ஈழத்தில் கணவாய் என்றழைக்கப்படுவது தமிழ்நாட்டில் கணவாய், கடம்பா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டிலும், தென் தமிழ்நாட்டிலும் பல மீன்களுக்கு பெயர்கள் வேறுபடுகின்றன (உதாரணம்: வடக்கு – வவ்வால், தெற்கு – வாவல்; வடக்கு – வஞ்சிரம், தெற்கு – சீலா அல்லது நெய்மீன்; வடக்கு – சுதும்பு, தெற்கு – குதிப்பு). அது போல் இதற்கு வடக்கில் பெயர் கடம்பா. தெற்கில் கணவாய். மலையாளத்தில் கணவா.
சிலர் கணவாயை கணவாய் மீன் என்று அழைத்தாலும் இது மீனல்ல. முதுகுத்தண்டு இல்லாத ஒரு கடல் வாழி (Marine invertebrate). கணவாயில் இரண்டு வகை இருக்கிறது – (1) squid எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கண்ணாடி போல தெளிவாக, மெல்லியதாக இருக்கும்; (2) cuttlefish எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கனமாக, வெள்ளையாக இருக்கும். கணவாய் cephalopod எனப்படும் வகையினது. Cephalo என்றால் தலை, pod என்றால் கால் – அதாவது தலையோடு கால்கள் உள்ள பிராணி. மொத்தமாக எட்டுக் கால்கள். ஆனால் சிலந்திக்கும் இதற்கும் நெருங்கிய சொந்தம் கிடையாது. நத்தை, சங்கு, சிப்பி வகைகளுக்கு ரொம்ப சொந்தம். அவைகளுக்கு வெளியே இருக்கும் ஓடு, இவற்றிற்கு உள்ளே இருக்கிறது. இவைகளுக்கு வெளியே இருக்கும் ருசியான தசைப் பகுதி, அவற்றிற்கு உள்ளே இருக்கிறது. அவைகளுக்கு ஓடு பாதுகாப்பு. இவற்றிற்கு ஓடுவதுதான் பாதுகாப்பு. கருப்பு மையை உமிழ்ந்து விட்டு அதி விரைவாக நீந்தி தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமிங்கிலம், சுறா, சந்திரவதனா அவர்களின் வீட்டுச் சட்டி முதலானவற்றில் விதி முடிந்து விடும்.
கணவாய் மீன்கள் தமிழ்நாட்டில் ஓரளவு கிடைத்தாலும் கடல்புரத்து மக்கள் தவிர வேறு எவரும் விரும்பி உண்பதில்லை. கேரளாவில் ஓரளவு பரவலாக கணவாய் உண்ணப்படுகிறது. கடல் உணவை ரொம்ப தீவிரமாக உட்கொள்ளும் வங்காளிகள் இதை சாப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.
உலகளவில் சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்காசியாவிலும், மத்திய தரைக்கடலையொட்டிய தென் ஐரொப்பாவிலும் (குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின்), இக்கலாச்சாரம் உள்ள தென்னமரிக்காவிலும், இது விரும்பி உண்ணப்படுகிறது. கணவாய்க்கு மிக நெருங்கிய சொந்தமான ஓக்டோபஸும் இந்நாடுகளில் உண்ணப்படுகிறது. ஜப்பான், கொரியாவில் பச்சையாகவும், காய்கறிகளுடன் லேசாக வதக்கியும் உண்கிறார்கள். ஜப்பானிய டெம்பூரா (tempura) முறையில் வட்ட, வட்டமாக நறுக்கிய கணவாயை மாவில் போட்டு பஜ்ஜி போல பொரித்தெடுத்து சாப்பிடலாம். இதையே கலமாரி (kalamari) என்ற பெயரில் பல அமெரிக்க உணவகங்கள் இப்போது வழங்குகின்றன. ஆனால் கலமாரி என்பது ஸ்பானிய மொழியில் கணவாயின் பெயர். இப்போது பாருங்கள்:
கட்டில் ஃபிஷ், ஸ்க்யிட் -- ஆங்கிலம்
கணவாய், கடம்பா – தமிழ்
கணவா – மலையாளம்
இகா – ஜாப்பனிஸ்
கலமாரி – ஸ்பானிஷ்
ஆக, க் அல்லது க்-ன் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லா மொழிகளிலும் கணவாயின் பெயரில் இருக்கின்றன. இது தற்செயலானதா?
கணவாய் சமைக்கும் போது இதை எவ்வளவு விரைவாக சமைத்து முடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் இதன் தசை பச்சையாகவே சற்று ரப்பர் பதம் கொண்டது. சமைக்க சமைக்க இது மேலும், மேலும் ரப்பராகி விடும். இருப்பினும் நம் ஊரில் இதை, மற்ற இறைச்சி வகைகளாக நினைத்துக் கொண்டு, அதிகமான நேரம் அடுப்பில் வைத்துக் கிண்டிக், கிளறியே சாப்பிடுகிறோம். இப்படி சமைக்கப்பட்ட உணவில் நாம் சுவைப்பது தசையையல்ல, அது சுமந்து கொண்டிருக்கும் மசாலா வகைகளையே.
மேலதிக தகவல்களுக்கு காண்க: http://en.wikipedia.org/wiki/Squid
புகைப்படத்தில் வலது முன்பக்கத்தில் குவிந்திருக்கும் கொள கொளா வஸ்துதான் கணவாய். சீனாவின் தென்கடற்கரையோர நகரான ஷாஞ்ஜாங்கில் 2005 எடுக்கப்பட்டது.