Saturday, February 13, 2010

அப்போதிலிருந்து இப்போது வரை

நவம்பர் 19, 2007: ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் நாலு மடங்கு ரேட்டுக்காரன் பதிவு. அதற்குப் பின் ஜனவரி 17, 2010: அது இது பதிவு

இந்த இடைவெளியில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். நிறைய விஷயங்களில் ஞாபகத்தில் இருப்பது, பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடிவது கீழே சில.

முதலில் நம்மூர் ஆட்டோக்காரர்களிடம் ஒரு சிறு மன்னிப்பு: 2008 நவம்பரில் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி நகரே திகைத்து நின்ற போது கை கொடுத்தவர்கள் ஆட்டோக்காரர்கள்தான். எந்த கால் டாக்சியைக் கூப்பிட்டாலும் வர மறுத்தார்கள். ஆட்டோக்கள் ஒழுங்காக ஓடின. மழையை முன்னிட்டு கட்டணம் அதிகமாக வசூலித்தார்கள். ஆனால், போக வேண்டிய இடத்திற்கு போக முடிந்ததே பெரிய விஷயம்.

ஆட்டோவைப் பற்றிப் பேசும் போது டாக்சிகளை விட முடியாது:

ஹைதராபாதில் (டிசம்பர் 2008) கால் டாக்சி உபயோகித்த பிறகு சென்னை கால் டாக்சி சேவை மோசமாகத் தோன்றுகிறது. சென்னையில் கால் டாக்சியென்றால் மாருதி ஓம்னி, அல்லது டாடா இண்டிகாதான். அவற்றில் பெரும்பாலனவை கட்டாய ஓய்வுக் காலத்தை நெருங்கி விட்டவை. ஹைதராபாதில் கணிசமான எண்ணிக்கையில் புத்தம் புதிய ரேனால்ட்கள். ஹைதராபாத் புதிய விமான நிலையத்தில் டாக்சி சேவை அருமையாக செய்திருக்கிறார்கள். முன்னர் மும்பை விமான நிலையத்தில் இருந்தது போல வரிசையாக வண்டிகள் வர, வர ஏறிச் செல்லலாம். சென்னை விமான நிலையத்தில் டாக்சி சேவை குத்தகை எடுத்திருக்கும் அக்பர் ட்ராவல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும், கால் டாக்சி நிறுவனங்களுக்கும் தொழில் போட்டி. கால் டாக்சிகள் பயணிகளை இறக்கி விட்டு, வேறு பயணிகளை ஏற்றிச் சென்றால் அதற்கு பார்க்கிங் வசூலித்து விடுகிறார்கள். இதைத் தவிர்க்க கால் டாக்சிகள் பயணிகளை சற்று தூரம் வெளியே நடந்து வரும்படி கேட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சேவைக் குளறுபடிகள்.

இந்தியாவில் டாக்சி சேவைகளுக்குச் சிறந்த நகரங்கள் என்றால் மும்பையும் கொல்கத்தாவும்தான். மும்பை பழைய உள்நாட்டு முனையகம் (டெர்மினல்தான்) எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அங்கு டாக்சி சேவை நன்றாக இருந்தது. கத்தி போய் வாலு வந்த கதையாக, புதிய, அழகான மும்பை உள்நாட்டு விமான முனையகம் வந்த பிறகு டாக்சி சேவை சீரழிந்து விட்டது (2008-09). முன்னைப் போல் டாக்சிகள் நம்மைத் தேடி வருவதில்லை. நாம் அவற்றைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. வெர்சோவா செல்ல ஒரு சீக்கிய டாக்சி ஓட்டுநர் 700 ரூபாய் கேட்டார். போன தடவை 100 ரூபாயில் போனேன் என்றால், எனக்கு இன்று முழுவதும் சவாரியே கிடைக்கவில்லை; நீதான் முதல் சவாரி என்கிறார். நல்லவேளை இந்த ஆளுக்கு நேற்று ஏதோ சவாரி கிடைத்திருக்கிறது, இல்லையென்றால் 3000 ரூபாய் கேட்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே ஆட்டோ பிடித்துப் போனேன்.

டெல்லியில் (ஜூலை 2009) நானும் கொலம்பிய நண்பர் செர்ஜியோவும் ஒரு டாக்சி பிடித்தோம். ஓட்டுநர் சீக்கிய இளைஞர். சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார். “என்னுடைய ஆங்கிலம் எப்படியிருக்கிறது” என்று கேட்டார். “நன்றாக இருக்கிறது. ஏன் கேட்கிறீர்?” “இப்போது கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்து விட்டு ஆஸ்திரேலியா போகிறேன். அதற்குத்தான் ஆங்கிலப் பயிற்சி” அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது தொடங்கியிருந்தது. “பயமில்லையா?” “பயமா, எனக்கா?” என்று அட்டகாசமாகச் சிரித்தார் அந்த ஆறடி, 80 கிலோ எடையுள்ள இளைஞர்.

ஓர்லாண்டோவில் (ஃபெப்ரவரி 2008) டாக்சி என்று கேட்டால் ஒரு சிறு பஸ்ஸைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். டிஸ்னிலேண்ட் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் வருவதால் 12 பேர் உட்காரக்கூடிய வேன்தான் அங்கு பிரதானமான டாக்சி. அமெரிக்காவில் பத்து ரூபாய்க்கு லிற்றர் பெட்ரோல் கிடைத்த போது பரவாயில்லை. 30 ரூபாய்க்கு லிற்றர் விற்கப்படும்போது அந்த டாக்சியில் செல்லும் போது திக், திக் என்று இருந்தது. நினைத்தது போலவே, ஸ்பீடாமீற்றரைவிட டாக்சி மீற்றர் வேகமாக ஓடியது. ஊருக்குள் போய்ச் சேர 40-50 டாலர் ஆகிவிடுகிறது.

சியாற்றிலும் (ஃபெப்ரவரி & நவம்பர் 2009) டாக்சி வாடகை ஓர்லாண்டோவிற்கு குறைந்தது அல்ல. காரணம்: சியாற்றில்-டகோமா விமான நிலையத்திலிருந்து சியாற்றில் 25 மைல் தூரம். ஊருக்குள் வருவதற்கு வாடகை நாற்பத்தைந்து டாலரைத் தொட்டு விடுகிறது. முதல் தடவை நான் பழைய ஞாபகத்தில் ஒரு டாலரோ, இரண்டு டாலரோ tip கொடுத்தேன். ஓட்டுநர் இந்தியர் மாதிரி தெரிந்தார். ஒரு மாதிரி பார்த்தார். நண்பர்களிடம் விசாரித்ததற்கு 45 டாலர் பில் வந்தால் 5 டாலர் tip கொடுக்க வேண்டும் என்றார்கள். அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தில் டாலர் தண்ணீர் போல செலவாகிறது.

கொரியாவில் பூசான் (மே 2009) விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு செல்ல எடுத்த டாக்சி ஓட்டுநர் என்னிடமிருந்தும் நண்பர் அனிலிடமிருந்தும் இரண்டு லட்சம் வான் கறந்து விட்டார். சரியான கட்டணம் ஒரு லட்சத்து இருபதாயிரம் வான்தான் என்று மறு நாள் தெரிய வந்தது. மற்றபடி, பூசானில் எடுத்த டாக்சியனைத்திலும் மீற்றர்படிதான் வசூலித்தார்கள். பூசானின் அட்டகாசமான உள்ளூர் ரயில் (எம்.ஆர்.டி.) பழகி விட்டால் அந்த நகரில் டாக்சியே தேவையில்லை. அதே போல்தான் சிங்கபூரிலும் (ஜனவரி 2010). விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்ல 20-25 டாலர் ஆகிறது. அதுவும், காலை, மாலை அலுவலக நேரங்களில் ஆர்ச்சர்ட் ரோடில் செல்ல நெரிசல் கட்டணம் என்று கூடுதலாக 35% வசூலித்து விடுவார்கள். முதன் முறையாக சிங்கப்பூர் எம்.ஆர்.டியில் விமான நிலையத்திலிருந்து ஆர்ச்சர்ட் ரோடு சென்றேன். 1.8 சிங்கப்பூர் டாலர் அவ்வளவுதான்.

கோலாலம்பூரில் (நவம்பர் 2009) விமான நிலையத்திலிருந்து நகருக்கு விரைவு ரயில் (26 ரிங்கிட்டுகள்) + நகர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு டாக்சி 11 ரிங்கிட்டுகள். திரும்பிப் போகும் போது செர்ஜியோ தங்கும் விடுதியிலேயே டாக்சி எடுத்து விடலாம் என்றார். அவரிடம் இன்னொரு நண்பர் விடுதியிலேயே டாக்சி எடுக்காதீர், கொள்ளையடிப்பார்கள், வெளியே போய் மீற்றர் டாக்சி எடும் என்று சொல்லியிருக்கிறார். விடுதி டாக்சி ஓட்டுநர்களிடம் விசாரித்தார். 120 ரிங்கிட் சொல்லி 100க்கு இறங்கி வந்தார்கள். செர்ஜியோ வெளியே போய் டாக்சி எடுத்தால் இன்னும் மலிவாக இருக்கும் என்று மீற்றர் டாக்சியை நிறுத்தி ஏறினார். கோலாலம்பூர் விமான நிலையம் அடைந்த போது மீற்றர் சரியாக 100 ரிங்கிட் காட்டியது. வெளியே போய் மீற்றர் டாக்சி எடுக்கச் சொன்ன நண்பரை அடுத்த தடவை பார்த்தால் உதைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இறங்கினார்.

