Monday, November 12, 2007

தீபாவளி கொளுத்திய பட்டாசு நினைவுகள்

நவம்பர் 8, 2007 தீபாவளி

அதிகாலையில் தெருவில் பட்டாசுகள் முழங்கத் தொடங்கி விட்டன. பிள்ளைகள் வழக்கம் போல் வந்து “நாம எப்ப பட்டாசு விடப் போகிறோம்?” என்று ஆரம்பித்து விட்டார்கள். நானும் வழக்கம் போல் “எதுக்காக பட்டாசு?” என்று பதில் புராணத்தை தொடங்கி விட்டேன். வழக்கமான பட்டாசு விரோத காரணங்கள்தான்:


  • காதைக் கெடுக்கும் ஒலி
  • நுரையீரலை நாசமாக்கும் புகை (இந்த ஆண்டில் அவர்களது
  • பாடத்திலேயே க்ரீன் ஹவுஸ் எஃபக்ட், க்ளோபல் வார்மிங் பற்றி சொல்லப்பட்டிருப்பதால் கூடவே அறிவியல் ரீதியான ஒரு பயமுறுத்தலையும் சேர்க்க முடிந்தது)
  • தலைவலியைக் கொடுக்கும் நாற்றம்
  • தீ விபத்து நடந்து உடலோ, பொருட்களோ கருகுவதான அபாயம்

“உங்கம்மாவுக்கு பென்சில் மத்தாப்பு வெடிச்சே கை அப்படி பொத்துட்டுதே” என்று பயமுறுத்த முயன்றால் “ஒரு தடவ அப்படி நடந்தா, எல்லா தடவயும் அப்படியா நடக்கும்?” என்ற மனைவியின் குறுக்குச்சால் காதில் விழாத மாதிரி நடித்துக் கொண்டு காரணங்களை தொடர்ந்தேன்.

  • பட்டாசு வெடிப்பது என்பது காசைக் கரியாக்குவது
  • டம, டம என்று காதைப் பிளக்கும் ஒலியை ரசிப்பது நாகரீகமடைந்த மனிதனின் ரசனையில் இடம் பிடிக்காது

என்று பட்டியல் நீண்டது.

பதின்ம வயதாகப் போகும் புதல்வனுக்கு தந்தையருளும் மந்திரங்களின் மகிமை குறைவது சகஜமென்பதால், நாம் சொல்வதை அவ்வப்போதாவது மதிப்பு கொடுத்து கேட்கும் ஒன்பது வயது மகளையாவது மாற்றி விடலாமென்றால், அவள் “அதாவது டாடி, அந்த திரில தீ வெச்சுட்டு, பட்டாசு வெடிக்கற வைக்கும் ஒரு த்ரில்லிங்கா இருக்கும்ல அதுக்குத்தான் பட்டாசு வெடிக்கிறோம்” என்று புதுசாக வெடியைக் கொளுத்திப் போட்டாள்.

வழக்கம் போலவே இந்த பட்டாசு விவாதம், “சரி, நம்ம சாயங்காலம் பட்டாசு வெடிப்போம்” என்ற தீர்ப்போடு நிறைவுக்கு வந்தது.

அதென்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே பட்டாசுகளின் மீது ஆர்வமில்லாமலேயே நான் வளர்ந்து விட்டேன். சின்ன வயதில் “கைல கால்ல வெடிச்சிடப் போகுது” என்று எங்கம்மா எப்பவும் எச்சரித்து, பொட்டு வெடி தவிர எதையும் வெடிக்க அனுமதிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், வளர்ந்த பிறகும் பட்டாசு மீது ஒரு நாட்டம் வரவேயில்லை.

நான் ஏ.ஐ.டி.யில் படிக்கும் போது அங்குள்ள தமிழ் சங்கத்தினரும், இந்திய சங்கத்தினரும் தீபாவளியை விமரிசையாக கொண்டாடுவர். ஏ.ஐ.டியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நாடு/கலாசார சங்கங்களில் முதன்மையானது தமிழ் சங்கமே. இலங்கை, இந்திய, மலேசிய தமிழர்களோடு, அங்கிருந்த சொற்ப மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்களோடு ஜே, ஜே என்று எப்போதும் தமிழ் சங்கம் இயங்கும். ஏ.ஐ.டி நடுவில் எட்டு கோண அமைப்பில் இருக்கும் “கொரியா ஹவுஸ்” எனப்படும் கட்டடம் ஏறக்குறைய தமிழ் சங்கத்தின் குத்தகையில்தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். வாரத்தில் மூன்று நாள், மாலை 6-9 அந்த கட்டடத்தில் தவறாமல் தமிழ்ப் படம் போடுவார்கள் நம் மக்கள். இது தவிர மாதம் ஒரு முறை கூட்டம், இரவுணவு என்று அசத்துவார்கள். பொங்கல் என்றால் பாங்காக்கில் இருக்கும் தமிழர்களும் வந்து இணைந்து கலைநிகழ்ச்சிகள், மதிய உணவு, என்று செய்து கோலாகலம் பண்ணி விடுவார்கள். சங்கத்தின் பொறுப்பை மூன்று மாதத்திற்கொரு முறை மாற்றியமைக்கப்படும் குழு ஒன்று கவனித்துக் கொள்ளும்.

நான் பொறுப்புக் குழுவிலிருக்கும் போது வந்த தீபாவளியில் பெரிய அளவில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது (இந்த முடிவிலிருந்து அந்தப் பொறுப்புக் குழுவில் என் குரலுக்கு இருந்த மதிப்பையும், மரியாதையையும் அறிந்து கொள்வீர்களாக). பொறுப்புக் குழுவிலிருந்த மற்றவர்களில் சிலர்: அன்புமொழி (சேலத்தைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஜப்பான் சென்று அங்கேயே தங்கிவிட்டதாக கேள்வி), ராமநாராயணன் (கோவையைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஓக்லஹாமா சென்று அங்கேயே வெகு நாட்களாக இருந்தார், இப்போது தொடர்பில்லை), மற்றும் பரம் (குலாலம்பூரைச் சேர்ந்த இவர் இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை) ஆகியோருடன் நானும் பட்டாசு வாங்கும் முயற்சியில் இறங்கினோம்.

முதலாவது ஏ.ஐ.டி.க்கு தெற்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் ரங்சிட் என்னும் இடத்தில் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அது பாங்காக்கின் பாஹ்யோலிதின் துரித நெடுஞ்சாலை டான் முவாங் விமான நிலையத்தோடு நின்று விட்ட காலம். இப்போது அந்த சாலை வடக்கே ஏ.ஐ.டியையும் தாண்டி எங்கோ சென்று விட்டது. விளைவாக ரங்சிட் ஒரு பெரிய நகராக உருப்பெற்று விட்டது. ஆனால் அந்தக் கால ரங்சிட் ஒரு சிறு கிராமம். உள்ளே இருபது, இருபத்து ஐந்து கடைகள் கொண்ட ஒரு தெரு உண்டு. அங்கே பட்டாசைத் தேடிப் போனோம்.

கடைத் தெருவுக்கு போன பிறகுதான் எங்களுக்கு ஒரு பெரிய ஞானோதயம் ஏற்பட்டது. அது, பட்டாசிற்கு தாய் மொழியில் (அதாவது தாய்லாந்தின் மொழியில்) பெயர் என்ன என்பதை விசாரிக்காமலேயே வந்து விட்டோம் என்பது. பாங்காக் நகரிலேயே ஆங்கிலம் பேசுபவர்களை விளக்கெண்ணெய் ஊற்றித்தான் தேட வேண்டும். ரங்சிட்டில் ஆங்கிலம் புரிந்து கொள்பவர்களைக் கண்டுபிடிப்பதை இன்றைய இளைஞர்களின் பாஷையில் சொல்லப் போனால்: “சான்சே இல்லை.”

சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், முடிந்த வரை முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு கடையில் ஏறி:

“கூன், க்ராக்கர்ஸ் மீ மாய்னா?” (ஐயா, பட்டாசு இருக்கிறதா?”

“அலோய்னா?” (அப்படின்னா? – இதைக் கேட்ட விதம் “என்ன உளறுகிறாய்?”)

“க்ராக்கர்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை சொன்னால் கேட்பவருக்கு ஆங்கிலம் புரிந்து விடுகிற மாதிரி நாம்.

“க்ராக்கார்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை நாம் சொன்னதை திருப்பிச் சொன்னால் ஆங்கிலம் புரிந்து கொள்கிற மாதிரி அவர்.

இது சரிப்படாது என்று அன்புமொழிக்கு தோன்றி விட்டது.

“கூன்” (ஐயா) என்று கடைக்காரரை விளித்து விட்டு ஊமை பாஷையில் பேச ஆரம்பித்து விட்டார். ஒரு விரலை நீட்டி (அதுதான் பட்டாசாம்), பிறகு ஒரு கை தீப்பெட்டி, மறு கையை அதில் உரசி தீக் கொளுத்துகிறமாதிரி பாவலா செய்து, விரலில் வைத்து, “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரரின் இரு புருவங்களின் இடையே போடப்பட்ட வியப்பு முடிச்சு இந்தக் குரங்கு சேட்டையைப் பார்த்த பிறகும் அவிழவில்லை. அவர் “இந்த கிறுக்கனுங்க என்னதான் சொல்ல வரானுங்க?” என்ற கடுமையான சிந்தனையில்தான் இருந்தார்.

ராமநாராயணனுக்கு இதை ஸ்கெட்ச் போட்டு காண்பித்தால்தான் புரியும் என்று தோன்றியது. ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். அன்புமொழி வாயால் சொன்னதை படமாக வரைந்தார். தீ வைத்து, பட்டாசு வெடித்ததை படமாக விளக்கும் போது, அன்புமொழி மீண்டும் ஒரு எஃபக்டுக்காக “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரர் மூளையிலும் அந்த நேரம் பட்டாசு வெடித்திருக்க வேண்டும். அவர் முகம் 1000 வாட் பல்பு போட்ட மாதிரி பிரகாசமானது.

“ஓ, பட்டாஸ்?” என்றாரே பார்க்கலாம்.

அடப்பாவி பட்டாசுக்கு தாய்லாந்திலும் பெயர் பட்டாசுதானா என்று நாங்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்தக் கடையில் மட்டுமல்ல, ரங்சிட் முழுக்க பட்டாஸ் கிடைக்கவில்லை என்பதும், பாங்காக் சென்று சைனா டவுணிலோ, வேறெங்கோ சென்று பட்டாஸ் வாங்கி தீபாவளிக்கு வெடித்தோம் என்பதும் இந்த தீபாவளி நினைவில் பின்குறிப்புகள்.

No comments: