Thursday, June 10, 2010

தாய்லாந்தின் தாக்சினுக்கு ஆசிரியர் ஜெயலலிதாவா?


மே 29- சுவர்ணபூமி விமான நிலையத்தில் கால் பதித்த போது பாங்காக்கில் அமைதி நிலவ ஆரம்பித்து சில நாட்களே ஆகியிருந்தது. எப்போதும் ஜேஜே என்றிருக்கும் விமான நிலையம் அரவமில்லாமல் கிடந்தது. வெளிநாட்டவர் நுழைவு, சுங்கம் ஆகிய வழமைகளை சில நிமிடங்களில் முடித்துக் கொண்டு வெளியேறினேன். பாங்காக்கிலிருந்து சீனப் பயணம் தொடங்க 13 மணிநேரங்களே இருந்தபடியால், சுவர்ணபூமி பக்கத்திலேயே எக்ஸ்பீடியா மூலமாக க்ரேட் ரெசிடென்ஸ் என்ற ஒரு விடுதியை பதிந்து வைத்திருந்தேன். அவர்கள் அனுப்பி வைத்த வாகனம் எக்சிட் 4ல் இருக்கும் என்றபடியால் நேரடியாக அங்கு சென்று விடுதிக்குப் போனேன். காரில் ஐந்து நிமிடம் ஆகிறது. ரேட் 600 ரூ. கடந்த முறை சுவர்ணபூமி நிலையத்திற்குள்ளேயே 4 மணிநேரத்திற்கு 3000 ரூ கொடுத்து தங்கியதை நொந்து கொண்டேன்.

க்ரேட் ரெசிடென்சில் இருந்த சிறிய உணவகத்திலேயே மதிய உணவிற்கு மீனும் சோறும். தாய்லாந்தில் எந்த உணவகத்திலும் இதை நம்பி சாப்பிடலாம். சாப்பாட்டிற்குப் பிறகு நகர் விஜயம். வாடகை வாகனம் 600 ரூ கேட்டார்கள். நான் அறைக்கே 600தான் தருகிறேன் என்று பேரம் பேசி 400 ரூபாயாக்கினேன். போகும் போது டாக்சி ஓட்டுநர் நண்பராகி விட்டபடியால், எனக்காக நகரிலேயே 4-5 மணிநேரம் காத்திருந்து, திரும்பவும் கொண்டு வந்து விட்டார்.

கேமராவை எடுத்து படம் எடுக்க முற்பட்டால் அதற்குள்ள மெமரி கார்டை ப்ரூனேயிலேயே விட்டு விட்டு வந்து விட்டேன் என்று தெரிந்தது. போகிற வழியில் சிட்லோம் சென்ட்ரலில் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். பாங்காக்கில் எனக்குப் பிடித்த ஷாப்பிங் தலம் இந்த சிட்லோம் சென்ட்ரல்தான். எதிர்பார்த்ததைவிட சென்ட்ரலில் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் உள்ளூர் மக்கள்தான். சிவப்புச் சட்டை தொந்தரவுகள் முடிந்ததால் நிம்மதியாக வெளியே வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கூடவே சிட்லோமிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற சென்ட்ரல் வேர்ல்டு (தென் மேற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய மால் என்கிறார்கள்) கலவரத்தில் எரிக்கப்பட்டு விட்டதால் கூட இந்த சென்ட்ரலில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கலாம்.

சென்ட்ரலில் இருந்து வான்ரயிலில் சுக்கும்வித். மார்ச் முதல் வாரம் பாங்காக் வந்திருந்தபோது அங்கிருக்கும் எனது வழமையான தையல்காரர் ஜஸ்விந்தர் சிங்கிடம் (Barrons, நானா வான்ரயில் நிலையத்திற்கு கீழ், லாண்ட்மார்க் ஹோட்டல் எதிர்புறம்) துணிகள் தைக்க கொடுத்திருந்தேன். மார்ச் நான்காவது வாரம் பாங்காக் திரும்பப் போகும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அந்த ஏற்பாட்டை சிவப்புச் சட்டைக்காரர்கள் ரத்து செய்து விட்டார்கள்.