ஹோச்சிமின் நகரில் (பெப்ரவரி 2010) மோட்டார் சைக்கிள் டாக்சிக்காரர்கள் மூலைக்கு மூலை நிற்கிறார்கள். ஒரு இரவு கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று கிளம்பி, சீனப்புத்தாண்டு தினத்தையொட்டிய தெரு அலங்காரங்களால் கவரப்பட்டு நடந்து, நடந்து, கால் அசந்து விடுதிக்கு திரும்பலாம் என்று நினைத்தால், திசை சரியாக தெரியவில்லை. தெற்கும், மேற்கும், வடக்கும், கிழக்கும் உத்தேசமாக நடந்த பிறகும் விடுதி தென்படுகிற மாதிரி தெரியவில்லை. கடைசியில் மோட்டார் சைக்கிள் டாக்சிக்காரர் ஒருவரிடம்தான் தஞ்சமடைய வேண்டி வந்தது. விடுதியின் முகவரியைப் பார்த்து விட்டு “பத்தாயிரம் டாங்” என்றார். பத்தாயிரம் டாங் என்பது 23 ரூபாய். “சரி”யென்று கிளம்பினேன். 200 அடி போய் ஒரு வலது திருப்பம், இன்னொரு 100 அடி போய் ஒரு இடது திருப்பம். விடுதி வந்து விட்டது. Knowledge is power.

உலகெங்கும் சுற்றி விட்டு மறுபடியும் சென்னை கால் டாக்சி. அநேகமாக 2009ன் தொடக்க மாதங்களில் ஒன்று. வேளச்சேரியிலிருந்து கோடம்பாக்கம். தி. நகர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் வர நெடுநேரம் காத்திருந்து வாகனத்தை வலது பக்கம் திருப்பினால், “யாமிருக்க பயமேன்” ஸ்டைலில் கையைக் காட்டிக் கொண்டு ஒரு பெண்மணி. அதாவது அவர் சாலையை கடக்கப் போகிறாராம், வாகனத்தை நிறுத்தி வழி விட வேண்டுமாம். ஓட்டுநர் சன்னல் வழியாக தலையை திருப்பி “ஆமாம்மா, பெரிய வி.ஐ.பி. நீ. இத்தனை காரும் உனக்காக நிற்க வேண்டும்” என்று வைதார். பிறகு சென்னை நகரத்துப் பெண்களைப் பற்றி பெரிய முறைப்பாடு வைத்தார். “இதெல்லாம் பரவாயில்லை சார், இந்த ஐ.டி. பொண்ணுங்க டார்ச்சர் தாங்க முடியல” என்றார். “என்னாச்சு?” என்றேன். “ஓல்டு மகாபலிபுரம் ரோட்ல நின்னுக்கிட்டிருந்த ஒரு பஸ்ஸைக் க்ராஸ் பண்றேன். ஸ்கூட்டில ஒரு பொண்ணு ஒரு 20-22 வயது இருக்கும். பஸ் முன்னாடி இருந்து சாடுது” (ஓட்டுநர் நம்மூர்க்காரர்). “ஏம்மா இப்படி பண்ணறியேனு கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?” என்று கேட்டு விட்டு சொன்னார் “போடா” (ஓட்டுநருக்கு 60 வயது இருக்கும்). “உடனே வண்டிய ஸ்லோ பண்ணி அவள மொறச்சேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?” என்று மறுபடியும் கேட்டுவிட்டு “டேய் போடா, மொறச்சீன்னா ஈவ் டீசிங்னு கம்ப்ளைண்ட் பண்ணிருவேன் அப்டிங்குது. இப்டியெல்லாம் பொண்ணுங்க இருக்கு சார்” என்ற ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டார். உவரியிலிருந்து வரும் அவர் பையனை பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டு, கால் டாக்சி ஓட்டுநராக பணி புரிகிறாராம்.

No comments: