Showing posts with label உணர்ந்தது. Show all posts
Showing posts with label உணர்ந்தது. Show all posts

Sunday, May 8, 2011

சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்


இப்போது மாதம் ஒரு முறை சிங்கப்பூர் செல்வதால் அங்கு நடந்து முடிந்த தேர்தலில் ஒரு சிறிய ஆர்வம் தோன்றியது. கூடவே, லீ குவான் யூவின் From Third World To First படித்து வருவதும் ஒரு காரணம்.

எல்லோரும் எதிர்பார்த்தபடியே ஆளும் கட்சியான PAP பேரளவில் வெற்றி பெற்றுள்ளது; ஆனால் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்து விட்டது; அல்ஜூனிட் என்ற ஒரு தொகுதியில் பாட்டாளிகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொகுதியில் பாட்டாளிகள் கட்சி தலைவரிடம் கடந்த அமைச்சரவையின் வெளிநாட்டு அமைச்சர் தோற்று விட்டார்.

எண்பத்தேழு வயதான லீ குவான் யூ எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். PAPகாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழக்கம் போல் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசினார். அல்ஜூனிட் வாக்காளர்கள் PAPஐ தோற்கடித்தால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். PAP எம்.பி.க்கள் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதியைத்தான் கவனிப்பார்கள் என்ற ரீதியில் மிரட்டினார். பட்டாளிகள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக அரசியலில் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் நோக்கம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் அப்படிக் கைப்பற்றினால் அவர்களில் பிரதமர், நிதியமைச்சர், வெளிநாட்டு அமைச்சர், வர்த்தக அமைச்சர் போன்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் கிடையாது என்பதை வாக்காளர்கள் யோசிக்க வேண்டும் என்றார். நாமும் யோசிக்க வேண்டிய விஷயம்தான் அது. விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும் பல இளைஞர்களை அரசியலுக்கும் பிறகு ஆட்சியதிகாரத்திற்கும் கொண்டு வந்தது. சேலத்திலிருந்த ராஜாஜி அவர்கள் ஈரோட்டிலிருந்த ஈ.வே.ரா. அவர்களைத் தேடிச் சென்று காங்கிரஸ் இயக்கத்திற்குள் கொண்டு வந்தார் என்று அறிகிறோம். மக்கள் சார்ந்த இயக்கங்கள் தேய்ந்து விட்ட நிலையில் இன்று அரசியலுக்குள் வருகை என்பது ஏற்கனவே வெளிச்சத்திலுள்ள நடிகர்களுக்கும், தலைவர்களின் வாரிசுகளுக்கும், ஆட்சியதிகாரத்திலுள்ள அதிகாரிகளுக்கும் (உதாரணம்: பிரதமர் மன்மோகன் சிங்) மட்டுமே சாத்தியமாகிறது. இதனால்தான் நமது ஆட்சியமைப்பு சீர்குலைந்து கொண்டே வருகிறது. மீண்டும் மக்கள் சார்ந்த இயக்கங்கள் தலை தூக்கினால்தான் இந்த நிலைமை மாறும்.

லீ குவான் யூவின் From Third World To First பற்றி…

சிங்கப்பூரை எப்படி முதல்தர நாடாக மாற்றினார் என்பதை லீ குவான் யூ தன்னுடைய மனம் திறந்த, நேரடி பாணியில் எழுதுவதுதான் இந்த நூல். சுமார் 700 பக்கங்கள் கொண்ட தண்டியான புத்தகம்தான். ஆனால் சுலபமாக வாசிக்கலாம். எளிமையான ஆங்கிலம், நேரடியான நடை, சுவையான சம்பவங்கள், ஒளிவு மறைவில்லாத விமர்சனங்கள். இதை வாசிக்கும் போது வெறும் சிங்கப்பூரின் வரலாற்றை மட்டுமல்ல, தென்கிழக்காசியாவின் கடந்த ஐம்பதாண்டு வரலாற்றின் சுருக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.

