Monday, September 10, 2007

தன்னந்தனியாய் ஒரு தேசம்

 

பிரசிலின் பரப்பளவு சுமார் 85 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவை விட 2.5 மடங்கு பெரிதான இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 18 கோடியே.

தென்னமரிக்காவின் மற்ற நாடுகளனைத்தும் ஸ்பானிஷ் பேச, பிரசில் மட்டும் போர்ச்சுக்கீஸ் சம்சாரிக்கிறது. போர்ச்சுக்கீஸில் வந்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கொரியா நாடுகளிலிருந்து குடிபுகுந்தவர்களும், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கர்களும், பூர்வீகக் குடிமக்களும் பெரும்பாலும் இனம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை மறந்து வசிக்கும் தேசம் பிரசில்.

மொழியில் மட்டுமல்ல, மற்ற பல அம்சங்களிலும் பிரசில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தெளிவாகத் தெரிந்த ஒன்று: பிரசிலின் பெரும்பாலான அமைப்புகளும், நிறுவனங்களும், தொழில்களும், வியாபாரங்களும் பிரசிலியர்களை முன்னிறுத்தி மட்டுமே இயங்குகின்றன. போர்ச்சுக்கல் மொழியில் அல்லாது பிற மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், உணவக பட்டியல்கள், விமான அறிவிப்புகள் ஆகியவை இங்கு வெகு குறைவு. மிக அழகான கடற்கரைகள் கொண்ட வடகிழக்கு நகரங்கள் பிரசிலிய, உள்நாட்டுப் பயணிகளுக்கான சேவைகளை அளிப்பது போன்று, வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை ஊக்கமளிப்பது போல் தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிய போது

“பிரசிலின் கடற்கரைகளுக்கு விடுமுறைக்காக வருபவர்களில் முக்கால்வாசிக்கு மேல் பிரசிலியர்கள். ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம் பேர் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து அதிகம் வருவதில்லை” என்றார்.

அமெரிக்காவிக்காவிற்கும் பிரசிலுக்கும் இடையே ஒரு வித இறுக்கமான உறவு நிலை நிலவுகிறது. அமெரிக்கர்கள் விசா எடுத்து செல்ல வேண்டிய வெகுசில நாடுகளில் பிரசிலும் ஒன்று. பிரசிலியர்களுக்கு ஐரோப்பா செல்ல விசா அவசியமில்லை. அமெரிக்கா செல்ல தேவைப்படுகிறது. இது பிரசிலியர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, அமெரிக்கர்கள் விசா எடுத்துத்தான் வரமுடியும் என்றாக்கி விட்டார்கள்.

பிரசிலின் ஆதாரம் வேளாண்மை. இங்கிருந்துதான் முந்திரிப் பருப்பு, பப்பாளி, கொய்யா என்று பல தாவரங்கள் ஆசியாவிற்கு வந்தது (பதிலுக்கு இந்தியாவிலிருந்து மாம்பழம் பிரசிலுக்கு சென்றது). கரும்பு, சோளம், சோயா மொச்சை, காப்பி முதலான பல பயிர்களின் உற்பத்தியில் உலகில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றது இந்த நாடு. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விரிந்த பண்ணைகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இறைச்சி வகைகளில் பிரசிலியருக்கு பிரதானமானது மாட்டிறைச்சி. நெல்லூர் இன மாடுகள் கொண்டு வரப்பட்டு இங்கு கலப்பினமாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. கோழி உற்பத்தியில் விரைந்து, வளர்ந்து அமெரிக்காவுடன் போட்டியிடுகிறது இந்த நாடு. மீன், இறால் உற்பத்தியும் விரைந்து, பெருகி வருகிறது.

கரும்பிலிருந்து எரிசாராயம் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது பிரசில். மக்காச்சோளத்திலிருந்து தயாரிப்பதை விட கரும்பிலிருந்து விலை குறைவாக சாராயம் தயாரிக்கலாமாம். பிரசிலின் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் சாராய எரிபொருளும் விற்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 40. எரிசாராயம் லிட்டருக்கு ரூ 20. பெட்ரோல் லிட்டருக்கு 12 கி.மீ. கொடுக்குமென்றால் சாராயம் 8-9 கி.மீ. கொடுக்குமென்கிறார்கள். இப்போது சாராயம் விலை குறைவு என்றாலும், அறுவடை முடிந்து கரும்பு வரத்து குறையும் போது விலை கூடி விடும் என்கிறார்கள்.