ஜஸ்விந்தர் புலம்பித் தள்ளினார். அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். வருடத்தில் ஒரு தடவை ஜஸ்விந்தர் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனிக்கெல்லாம் போய் ஆர்டர் எடுத்துக் கொண்டு வந்து தைத்து கூரியரில் அனுப்பி வைப்பார். இது தவிர பாங்காக்கிற்கு வரும் ஐரோப்பியர்கள் வேறு. யூரோ படுத்து விட்டதால் அவர்கள் வியாபாரம் ஏற்கனவே குறைந்து விட்டது. இதில் சிவப்புச் சட்டைக்காரர்கள் வேறு பயணிகளை பயமுறுத்தி விட்டார்கள். சிவப்புச் சட்டை பிரச்சினைக்கு தாக்சின்தான் காரணம் என்றார். அப்புறம், ரகசியமாக தாக்சின் எங்கேயிருந்து தேர்தலில் வெற்றி பெறும் தந்திரத்தைப் படித்தார் தெரியுமா என்றார். எனக்குத்தான் அந்த ரகசியம் தெரியுமே. “இந்தியாவா?” என்றேன். “ஆமாம், என்னுடைய ரெஸ்தாரந்தில் (துணிக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி உணவகமும் வைத்திருக்கிறார்) இந்தியாவிலிருந்து வந்த ஆட்கள் தாக்சினுக்கு அரசியல் ஆலோசகர்களாக செயல்பட வந்திருக்கிறோம் என்று பல தடவை சொல்லியிருக்கிறார்கள்” என்று அசைக்க முடியாத ஆதாரத்தையும் வைத்தார். ஜஸ்விந்தர் சில தலைமுறைகளாக தாய்லாந்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருடத்திற்கு ஓரிரு முறை இந்தியா போய் வந்தாலும் அவருக்கு அங்குள்ள நிலவரங்களெல்லாம் அத்துப்படியாக தெரியாது. “ஒரு பெண்மணி, பெயர் ஏதோ நிதாவோ என்னதோ அவர்தானே பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கத்தை தொடங்கி வைத்தாராமே” என்றார். ஓ, இது நம்மூர் அம்மையார் பெயர் போல இருக்கிறதே என்று தோன்றியதால் பெயரைச் சொன்னேன். ரொம்ப உற்சாகமாக “ஆமாம், ஆமாம், அந்தப் பெயர்தான்” என்று ஆமோதித்தார். “அந்த அம்மையார் முதல் தடவை ஆட்சியில் இருக்கும் போது இந்தியாவில் இல்லாமலிருக்க எனக்கு கொடுத்து வைத்திருந்தது. இரண்டாவது முறை தேர்தல் முடிந்த பிறகுதான் அங்கு சென்றேன். ஏதோ இடைத் தேர்தல்களில் எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இப்போது ஓட்டுப் போட பணம் கொடுப்பதை தொழில்முறையாக அமல் படுத்தி விட்டார்கள்” என்றேன்.

உண்மையில் தாக்சின் மாடல், ராஜசேகர ரெட்டியின் மாடல் மற்றும் தற்போதைய தமிழகத்தின் மாடல் எல்லாமே ஒன்றுதான். இதில் ஏழை மக்களுக்கு இன்சூரன்ஸ், மருத்துவ உதவி என்று உபயோகமான காரியங்களும் உண்டு; தேவையில்லாத இலவசங்கள், நேரடி பண விநியோகம் என்று அப்பட்டமான ஓட்டிற்கு லஞ்சம் வழங்குவதும் உண்டு.

விடுதிக்கு திரும்பி வரும்போது ஓட்டுநர் எரிந்து போயிருந்த சென்ட்ரல் வேர்ல்டைக் காண்பித்தார். பக்கத்திலிருக்கும் இன்னும் பணக்காரத்தனமான சயாம் பாரகனை விட்டு விட்டு இதை ஏன் எரித்தார்கள் என்று கேட்டேன். “அபிசித் குடும்பம் சென்ட்ரல் கடைகளின் உரிமையாளர்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்” என்றார். அபிசித் தற்போதைய பிரதமர், இங்கிலாந்தில் படித்த கெட்டிக்கார இளைஞர். “அபிசித் எப்படி?” என்றேன். “good, good man” என்றார். “சுதெப்?” “bad, very bad man” என்றார். சுதெப் அபிசித்தின் துணைப் பிரதமர், இவர் மேல்தான் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு மிகுந்த கோபம். பிறகு நான் கேட்காமலேயே “தாக்சின் very, very good” என்று இரண்டு கட்டை விரல்களையும் தூக்கிக் காட்டிச் சொன்னார்.

2 comments:

தருமி said...

அப்போ ... நீங்க போடுறதெல்லாம் வெளிநாட்டு தையல்தானா ..?! துணி எடுக்கிறது எங்க?

:)

ஏவிஎஸ் said...

போடுறது எல்லாம்னு சொல்ல முடியாது. பெரும்பாலும். சுதேசி முயற்சி பண்ணினேன். சுகப்படலை. எல்லாக் கலைகளும் போல இந்தியாவில் தையல் கலையும் தேய்மானமாவது போலத்தான் இருக்கு.

சுக்கும்வித்தில் ஒரு நூறு துணிக் கடைகளாவது இருக்கும். அங்கேயே துணியும் எடுக்கலாம். தைக்கவும் செய்யலாம். விலை இரண்டிற்கும் சேர்த்துத்தான். சகாயமாகவும் இருக்கிறது. ஆனால் எல்லாக் கடைகளும் நம்பிக்கையான இடங்கள் கிடையாது.

ஜஸ்விந்தர் போல பெரும்பாலான கடைகள் இந்தியா, அல்லது பங்களாதேஷிலிருந்து போனவர்களால் நடத்தப்படுகிறது.

ஜஸ்விந்தர் வடிகட்டிய சர்தார்ஜி. வியாபரத்திற்காக அழகாக பொய் சொல்வார். ஆனால் சொன்ன பொய்யை ஐந்தே நிமிடங்களில் மறந்து விடுவார். இத்தாலியில்தான் துணிகள் வாங்குகிறேன் என்பார். சில நிமிடங்கள் கழித்து யூரோ மலிவானதால் துணி விலை என்னவானது என்று கேட்டால், நான் கொரியாக்காரர்களிடம் வாங்குகிறேன்; டாலரில் வாங்க வேண்டும் என்பார். இன்னும் சில நிமிடங்கள் கழித்து, கொரியாவில் இப்போது துணி உற்பத்தி இல்லை. சீனாவில் போய் மில் போட்டு உற்பத்தி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பார். உண்மையில் அவரது துணிகள் சீன துணி மில்களில் இருந்துதான் வருகிறது என்பது தெரிய வரும். ஆனால், நல்ல தரமான சரக்குகள். எனது எட்டாண்டு பழக்கத்தில் அவரிடம் 10-15 சோடி உடுப்புகள் தைத்திருக்கிறேன். ஒன்றும் சோடை போனதில்லை.