Saturday, January 22, 2011

இரவுகளின் சில நினைவுகள்


ஜெயமோகனின் "இரு கலைஞர்கள் " கதையில் வரும் சில்வண்டின் ஒலி என்னை 35 வருடங்களுக்குப் பின்னர் இழுத்துக்கொண்டு போய்விட்டது. இத்தனைக்கும் அவர் சொல்வதுபோல் "எல்லோரும் சிறு வயதில் இரவைச் சில்வண்டின் ஒலியாகவே அறிகிறார்கள் என்பது என் இளம்பருவ நினைவுகளுக்குப் பொருந்தாது. நான் பிறந்து வளர்ந்தது மணப்பாடு என்னும் ஒரு கடற்கரைக் கிராமம் (மணப்பாடு பற்றி பதிவர் இளம் வஞ்சியின் பதிவு இங்கே, இங்கே; மணப்பாட்டின் இணையதளம் மணவை.காம்). அப்போதெல்லாம் அங்கே இரவு எழு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். நாங்கள் ஒரு பெரிய பங்களாவில் வசித்தோம். அந்த ஊரிலிருந்து இலங்கைக்குச் சென்று வாணிபத்தில் பெருமளவு செல்வம் திரட்டிய குடும்பத்தின் உடைமைதான் அந்த வீடு. இரட்டை அடுக்கு. மொத்தமாக 6000 - 7000 சதுர அடி இருக்குமென ஊகம். தரைத்தளம் இருபது அடி உயரமிருக்கலாம். ஐந்தாறடி உயர சன்னல்கள் சுமார் பத்து எண்ணிக்கை கொண்ட முன் ஹாலில் 25 பேர் படுத்துறங்கலாம். சுற்றிலும் வேப்ப மரங்கள். பெரும்பாலான நேரங்களில் கற்று சிலுசிலுவென்று வீசும். தெருவிலிருந்து ஏறி வரும் வாசலுக்கும், வீட்டின் உட்புறம் ஏறும் வாசலுக்கும் நடுவில் சிமென்ட் பாவிய முற்றம் ஓன்று உண்டு. வீட்டிற்குள் ஏறும் வாசலின் படிகள் விசாலமானவை; மழுமழுவென்ற சிமிட்டியில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த படிகளில் இரவில் ஊரடங்கிய பின் படுத்துக் கொண்டு வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்து கொண்டே இருக்கலாம். ஊர் அமைதியாக இருக்கும். காற்றின் சிறு சலனமும் இல்லாத வேளைகளில் உன்னித்துக் கேட்டால் தூரத்தில் அடிக்கும் அலைகளின் ஓலி கேட்கலாம். அபூர்வமாக தெருவில் யாராவது நடந்து செல்லும் காலடி சப்தம் கேட்கும். கள்ளோ சாராயமோ குடித்த போதை மிக யாராவது குடிமக்கள் வசை பேசிக்கொண்டு போவார்கள் எப்போதாவது. மற்றபடி மௌனமே நானறிந்த இரவின் குரல். நட்சத்திரங்களே இரவின் ஒளி.

Saturday, May 15, 2010

கடவுளின் இருப்பு பற்றிய தருமியின் கேள்விகளுக்கு சில பதில்கள்

எப்படிக் கண்டுபிடித்தேன் என்று நினைவில்லை. ஆனால் தருமி என்ற வலைப்பதிவு பல வகைகளிலும் எனக்குப் பிடித்துப் போன ஒன்று. “கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன்” என்று சொல்லும் தருமி ஒரு காலத்தில் கிறிஸ்தவ நம்பிக்கையுடையவராக இருந்து இப்போது கடவுளை மறுதலிப்பவர். எல்லா வித மத நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறார். அவரது பதிவுகளை வாசிக்கும் போது, அவர் மத நம்பிக்கைகள் சம்பந்தமாக அதிகம் படிக்கிறார் என்பதும், அகவை அறுபதைத் தாண்டினாலும் கற்பதில் சற்றும் தளராதவர் என்பதும் புலனாகிறது. அவருடைய வலைப்பதிவுகள் முழுவதையும் நான் படித்து முடிக்கவில்லை என்றாலும், படித்த வகையில் கடவுள் சம்பந்தமாக அவர் சொல்லும் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு; பலவற்றில் இல்லை. என்னுடைய கருத்துக்களை நான் அவருடைய வலைப்பதிவிலேயே பின்னூட்டமாக விட்டிருக்கலாம். ஆனால் கருத்துக்கள் பல இடங்களிலே சிதறியிருக்கும். அவற்றை கோர்வையாக ஒரு தொகுப்பாக என்னுடைய வலைப்பதிவிலே இட்டு, தேவைப்பட்டால் அவற்றை பின்னூட்டமாக அவருடைய வலைப்பதிவில் இடலாம் என்ற எண்ணத்துடனேயே இன்றைய ஞாயிறு தபால் எழுதப்படுகிறது.