வாகனங்களுக்குப் போட்டியாக பிரசிலியர்களும் கரும்பிலிருந்து பெறப்படும் மது வகைகளை குடிக்கிறார்கள். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒருவித ரம் வகை மது கஷாஷா எனப்படுகிறது. இதை எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறை தொட்டுக் கொண்டு, அப்படியே குடிக்கிறார்கள், அல்லது எலுமிச்சங்காய், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போட்டுக் குலுக்கி கப்ரினா என்ற காக்டெயிலாகவும் குடிக்கிறார்கள். ஒரு லிட்டர் கஷாஷா 75-100 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்கள் தொகை, வற்றாத நீர்வளம், மற்றும் இயற்கையின் தாராளமான உயிரின, கனிம வளங்கள் எல்லாம் இருந்தும் பிரசிலில் வறுமை தாராளமாகவே இருக்கிறது. சா பாலோவின் அடுக்கு மாடிக் கட்டங்களின் பின்னால் சேரிகள். முதுகிற்குப் பின்னால் தாக்கும் வன்முறைக் கலாசாரம். சா பாலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற 50 லட்சம்-ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களிலும், பத்திருபது லட்சம் கொண்ட சிறு நகரங்களான சால்வடோர், ஃபோர்ட்டலிசாவிலும், துப்பாக்கி முனையில் வழிப்பறி, கொள்ளை, ஆட்கடத்தல் என்பன பரவலாக நடைபெறுகின்றன. நண்பர் ஒருவர் சமீபத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் துப்பாக்கி தாங்கிய மோட்டார் சைக்கிள்காரர்களால் மிரட்டப்பட்டு பணம் இழந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை விவரிக்கையில்:

“குடிவெறியர்களுக்கும், போதை மருந்து உபயோகிப்பவர்களுக்கும், வேசிகளுக்கும் பிறந்து, ஏழ்மையில் உழலும் இளைஞர்கள்தான் பெரும்பாலும் இந்த வகையான குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். அன்பு, மனித உயிரின் மதிப்பு முதலியவற்றை அறியாத இவர்கள் உயிரைப் பறிக்க சற்றும் தயங்குவதில்லை. இவர்களிடம் மாட்டிக் கொண்டால் கேட்கும் பொருளைக் கொடுத்துவிட்டு தப்புவதுதான் புத்திசாலித்தனம்” என்றார்.

கூடவே, “நாம் மேல்தளத்தில் இருந்து இரவுணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கீழே கடற்கரை சாலையில் ஒரு பெண்ணின் பையை பறித்துக் கொண்டு ஒருவன் ஓடினானே. நீ பார்த்தாயா?” என்றார்.

“காண வேண்டிய காட்சிகளை நீர் எங்கே காட்டுகிறீர்?” என்று அலுத்துக் கொண்டேன்.

இரவுணவு முடித்து விட்டு விடுதியை நோக்கி சென்ற போது சாலையில் ஓரிடத்தில் தனியாக நின்றிருந்த ஒரு இளம் பெண்ணைச் சுட்டிக் காட்டி “காட்ட வேண்டிய காட்சிகளை சுட்டிக் காட்டவில்லையென்று நீ அலுத்துக் கொள்வதால் சொல்கிறேன், இந்தப் பெண்
ஒரு வேசி. வாடிக்கையாளரை எதிர்பார்த்து நிற்கிறாள்” என்றார்.

அதற்குள் எங்கள் வாகனம் அவளைப் போலவே தனியாக நின்றிருந்த இன்னொரு பெண்ணையும் கடந்து சென்று கொண்டிருந்தது.

“இவளுமா?” என்றேன்.

“இவனுமா? என்று கேள். இது அறுவை சிகிட்சை மூலம் பெண்ணாக மாற்றம் செய்து கொண்ட ஒரு ஆண்” என்றார்.

