Sunday, January 16, 2011

தற்காலத் தமிழ் நடையின் சில உச்சங்கள்

Absolute Khushwant வாசித்துக் கொண்டிருந்தேன். 95 வயதில் குஷ்வந்த் இதை எழுதியிருக்கிறார் என்பதுதான் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மற்றபடி ஒரு சாதாரண நூல்தான். பெரும்பாலான கட்டுரைகள் அவருடைய சுயசரிதையில் எழுதப்பட்ட விஷயங்களின் மறுசுழற்சிகளே. இருந்தாலும் சுவாரசியத்திற்கு மட்டும் குறைவில்லை. அது குஷ்வந்தின் எழுத்தின் கலையால்.



ஓரிடத்தில் குஷ்வந்த் தன்னை பிற இந்திய ஆங்கில எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார். தன்னை விடச் சிறப்பானவர்கள் என்று அவர் கணிப்பது நிரத் சவுத்ரி, வி.எஸ். நாய்ப்பால், அமித்தவ் கோஷ், சல்மான் ருஷ்டி, விக்ரம் சேத் முதலானோரை. ஆர்.கே. நாரயண், முல்க்ராஜ் ஆனந்த், அனிதா தேசாய் போன்றவர்களின் எழுத்திற்கு தனது எழுத்து குறைந்ததல்ல என்று சொல்கிறார். இவர்கள் அனைவருக்குமே ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் நடை எத்தனை எத்தனைக்கு எளிமையும், நேர்முகமாகவும் இருக்குமா, அத்தனைக்கத்தனை கடினமாகவும் இருக்கும் அதைப் போல் எழுத. தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் இந்த அளவிற்கு நடையில் சிறந்து விளங்குபவர்கள் சாரு நிவேதிதாவும், அ. முத்துலிங்கமும் என்பதுதான் என் அனுமானம்.

“என்னுடைய மகளை நான் பார்த்தே பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். முகம் கூட மறந்து விட்டது. உன்னுடைய மகன் என்பவன் உன்னை ஸ்பர்சிப்பவன்; உன்னோடு பேசுபவன்; உனக்கு முத்தங்கள் தருபவன்; ஸ்தூல உருவில் உன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பவன். ஆனால் என்னுடைய மகள் எனக்கு வெறும் ஞாபகம். ஒரு நினைவு. ஒரு கனவு அவ்வளவுதான்.” (சாரு நிவேதிதா, காமரூப கதைகள்)

“அண்ணர் ஓய்வு பெற்றதும் யாழ்ப்பாணம் போய்த் தங்கினார். சில வருடங்களிலேயே அவரிடம் பெரும் மாற்றம் உண்டானது. கைகள் விழுந்து நடக்கும் போது தள்ளாட்டம் அதிகமானது. ஒரே கேள்வியைத் திருப்பி திருப்பிக் கேட்பார். வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும் போதெல்லாம் நீண்ட தூரத்துக்கு முன்பாகவே சாவியைக் கையில் எடுத்து துப்பாக்கி போல முன்னே நீட்டிக் கொண்டு நடப்பார். கதவை அடைந்ததும் சாவித் துவாரம் ஒரே இடத்தில் நிற்கும். சாவி அதைச் சுற்றி சுற்றி வரும். துவாரத்தில் நுழையவே மாட்டாது” (அ. முத்துலிங்கம், உண்மை கலந்த நாட்குறிப்புகள்).

தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் தலை சிறந்தவராக பரவலாகக் கருதப்படுகிற எஸ். ராமகிருஷ்ணனின் நடையில் ஒருவித பாசாங்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதனாலேயே அவரை அவ்வளவாக வாசிப்பது கிடையாது. ஜெயமோகனின் நடையில் பேதங்கள் அதிகம். சாதாரணமாகவும், சமயங்களில் சராசரிக்கும் கீழேயான நடையில் எழுதிக் கொண்டே செல்வார். இந்த விஷயத்தை நாமே நன்றாக எழுதியிருப்போமே என்று தோன்றும். அந்தக் கணத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்படுத்தி எங்கோ உச்சத்திற்கு போய் விடும் அவரது நடை.

“அன்று காலை வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக அவர் அதிகாலையிலேயே எழுந்து தூக்கத்தில் நடப்பவர் போல நடந்து கொட்டகைக்கு வந்து கைகளால் இருட்டில் தடவி முட்டைவிளக்கைப் போட்டுவிட்டு தன் நாற்காலியில் அமர்ந்து தன் எண்ணங்களுள் ஆழ்ந்தவராக மீசையைக் கோதிவிட்டுக்கொண்டு எதிரே நேற்று வந்த ஆட்டோ டிரைவர் விட்டுச்சென்ற சிவப்புத் துண்டை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தார். எப்போதோ தன் இருப்பை உணர்ந்து பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கியபோது இரவின் ரீங்காரத்தைக் கேட்டார். அவர் இருந்த பகுதி நகரின் நடுவே குடிசைகளால் சூழப்பட்ட தெரு. எங்கோ ஒரு குழந்தை அழுதது. ஆட்டோ ஒன்று அசிங்கமான ஒலியுடன் சென்றது. மிகத் தொலைவில் ஒருசில நாய்கள் குரைத்துக்கொண்டன. எல்லா ஒலிகளையும் அந்த சில்வண்டு ஒலி இணைத்துக் கொண்டிருந்தது” (ஜெயமோகன், இரு கலைஞர்கள்).

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

சமகால தமிழ் எழுத்தாளர்கள் மீதான உங்களின் கருத்தோடு முற்றிலும் முரண் படுகிறேன் நான்.
குறிப்பாக எஸ் ரா, ஜெமோ குறித்து

Victor Suresh said...

ராம்ஜி_யாஹூ, உங்கள் கருத்திற்கு நன்றி. ஆனால் விபரமாக எப்படி முரண்படுகிறீர்கள் என்று எழுதியிருந்தால், அல்லது சுட்டிகள் கொடுத்திருந்தால், பயனுள்ள விவாதமாக இது மாற வாய்ப்பு உண்டு.

ஒரு தெளிவிற்காக: என்னுடைய கருத்து சமகால எழுத்தாளர்கள் மீது அல்ல, அவர்களது எழுத்து நடை என்ற ஒரு அம்சத்தின் மீது மட்டுமே.

உங்களது பெயரை எஙகேயோ வாசித்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் பிரபல பதிவர்களில் ஒருவரோ என்று உங்கள் பதிவைச் சென்று பார்த்தேன். அதிலும் அத்தனை தகவல்களில்லை. ஒரு வேளை, ஜெயமோகன் தளத்தில் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட்ட போது அங்குள்ள விவாதங்களில் நிறைய கலந்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.