Saturday, January 22, 2011

இரவுகளின் சில நினைவுகள்


ஜெயமோகனின் "இரு கலைஞர்கள் " கதையில் வரும் சில்வண்டின் ஒலி என்னை 35 வருடங்களுக்குப் பின்னர் இழுத்துக்கொண்டு போய்விட்டது. இத்தனைக்கும் அவர் சொல்வதுபோல் "எல்லோரும் சிறு வயதில் இரவைச் சில்வண்டின் ஒலியாகவே அறிகிறார்கள் என்பது என் இளம்பருவ நினைவுகளுக்குப் பொருந்தாது. நான் பிறந்து வளர்ந்தது மணப்பாடு என்னும் ஒரு கடற்கரைக் கிராமம் (மணப்பாடு பற்றி பதிவர் இளம் வஞ்சியின் பதிவு இங்கே, இங்கே; மணப்பாட்டின் இணையதளம் மணவை.காம்). அப்போதெல்லாம் அங்கே இரவு எழு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். நாங்கள் ஒரு பெரிய பங்களாவில் வசித்தோம். அந்த ஊரிலிருந்து இலங்கைக்குச் சென்று வாணிபத்தில் பெருமளவு செல்வம் திரட்டிய குடும்பத்தின் உடைமைதான் அந்த வீடு. இரட்டை அடுக்கு. மொத்தமாக 6000 - 7000 சதுர அடி இருக்குமென ஊகம். தரைத்தளம் இருபது அடி உயரமிருக்கலாம். ஐந்தாறடி உயர சன்னல்கள் சுமார் பத்து எண்ணிக்கை கொண்ட முன் ஹாலில் 25 பேர் படுத்துறங்கலாம். சுற்றிலும் வேப்ப மரங்கள். பெரும்பாலான நேரங்களில் கற்று சிலுசிலுவென்று வீசும். தெருவிலிருந்து ஏறி வரும் வாசலுக்கும், வீட்டின் உட்புறம் ஏறும் வாசலுக்கும் நடுவில் சிமென்ட் பாவிய முற்றம் ஓன்று உண்டு. வீட்டிற்குள் ஏறும் வாசலின் படிகள் விசாலமானவை; மழுமழுவென்ற சிமிட்டியில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த படிகளில் இரவில் ஊரடங்கிய பின் படுத்துக் கொண்டு வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்து கொண்டே இருக்கலாம். ஊர் அமைதியாக இருக்கும். காற்றின் சிறு சலனமும் இல்லாத வேளைகளில் உன்னித்துக் கேட்டால் தூரத்தில் அடிக்கும் அலைகளின் ஓலி கேட்கலாம். அபூர்வமாக தெருவில் யாராவது நடந்து செல்லும் காலடி சப்தம் கேட்கும். கள்ளோ சாராயமோ குடித்த போதை மிக யாராவது குடிமக்கள் வசை பேசிக்கொண்டு போவார்கள் எப்போதாவது. மற்றபடி மௌனமே நானறிந்த இரவின் குரல். நட்சத்திரங்களே இரவின் ஒளி.

3 comments:

மதுரை சரவணன் said...

இரவுகளின் நினைவுகள் ஜெயமோகன் சில்வண்டுடன் ஒப்பிட்டு அசத்தல் பதிவு போட்டமைக்கு வாழ்த்துக்கள்.

அண்டன் பிரகாஷ் said...

அருமையான பதிவு... லேசாக கலையத்தொடங்கியிருந்த நினைவுப் புகையை ஊதி எரிய வைத்ததற்கு நன்றி!

Btw,

பெரிய பங்களாவில் இருபது வருடம் வாடகைக்கு இருந்தும் வாடகை 20 ரூபாயை தாண்டாதை சொல்லவில்லை ?

25 பேர் படுக்கமுடிகிற நீண்ட ஹாலில் கிடக்கும் நாற்றுக் கட்டிலில் படுத்துக் கிடக்கும்போது Tomcat / Mic ஸ்டைலில் பழ வெளவால்கள் விருட் விருட்டென பறந்துபோவதை பதிவு செய்யவில்லை ?

சம்மர் சீசனின்போது வேப்பங்காய்களை சாம்பலில் கலந்து, மணலில் புதைத்து, வேப்பங்கொட்டை சேகரித்து பணமீட்டும் தொழில் முனைவு பற்றி சொல்லியேயாக வேண்டும்தானே ?

ஏவிஎஸ் said...

ப்ரகாஷ்,

கூடுதல் நினவுகளுக்கு நன்றி.

மற்றவர்களும் எழுத ஏதாவது விட்டு வைக்க வேண்டுமே என்றுதான் விலாவாரியாக எழுதவில்லை :)

காற்று பலமாக வீசும் போது மேல்மாடியின் பலகணிகள் தடதடத்து ஒரு மாதிரி poltergeist effect கொடுப்பதைக் கூட விட்டு விட்டேனில்லையா?

வேப்பங்காய்களை சாம்பலில் கலப்பது, மணலில் புதைப்பதெல்லாம் நினைவில்லை.

பூத்துத் தள்ளும் டிசம்பர் கனகாம்பரம், வெளியே விளையாடப்படும் கிட்டிப்புள், மரமேறுகிற விளையாட்டு (பெயர் மறந்து விட்டது), இடைவேளையிலும், மாலையிலும் குடிக்கிற ஹார்லிக்ஸ் திட-திரவம், மதியம் வருகின்ற தினமலர், அதில் இருக்கும் இராக்-இரான் யுத்த செய்திகள், 1970களில் பாத்ரூம் கூரையில் காங்க்ரீட் போடப்பட்ட போது உபயோகித்து பிறகு நிரந்தரமாக ஆவணமான செய்தித்தாளில் நிஜலிங்கப்பாவின் ப. காங்கிரஸ் தோற்றது -- இப்படி பல நினைவுகள் இனிமேல்தான் பதியப்பட வேண்டும்.