ஒரு லிட்டர் கஷாஷா குடித்தால்தான் தலைசுற்றுவது நிற்கும் போலிருந்தது.
Posted by Picasa

5 comments:

கோவி.கண்ணன் said...

ப்ரேசில் பற்றி அருமையான தகவல்கள். அங்கு நடக்கும் பாலியல் தொழில் பற்றி குறிப்பிட்டு இருக்கத் தேவை இல்லை. ஒரு நாட்டைப்பற்றி குறிப்பிடும் போது எல்லா தகவல்களையும் தரவேண்டும் என்று தந்து இருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். பாலியல் தொழில், வறுமை எல்லா நாடுகளில் உள்ளவை தானே.

ஏவிஎஸ் said...

தங்களது கருத்துக்கு நன்றி. இரு வார பயணத்தில் ஒரு நாட்டைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிவதோ, அளிப்பதோ இயலாத காரியம். பிரசிலின் வறுமை, வன்முறைக் கலாசாரம், பாலியல் தொழில் பற்றிய குறிப்புகள் அத் தேசத்தை இழிவுபடுத்தும் நோக்கிலன்று. அங்கு நான் கண்ட, கேட்ட காரியங்களை தொகுத்திருக்கிறேன், அவ்வளவுதான். எனது தொகுப்பின் குவிமையம் என்று ஒன்று உள்ளதென்றால் பிரசில் பற்பல விஷயங்களில் ஒரு தனித்துவமான தேசமாக என் கண்களுக்குப் பட்டதுதான். சால்வடோர் அருகில், கடற்கரையில் நிற்கும் ஒற்றை தென்னை மரத்தின் காட்சி, எனக்கு பிரசிலை உருவகப்படுத்தியதால், அதையே இத் தொகுப்பிற்கும் பயன்படுத்தியிருக்கிறேன்.

சதுக்க பூதம் said...

You didn't mention about amazon?

mglrssr said...

// உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒருவித ரம் வகை மது கஷாஷா எனப்படுகிறது. இதை எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறை தொட்டுக் கொண்டு, அப்படியே குடிக்கிறார்கள், அல்லது எலுமிச்சங்காய், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போட்டுக் குலுக்கி கப்ரினா என்ற காக்டெயிலாகவும் குடிக்கிறார்கள். ஒரு லிட்டர் கஷாஷா 75-100 ரூபாய்க்குள் கிடைக்கிறது. //

மிகவும் உபயோகமான சுவாரஸ்யமான தகவல்.

:-))

மங்களூர் சிவா

ஏவிஎஸ் said...

நன்றி. கஷாஷாவிலிருந்து கைப்ரினா எப்படி தயாரிப்பதென்று தெரிய http://www.maria-brazil.org/caipirinha.htm.

மேற்கண்ட தளத்தில் கஷாஷா கிடைக்கவில்லையென்றால் ரம் உபயோகிக்கலாம் என்று கொடுத்திருக்கிறார்கள். கஷாஷாவும் ரம்மும் கரும்பு சாற்றிலிருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. கஷாஷா எப்படி வித்தியாசம் என்று பிரசிலியர்களிடம் கேட்டால் அவர்களுக்கு பதில் தெரியவில்லை. கஷாஷா ரம்மை விட ஒசத்தி என்று தேசியப் பற்றோடு அடித்து விடுகிறார்கள். சா பாலோவிலிருந்து திரும்பும் போது, விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனைக்காக நீண்ட வரிசை. எனக்குப் பின்னால் நின்றவர் அமெரிக்கர் – பிரசில் நிரந்தர குடிமகன். ஐடி துறையில் பணி புரிகிறார். சா பாலோவில் பார் ஒன்றும் நடத்துவதாகச் சொன்னார். கஷாஷா பற்றிக் கேட்டேன். அது ரம்தான் என்று சத்தியம் செய்தார். “It is probably not very hygienic because it is not filtered well” என்றார். 38% சாராயத்துக்குள் எந்த பாக்டீரியா வாழ முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் drink cachaça at your own risk.