சா பாலோவின் ஓரளவு வசதி மிக்க குடியிருப்பு பகுதிளில் ஒன்றில் வசிக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். வெள்ளிக் கிழமை காலை 9 மணி. மேக மூட்டமும், குளிரும் அகன்று சுகமான வெம்மை பரவும் வேளை.
நண்பர் என்னிடம், “வா என்னுடன். உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றார். சென்ற இடம் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெரு. ஒவ்வொரு வெள்ளியும் அந்தத் தெரு உழவர் சந்தையாக மாறி விடுகிறதாம்.
பிரசில் -- காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மொச்சை மற்றும் கடலை வித்துக்கள், இறைச்சி, மீன் -- என்று எல்லா விதமான உணவு உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகும். இங்கும் எல்லா இடங்களையும் போலவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. சா பாலோவில் உணவின் விலை அதிகமாக இருப்பதை உணவகங்களிலும், செல்ல நேரிட்ட ஒரு நடுத்தர அங்காடியிலிருந்தும் அறிந்து கொண்டேன்.
சா பாலோ அரசு உழவர் சந்தை என்று ஒரு இடத்தை நிரந்தரமாக ஏற்படுத்தாமல், நகரிலுள்ள பல தெருக்களில் உழவர் அமைப்புக்கள் வாரத்தில் ஒரு நாள் சந்தை ஏற்படுத்த ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. சா பாலோ போன்ற பெரிய நகரில் இந்த ஏற்பாடு உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. நுகர்வோர் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உழவர்கள் ஒரு பரந்த சந்தையில் பங்கு கொள்ள முடிகிறது. ஆனால், உழவர்கள் ஏதாவது வாகனங்களை சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்துக் கொள்ள வேண்டி வரும். நம்மூர் போல் பேருந்தில் கொண்டு செல்ல முடியாது.
பச்சைப் பசலேன்று காய்கறிகளும், வித, விதமான பழங்களும் சந்தையில் குவிந்திருந்தன. இறைச்சி விற்க இரு கடைகள் இருந்தன. ஒன்றில் விசா க்ரெடிட் கார்டு வசதி உண்டு. மீன்கள் விற்க ஒரு கடை. சாளை மீன்கள் கிலோவுக்கு 4.80 ரியால்கள், ஏறக்குறைய 100 ரூபாய். இறால்கள் ஏறக்குறைய 900 ரூபாய். ஆனால் காய்கறிகள், பழங்கள் விலை ஏகத்துக்கும் மலிவு. ஒரு டஜன் ஆரஞ்சு வாங்கினேன். விலை 60 ரூபாய். ஆனால் விற்றவர் 40 ரூபாய் போதும் என்று சொல்லி விட்டார். கொசுறாக ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்தும் கொடுத்தார்.
எங்கு இருந்தாலும் உழவர்களுக்கு ஒரு குணம் இருக்கிறது: தங்களது உழைப்பின் பலனை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பார்த்து மகிழ்வது.
No comments:
Post a Comment