணுக முடியாது. அதனால்தான் இந்த தபால் வியாழன்று வெளியாகிறது.

2 comments:

PAGU_V said...

AVS,

Indha Payanak katturaiyai edhirpaarthirunthen. Migach chirappaaga irukkirathu. Ippozhuthudhaan anaiththu katturaigalaiyum vaasikka mudinthathu. Nalla nadai. Thodarattum pani!

ஏவிஎஸ் said...

Pagu,

Glad you found my blog. Thanks for your comments. Hope to see you here many more times.

AVS