என்னுடைய கடவுள் நம்பிக்கையைப் பற்றி முதலில்…

ஏறக்குறைய தருமி சொல்லும் அவரது ஆரம்பகால கிறிஸ்தவ பின்னணிதான் எனக்கும். கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பம், அதனது ஆசாரங்கள், கடமைகள், இத்யாதிகள். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே புத்தகம் வாசிக்கும் பழக்கும் வந்து விட்டது. ஐந்தாம் வகுப்பு வருவதற்குள்ளே விவிலியத்தில் கதைகளாக இருக்கும் பெரும்பாலான பகுதிகளை வாசித்து முடித்து விட்டேன். தந்தை வரலாறு ஆசிரியர் என்பதால் வீட்டில் இராமாயணத்தின் சில பிரதிகளும் உண்டு. அவற்றையும் வாசித்தேன். பிறகு மகாபாரதம் கிடைத்து அதையும் வாசித்தேன். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் வாசித்தேன். இந்துக் கோயில்களின் பிரமாண்டமும், கலையும் என்னைக் கவரத் தொடங்கியது. வாய்ப்பு கிடைத்த போது அவற்றைப் போய் பார்த்து ரசிக்க தொடங்கினேன். குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் முதலானவை. பதின்ம வயதின் இறுதி சில ஆண்டுகள் தீவிர கிறிஸ்தவத்தைப் பின்பற்றினேன். ஆனால், அந்தப் பிரிவின் எல்லாக் கொள்கைகளோடும், செயல்பாடுகளோடும் எனக்கு உடன்பாடு இல்லாமல் போனது கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்ற சந்தேகமும் வந்து போகத் தொடங்கியது. இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, தொடர்ந்து வாசிப்பதும், சிந்திப்பதும், இவற்றிற்கு மேலாக வாழ்க்கை தரும் பாடங்களிலிருந்து அனுபவம் பெறுவதுமாக நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. கூடவே, அறிவியலில் மேற்கல்வி பெறத் தொடங்கினேன். அறிவியலின் முறைகள் பற்றிய அறிமுகமும், பின்னர் தேர்ச்சியும் ஏற்படத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில்தான் மெது, மெதுவாக கடவுளைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை எனக்கு ஏற்பட்டது. இந்த சிந்தனையின் சாராம்சங்கள் கீழ் வருவன:

  • கடவுள் என்று ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது. இந்த சக்தியே அகிலத்தையும் ஆள்கிறது. இருக்கின்ற எதுவும் தானாய், சந்தர்ப்பவசமாய் இருப்பவையல்ல. ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நிகழ்ந்தேறுகிறது.
  • மனிதன் இந்த சக்தியை உணரும் திறன் படைத்தவன். ஆனால், அவனுக்கு தற்போதிருக்கும் திறனில் கடவுளைப் பற்றி முழுமையாக அறிய முடியாது.
  • கடவுளை அறிய முயல்வதே அறிவியலின் உச்ச நிலை. அது வரைக்கும் கடவுளை உணர மட்டுமே இயலும். அது அனுபவங்கள் வாயிலாகவே நடைபெறும். அசாதாரணமான மனிதர்களும், நடப்புகளும், ஆவிகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தரிசனத்தை அளிக்கும். அந்த தரிசனமே அந்த மனிதனைக் கடவுளை உணர வழி நடத்தும்.
  • எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தரிசனம் நான் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டுமென்பது. அதை நான் ஒரு மதப் பிரிவின் மூலமாகவோ, அங்கீகரிக்கப்பட்ட வேறெந்த வழியாகவோ செய்யாமல் நான் அவரிடமிருந்து எதைக் கற்றுக் கொள்கிறேனோ, அப்படியே செய்ய விழைகிறேன்.

இனிமேல் கடவுள் இல்லை என்று தருமியும் பல கடவுள் மறுப்பாளர்களும் முன்வைக்கும் கருத்துக்களுக்கான எனது பதில்கள்.

தருமி போன்ற கடவுள் மறுப்பாளர்களின் கருத்துக்களை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று, மதங்களிலும், மதங்களை நிறுவியவர்களிலும் இருக்கும் குறைபாடுகளின் அடிப்படையில் கடவுளின் இருப்பை மறுத்தல். இரண்டு, அறிவியலின் அடிப்படையில் கடவுளின் இருப்பை மறுத்தல்.

1. மதங்கள் தீமை செய்துள்ளன, முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும் கோட்பாடுகளையும் தருகின்றன, எனவே மதங்கள் போற்றும் கடவுள் இருக்க இயலாது

மதங்கள் மனித இனத்துக்குப் பல தீமைகளை செய்திருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தர்க்கரீதியாகப் பார்க்கும் போது இதை வைத்து கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற முடிவிற்கு வரமுடியாது.

மதங்கள் சும்மா தோன்றி விடுவதில்லை. அசாதாரணமான மனிதர்களும், நடப்புகளுமே ஒரு மதம் தோன்றுவதற்கு வழியாகின்றன. ஆனால் அந்த மதம் வளர, வளர அதில் பல தனி மனிதர்களின், அல்லது ஒரு மனித சமூகக் குழுவின் தாக்கங்கள் நடைபெறத் தொடங்குகின்றன. நன்மைகளையும் தீமைகளையும் அந்த மதம் ஒரு சேர சமுதாயத்திற்கு வழங்குகிறது. சீர்கேடுகளும், அதைத் தொடர்ந்து சீர்திருத்தமும் என அந்த மதம் மாறி, மாறி பயணப்படுகிறது. மதத்தின் தீமைகளையும், சீர்கேடுகளையும் மட்டும் பார்க்கக்கூடாது என்றாலும், அப்படியே பார்க்கும் பட்சத்திலும் மதத்தில் தீமை இருக்கிறது என்பதற்காக கடவுள் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? மதத்தில் தீமையும், கடவுள் இருப்பவராகவும் ஒருங்கே இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே கிடையாதா?

மதங்கள் தங்களது புனித நூல்களிலும், செயல் விளக்கங்களிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும் கோட்பாடுகளையும் தருகின்றன என்பது மிகச் சரியானதே. ஆனால் இதன் அடிப்படையில் கடவுள் இல்லை என்பதை நிறுவுவதில், மேலே நான் சுட்டிக்காட்டிய தர்க்க ரீதியான பிரச்சினை இருக்கிறது. கூடவே, இன்னொரு விஷயத்தையும் கருத வேண்டும். மாபெரும் அறிவியல் சித்தாந்தங்களிலும் முரண்களும், குறைபாடுகளும் உண்டு. அதனால் எந்த அறிவியல் சித்தாந்தத்தின் அடிப்படைகளாக இருக்கும் உண்மைகள் மறுக்கப்படுவதில்லை. உதாரணமாக, படிமவியலாளர்களும், மூலக்கூறு உயிரியல் ஆய்வாளர்களும் பரிணாமக் கடிகாரத்தின் வேகத்தை நிர்ணயிப்பதில் முரண்படுகிறார்கள். குரங்குகளிலிருந்து மனிதன் பிரிந்தது 250 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று படிமவியலார்கள் சொல்ல, சம்பவம் நடந்தது 50 லட்சங்கள் வருடங்களுக்கு முற்பட்டதுதான் என்று மூலக்கூறு உயிரியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த முரண்பாட்டால் பரிணாம மாற்றம் என்ற உயிரியல் உண்மை இல்லாமல் போய் விடுவதில்லை. ஒரு தரிசனத்தைக் காண விரும்பி மலையில் ஏறுகிறோம். பாறைகளும், மரங்களும் மறித்து நிற்கின்றன. அந்த முரண்களைக் கடந்த பின் அடைவதே தரிசனம். முரண்களைக் காரணம் காட்டி தரிசனத்தை மறுதலித்தால் “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்” கதைதான்.

2. அறிவியல் ரீதியாக கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியாது, எனவே கடவுள் கிடையாது

ஆம், இன்றைய அறிவியல் ரீதியாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நிரூபிக்க முடியாதுதான். ஆனால் இந்தக் குறைபாடு கடவுள் இல்லாமல் இருப்பதால் அல்ல. அறிவியலுக்கு கடவுளைக் காணும் திறன் இன்னும் ஏற்படவில்லை என்பதனால்தான். மைக்ரோஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்படும் வரையில் நுண்ணுயிர்களின் இருப்பு உணரப்பட்டதே ஒழிய காணப்படவில்லை. எக்ஸ்ரே க்றிஸ்டலோக்ராஃபி கண்டுபிடிக்கப்படும் வரையில் டி.என்.ஏ.வின் இருப்பு உணரப்பட்டதே ஒழிய காணப்படவில்லை. கடவுளைக் காணும் கருவிகளையும் முறைகளையும் எப்போது அறிவியல் கண்டுபிடிக்கிறதோ, அப்போதே கடவுளைக் காண முடியும்.

அறிவியல் வழியாக கடவுளை காண்பது குறித்த இன்னொரு விஷயத்தையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். இது அறிவியலுக்குப் பின்புலமாக விளங்கும் தர்க்கவியல் சம்பந்தப்பட்டது.

அறிவியலில் ஒன்று இருக்கிறது என்பதை நிறுவுதல் எளிது; ஒன்றை இல்லை என்று நிறுவுதல் கடினம். இதனால்தான் அறிவியல் முதலில் ஊகங்களை இல்லையென்று சொல்லும் null hypothesis-ஆக நிறுவி, அதன் பிறகு அந்த null hypothesis உண்மையாக இல்லாததற்கான வாய்ப்புகள் (probability) என்ன என்று கணக்கிட்டு, அந்த null hypothesis-ஐ மறுதலிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ செய்கிறது. காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் தோற்றமளிக்கும், ஆனால் ஆழ்ந்த தத்துவ அடைப்படியில் அமைந்த இந்த அணுகுமுறையை எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு நடைமுறை உதாரணம் தருகிறேன்.

தருமியின் வலைப்பதிவிலிருந்து அவர் மதுரையில் வசிக்கிறார் என்று புலனாகிறது. நான் ஒரு ஆளை மதுரைக்கனுப்பி, அவர் கையில் தருமியின் புகைப்படத்தையும் கொடுத்து, எனக்குத் தெரிந்த தகவல்களையும் சொல்லி, தருமி மதுரையிலிருக்கிறாரா என்று தெரிந்து வாருங்கள் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆள் மதுரையிலிருந்து திரும்பி வந்து, “ஆமாம் நான் தருமியைப் பார்த்தேன். மதுரைக்குப் போனேன். இந்த வகையில் தேடினேன். இந்த இடத்தில் பார்த்தேன். இந்த முறையில் அவர்தான் தருமியென்று உறுதிப்படுத்திக் கொண்டேன்” என்றால் தருமி மதுரையில்தான் இருந்தார் என்பது ஊர்ஜிதமாகி விடுகிறது. அதே நபர் “நான் மதுரைக்குப் போனேன். இந்த, இந்த வகையிலெல்லாம் எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் தருமியைக் காணவில்லை” என்றால் தருமி மதுரையில் இல்லை என்பது சர்வநிச்சயமாக ஊர்ஜிதமாகி விடுமா? ஒரு வேளை நமது நபர் மீனாட்சியம்மன் கோவிலில் தேடிக் கொண்டிருக்கும்போது தருமி நாயக்கர் மஹாலில் இருந்திருக்கலாம். நாயக்கர் மஹாலில் தேடிக் கொண்டிருக்கும்போது மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போயிருந்திருக்கலாம் (இந்த தருமிக்கும் ghost writer இருக்கிறார் என்று நம்புவதற்கில்லை, இருந்தாலும்..). எனவே, அறிவியலின் தத்துவத்தில் இருக்கிறதென்றால், இருக்கிறது; இல்லையென்றால் இல்லாமலும் இருக்கலாம், இருக்கவும் செய்யலாம். எனவே கடவுளை மறுப்பவர்களும் ஒரு நம்பிக்கையின் பேரில்தான் கடவுளை மறுக்க முடியுமே அல்லாது அறிவியல் ரீதியாக கடவுளை மறுக்க முடியாது. அப்படி மறுப்பவர்களுக்கு ஒன்று அறிவியலின் தத்துவார்த்தம் புரியவில்லை; அல்லது புரிந்தே தவறு செய்கிறார்கள்.

மூன்றாவதாக, பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட வேண்டியதைப் பற்றிய ஒரு ஊகத்துடனேயே தொடங்குகின்றன. தருமியின் வலைப் பதிவில் கூட ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் சொன்ன ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது. பூமிக்கு அப்பாற்பட்டு உயிரினங்கள் இருக்கலாம் என்று ஒரு ஊகத்தைச் சொல்லியிருந்தார் ஹாக்கிங். எதனடிப்படையில்? சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மட்டுமே. கோடானு கோடி நட்சத்திரங்களும், கோள்களும் கொண்ட இப் பிரபஞ்சத்தில் பூமி போன்றே தட்பவெட்பம் கொண்ட இன்னொரு கிரகம் இல்லாமலா போய் விடும்; அப்படி இருக்கும் பட்சத்தில் அங்கே உயிரினங்கள் இருக்கலாமே என்ற சாத்தியக் கூறுகளின் அடிப்படையில். இவ்வளவு பெரிய பிரபஞ்சம் சந்தர்ப்பவசமாய் உருவாகி இயங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமா, அல்லது ஒரு மாபெரும் திட்டத்தின் அடிப்படையில் இயங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமா? எனவே, அறிவியல் ரீதியாக நோக்கினாலும், கடவுள் இல்லாமலிருப்பதைக் காட்டிலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்ற எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலேயே கடவுளைக் குறித்த ஆய்வு தொடங்குவது பொருத்தமாக அமையும்.

இறுதியாக, அறிவியலின் புலனுக்கு இன்னும் எட்ட முடியாத பல விஷயங்கள் இருக்கின்றதா, இல்லையா என்பதான மிக அடிப்படையான ஆய்வுகள் நடந்து வருகின்றன. உதாரணமாக கேரி ஷ்வார்ட்ஸ் (Gary Schwartz) என்னும் அரிசோனா பல்கலைக்கழக (University of Arizona) பேராசிரியர் ஆவிகளுடன் பேசுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசுபவர்கள் உண்மையாகத்தான் அப்படிச் செய்கிறார்களா, இல்லையா என்பதையறிய பல நிலைகளில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டு உண்மையே என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வுலக வாழ்விற்குப் பின்னும் ஒரு வாழ்வு இருக்கலாம் என்ற சாத்தியக்கூறு இந்தக் கண்டுபிடிப்பால் அதிகமாகிறது. சமீபத்தில் எழுபது ஆண்டுகளாக உணவோ, தண்ணீரோ உட்கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன் என்று சொன்ன ஒரு யோகியை அகமதாபாதில் ஒரு மருத்துவமனையில் வைத்து இரண்டு வாரங்கள் டி.ஆர்.டி.ஓ. ஆராய்ந்த போது, அந்த இரண்டு வாரங்களும் அவர் உணவோ, தண்ணீரோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது உறுதிப்பட்டுள்ளது. இந்த உண்மையை அறிவியலின் எந்தக் கோட்பாட்டால் விளக்க முடியும்?

மேற்கண்ட காரணங்களால்தான் சொல்கிறேன் கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக சொல்ல எந்த அடிப்படையுமே இல்லை என்று. இதை வாசிப்பவர்கள் எனது வாதத்தின் குறைபாடுகளை இந்தப் பதிவிலோ, அல்லது அவரவர்கள் வலைப்பதிவிலோ தெரிவிக்கலாம். வேறு வலைப்பதிவில் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கான லிங்க்கை இங்கே கொடுங்கள்.