Saturday, September 15, 2007

ஆட்டம் விறுவிறுப்பு, முடிவு அசமஞ்சம்இருபது-20தான் எதிர்கால கிரிக்கெட்டின் அடையாளம். மூன்று மணி நேர ஆட்டம். முழுவதும் விறுவிறுப்பு. ஆட்டம் முழுவதையும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. புவியியல் ரீதியாக கிரிக்கெட் வளர்ந்து வருவதையும், ஆட்டத்தின் இந்த புதிய அமைப்பையும் வைத்துப் பார்க்கும் போது, ஒலிம்பிக்சில் கூட கிரிக்கெட் விளையாடப்படலாம் என்ற நம்பிக்கை உண்டாகிறது. பார்த்தது

கல்லூரி நாட்களுக்குப் பிறகு இரவில் கண் விழித்து முழு ஆட்டத்தையும் பார்த்தது இந்தியா-பாகிஸ்தானின் முதல் உலகக் கோப்பை இருபது-20தான். ஆர்.பி. சிங்கும், ஸ்ரீசாந்தும் பந்து வீசிய லட்சணத்தில் காரியம் கெட்டு பாகிஸ்தான் வெல்வது நிச்சயம் என்று ஏற்பட்ட சமயத்தில், பதானும், அகர்கரும், ஹர்பஜனும் பந்தைக் கையிலெடுத்து வயிற்றில் பால் வார்த்தனர். இந்தியா வெல்வது நிச்சயம் என்று கொஞ்சம் ஆசுவாசமாக நாற்காலியில் சாய்ந்தால் மிஸ்பா நாலும், ஆறுமாக அடித்து பாலுக்குள் புளியை ஊற்றிக் கலக்கினார். காரியம் கெட்டே விட்டது என்ற கடைசி இறுதி இரண்டு பந்துகளில் பாகிஸ்தான் குளறுபடி செய்து ஆட்டம் 141-141 என்று சமம். வீட்டில் அனைவரும் தூங்குகிறார்கள் என்பதால் தொலைக்காட்சியை ஊமையாக்கி ஆட்டத்தைப் பார்த்ததில் இந்த மாதிரி இழுபறிக்கெல்லாம் இருபது-20 ஒரு தீர்வு வைத்திருக்கிறது என்று தெரியாமலே தூங்கப் போய் விட்டேன்.

காலையில் மனைவியிடம் “தெரியுமா, இருபது-20ல் முதல் இழுபறி ஆட்டம். அதை இரவு இரண்டரை வரை பார்த்து விட்டுத்தான் தூங்கினேனாக்கும்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வந்த வானொலி செய்தி “தென்னாப்பிரிக்காவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து சூப்பர் எட்டுக்குள் நுழைந்தது” என்று சொல்லி மூக்குடைத்தது. கிரிக்கின்ஃபோ சென்று பார்த்தால் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி என்று சொல்லியது. அது என்ன பவுல் அவுட் என்பது பகல் நேரத்தில் ஈஎஸ்பிஎன் விளையாட்டின் முக்கிய காட்சிகளை காட்டிய போதுதான் புரிந்தது.

ஸ்டம்புகளுக்குப் பின்னால் விக்கெட் கீப்பர். ஆனால் துடுப்பாட்டக்காரர் கிடையாது. ஒவ்வொரு அணியிலிருந்தும் ஐந்து பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாறி, மாறி பந்து வீசுகிறார்கள். வீச்சாளர் ஸ்டம்பைத் தாக்கி விட்டால் அணிக்கு ஒரு புள்ளி. கால்பந்து டை ப்ரேக்கரின் கலப்படமில்லாத காப்பி. சேவாக், ஹர்பஜன், உத்தப்பா என்று மூன்று பந்து வீச்சாளர்களுமே லெக் ஸ்டம்பைத் தூக்க, பாகிஸ்தானின் மூன்று பந்து வீச்சாளர்களுமே ஸ்டம்பைத் தாக்காமல் கோட்டை விட்டார்கள். இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி.

கிரிக்கின்ஃபோவில் பாகிஸ்தானின் வீரர்களுக்கு இந்த டை ப்ரேக்கர் ஆட்ட முறை புரியவில்லை என்பது போல போட்டிருந்தார்கள். இதில் புரிய என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. தன்னந்தனியாக வில்லனிடம் மாட்டிக் கொண்ட தங்கை நடிகையைப் போல எந்தவித பாதுகாப்பில்லாமல் ஸ்டம்ப் இருக்கிறது. பந்து வீசச் சொல்கிறார்கள். ஸ்டம்பைக் காலி செய்வது தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. முதலாவது ஸ்டம்பைக் காலி செய்த சேவாக்கை எல்லா இந்திய வீரர்களும் கொண்டாடினார்கள். இவையெல்லாம் பார்த்த பின்னும் என்ன குழப்பம் என்பதுதான் நமக்கு குழப்பம்.

எப்படியிருந்தாலும் மூன்று மணி நேரம் பரபரப்பாக ஆடப்பட்ட ஒரு ஆட்டம் இப்படி அசமஞ்சத்தனமாக முடிவுக்கு வந்தது வருத்தம்தான். இந்தியா தோற்றிருந்தால் இன்னும் அதிகமாக வருத்தம் இருந்திருக்கும். நல்ல வேளையாக தோனி ஆர்.பி. சிங்கையும், ஸ்ரீசாந்தையும் டை பிரேக்கரில் பந்து வீச விடவில்லை.

பி.கு: மழையினால் ரத்து செய்யப்படுகிற ஆட்டங்களுக்கு தீர்வு காண இரண்டு அணிகளையும் புக் கிரிக்கெட் விளையாட விடலாமே என்ற ஆலோசனையை இருபது-20க்கு கொடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
Posted by Picasa

No comments: