Monday, November 19, 2007

ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன், நாலு மடங்கு ரேட்டுக்காரன்

பெங்களுர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து கேரளா வழியாக பெங்களூர் செல்கிறது.

அட்டவணையில் குறிப்பிட்டபடியே காலை 10:55க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது.

பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன. நானிருந்த பெட்டியில் நானும், கன்னியாகுமரியிலிருந்து ஏறியிருந்த ஒரு வட இந்தியக் குடும்பம் மட்டுமே. பகல் நேர பயணம் என்பதால் அலுவல் சம்பந்தமாக வாசித்து குறிப்பெடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து விரித்துப் போட வசதியான தனிமை. மதியம் 12:30க்கு திருவனந்தபுரம் வந்தடைந்தது. தூரம் 90 கி.மீ. என்றாலும், நெரிசலான சாலை வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் அடைய இப்போதெல்லாம் இரண்டு மணி நேரங்கள் ஆகி விடுகிறது.

திருவனந்தபுரத்தில் கொஞ்சம் பேர் ஏறினர். வர்கலாவில் எதிர்பார்த்தது போலவே ஒரு இளம், வெள்ளைக்கார தம்பதி ஏறியது. முதுகில் சுமந்து வந்த பெரு மூட்டைப் பொதியை இறக்கி வைத்து விட்டு, ஒரு டான் ப்ரௌன் நாவலையும், ஒரு ப்ரிட்டானியா பிஸ்கட் பொட்டலத்தையும் பிரித்துக் கொண்டு இரண்டையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்தது. கொல்லம் போன்ற தெரிந்த ஊர்கள் வழியாகவும், கருநாகப்பள்ளி போன்ற தெரியாத, திகிலூட்டும் பேர்கள் கொண்ட ஊர்கள் வழியாகவும் பயணம் தொடர்ந்தது. சங்கனாசேரி வரை எனது நீண்ட இருக்கைக்கும், எதிரேயுள்ள இருக்கைக்கும் போட்டியில்லை.

சங்கனாசேரியில் ஒரு பிரமாண்டமான சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகளோடு ஏறினார். எனக்கு எதிரான இருக்கை அவர்களுக்கு. துருதுருவென்று இருந்த பையன் – 4 வயதிருக்கும் – பெயர் ஜோ. சற்று அமைதியாக 7 வயதான பெண் – பெயர் ரீட்டா. உள்ளே நுழைந்து, அமர்ந்த அடுத்த நொடி பேச ஆரம்பித்து விட்டான் ஜோ. ரீட்டாவும் அதிகம் தாமதிக்கவில்லை. ரீட்டா கையில் ஒரு இளம்சிவப்பு நிறக் காகிதம். அதில் பெங்களூர் எக்ஸ்பிரசின் கால அட்டவணை அச்சிடப்பட்டிருந்தது. மிகத் தெளிவான ஆங்கிலேயே உச்சரிப்பில்:

“ஜோ உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நான் இதில் இந்த ரயில் இது வரை கடந்து வந்த நிலையங்களையெல்லாம் அடித்து விடுகிறேன், சரியா?” என்று சொல்லி விட்டு, ஒவ்வொரு நிலையமாக அடித்துக் கொண்டே வந்து, சரி அடுத்த நிலையம் “கோட்டயம்” என்றாள். பிறகு அடித்து விட்ட நிலையங்களையெல்லாம் இந்தியில் எண்ணி விட்டு “அம்மா, இந்த ரயில் 20 நிலையங்களைத் தாண்டி வந்து விட்டது” என்றாள்.

“கோட்டயத்திற்குப் பிறகு பெங்களூரா?” என்றான் ஜோ.

“இல்லை, நாளைக் காலையில்தான் பெங்களூர்”

“நான் மேலே போகலாமா?”

“போகலாம், ஆனால் மேலேயும், கீழேயும் போய் விட்டு வந்து விட்டு இருக்கக் கூடாது”

“வந்தால்?”

“அப்புறம் மேலே அனுப்ப மாட்டேன்”

பிள்ளைகள் இருவரும் மேலே செல்ல எத்தனிக்க

“இன்னொரு விஷயம் மேலே சிவப்பு நிறத்தில் சங்கிலி ஒன்று இருக்கிறதல்லவா. அதைத் தொடக்கூட முயற்சி செய்யாதே”

“தொட்டால்?”

“ஒருவர் வந்து உன்னை ரயிலிலிருந்து தூக்கி வீசி விடுவார்”

பிள்ளைகள் மேல் பெர்த்திற்குப் போனார்கள். அம்மா என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

“பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்?”

“டெல்லியில்”

“ஓ…”

எனது ‘ஓ’வில் இருந்த குழப்பம் அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். “இங்கிலாந்தில் நெடுநாட்கள் இருந்து விட்டு இந்தியா திரும்பி ஆறு மாதமாகிறது”

“இந்திய வாழ்க்கை எப்படியிருக்கிறது?”

“பழகத் தொடங்கி விட்டோம்”

“சொந்த ஊர் சங்கனாசேரியா?”

“ஆமாம். பெங்களூர் வரைக்குமா?”

“இல்லை, எர்ணாகுளம் வரையில்தான். அங்கு ஒரு தொழில் ரீதியாக ஒரு பட்டறை”

எர்ணாகுளம் வந்தது.

எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். தமிழ்நாட்டில் இருப்பது போல் “சார் ஆட்டோ வேணுமா?” தொந்தரவுகள் கிடையாது. வேண்டுமென்றால் ஆட்டோவை அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

“சாருக்கு எவிட போணும்?”

“ரீஜெண்ட் அவென்யூ”

என் சூட்கேஸை வாங்கி ஆட்டோவில் வைத்தார் ஓட்டுநர். நான் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. மீட்டர் போடவில்லை.

“மீட்டரா, ஃபிக்சட் ரேட்டா?”

“30 ருப்பீஸ்”

தமிழ்நாட்டில் 30 ருப்பீஸ் என்றால் 5 நிமிடப் பயணம். கேரளாவில் சுமார் 10 நிமிடமாவது ஆனது.

ரீஜண்ட் அவென்யூ எம்.ஜி. ரோட்டில் இருக்கும் ஒரு நான்கு நட்சத்திர விடுதி. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் பிரமாதமாக இருந்திருக்க வேண்டும். இப்போது வயது தெரிகிறது. விசாலமான, வசதியான, தூய்மையான அறைகள். குறை சொல்ல முடியாத, ஆனால் விஷேஷமில்லாத உணவு.

சனிக்கிழமை இரவு பட்டறைக்கு வந்தவர்களையெல்லாம் எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து புறப்பட்ட ஒரு படகில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள். கப்பல்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியில் ரசிக்க என்று அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால், குளிருமில்லாமல், அனலுமில்லாமல் நிலவிய மிதமான சூழல் நன்றாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் சூடாக சுட்டு பரிமாறப்பட்ட ஆப்பங்களை மீன் கறியோடு வெட்டினார்கள்.

ஞாயிறு மாலை கொச்சியின் பிரதான சுற்றுலாத் தளங்களான மட்டாஞ்சேரிக்கும், ஃபோர்ட் கொச்சினுக்கும் சென்றேன். எர்ணாகுளத்தையும், மட்டாஞ்சேரியையும் பெரியாறின் இரண்டு கிளைகள் பிரிக்கின்றன. மட்டாஞ்சேரி ஒரு பெரிய மீனவ கிராமம். அதன் ஒரு புறத்தில் யூதர்கள் வசித்து, காலி செய்த தெருக்களில், வீடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கலைப் பொருட்கள், புராதனப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறியிருக்கின்றன. பல கடைகள் வழக்கமான மரச்சிற்பங்கள், கம்பளங்கள், பாஷ்மினா கம்பளி போர்வைகள் விற்கின்றன. சிலவற்றில் அதி நூதனமான பொருட்கள் இருக்கின்றன. ஒரு கடையில் 100 அடி நீளமான ஒரு சுண்டன் வள்ளத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு கடையில் உலகத்திலேயே பெரிய வார்ப்பு என்று ஒரு மகா பெரிய உருளியை செய்து வைத்திருக்கிறார்கள். அதில் அல்வா கிண்டினால் சுண்டன் வள்ளத்துக்காரர்கள்தான் அவர்களது துடுப்பை வைத்து கிண்டி விட வேண்டும். அம்மாம் பெரிசு.

ஃபோர்ட் கொச்சினின் கடற்கரையில் வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம். சீன மீன் பிடி வலைகளுடன் கடல்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. கரையில் பல பழைய கட்டிடங்கள் விடுதிகளாக உருமாறி விட்டன. ஐரோப்பாவில் இருப்பது போல் உணவு விடுதிகளுக்கு வெளியில் உணவுப் பட்டியலை விலைகளுடன் அச்சிட்டு பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் இரண்டு இத்தாலிய உணவு வகைகள், இரண்டு ஃப்ரெஞ்ச் வகைகள், இரண்டு பஞ்சாபி தினுசுகள், சில கேரளா தினுசுகள் என ஒரு அயிட்டத்துக்கு ரூ. 200 முதல் 800 வரை இருக்கின்றன.

நண்பரொருவர் எர்ணாகுளத்தில் பாரத் டூரிஸ்ட் ஹோம் என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கே சாப்பிட்டுப் பார் என்று சொல்லியிருந்ததால் அதை முயற்சி செய்தேன். அது வெஜிடேரியன் என்று தெரியாது. இரவு பஃபே, அதுவும் சாப்பாடு என்று தெரியாது. இரவு முழுச் சாப்பாடு சாப்பிட விரும்பாததால், அந்த விடுதிக்குள்ளேயிருக்கும் காஃபி ஷாப்பில் சப்பாத்தி சாப்பிட்டேன். மிக மிருதுவான சப்பாத்திக்கு ஒரு கொள,கொளா வெண்டைக்காய், உருளைக்கிழங்கு குருமா வைத்து கெடுத்திருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி உணவுப் பொருட்களில் எனக்கிருக்கும் விலைவாசி ஞானக் குறைவை சுட்டிக் காட்டியிருந்தபடியால் இந்த விடுதியில் 3 சப்பாத்தி கொண்ட ஒரு செட் ரூ 35, ஒரு காஃபி ரூ 15 என்பதையும் மனதில் குறித்துக் கொண்டேன்.

இரவு 11 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். 10:30க்கு அவென்யூ ரீஜெண்டில் இருந்து புறப்பட்டேன். ஆட்டோக்காரரிடம் விலை பேசவில்லை. வருவதற்கு ரூ 30. இரவு பத்துக்கு மேல் கிளம்புவதால் 10ஓ, 20ஓ கூட இருக்கலாம் என்று நினைத்தேன். ரயில் நிலையம் சேர்ந்தவுடன் 50 ரூபாய் தாளை நீட்டினேன். எந்த வித தயக்கமும் இல்லாமல் மீதி 20 ரூபாயை எடுத்து நீட்டினார்.

காலை 5:30க்கு நாகர்கோவில். நிலைய வாசலுக்கு வருவதற்கு முன்னே “சார், ஆட்டோ வேணுமா?” என்று ஆரம்பித்து விட்டார்கள். கோட்டாறிலிருந்து வெட்டூர்ணிமடம் செல்ல ரூ. 60. இதை விட இரு மடங்கு தூரத்திற்கு கேரளாவில் பாதி விலை. கேட்டால், “காலை வேளை, சவாரி கிடைக்காது, பெட்ரோல் விலை ஏறி விட்டது, மற்ற ஊர்களையும் இங்கேயும் ஒப்பீடு செய்யாதீர்கள்” என்பார்கள். நம்மூர் ஆட்டோக்காரனை விட பக்கத்து மாநில ஓட்டோக்காரன்தான் நியாயமானவனாக பட்டான் எனக்கு.
Posted by Picasa

3 comments:

Anton Prakash said...

Not sure what to comment on the auto fare comparison. But, I was amused to read about the rich cultural history of Kochi. Is there any book on the Jewish life there ? Heard someplace many have migrated to Israel ? Is there any recording of the life and exodus ?

delphine said...

மும்பையின் ஆட்டோக்காரர்கள் தான் மிக நல்லவர்கள். ஒரு காசு மேல் கேட்கமாட்டார்கள். சென்னையில், பிச்சு பிடுங்கி விடுகின்றனர். நல்லதொரு அனுபவம். வாசிக்க பிடித்திருந்தது. நன்றி

Joe said...

சென்னை ஆட்டோகாரகளை திருத்தவே முடியாது.

கட்டுபடியாகவில்லைஎன்றால் கால் டாக்ஸி-யில் போய்யா என்று மரியாதையோடு சொல்வார்கள்!