Showing posts with label வாசகர்கள். Show all posts
Showing posts with label வாசகர்கள். Show all posts

Sunday, January 30, 2011

கண்ணாயிரம் பெருமாள் அருளிய ‘மலை’ப் பிரசங்கம்

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும், அத்தியாயம் 2

B. எழுத்தாளனும் கண்ணாயிரம் பெருமாளும் அடுத்ததாக சந்தித்துக் கொண்டது வெஸ்ட் மின்ஸ்ட்டர் பாரில். இந்த வெஸ்ட் மின்ஸ்ட்டர் பார் என்பதாகப்பட்டது சோழா ஓட்டல் என்று சென்னையில் ஆட்டோக்காரர்களாலும், சோழா ஷெரட்டன் என்று படித்த, பணக்கார பெரிய மனிதர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இருக்கிறது. இதன் வாசலில் கடா மீசையும், பெரிய தலைப்பாகையும் கொண்ட ஒரு காவலர் இருப்பார். அவர் கதவைத் திறந்து விடும் பட்சத்தில், உள்ளே நுழைந்து பீச்சாங்கைப் பக்கம் திரும்பினால் இந்த பார் வரும். அங்கே மிகுந்த பிரயாசையுடன் பேசப்படும் ஆங்கிலத்தில் ஒரு குப்புசாமியோ, அந்தோணியோ உங்கள் தாகத்தை எப்படிப் பூர்த்தி செய்கிறதென்று கேட்பார்கள்.

B. எழுத்தாளன் வருவதற்கு முன்பே க. பெருமாள் அங்கு வந்து அப்சலூட் வோத்காவை ஆரஞ்சுப் பழச் சாற்றுடன் கலந்து அருந்திக் கொண்டிருந்தான். அந்தப் பானத்திற்கு ஸ்க்ரூ ட்ரைவர் என்று பெயர். வோத்கா என்ற பானத்தின் சிறப்பு என்னவென்றால் அது சுத்தமான சாராயம். அதற்கென்று ஒரு மணமோ, குணமோ கிடையாது. எனவே, அதை வித, விதமான பழச்சாறுகளுடன் கலந்து அருந்தலாம். அந்தந்த பானங்களின் மணத்தையும், சுவையையும் அது உள்வாங்கிக் கொள்ளும். ஆனால், ஆரஞ்சுப் பழச்சாறும், தக்காளிப் பழச்சாறுமே வோத்காவோடு கலப்பதற்கு மிகவும் உகந்தவை என்று வெள்ளைக்காரர்கள் கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்டு பிடித்து வைத்து விட்டனர். அதிலும் தக்காளிப் பழச்சாறு கூட கொஞ்சம் மிளகு ரசமும் சேர்த்தால் இன்னமும் அருமையாக இருக்குமாம்.

B. எழுத்தாளன் மிகுந்த யோக்கியன் என்பதால் வெஸ்ட் மின்ஸ்ட்டர் பாரில் கூட அவன் வெறும் ஆரஞ்சுப்பழச்சாறு மட்டுமே அருந்துவது வழக்கம். அப்படி அருந்துவதோடு நிறுத்தி விட மாட்டான். தன்னோடு கூட இருந்த இன்னார், இன்னாரெல்லாம் என்னென்ன கெட்டக் கெட்ட பானங்களைக் குடித்து விட்டு மல்லாந்தனர் என்பதையும் தெளிவாக தனது வலைத்தளத்தில் எழுதி விடுவான். அப்படி எழுதுவது சம்பந்தப்பட்ட குடும்பங்களில் குழப்பங்களை உண்டு பண்ணுமே என்றெல்லாம் நினைக்க மாட்டான். யார் எக்கேடு கெட்டுப் போனால் அவனுக்கென்ன? நல்ல வேளையாக அவனது வலைத் தளத்தை மூன்றே மூன்று பேர்தான் படித்து வந்ததால் பல குடும்பங்கள் குழப்பங்களிலிருந்து தப்பித்தன.

