அமானுஷ்யம். நாம் ஒன்றைப் பற்றி நினைக்கும் போது அது உடனே நடந்து விட்டால் ஒரு மாதிரி உடல் திடுக்கிடுகிறதே அது நடந்தது எழுத்தாளர் சுஜாதாவின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட போது. அதற்கு சில தினங்களுக்கு முன்னர் நற்செய்தியாளர் டி.ஜி.எஸ். தினகரன் மரணமடைந்த செய்தி வந்தது. டி.ஜி.எஸ். அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன். அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். மெல்லிய இறகுகளை வைத்து விசிறுவது போன்ற பேச்சு அவருடையது. அவர் மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னால் அவரது பாடல்கள் கொண்ட குறுந்தகடு ஒன்று கிடைத்தது. அதை என் ஐ-பாடில் வைத்துக் கேட்கும் போது அவரது குரலின் பரிவும், அது ஆன்மாவில் ஏற்படுத்தும் கிளர்ச்ச்சியும் என்னை பிரமிப்படைய வைத்தது. ஒரு முறை விகடனில் எழுதிய கட்டுரையொன்றில் சுஜாதா தமிழில் சிறப்பான பேச்சாளர்கள் ஒலியைல்லாம் பதிந்து, தொகுத்து, பராமரிக்க வேண்டும் என்றும் americanrhetoric.com என்ற தளம் அப்படிச் செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதில் சிறந்த பேச்சாளர்கள் என்று வரிசைப்படுத்திவர்களில் டி.ஜி.எஸ். தினகரனும் அடக்கம். தினகரன் இறந்த போது சுஜாதாவின் கட்டுரைதான் என் நினைவுக்கு வந்தது. அந்த நினைவினூடாகவே, சுஜாதாவிற்கும் டி.ஜி.எஸ் வயதிருக்குமே, அவருக்கும் உடல்நலக் குறைவுகள் உண்டே, இன்னும் அவருக்கு எத்தனை ஆண்டுகளோ என்ற நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சில நாட்களில் சுஜாதா மறைவான போது பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
இளவயதில் சுஜாதாவின் தீவிர வாசகனாயிருந்தேன். விகடன் மாணவ பத்திரிகையாளரில் பயிற்சி பெற்ற போது அப் பயிற்சி முகாமில் அவர் பேசினார். அதுவே அவரை முதலும் கடைசியுமாகப் பார்த்தது. காலப் போக்கில் அவரது படைப்புகளைத் தேடிப் பிடித்து வாசிப்பது குறைந்தது என்றாலும், அவர் தமிழ் கலாசார உலகில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றிய எண்ணங்களில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எதை எழுதினாலும் சுவாராசியமாக எழுதுவது, யாரும் முயற்சிக்காத விஷயங்களையெல்லாம் படித்தோ, அனுபவித்தோ தெரிந்து கொண்டு அதைப் பற்றி எழுதுவது, எல்லா வகை எழுத்துக்களையும் எழுதிப் பார்ப்பது, சக கலைஞர்களை ஊக்குவிப்பது என்று ரொம்ப தீவிரமாக இயங்கிய ஒரு நபர் அவர். சமீபத்தில் நானும் ப்ரகாஷும் சான் ஃப்ரான்சிஸ்கோவில் காரில் போகும் போது டாலஸ் நகரம் பற்றிய ஒரு பேச்சு வந்தது. ப்ரகாஷ் அங்கு கொஞ்சக் காலம் இருந்திருக்கிறான். “அங்க ஜான் கென்னடி சுட்ட இடத்தை சுற்றுலாப் பயணிகள் போய் பார்க்கிற மாதிரி செய்திருக்கிறார்கள். அமெரிக்கர்கள் பண விஷயத்தில் கெட்டி. அதற்கும் பணம் வசூலித்து விடுகிறார்கள்” என்றான். "தெரியுமே, சுஜாதா எழுதியிருக்கிறாரே:
கென்னடியைச்
சுட்டுக் கொன்ற ஜன்னலின் வழியே
எட்டிப் பார்க்க
துட்டுக் கேட்கிறார்கள்” என்றேன்.
அதுதான் சுஜாதா.
மூன்றாவது மரணம் வேலுப்பிள்ளை பிரபாகரனுடையது. அந்த சமயம் இந்தோனேசியாவின் சுறபயா நகரில் இருந்தேன். சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஆஃப்கானிஸ்தானில் உள்ள விஷயம் தெரிந்த ஒரு நண்பர் மூலமாக இலங்கைப் படையினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டார்கள்; முடித்து விடுவார்கள் என்று அறியக் கிடைத்தது. இருப்பினும் செய்தி வந்த போது மனது உடைந்து விட்டது. இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. பிரபாகரனது வழிமுறைகளில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மாபெரும் வீரன், ஓப்பீடு இல்லாத அறிவுக் கூர்மை கொண்ட ஒரு நபர், தன்னுடைய இலட்சியத்திற்கு நூறு சதவிகிதம் உண்மையாக வாழ்ந்தவர், அவர் என் தமிழ் பேசும் ஒருவர் – அவர் நிரந்தரமாக இந்த உலகை விட்டுச் சென்று விட்டார் எனும் போது எழும் ஆற்றாமையை தேற்ற முடியவில்லை. கூடவே, சிங்களவர்கள் மட்டும் நீதியோடு நடந்து கொண்டிருந்தால் பிரபாகரன் இலங்கையை எந்த அளவிற்கு உயர்த்தியிருக்கலாம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. பிரபாகரன் மறைந்த நாள் தமிழர்களுக்கு தரும் துக்கத்தை விட, தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒரு மாபெரும் வாய்ப்பை கைவிட்ட சிங்களவர்களுக்கு அதிக துக்கத்தைத் தர வேண்டும். அதை அவர்கள் ஒரு நாள் உணருவார்கள். It will probably be too late, then.
2 comments:
மரணம் பற்றிய நல்ல சிந்தனை.
http://padukali.blogspot.com/2009/12/blog-post.html
மேலே உள்ள சுட்டி மரணம் பற்றிய எனது ஒரு பதிவு. நேரம் இருந்தால் ஒரு பார்வை பாருங்களேன்.
நேர்மையாய் திடமாய் எழுதிய பதிவு.
தங்கள் தலைப்பின் தாக்கம் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. ’அப்போதிலிருந்து இப்போ வரை பாதித்த மூன்று மரணங்கள்’
அப்படி என்னை பாதித்த மரணங்கள் என்ன என்ன என என்னை பட்டியலிடச் சொல்லி மனசு திரும்ப திரும்ப கேட்கிறது.
எனினும் இந்த மூன்று சாவுகள்தான் தங்களை பாதித்ததா. ?????
எனக்கு அவசரமாய் சில சாவுகள் மனதில் வருகிறது.
1. ஒரு நெருங்கிய உறவினர் நாப்பது வயதில் இறந்தார். அப்போது எனக்கு வயது 12. மரணத்தை அருகில் இருந்து பார்க்கும் முதல் சந்தர்ப்பம், சுய சிந்தனை எனும் பகுத்தறியும் குணம் முளை விடும் நேரம். கலவரத்துடன் பயத்துடன் பாதித் தூக்கத்தில் எழுப்பி எழுப்பி விட்டது.
2. முன் பின் அறிமுகமில்லாத முகமில்லா ஒரு மனிதர், பள்ளி முடிந்து வரும் போது யாரோ ஒருவனின் அருவாளில் தன் உயிர் துறந்து ரத்தச் சேற்றில் விழுந்து கிடந்தது என்னை உலுக்கிய இன்னொரு சாவு. அப்போது எனக்கு ஒரு 5 வயது இருந்திருக்கலாம்.
மனதில் தோன்றியதை சொன்னேன், தவறிருந்தால் மன்னிக்கவும்
பிரபாகர்
பிரபா, உன் வரவைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. படுக்காளி என்ற போதும் பொறி தட்டவில்லை. இனிய அதிர்ச்சிக்கு மிக்க நன்றி.
தெரிந்தவர்கள் எல்லாரது மரணங்களும் எனக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்துகின்றன. வயதானவர்கள் மரிக்கும் போது மனம் அதை ஏற்றுக் கொள்கிறது. அவர்களுக்கும் நமக்கும் இடையே நடந்த பரிமாறல்களை மனம் விடாது அசை போடுகிறது. இளவயது மரணங்கள் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.
கேரி ஷ்வார்ட்ஸ் அரிசோனா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். இறந்தவர்களின் ஆவிகளோடு பேசுகிறேன் என்கிற பேர்வழிகள் உண்மையைத்தான் சொல்லுகிறார்களா என்ற ஆராய்ச்சியில் இறங்கி, அவர்களில் சிலர் உண்மையைத்தான் சொல்லுகிறார்கள்; இறந்தவர்கள் நம் கூடவே இருக்கிறார்கள், நம்மோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று அறிவியல் முறைகளின் மூலமாக நிரூபித்திருக்கிறார்.
"மூன்று கடிதங்கள்" என்ற பதிவில் நீயும் அண்ணனும் பரிமாறிய கருத்துக்களைக் கண்டேன். மரணம் குறித்த உங்களிருவரின் தெளிவும் எனக்கு கிடையாது. "இப்போது கண்ணாடியில் காண்பது போல் காண்கிறோம்" (பவுலின் காலத்தில்தான் ரோமர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கண்டு பிடித்தார்களாம். அது தெளிவில்லாமலேயே தோற்றத்தைக் காட்டுமாம்). "அப்போது முகமுகமாய்க் காண்போம்". அதுவரைக்கும் தேடலே என்னைத் திருப்திப்படுத்த வேண்டும்.
பி.கு. "அப்போதிலிருந்து இப்போது வரை" என்பது 2008-2009 என்ற குறுகிய காலமே. அதிலும் இத் தலைப்பிலான முதல் பதிவில் சொன்னது போல பொது வெளியில் சொல்லக் கூடிய விஷயங்களே.
Post a Comment