என் மாமியார் வீட்டில் ஒரு பணிப்பெண் இருந்தார். அவர் முருங்கைக்காய் என்று சொல்ல மாட்டார். மறைந்த அவர் கணவர் பெயர் முருகனாம். கணவர் பெயரைத் தன் வாயால் சொல்லக் கூடாது என்று அவ்வளவு வைராக்கியம். அந்தக் காலம் மலையேறிப் போய் விட்டது. இப்போது மனைவியர் கணவர்களை வாடா, போடா என்று செல்லமாக அழைக்கிறார்கள். சில குடும்பங்களில் அப்போதும், இப்போதும் நெருங்கிய உறவினர்களை ‘அது’, ‘இது’ என்று அஃறிணையில் அழைப்பதும் உண்டு. பழகாதவர்களுக்கு சற்று நெருடலாக இருக்கலாம். ஆனால், சமீபத்தில் இப்படிப்பட்ட ஒரு அழைப்பைக் கேட்டேன். அது ரொம்ப இனிமையாக இருந்தது.
கனிகள் கொண்டுதரும் - கண்ணன்
கற்கண்டு போலினிதாய்,
பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வான்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ணம்
இயன்ற சவ்வாதும். ...
கொண்டை முடிப்பதற்கே - மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே கண்ணன்
மையுங் கொண்டுதரும்.
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்த்து செம்பஞ்சு தரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்வமடீ! ...
குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
குழைத்து மார்பெழுத,
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்.
பங்கமொன் றில்லாமல் - முகம்
பார்த்திருந் தாற்போதும்.
மங்கள மாகுமடீ! - பின்னோர்
வருத்த மில்லையடி! . ...
கவிதையை எழுதியவர் சுப்ரமணிய பாரதியார். கண்ணன் பாடல்களில் “கண்ணன் என் காந்தன்” என்ற பாடல். இதை பாம்பே ஜெயஸ்ரீ பாடி “பிருந்தாவனம்” என்ற குறுந்தட்டு தொகுப்பில் வெளியிட்டுள்ளார். கேட்க கற்கண்டைக் காட்டிலும் அதிகமாக இனிக்கிறது.
2 comments:
வருக! :)
இந்தப் பாடல் இப்போது கேட்கக் கிடைக்கிறது. http://www.youtube.com/watch?v=etx0F3kf4pI
Post a Comment