எங்கோ தொடங்கி எங்கோ போய் விட்டேன். B. எழுத்தாளன் க. பெருமாளைச் சந்தித்த தருணத்திற்கு மறுபடியும் செல்லலாம். க. பெ. B. எ.வைப் பார்த்து விட்டு ஒரு மாதிரி உதட்டைப் பிதுக்கினான். B.எ.விற்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது. ஏனென்றால் B.எ. க.பெ.வைச் சந்தித்து விட்டு எழுதிய முதல் பதிவு ரொம்ப பிரமாதமாக வந்து விட்டதான ஒரு ஹோதாவில் இருந்தான் B.எ. அதைப் படித்து விட்டு க.பெ. தன்னை ரொம்ப பாராட்டுவான் என்று நினைத்திருந்தான் B.எ. புகழை விரும்பாத எழுத்தாளன் யாராவது உண்டா சொல்லுங்கள்?

“என்னப்பா B? எந்த யுகத்தில் வசிக்கிறாய் நீ?” என்று உண்மையிலேயே வருத்தத்துடன் வினவினான் பெருமாள்.

பெருமாளின் sincerity B. எழுத்தாளனுக்கு சற்று வெட்கத்தையும், கொஞ்சம் அவமானத்தையும் உண்டாக்கி விட்டது. அவமானம்: அவன் நினைத்ததற்கு எதிர்மாறாக முதல் அத்தியாயம் மோசமாக எழுதப்பட்டிருக்கிறது என்ற உணர்வு. வெட்கம்: அப்படி மோசமான எழுத்திற்கு பாராட்டை எதிர்பார்த்தது.

“என்ன அப்படிச் சொல்லீட்டிங்க?” என்று பலவீனமான குரலில் வினவினான் B. எழுத்தாளன்.

“பின்னே என்னப்பா? இப்படி ஒரு பிற்போக்கான வகையில் கதைய நீ எழுதுவேன்னு நான் நினைக்கவேயில்லை. கதைய ஒரே நேர்கோட்டில, தெளிவா கொண்டு போயிருக்க. சுத்தமா, சுவாரஸ்யமே இல்ல. நான் முதல் அத்தியாத்துல சொன்னத மறந்துட்டியா? எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம். You understand?”

மறுபடியும் ஏதோ புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது B. எழுத்தாளனுக்கு. ஆனால், மறுபடியும், மறுபடியும் தலையைத் தலையை ஆட்டி விட்டு மறுபடியும், மறுபடியும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் தோன்றியது அவனுக்கு. எனவே கண்ணாயிரம் பெருமாளிடம் விளக்கமாகக் கேட்க வேண்டிய நிலைமைக்கு உள்ளானான் அவன்.

“சரி, கவனமாகக் கேள்” என்று சொல்லிவிட்டு க. பெருமாள் B. எழுத்தாளனுக்கு நிதானமாகச் சொன்ன விஷயங்களின் சாராம்சம்:

ஒரு நாளும் நீ எழுதும் விஷயம் முதல் வாசிப்பில் வாசகனுக்குப் புரியக் கூடாது. எத்தனை தடவை வாசித்தாலும் புரியவில்லை என்றாலும் பாதகமில்லை. முதல் வாசிப்பில் புரியக் கூடாது.

ஒரே ஒரு கதையை நேர்கோட்டில் ஒரு போதும் கொண்டு போகாதே. ராமாயணம், மகாபாரதம் கூட பல கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள். ஆனால், அந்த இதிகாசங்கள் போல ஒரு குவிமையத்தை நோக்கிக் கொண்டு கதையை ஒரு நாளும் கொண்டு போகாதே. நீ என்ன வால்மீகி காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறாய். 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாயப்பா. 50-60 கதைகள் அங்கே, இங்கே அலங்கோலமாகத் திரியட்டும். அதையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டியது வாசகன் என்று பொறுப்பை அவன் தலையில் போட்டு விடு. ஒன்றுமில்லாத வெளியில் புத்திசாலி வாசகன் கதையைக் காண்பான் – அம்மணக்குண்டி ராசாவின் இடுப்பில் அங்கியைப் பார்த்தது போல.

எழுத்தாளன் வாசகனுக்கு இன்பத்தைக் கொடுக்கிறான். பதிலுக்கு வாசகன் என்ன மயிற்றைக் கொடுக்கிறான். பணம் கொடுக்க மாட்டேன் என்கிறான். மதிப்பு கொடுக்க மாட்டேன் என்கிறான். அடே, கனடாவிற்கோ, தென்னமரிக்காவிற்கோ கூட்டிக் கொண்டு போ. அங்கே எனது மானசீக எழுத்தாளர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்த்து விட்டு, அவர்கள் அருந்திய பானத்தை அருந்திப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்றால் அதையும் செய்ய மறுக்கிறான். எனவே அவனைக் கண்டபடி ஏசினால் மட்டும் போதாது. கதையைப் படிக்க வைத்துக் கோமாளியாக்கி, பைத்தியக்காரப் பட்டம் சூட்டி அழகு பார்த்தால்தான் எழுத்தாளனுக்கும் கொஞ்சம் இன்பம் கிடைக்கும்.

இதையெல்லாம் செய்யும் போதும் என்னுடைய தாரக மந்திரத்தை மறந்து விடாதே: எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம்.

எனவே, வாசகனை என்னதான் சொல்லித் திட்டினாலும், அவனுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த மறந்து விடாதே. பூமியில் பிறந்த எல்லா மனிதர்களையும் போலவே அவனும் தலைவர்களைப் பற்றிய, நடிகர்களைப் பற்றிய, தன் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை அறியத் துடித்துக் கொண்டிருப்பவன் என்பதையும் அறிவாயாக. அப்படி அறிய முடியாத பட்சத்தில் அதைப் பற்றி அவனாக ஏதாவது கற்பனை செய்து பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறான் என்பதையும் உணர்வாயாக. அந்த கற்பனைக்கு மூலப் பொருளை வழங்குவதில்தான் ஒரு தீவிர இலக்கியவாதி மும்முரமாக இயங்க வேண்டும்.

இந்த மூலப் பொருளை வழங்குவதற்கு கிசுகிசு பாணி என்ற ஒன்று போன நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டாகி விட்டது. என்னது கிசுகிசு பாணி மஞ்சள் பத்திரிகைகள் பின்பற்றுவதா? இடியட். இப்படி இன்னொரு தடவை சொன்னால் உன்னைத் திட்டி 41 பதிவுகள் போடுவேன், ஜாக்கிரதை. இலக்கியத்தரமாக கிசுகிசு எழுதுவது பற்றிக் கேள்வியும் பட்டிருக்கிறாயா, மண்டூகம்.

முதலில் பெயர்களை நேரிடையாக எழுதாமல் மறைமுகமாக எழுத வேண்டும். என்னது விகடனும், வாரமலரும் அப்படித்தான் எழுதுகிறார்களா? உன்னைப் போன்ற ஒரு அறிவுக் கொழுந்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. “ரோசாப்பூ வாசம் கொண்ட நடிகை”யென்றா உன்னை எழுதச் சொல்கிறேன்? பெயர்களையெல்லாம் புரட்டிப், புரட்டிப் போட்டு புதுமை செய்யப்பா. என்னுடைய குருகூட புதுமைப் புரட்சிக்காக செத்தவன் என்பது உனக்குத் தெரியாதா? என்னது யார் என் குருவா? மகாகவி பாரதியார் என்று ஒரு ஆள் ஞாபகமிருக்கிறதா உனக்கு? சரி மேலே கேள். பெயர்களை எப்படிப் புரட்டிப் போட்டு புதுமை செய்வது எப்படி என்று சொல்கிறேன்.

கிறிஸ்தவப் பெயர்களையெல்லாம் இஸ்லாமியப் பெயர்களாக மாற்று. இஸ்லாமியப் பெயர்களை கிறிஸ்தவப் பெயர்களாக்கு. உதாரணமாக அலெக்ஸ் என்று ஒருவனுக்குப் பெயர் இருந்தால் அதை ஹமீது என்று மாற்று. ஹெலன் என்று ஒருத்திக்குப் பெயர் இருந்தால் அதை சல்மா என்று மாற்று. இந்து மதத்திலோ ஒரு கடவுளுக்கு ஏகப்பட்ட நாமங்கள் இருக்கிறபடியால் கவலையில்லை. முருகன் என்ற பெயரை சுப்பிரமணியன் என்று மாற்று. பரந்தாமன் என்ற பெயரை கண்ணன் என்று மாற்றிக் கொள்.

கிசுகிசுவில் உலக இலக்கியம் இருக்கிறதா? என்னப்பா இப்படிக் கேட்டு விட்டாய்? மாரியோ வர்கஸ் யோசா என்று போன வருடம் நோபல் பரிசு வாங்கினாரே, தெரியுமா? அவர் தன் முதல் மனைவியைப் பற்றி கிசுகிசு பாணியிலேயே கதை எழுதிப் புகழ் பெற்றார் தெரியுமா? அவர் முன்னாள் மனைவி “அந்தப் பொடியன் வர்கஸ் சொல்லாதது” என்று நேரிடையாக ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு ஒரு பரிசும் கிடைக்கவில்லை தெரியுமா?

மாரியோ வர்கஸ் யோசா என்றவுடன்தான் ஒரு முக்கியமான காரியம் நினைவிற்கு வருகிறது. திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்று ஆங்கில மூடர்கள் அழைத்தது போல, இந்தியாவை இந்து என்று அழைக்கும் லத்தீன் அமெரிக்க மூடர்கள் போல, சரியான எஸ்பாஞோல் உச்சரிப்பு தெரியாத தமிழ் மூடர்களும் லத்தீன் அமெரிக்க நாடுகளை மெக்சிகோ, ஈக்குவேடார், சிலி, பராகுவே, உருகுவே, அர்ஜண்டீனா, பிரேசில் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். நீயோ அந்நாடுகளை முறையே மெஹிக்கோ, எக்குவடோர், ச்சிலெ, பரகுவாய், உருகுவாய், ஆர்ஹந்தீனா, ப்ரசில் என்று அசல் எஸ்பாஞோல் உச்சரிப்பில் அழைத்து உன் ஞானத்தை வெளிப்படுத்திக் கொள். எஸ்பாஞோல் என்றால் என்னதா? அவ்வ்வ்வ்வ்

சரி, இறுதியாக ஒன்று சொல்கிறேன். கேட்டுக் கொள். மிடில் கிளாஸ் எழுத்தாளன் வர்க்கம் என்று ஒன்று இருக்கிறது. அறம், தர்மம் அது, இதுவென்று பேசிக் கொண்டு ரயிலில் மூன்றாவது வகுப்பில் போகும் கூட்டம். அந்த மோஸ்தரெல்லாம் காலாவதியாகி விட்டது. நீ உல்லாசம், கொண்டாட்டம் என்று எழுது. செகண்ட் க்ளாஸ் ஏசி வகுப்பில் போ. கால்வி க்ளெய்ன் ஜட்டி மட்டும் அணிந்து கொள். அந்த ஜட்டி கிடைக்கவில்லையென்று டான்டெக்ஸ் ஜட்டியெல்லாம் போடாதே. ஜட்டி போடாமலே பேன்ட் போடு. ஜிப் போடும்போது மட்டும் ஜாக்கிரதையாகப் போடு.

ஒரு தருணத்தில் பெருமாள் பேசுகிறானா, அல்லது அப்சலூட் பேசுகிறதா என்ற சந்தேகம் வந்ததாலும், மற்ற இரவுத் தொழில்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் பார்களெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மூடப்பட வேண்டும் என்று நடைமுறையில் இருந்த சட்டத்தாலும், B. எழுத்தாளன் – க. பெருமாள் சந்திப்பு ஒரு முடிவிற்கு வந்து விட்டது.

(தொடரும்)

அடுத்த அத்தியாயம்: இலக்கியச் சேவையும் கவுரவ டாக்டர் பட்டமும்

Thursday, November 25, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும் ... 1

அத்தியாயம் 1: கண்ணாயிரம் பெருமாள் B. எழுத்தாளனை சந்தித்த கதை

ஊஷ் என்ற பேரிரைச்சலுடன் flush ஆகும் ஆகாய விமானத்தின் toilet போல big bang, அதற்குப் பின் அண்டசராசரம், அதிலே சூரியன், சூரியனைச் சுற்றும் பூமி, பூமிக்கு மேலே புல், புல்லைத் தின்ன பசு, பசுவின் பாலைக் குடிக்க மனிதன், மனிதனை வழிநடத்த போலிச் சாமியார்கள் என்று வரிசைக்கிரமமாக காரியங்கள் நடந்தேறி வந்த காலத்தில் நடந்த ஒரு கதை இது.

ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், ஜாம் பஜார், பர்மா பஜார் என்று நிலப்பகுதியில் கடை விரித்தது போதாதென்று அலைகள் வந்து நுறையைப் பரப்பிச் செல்லும் மணல் வெளி வரைக்கும் காரபஜ்ஜி, கருகிய மக்காச் சோளம், பொரித்து, அனல் காற்றில் வரளும் மீன்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளைப் பரத்தி வைத்த சென்னை மாநகர். காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி, இடையிலும், இரவிலும் உடல்பசி, மற்றும் மக்களின் மற்ற பல தேவைகளை பூர்த்தி செய்து வந்த அதன் முக்கிய கடற்கரையாகிய மெரீனா பீச். கடற்கரையிலிருந்து மேற்கு திசையில், சற்றுத் தொலைவில் சிற்றி சென்ற்றர் பிளாசா என்றழைக்கப்படும் நவீன அங்காடி மையம். அந்த அங்காடி மையத்தின் உச்சியில் ஒரு உணவு வளாகம். அந்த வளாகத்தில் B. எழுத்தாளன் மசால் தோசை தாங்கிய ஒரு பீங்கான் தட்டும், மணமான ஃபில்ற்றர் காஃபி நிறைந்த ஒரு காகிதக் கோப்பையுமாக அமர்ந்திருந்தான். தோசையை நடுவாக்கில் பிய்த்து தேங்காய்ச் சட்னியில் தோய்த்து ஒரு விள்ளல் போட்ட பிறகுதான் அவனுக்கு நினைவு தட்டியது. எச்சல் கையைத் திசுத்தாளில் துடைத்துக் கொண்டே தன் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்டிருந்த கேமராவை உருவி, அதன் கண்ணைத் திறந்து தோசையை ஃபோகஸ் செய்யத் தொடங்கினான். அவனை ஒரு ஜோடிக் கண்கள் ஃபோகஸ் செய்வதை அப்போது உணர்ந்தானில்லை.

கேமராவை அப்படியும், இப்படியுமாகத் திருப்பி 2-3 படங்கள் எடுத்து, அவை எப்படி வந்திருக்கின்றன என்று பார்வையிட்டான். திருப்தியில்லை. ஒரோரு பதிவர்கள் என்னமாய் புகைப்படங்கள் எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். சின்னவஞ்சி என்ற பதிவர் தோசையைப் படமெடுத்தால், எப்படி அந்த முறுமுறு தோசை முறிந்து, லேசான எண்ணெய் பிசுபிசுப்புடன் மூன்று கடுகு, ஒரு பச்சைப் பட்டாணி, முந்திரிப் பருப்பின் ஒடிந்த ஒரு துணுக்கு ஆகியன மஞ்சள் நிற உருளைக் கிழங்கு பின்னணியில் துல்லியமாகப் புலப்படுகின்றன. தான் எடுக்கும் படங்களோ, அமெரிக்காவிற்குப் போன ஐ.டி. இளைஞர்கள் சமைக்கும் உருளை மசால் போல் அசமஞ்சமாக தெரிகிறது. ஒரு வேளை தன்னுடைய கேமராவில்தான் எதோ குறைபாடோ, இல்லை தன்னுடைய தோசைதான் சரியில்லையோ என்று பலவாறாக அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் தன் பக்கத்தில் யாரோ நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான்.

சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரம், பூப்போட்ட சட்டை, சட்டைக்கு சம்பந்தமில்லாத 55 வயது முகமும் உடல் மொழியும், சற்று வழிசல் கலந்த ஒரு சிரிப்பு.

“பத்திரிகையாளரா நீங்க?”

ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக வேண்டுமென்ற கனவில் திரிந்தவன் B. எழுத்தாளன். விதி வேறு திசைக்கு இழுத்துச் சென்று விட்டது. அப்படியும் பத்திரிகையுலகம் தப்பவில்லையே என்ற விசனம் B. எழுத்தாளனுக்கு உண்டு. இப்படி சடுதியில் தோன்றிய எண்ண ஓட்டத்தை நிறுத்தி விட்டு ”இல்லையே, நீங்க?” என்று இழுத்தான்.

“I am Kannayiram Perumal” என்று கையை நீட்டினான் அவன்.

B. எழுத்தாளனுக்கு அந்த பெயர் எங்கேயோ கேட்டது போல இருந்தது. ஆனால் பிடிபடவில்லை. அவனுக்கு அவகாசம் எதுவும் கொடுக்காமலே, கண்ணாயிரம் பெருமாள் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு எதிரில் அமர்ந்தான். அவன் கையிலே BARRISTA என்று எழுதப்பட்ட ஒரு ப்ரௌன் நிறக் காகிதக் கோப்பையிலிருந்து காஃபியும், சாக்கலேற்றும் கலந்த நல்ல மணம் எழும்பிக் கொண்டிருந்தது. அடர்த்தியான மீசையை நறுக்காகக் கத்தரித்திருந்தான். ஒரு காதிலே கடுக்கண். கழுத்தை ஒட்டிய பொன் சங்கிலி. கொஞ்சம் முறைப்பாக இருக்க முடிந்தால் தமிழ்ப் பட தாதாவின் கையாட்களைப் போலிருந்திருக்கலாம். ஆனால் வழிசலான சிரிப்பு அவனை ஒரு மலையாளப் பட காமெடியன் போலாக்கி விட்டது.

“நீங்க கட்டாயமா ஒரு எழுத்தாளர்தான். குறைந்த பட்சம் ஒரு ப்ளாக் எழுத்தாளராகவாவது இருக்க வேண்டும். சரியா?” என்றான். இப்போது வழிசல் குறைந்து அவன் பேச்சில் gravitas கொஞ்சம் கூடியிருந்தது.

B. எழுத்தாளனுக்கு இப்போது பெருமாள் மீது கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டு விட்டது. எப்படி இந்த ஆள் சரியாகச் சொல்கிறார் என்று சற்று திகைத்தான்.

அந்த திகைப்பே அவன் ப்ளாக் எழுத்தாளன்தான் என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டதை உணர்ந்த பெருமாள் ஒரு வித பெருமிதமாக புன்னகை செய்தான். அதில் வழிசல் குறைவாக இருந்ததனாலோ, அல்லது பெருமாள் மீதிருந்த மரியாதை அதிகரித்திருந்ததாலோ, அல்லது ஒரு எழுத்தாளனாக அறியப்பட்டபடியினாலோ, B. எழுத்தாளனுக்கு அந்த புன்னகை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

“எனக்கு உன்னால் ஒரு உதவி தேவைப்படுகிறது, செய்ய முடியுமா?” என்று நேரடியாகவும், நைச்சியமாகவும் விஷயத்திற்கு வந்தான் பெருமாள்.

B. எழுத்தாளன் மறுபடியும் alert ஆனான். மல்ற்றி லெவல் மார்க்கெற்றிங் ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு சில கசப்பான அனுபவங்களைப் பெற்றவன் அவன். அது முதல் பொது இடங்களில் முன்னே பின்னே தெரியாத நபர்கள் நைச்சியமாகப் பேசினாலே அவனுக்கு வயிற்றுக்குள் ஜிவ்வென்று ஆகி விடும்.

“வேற ஒண்ணுமில்ல. என்னப் பத்தி உன்னோட ப்ளாக்ல எழுத முடியுமான்னு கேக்கத்தான் வந்தேன்… அப்படி என்ன பாக்கற? என்கிட்ட ஒலகத்துக்கு சொல்றதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. அதைப் பரவலா கொண்டு போய் சேக்கறதுக்கு வழிகளைத்தான் தேடிட்டிருக்கிறேன்.... அட…என்னப்பா சந்தேகம்? பெரிய எழுத்தாளரான சாரு நிவேதிதா கூட என்னுடைய கதையை எழுதியிருக்கிறார் தெரியுமா? சொல்லப் போனா என்னுடைய கதையை எழுதிதான் அவரால சொந்தமா கதை எழுத முடியும்னே நிரூபிக்க முடிஞ்சுது. அதுக்கு முன்னால அவர் பேர்ல வந்த “ஸீரோ டிகிரி’ங்கற நாவலை நான்தான் எழுதினேன், நான்தான் எழுதினேன்னு அவனவன் சொன்னான்ல. அவனுங்க வாயையெல்லாம் அடைக்கறதுக்குத்தான் என்னோட கதையை எழுதி புஸ்தகமாவே போட்டார்ப்பா. நானூறு, நானுத்தம்பது பக்க புஸ்தகம்”

இப்போதுதான் B. எழுத்தாளனுக்கு கண்ணாயிரம் பெருமாள் என்ற பெயரை எங்கே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று புலப்பட்டது. சட்டென்று பதட்டத்திற்கும் உள்ளானான் அவன்.

“சார், புகழ் பெற்ற எழுத்தாளராகிய அவர் எங்கே, நான் எங்கே? நாள் ஒன்றுக்கு 3000-4000 பேர் வந்து வாசிக்கும் தளம் அவருடையது. என் ப்ளாகை என்னைத் தவிர வாசிப்பது என் மனைவி, என் மைத்துனன், என் இரண்டு தம்பிகளில் ஒருவன் என்று மொத்தம் மூன்று பேர்” என்று திணறினான் B. எழுத்தாளன்.

“B, எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம். தீவிரவாதிகள் மும்பை ஓட்டல்களைத் தாக்கிய போது, அக் காட்சிகள் சன் டி.வி.யிலும், ஜெயா டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும், கேப்டன் டி.வி.யிலும் காட்டப்பட்டன அல்லவா? அவை கவனிக்கப்பட்டன என்பதுதான் முக்கியமே ஒழிய, எங்கே காட்டப்பட்டன என்பதா முக்கியம்?”

B. எழுத்தாளனுக்கு க. பெருமாள் சொன்னது புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால், நிலைமை தெளிவடைவதற்கு முன்னரே கேட்கப்பட்ட உதவியை செய்து தருவதாக மண்டையை ஆட்டி விட்டான் அவன். அதன் விளைவாக உருவானதே இந்தக் கதை. எப்படி சீதைக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து, ராமாயணம் தோன்றியதோ, எப்படி த்ரௌபதிக்கு நேர்ந்த சோதனையிலிருந்து மகாபாரதம் தோன்றியது, எப்படி கண்ணகிக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து சிலப்பதிகாரம் தோன்றியதோ, அப்படி B. எழுத்தாளனுக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து தோன்றியதே இந்தக் கதை. அந்த வகையில் பார்த்தால், உலகிலேயே ஒரு ஆண்மகனுக்கு ஏற்பட்ட சோதனையால் உருவான முதல் காவியம் என்றும் இந்தக் கதையைக் கூறலாம்.

இந்தக் கதையை பிற்காலத்தில் படித்துப் பார்த்த அமுதினி-மெய்மை பதிப்பகத்தின் உரிமையாளர் இளவேனில்குமரன் இதை நூல்வடிவத்தில் கொண்டுவர முடிவு செய்தார். அச்சின் பின்னட்டையில் இந்த நூலைப் பற்றி இப்படிப் போடலாம் என்று தீர்மானித்தார்:

“மனித வாழ்வின் அபத்தங்களை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொண்ட 21ம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள், அதே அபத்தங்களின் வடிவமாகவும், பிரதிநிதிகளாகவும் விளங்கினார்கள் என்பதை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொள்ளும் இந்நூல் … இப்போது இந்தப் பத்தியை முதலிலிருந்து வாசிக்கவும்”

பின்குறிப்பு (எச்சரிக்கை): இன்னும் இந்தக் கதை பின்நவீனத்துவ முறையில் எழுதப்படவில்லை. காரணம் என்னவென்றால் பின்நவீனத்துவம் சம்பந்தமான உபதேசத்தை இனி மேல்தான் க. பெருமாள் B. எழுத்தாளனுக்கு அருளப் போகிறான். ஆனால், கிருஷ்ணபகவான் தர்மோபதேசம் செய்யு முன்பே தர்மம் உலகத்திலே நிலவியது போலவே, க. பெருமாள் பின் நவீனத்துவ உபதேசம் செய்யு முன்னரே பின் நவீனத்துவம் உலகில் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த அத்தியாயம்: கண்ணாயிரம் பெருமாள் அருளிய ‘மலை’ப் பிரசங்கம்

Monday, November 22, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்

“பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்” என்ற தலைப்பில் 10-15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு கதை எழுதுவதாக ஒரு திட்டம் உள்ளது.

சில முன்குறிப்புகள்:

1. இக் கதையில் வரும் நபர்கள், அவர்களுடைய, சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று நம்பும் உரிமை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

2. இக் கதை பின் நவீனத்துவ முறையைப் பின்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. பின் நவீனத்துவ முறை எவையெல்லாம் அல்ல அன்று தெளிவாக விளக்கப்பட்டது போல, பின் நவீனத்துவ முறை எது என்பது இன்னமும் விளக்கப்படாமலே உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், பல பேர் விளக்கியும் விளக்கியவர்கள் உட்பட எவராலும் புரிந்து கொள்ளப் படாமல் உள்ளது. பிரபல எழுத்தாளர் ஒருவர் பிரபல வார இதழ் ஒன்றில் பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள வைக்காமல் கூந்தலை அள்ளி முடியேன் என்று சபதமெடுத்துள்ளார். இது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சபதம். ஏனென்றால் எழுத்தாளர் கடவுளைக் கண்டவர். இந்த முன்னுரை எழுதப்படும் காலத்தில் சபதம் நிறைவேறவில்லையென்றாலும், இது வாசிக்கப்படும் காலகட்டத்தில் ஏதாவது ஒன்றில் அது நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அப்படி ஆகியிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள். கோனார் தமிழ் உரை கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் தமிழ் பயின்ற மாணவர்கள் போல.

3. இந்த முன்குறிப்புகளின் பட்டியல் நீட்டிக்கப்படுமேயொழிய தவிர எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது. அவ்வப்போது இந்த முன்குறிப்புகள் மாற்றம் பெற்றிருக்கின்றனவா என்று படித்துத் தெரிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களுடைய கடமையாகும் தவிர, அவற்றை அறிவிப்பது B. எழுத்தாளனின் கடமையோ, இந்த ப்ளாக் உரிமையாளர் AVS கடமையோ ஆகாது.