Sunday, January 30, 2011

கண்ணாயிரம் பெருமாள் அருளிய ‘மலை’ப் பிரசங்கம்

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும், அத்தியாயம் 2

B. எழுத்தாளனும் கண்ணாயிரம் பெருமாளும் அடுத்ததாக சந்தித்துக் கொண்டது வெஸ்ட் மின்ஸ்ட்டர் பாரில். இந்த வெஸ்ட் மின்ஸ்ட்டர் பார் என்பதாகப்பட்டது சோழா ஓட்டல் என்று சென்னையில் ஆட்டோக்காரர்களாலும், சோழா ஷெரட்டன் என்று படித்த, பணக்கார பெரிய மனிதர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இருக்கிறது. இதன் வாசலில் கடா மீசையும், பெரிய தலைப்பாகையும் கொண்ட ஒரு காவலர் இருப்பார். அவர் கதவைத் திறந்து விடும் பட்சத்தில், உள்ளே நுழைந்து பீச்சாங்கைப் பக்கம் திரும்பினால் இந்த பார் வரும். அங்கே மிகுந்த பிரயாசையுடன் பேசப்படும் ஆங்கிலத்தில் ஒரு குப்புசாமியோ, அந்தோணியோ உங்கள் தாகத்தை எப்படிப் பூர்த்தி செய்கிறதென்று கேட்பார்கள்.

B. எழுத்தாளன் வருவதற்கு முன்பே க. பெருமாள் அங்கு வந்து அப்சலூட் வோத்காவை ஆரஞ்சுப் பழச் சாற்றுடன் கலந்து அருந்திக் கொண்டிருந்தான். அந்தப் பானத்திற்கு ஸ்க்ரூ ட்ரைவர் என்று பெயர். வோத்கா என்ற பானத்தின் சிறப்பு என்னவென்றால் அது சுத்தமான சாராயம். அதற்கென்று ஒரு மணமோ, குணமோ கிடையாது. எனவே, அதை வித, விதமான பழச்சாறுகளுடன் கலந்து அருந்தலாம். அந்தந்த பானங்களின் மணத்தையும், சுவையையும் அது உள்வாங்கிக் கொள்ளும். ஆனால், ஆரஞ்சுப் பழச்சாறும், தக்காளிப் பழச்சாறுமே வோத்காவோடு கலப்பதற்கு மிகவும் உகந்தவை என்று வெள்ளைக்காரர்கள் கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்டு பிடித்து வைத்து விட்டனர். அதிலும் தக்காளிப் பழச்சாறு கூட கொஞ்சம் மிளகு ரசமும் சேர்த்தால் இன்னமும் அருமையாக இருக்குமாம்.

B. எழுத்தாளன் மிகுந்த யோக்கியன் என்பதால் வெஸ்ட் மின்ஸ்ட்டர் பாரில் கூட அவன் வெறும் ஆரஞ்சுப்பழச்சாறு மட்டுமே அருந்துவது வழக்கம். அப்படி அருந்துவதோடு நிறுத்தி விட மாட்டான். தன்னோடு கூட இருந்த இன்னார், இன்னாரெல்லாம் என்னென்ன கெட்டக் கெட்ட பானங்களைக் குடித்து விட்டு மல்லாந்தனர் என்பதையும் தெளிவாக தனது வலைத்தளத்தில் எழுதி விடுவான். அப்படி எழுதுவது சம்பந்தப்பட்ட குடும்பங்களில் குழப்பங்களை உண்டு பண்ணுமே என்றெல்லாம் நினைக்க மாட்டான். யார் எக்கேடு கெட்டுப் போனால் அவனுக்கென்ன? நல்ல வேளையாக அவனது வலைத் தளத்தை மூன்றே மூன்று பேர்தான் படித்து வந்ததால் பல குடும்பங்கள் குழப்பங்களிலிருந்து தப்பித்தன.

எங்கோ தொடங்கி எங்கோ போய் விட்டேன். B. எழுத்தாளன் க. பெருமாளைச் சந்தித்த தருணத்திற்கு மறுபடியும் செல்லலாம். க. பெ. B. எ.வைப் பார்த்து விட்டு ஒரு மாதிரி உதட்டைப் பிதுக்கினான். B.எ.விற்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது. ஏனென்றால் B.எ. க.பெ.வைச் சந்தித்து விட்டு எழுதிய முதல் பதிவு ரொம்ப பிரமாதமாக வந்து விட்டதான ஒரு ஹோதாவில் இருந்தான் B.எ. அதைப் படித்து விட்டு க.பெ. தன்னை ரொம்ப பாராட்டுவான் என்று நினைத்திருந்தான் B.எ. புகழை விரும்பாத எழுத்தாளன் யாராவது உண்டா சொல்லுங்கள்?

“என்னப்பா B? எந்த யுகத்தில் வசிக்கிறாய் நீ?” என்று உண்மையிலேயே வருத்தத்துடன் வினவினான் பெருமாள்.

பெருமாளின் sincerity B. எழுத்தாளனுக்கு சற்று வெட்கத்தையும், கொஞ்சம் அவமானத்தையும் உண்டாக்கி விட்டது. அவமானம்: அவன் நினைத்ததற்கு எதிர்மாறாக முதல் அத்தியாயம் மோசமாக எழுதப்பட்டிருக்கிறது என்ற உணர்வு. வெட்கம்: அப்படி மோசமான எழுத்திற்கு பாராட்டை எதிர்பார்த்தது.

“என்ன அப்படிச் சொல்லீட்டிங்க?” என்று பலவீனமான குரலில் வினவினான் B. எழுத்தாளன்.

“பின்னே என்னப்பா? இப்படி ஒரு பிற்போக்கான வகையில் கதைய நீ எழுதுவேன்னு நான் நினைக்கவேயில்லை. கதைய ஒரே நேர்கோட்டில, தெளிவா கொண்டு போயிருக்க. சுத்தமா, சுவாரஸ்யமே இல்ல. நான் முதல் அத்தியாத்துல சொன்னத மறந்துட்டியா? எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம். You understand?”

மறுபடியும் ஏதோ புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது B. எழுத்தாளனுக்கு. ஆனால், மறுபடியும், மறுபடியும் தலையைத் தலையை ஆட்டி விட்டு மறுபடியும், மறுபடியும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் தோன்றியது அவனுக்கு. எனவே கண்ணாயிரம் பெருமாளிடம் விளக்கமாகக் கேட்க வேண்டிய நிலைமைக்கு உள்ளானான் அவன்.

“சரி, கவனமாகக் கேள்” என்று சொல்லிவிட்டு க. பெருமாள் B. எழுத்தாளனுக்கு நிதானமாகச் சொன்ன விஷயங்களின் சாராம்சம்:

ஒரு நாளும் நீ எழுதும் விஷயம் முதல் வாசிப்பில் வாசகனுக்குப் புரியக் கூடாது. எத்தனை தடவை வாசித்தாலும் புரியவில்லை என்றாலும் பாதகமில்லை. முதல் வாசிப்பில் புரியக் கூடாது.

ஒரே ஒரு கதையை நேர்கோட்டில் ஒரு போதும் கொண்டு போகாதே. ராமாயணம், மகாபாரதம் கூட பல கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள். ஆனால், அந்த இதிகாசங்கள் போல ஒரு குவிமையத்தை நோக்கிக் கொண்டு கதையை ஒரு நாளும் கொண்டு போகாதே. நீ என்ன வால்மீகி காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறாய். 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாயப்பா. 50-60 கதைகள் அங்கே, இங்கே அலங்கோலமாகத் திரியட்டும். அதையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டியது வாசகன் என்று பொறுப்பை அவன் தலையில் போட்டு விடு. ஒன்றுமில்லாத வெளியில் புத்திசாலி வாசகன் கதையைக் காண்பான் – அம்மணக்குண்டி ராசாவின் இடுப்பில் அங்கியைப் பார்த்தது போல.

எழுத்தாளன் வாசகனுக்கு இன்பத்தைக் கொடுக்கிறான். பதிலுக்கு வாசகன் என்ன மயிற்றைக் கொடுக்கிறான். பணம் கொடுக்க மாட்டேன் என்கிறான். மதிப்பு கொடுக்க மாட்டேன் என்கிறான். அடே, கனடாவிற்கோ, தென்னமரிக்காவிற்கோ கூட்டிக் கொண்டு போ. அங்கே எனது மானசீக எழுத்தாளர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்த்து விட்டு, அவர்கள் அருந்திய பானத்தை அருந்திப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்றால் அதையும் செய்ய மறுக்கிறான். எனவே அவனைக் கண்டபடி ஏசினால் மட்டும் போதாது. கதையைப் படிக்க வைத்துக் கோமாளியாக்கி, பைத்தியக்காரப் பட்டம் சூட்டி அழகு பார்த்தால்தான் எழுத்தாளனுக்கும் கொஞ்சம் இன்பம் கிடைக்கும்.

இதையெல்லாம் செய்யும் போதும் என்னுடைய தாரக மந்திரத்தை மறந்து விடாதே: எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம்.

எனவே, வாசகனை என்னதான் சொல்லித் திட்டினாலும், அவனுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த மறந்து விடாதே. பூமியில் பிறந்த எல்லா மனிதர்களையும் போலவே அவனும் தலைவர்களைப் பற்றிய, நடிகர்களைப் பற்றிய, தன் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை அறியத் துடித்துக் கொண்டிருப்பவன் என்பதையும் அறிவாயாக. அப்படி அறிய முடியாத பட்சத்தில் அதைப் பற்றி அவனாக ஏதாவது கற்பனை செய்து பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறான் என்பதையும் உணர்வாயாக. அந்த கற்பனைக்கு மூலப் பொருளை வழங்குவதில்தான் ஒரு தீவிர இலக்கியவாதி மும்முரமாக இயங்க வேண்டும்.

இந்த மூலப் பொருளை வழங்குவதற்கு கிசுகிசு பாணி என்ற ஒன்று போன நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டாகி விட்டது. என்னது கிசுகிசு பாணி மஞ்சள் பத்திரிகைகள் பின்பற்றுவதா? இடியட். இப்படி இன்னொரு தடவை சொன்னால் உன்னைத் திட்டி 41 பதிவுகள் போடுவேன், ஜாக்கிரதை. இலக்கியத்தரமாக கிசுகிசு எழுதுவது பற்றிக் கேள்வியும் பட்டிருக்கிறாயா, மண்டூகம்.

முதலில் பெயர்களை நேரிடையாக எழுதாமல் மறைமுகமாக எழுத வேண்டும். என்னது விகடனும், வாரமலரும் அப்படித்தான் எழுதுகிறார்களா? உன்னைப் போன்ற ஒரு அறிவுக் கொழுந்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. “ரோசாப்பூ வாசம் கொண்ட நடிகை”யென்றா உன்னை எழுதச் சொல்கிறேன்? பெயர்களையெல்லாம் புரட்டிப், புரட்டிப் போட்டு புதுமை செய்யப்பா. என்னுடைய குருகூட புதுமைப் புரட்சிக்காக செத்தவன் என்பது உனக்குத் தெரியாதா? என்னது யார் என் குருவா? மகாகவி பாரதியார் என்று ஒரு ஆள் ஞாபகமிருக்கிறதா உனக்கு? சரி மேலே கேள். பெயர்களை எப்படிப் புரட்டிப் போட்டு புதுமை செய்வது எப்படி என்று சொல்கிறேன்.

கிறிஸ்தவப் பெயர்களையெல்லாம் இஸ்லாமியப் பெயர்களாக மாற்று. இஸ்லாமியப் பெயர்களை கிறிஸ்தவப் பெயர்களாக்கு. உதாரணமாக அலெக்ஸ் என்று ஒருவனுக்குப் பெயர் இருந்தால் அதை ஹமீது என்று மாற்று. ஹெலன் என்று ஒருத்திக்குப் பெயர் இருந்தால் அதை சல்மா என்று மாற்று. இந்து மதத்திலோ ஒரு கடவுளுக்கு ஏகப்பட்ட நாமங்கள் இருக்கிறபடியால் கவலையில்லை. முருகன் என்ற பெயரை சுப்பிரமணியன் என்று மாற்று. பரந்தாமன் என்ற பெயரை கண்ணன் என்று மாற்றிக் கொள்.

கிசுகிசுவில் உலக இலக்கியம் இருக்கிறதா? என்னப்பா இப்படிக் கேட்டு விட்டாய்? மாரியோ வர்கஸ் யோசா என்று போன வருடம் நோபல் பரிசு வாங்கினாரே, தெரியுமா? அவர் தன் முதல் மனைவியைப் பற்றி கிசுகிசு பாணியிலேயே கதை எழுதிப் புகழ் பெற்றார் தெரியுமா? அவர் முன்னாள் மனைவி “அந்தப் பொடியன் வர்கஸ் சொல்லாதது” என்று நேரிடையாக ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு ஒரு பரிசும் கிடைக்கவில்லை தெரியுமா?

மாரியோ வர்கஸ் யோசா என்றவுடன்தான் ஒரு முக்கியமான காரியம் நினைவிற்கு வருகிறது. திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்று ஆங்கில மூடர்கள் அழைத்தது போல, இந்தியாவை இந்து என்று அழைக்கும் லத்தீன் அமெரிக்க மூடர்கள் போல, சரியான எஸ்பாஞோல் உச்சரிப்பு தெரியாத தமிழ் மூடர்களும் லத்தீன் அமெரிக்க நாடுகளை மெக்சிகோ, ஈக்குவேடார், சிலி, பராகுவே, உருகுவே, அர்ஜண்டீனா, பிரேசில் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். நீயோ அந்நாடுகளை முறையே மெஹிக்கோ, எக்குவடோர், ச்சிலெ, பரகுவாய், உருகுவாய், ஆர்ஹந்தீனா, ப்ரசில் என்று அசல் எஸ்பாஞோல் உச்சரிப்பில் அழைத்து உன் ஞானத்தை வெளிப்படுத்திக் கொள். எஸ்பாஞோல் என்றால் என்னதா? அவ்வ்வ்வ்வ்

சரி, இறுதியாக ஒன்று சொல்கிறேன். கேட்டுக் கொள். மிடில் கிளாஸ் எழுத்தாளன் வர்க்கம் என்று ஒன்று இருக்கிறது. அறம், தர்மம் அது, இதுவென்று பேசிக் கொண்டு ரயிலில் மூன்றாவது வகுப்பில் போகும் கூட்டம். அந்த மோஸ்தரெல்லாம் காலாவதியாகி விட்டது. நீ உல்லாசம், கொண்டாட்டம் என்று எழுது. செகண்ட் க்ளாஸ் ஏசி வகுப்பில் போ. கால்வி க்ளெய்ன் ஜட்டி மட்டும் அணிந்து கொள். அந்த ஜட்டி கிடைக்கவில்லையென்று டான்டெக்ஸ் ஜட்டியெல்லாம் போடாதே. ஜட்டி போடாமலே பேன்ட் போடு. ஜிப் போடும்போது மட்டும் ஜாக்கிரதையாகப் போடு.

ஒரு தருணத்தில் பெருமாள் பேசுகிறானா, அல்லது அப்சலூட் பேசுகிறதா என்ற சந்தேகம் வந்ததாலும், மற்ற இரவுத் தொழில்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் பார்களெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மூடப்பட வேண்டும் என்று நடைமுறையில் இருந்த சட்டத்தாலும், B. எழுத்தாளன் – க. பெருமாள் சந்திப்பு ஒரு முடிவிற்கு வந்து விட்டது.

(தொடரும்)

அடுத்த அத்தியாயம்: இலக்கியச் சேவையும் கவுரவ டாக்டர் பட்டமும்

Saturday, January 22, 2011

இரவுகளின் சில நினைவுகள்


ஜெயமோகனின் "இரு கலைஞர்கள் " கதையில் வரும் சில்வண்டின் ஒலி என்னை 35 வருடங்களுக்குப் பின்னர் இழுத்துக்கொண்டு போய்விட்டது. இத்தனைக்கும் அவர் சொல்வதுபோல் "எல்லோரும் சிறு வயதில் இரவைச் சில்வண்டின் ஒலியாகவே அறிகிறார்கள் என்பது என் இளம்பருவ நினைவுகளுக்குப் பொருந்தாது. நான் பிறந்து வளர்ந்தது மணப்பாடு என்னும் ஒரு கடற்கரைக் கிராமம் (மணப்பாடு பற்றி பதிவர் இளம் வஞ்சியின் பதிவு இங்கே, இங்கே; மணப்பாட்டின் இணையதளம் மணவை.காம்). அப்போதெல்லாம் அங்கே இரவு எழு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். நாங்கள் ஒரு பெரிய பங்களாவில் வசித்தோம். அந்த ஊரிலிருந்து இலங்கைக்குச் சென்று வாணிபத்தில் பெருமளவு செல்வம் திரட்டிய குடும்பத்தின் உடைமைதான் அந்த வீடு. இரட்டை அடுக்கு. மொத்தமாக 6000 - 7000 சதுர அடி இருக்குமென ஊகம். தரைத்தளம் இருபது அடி உயரமிருக்கலாம். ஐந்தாறடி உயர சன்னல்கள் சுமார் பத்து எண்ணிக்கை கொண்ட முன் ஹாலில் 25 பேர் படுத்துறங்கலாம். சுற்றிலும் வேப்ப மரங்கள். பெரும்பாலான நேரங்களில் கற்று சிலுசிலுவென்று வீசும். தெருவிலிருந்து ஏறி வரும் வாசலுக்கும், வீட்டின் உட்புறம் ஏறும் வாசலுக்கும் நடுவில் சிமென்ட் பாவிய முற்றம் ஓன்று உண்டு. வீட்டிற்குள் ஏறும் வாசலின் படிகள் விசாலமானவை; மழுமழுவென்ற சிமிட்டியில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த படிகளில் இரவில் ஊரடங்கிய பின் படுத்துக் கொண்டு வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்து கொண்டே இருக்கலாம். ஊர் அமைதியாக இருக்கும். காற்றின் சிறு சலனமும் இல்லாத வேளைகளில் உன்னித்துக் கேட்டால் தூரத்தில் அடிக்கும் அலைகளின் ஓலி கேட்கலாம். அபூர்வமாக தெருவில் யாராவது நடந்து செல்லும் காலடி சப்தம் கேட்கும். கள்ளோ சாராயமோ குடித்த போதை மிக யாராவது குடிமக்கள் வசை பேசிக்கொண்டு போவார்கள் எப்போதாவது. மற்றபடி மௌனமே நானறிந்த இரவின் குரல். நட்சத்திரங்களே இரவின் ஒளி.

Sunday, January 16, 2011

தற்காலத் தமிழ் நடையின் சில உச்சங்கள்

Absolute Khushwant வாசித்துக் கொண்டிருந்தேன். 95 வயதில் குஷ்வந்த் இதை எழுதியிருக்கிறார் என்பதுதான் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மற்றபடி ஒரு சாதாரண நூல்தான். பெரும்பாலான கட்டுரைகள் அவருடைய சுயசரிதையில் எழுதப்பட்ட விஷயங்களின் மறுசுழற்சிகளே. இருந்தாலும் சுவாரசியத்திற்கு மட்டும் குறைவில்லை. அது குஷ்வந்தின் எழுத்தின் கலையால்.



ஓரிடத்தில் குஷ்வந்த் தன்னை பிற இந்திய ஆங்கில எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார். தன்னை விடச் சிறப்பானவர்கள் என்று அவர் கணிப்பது நிரத் சவுத்ரி, வி.எஸ். நாய்ப்பால், அமித்தவ் கோஷ், சல்மான் ருஷ்டி, விக்ரம் சேத் முதலானோரை. ஆர்.கே. நாரயண், முல்க்ராஜ் ஆனந்த், அனிதா தேசாய் போன்றவர்களின் எழுத்திற்கு தனது எழுத்து குறைந்ததல்ல என்று சொல்கிறார். இவர்கள் அனைவருக்குமே ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் நடை எத்தனை எத்தனைக்கு எளிமையும், நேர்முகமாகவும் இருக்குமா, அத்தனைக்கத்தனை கடினமாகவும் இருக்கும் அதைப் போல் எழுத. தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் இந்த அளவிற்கு நடையில் சிறந்து விளங்குபவர்கள் சாரு நிவேதிதாவும், அ. முத்துலிங்கமும் என்பதுதான் என் அனுமானம்.

“என்னுடைய மகளை நான் பார்த்தே பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். முகம் கூட மறந்து விட்டது. உன்னுடைய மகன் என்பவன் உன்னை ஸ்பர்சிப்பவன்; உன்னோடு பேசுபவன்; உனக்கு முத்தங்கள் தருபவன்; ஸ்தூல உருவில் உன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பவன். ஆனால் என்னுடைய மகள் எனக்கு வெறும் ஞாபகம். ஒரு நினைவு. ஒரு கனவு அவ்வளவுதான்.” (சாரு நிவேதிதா, காமரூப கதைகள்)

“அண்ணர் ஓய்வு பெற்றதும் யாழ்ப்பாணம் போய்த் தங்கினார். சில வருடங்களிலேயே அவரிடம் பெரும் மாற்றம் உண்டானது. கைகள் விழுந்து நடக்கும் போது தள்ளாட்டம் அதிகமானது. ஒரே கேள்வியைத் திருப்பி திருப்பிக் கேட்பார். வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும் போதெல்லாம் நீண்ட தூரத்துக்கு முன்பாகவே சாவியைக் கையில் எடுத்து துப்பாக்கி போல முன்னே நீட்டிக் கொண்டு நடப்பார். கதவை அடைந்ததும் சாவித் துவாரம் ஒரே இடத்தில் நிற்கும். சாவி அதைச் சுற்றி சுற்றி வரும். துவாரத்தில் நுழையவே மாட்டாது” (அ. முத்துலிங்கம், உண்மை கலந்த நாட்குறிப்புகள்).

தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் தலை சிறந்தவராக பரவலாகக் கருதப்படுகிற எஸ். ராமகிருஷ்ணனின் நடையில் ஒருவித பாசாங்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதனாலேயே அவரை அவ்வளவாக வாசிப்பது கிடையாது. ஜெயமோகனின் நடையில் பேதங்கள் அதிகம். சாதாரணமாகவும், சமயங்களில் சராசரிக்கும் கீழேயான நடையில் எழுதிக் கொண்டே செல்வார். இந்த விஷயத்தை நாமே நன்றாக எழுதியிருப்போமே என்று தோன்றும். அந்தக் கணத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்படுத்தி எங்கோ உச்சத்திற்கு போய் விடும் அவரது நடை.

“அன்று காலை வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக அவர் அதிகாலையிலேயே எழுந்து தூக்கத்தில் நடப்பவர் போல நடந்து கொட்டகைக்கு வந்து கைகளால் இருட்டில் தடவி முட்டைவிளக்கைப் போட்டுவிட்டு தன் நாற்காலியில் அமர்ந்து தன் எண்ணங்களுள் ஆழ்ந்தவராக மீசையைக் கோதிவிட்டுக்கொண்டு எதிரே நேற்று வந்த ஆட்டோ டிரைவர் விட்டுச்சென்ற சிவப்புத் துண்டை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தார். எப்போதோ தன் இருப்பை உணர்ந்து பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கியபோது இரவின் ரீங்காரத்தைக் கேட்டார். அவர் இருந்த பகுதி நகரின் நடுவே குடிசைகளால் சூழப்பட்ட தெரு. எங்கோ ஒரு குழந்தை அழுதது. ஆட்டோ ஒன்று அசிங்கமான ஒலியுடன் சென்றது. மிகத் தொலைவில் ஒருசில நாய்கள் குரைத்துக்கொண்டன. எல்லா ஒலிகளையும் அந்த சில்வண்டு ஒலி இணைத்துக் கொண்டிருந்தது” (ஜெயமோகன், இரு கலைஞர்கள்).

Sunday, January 9, 2011

காங்கிரஸ் கூட்டணி யாருடன்?



சந்தேகமேயில்லாமல் திமுக கூடத்தான்.

காங்கிரஸ் கூட்டணி குறித்து கடந்த ஒரு ஆண்டாக பத்திரிகைகள் மூன்றுவித ஊகங்களைச் சொல்லி வருகின்றன: (1) தொடர்ந்து திமுகவுடன்; (2) அணிமாறி அதிமுகவுடன்; (3) விஜயகாந்துடன் மூன்றாவது அணி. இதில் விஜயகாந்துடன் தனியாக கூட்டணி என்பதற்கு இடமே கிடையாது. நாடாளுமன்ற மக்களவையில் 18 எம்பிக்கள் குறைவதை விஜயகாந்துடன் சேர்ந்து எப்படி சரிக்கட்ட முடியும்? விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதுவே அநேகமாக வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்பதால் அதில் காங்கிரஸ் இடம் பெற வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால், காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு தமிழக சட்டசபைத் தேர்தல் வெற்றியை விட முக்கியம் அடுத்த மக்களவைத் தேர்தல்தான். அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், அநேகமாக ஓரிரண்டு வருடங்களில் மறுபடியும் மக்களைப் பகைத்துக் கொள்வார்; மக்களவைத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் திமுகவிற்கே அலையடிக்கும் என்ற கணக்கு இறுதியில் வெல்லும் என்று தோன்றுகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும் இந்த பதிவைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டுமா, பெருமைப்பட வேண்டுமா என்று.

30000 அடி உயரத்தில் சில எச்சரிக்கை மணிகள்



2011ன் முதல் பயணம் மதுரையின் புதிய விமான நிலையத்திலிருந்து. பளபளப்பாக, ஜொலிப்பாக, தூய்மையாக இருக்கிறது இந்த நிலையம். மதுரையை அடையாளப்படுத்த முகப்பில் ஏதாவது கட்டிடக் கலை வேலைகள் செய்திருக்கலாம். ஆனால் திருச்சியில் செய்தது போல் முனைந்து சரிவராமல் போனதற்கு செய்யாததே தேவலாம் என்று தோன்றுகிறது. உள்ளே கருங்கல்லில் எளிமையாக ஒரு சிறு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். பல புகைப்படங்கள் உள்ளன. ஒரு படத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரு வருகிறார். பக்கத்தில் காமராசர் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நிற்கிறார். கொடைக்கானல் ஏரியின் நீள்தோற்றப் படமொன்றும் இருக்கிறது. இந்தப் படத்தை இன்னும் சிரத்தையெடுத்து நகலாக்கியிருக்கலாம். பழைய விமான நிலையத்திலிருந்து இருக்கைகளை கொண்டு போட்டு விட்டார்கள். அங்கேயே இந்த இருக்கைகள் பழையதாகத் தெரிந்தன. இங்கே கண் திருஷ்டிப் பூசணி இல்லாததை நிறைவு செய்கின்றன. கடைகளும் அங்கே இருந்து இங்கே மாறிவிட்டன என்று நினைக்கிறேன். புத்தகக் கடை கொஞ்சம் பெரிதாக இருப்பதால் கொஞ்சம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வழக்கமான விமான நிலைய புத்தகங்கள்தான். “யூ கேன் வின்” ஷிவ் கெரா, “அக்கினிச் சிறகுகள்” அப்துல் கலாம், ப்ளாஸ்டிக் தாளில் பொதிந்த காமசூத்ரா, மில்ஸ் & பூன், ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், இத்யாதிகள். ஆனால் சில புதியவைகளும் தென்பட்டன. ரிச்சர்ட் டாக்கின்ஸின் “God Delusion” ஒரு உதாரணம். கடையில் பதிவர் தருமி ஒரு பங்குதாரராக இருப்பாரோ என்று தோன்றியது. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை அருமையான பதிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து “பாரதி இருந்த வீடு” என்ற நாடகத் தொகுப்பையும், கடந்த ஆண்டு பெங்குவின் வெளியிட்ட “அப்சலூட் குஷ்வந்த்” என்கிற குஷ்வந்த் சிங்கின் புத்தகத்தையும் வாங்கினேன்.

மதுரை-சென்னை விமானத்தில் வைகோவும் வந்திருந்தார். மிடுக்காக இருக்கிறார். இவர் வருங்காலத்தில் முதல்வராக வருவார் என்று மனதிற்குள் பட்ஷி சொல்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அநேகமாக மறுபடியும் நாயக்கர்களின் ஆட்சிதான்.

விமானம் சென்னையைச் சேர்ந்த போது இரவு 10:20. கூட்டமிருக்காது என்று நினைத்தேன். அலை மோதியது. மறுநாள் சயின்ஸ் காங்கிரஸ். பிரதமர் சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தார். மும்பை, பெங்களூரு, மதுரை மூன்று விமானங்களின் பெட்டிகளையும் ஒரே பெல்ட்டில் போட்டு விட்டார்கள். 12:15 மணிக்குப் புறப்படும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏற 11:15 மணிக்கு சர்வதேச முனையகத்தில் இருக்க வேண்டும். மதுரை விமானப் பெட்டிகள் வர 10:50 ஆகி விட்டது. சர்வதேச முனையகம் வழக்கமாகவே கூட்டத்தில் திண்டாடும். நல்ல வேளையாக, அன்று கூட்டம் குறைவு. 11:10க்கு ஆஜர் கொடுத்து தப்பித்தேன்.

2010ன் இறுதியில் விமானப் பயணங்கள் சுகப்படவில்லை. டிசம்பரில் சிங்கப்பூரிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானம் இறங்கப் போவதற்கு முன் நடுவானில் காற்றில் தள்ளாடியது. விமானத்தின் எச்சரிக்கை அறிவிப்பு தானாகவே தொடங்கி “விமானம் இப்போது தரையில் விழும் அபாயம் இருக்கிறது. உங்கள் இருக்கைக்கு கீழ் மிதவை இருக்கிறது. அதை எடுத்து அணிந்து கொள்ளுங்கள்” என்றெல்லாம் பினாத்த ஆரம்பித்து விட்டது. பயணிகளெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். “இந்த அறிவிப்பை இதற்கு முன் எப்போதாவது கேட்டிருக்கிறாயா?” என்கிறார் சக பயணி. “இல்லை” என்கிறேன் நான். பைலட்டோ, விமானப் பணியாளர்களோ ஏதாவது அறிவிப்பு கொடுப்பார்களா என்றால், அதுவும் இல்லை. இதற்கிடையில் கீழே விமான நிலையத்தின் விளக்குகள் தெரியமளவுக்கு பறந்து வந்து விட்டதால் போன உயிர் திரும்ப வந்தது.

சில நாட்களுக்குப் பின் சென்னை மார்க்கமாக பாங்காக் வழியாக சீனாவின் குவாங்சூ. சென்னையிலிருந்து புறப்பட்ட தாய் ஏர்வேஸ் விமானம் முக்கால் மணி நேரம் பறந்து விட்டு, வானத்திலே ஒரு வட்டமடித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டது. தரையில் இறங்கி அரை மணி நேரம் ஆகியும் காரணம் சொல்லப்படவில்லை. பயணிகள் கத்த ஆரம்பித்த பிறகுதான் தகவல் சொன்னார்கள். விமானத்தில் சரக்குகள் வைக்குமிடத்திலிருந்து ஏதோ எச்சரிக்கை சமிக்ஞைகள் வந்தனவாம். அதைச் சரி பார்க்க விமானத்தை தரையில் இறக்கி இருக்கிறார்களாம். ஒரு வழியாக விமானம் மூன்று மணி நேரத் தாமத்திற்குப் பிறகு பாங்காக் சென்றது. அதிர்ஷ்டவசமாக எங்களது குவாங்சூ விமானத்தைக் கடைசி நிமிடத்தில் பிடித்து விட்டோம்.

2010ன் கடைசிப் பயணமாக சென்னை-தூத்துக்குடி கிங் ஃபிஷர். காலை 11:15 புறப்பாடு. 10:15க்கு சென்னை விமான நிலையம் முன் காரில் வந்து இறங்குகிறோம். விமான நிலைய விரிவாக்கத்தாலும், தொடர் மழையாலும் ரயில் நிலையத்தைவிடக் கேவலமாகி இருக்கும் சென்னை விமான நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். ஹஜ் சென்று திரும்பி வரும் பயணிகளை வரவேற்க வந்த கூட்டமும், ஹஜ் பயணிகளின் வருகையும். ஒரு வழியாக ஜனப் பெருந்திரளுக்கு எதிர் நீச்சல் போட்டு முனையகத்திற்குள் நுழையும் போது 10:25. பெட்டிகளை எக்ஸ்ரே செய்து வரிசையில் நிற்கும் போது 10:31. என்னுடைய முறை வரும் போது 10:36. செக்-இன் செய்யும் நேரம் முடிந்து விட்டது என்றார் பணிப்பெண். 10:35ற்கு மூடிவிடுவார்களாம். நான் என்ன சொல்ல முயன்றாலும் நிர்த்தாட்சண்யமாக முடியாது, முடியாது என்றபடியே இருந்தார். இதற்குள் பக்கத்துக் கொண்டரில் இருக்கும் நபர் “அந்த விமானம் இன்னும் திறந்துதான் இருக்கிறது. உடனடியாக செக்-இன் செய்தால் பிரச்சினை இல்லை” என்று கூற இந்தப் பெண்ணோ எந்த உதவியும் செய்யும் மனப்பாங்கில் இல்லை. திரும்ப, திரும்ப, “நீ தாமதம்” என்று பல்லவியையே பாடிக் கொண்டிருந்தார். அதற்குள் பக்கத்துக் கவுண்டர்காரர் எழுந்து வந்து என்னுடைய தகவல்களை உபயோகித்து செக்-இன் தொடங்கி விட்டார். அதன் பின்னும் பல்லவியை இந்தப் பெண் நிறுத்தவில்லை. “கொஞ்சம் வாயைப் பொத்துகிறீர்களா? நாங்கள் வாடிக்கையாளர்கள். அதற்கேற்றபடி நடத்துங்கள்” என்று என் மனைவி கடுமையாகக் கேட்ட பிறகுதான் பெண்மணி வாயை மூடினார். விஜய் மல்லையா கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் பணிப்பெண்கள் ஒவ்வொருவரையும் நேரடியாகத் தெரிவு செய்கிறாராம். உருவ அழகோடு வாடிக்கையாளர் சேவை செய்யத் தகுதியானவர்களா என்று பார்த்து அவர் தெரிவு செய்வது நலம்.

Sunday, January 2, 2011

புத்தாண்டு தீர்மானமும் புத்தகங்களும்



2011ன் புத்தாண்டு தீர்மானம்: இனி ஒழுங்காக ப்ளாக் எழுதுவேன்.

ஹா ஹா ஹா

கடந்த ஆண்டின் இறுதியில் சிந்தித்துப் பார்த்த போது வாழ்க்கையில் ஒரு உறுதிமொழியை நான் ஒரு வழியாக நிறைவேற்றி விட்டதாக உணர்ந்தேன். ஏற்கனவே வாங்கிய புத்தகங்களைப் படிக்காமல் புது புத்தகங்களை வாங்கவில்லை என்பது அது. 2010லும், அதற்கு முன்னும் நான் வாங்கிய தமிழ் நூல்களைப் பெரும்பாலும் படித்து முடித்து விட்டேன். எனவே புதிய புத்தகங்கள் வாங்க திருநெல்வேலியில் இருக்கும் ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்றேன். இந்த புத்தகக் கடை திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) அருகில் இருக்கிறது. பிரதான சாலை மேலேயே இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் மிட்டாய்க் கடைகள், ஃபேன்சி ஸ்டோர்களின் வெளிச்சத்திற்கு நடுவில் வெட்கப்பட்டு, சற்று ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு தடவை தாண்டிப் போய் மறுபடி வந்து கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. ஓரளவிற்கு புத்தகங்கள் விதத்திலும், எண்ணிக்கையிலும் உள்ளன. என்ன காரணத்தினாலோ பதிப்பகம் வாரியாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். வாங்கியவை:

எஸ். ராமகிருஷ்ணனின் “பதினெட்டாம் நூற்றாண்டின் மழை” என்ற சிறுகதைத் தொகுப்பு

நாஞ்சில் நாடனின் “காவலன் காவான் ஆகின்” என்ற கட்டுரைத் தொகுப்பு

எஸ்.வி. ராஜதுரையின் “பார்வையிழத்தலும், பார்த்தலும்” என்ற கட்டுரைத் தொகுப்பு

ஜெயமோகனின் “ஊமைச் செந்நாய்” என்ற சிறுகதைத் தொகுப்பு

சாரு நிவேதிதாவின் “மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் “காமரூபக் கதைகள்” என்ற புதினம்

எம்.ஜி. சுரேஷின் “பின்நவீனத்துவம் என்றால் என்ன?” என்ற படைப்பு

இந்த புத்தகங்களை வாசித்த பின்னர், இவை எப்படியிருந்தன என்று பதிவு போடுவதாக ஒரு புத்தாண்டு தீர்மானம் மனதிற்குள் உருவாகிறது. ஹா..ஹா..ஹா...


கொசுறு:

புத்தாண்டில் வாசித்த ஒரு உருப்படியான பதிவு (வயது வந்தவர்களுக்கு மட்டும்)