Tuesday, October 2, 2007

காந்தியும் கக்கூசும்

நானும் சுந்தர ராமசாமியும் நடந்து நாகர்கோயிலில் இருளப்பபுரம் போய்ச் சேர்ந்தோம். நெருக்கமான வீடுகள். திறந்த சாக்கடை வாய்கள். குப்பைக் குவியல்கள். எங்கும் மலம் மலம் மலம் … சுந்தர ராமசாமி “பாத்தேளா? சுதந்திரம் கெடைச்சு அம்பது வருஷமாச்சு. இன்னும் கக்கூஸ் போகத் தெரியலை நமக்கு. இந்த ஒரு விஷயத்தால ஹெல்த் பிரச்சினை கெளம்பி நம்ம நாட்டுக்கு வருஷத்தில எவ்வளவு கோடி நஷ்டம்னு கணக்கு போட்டிருக்கோமா? இதைப் பத்திக் கவலைப்பட்ட கடைசி அரசியல்வாதி காந்தி. தேச விடுதலைக்குச் சமானமா கக்கூஸ் போறதைப் பத்திப் பேசிட்டிருந்தார். அவர் ஒரு கிராமத்துக்குப் போறச்ச பின்னால ஒருத்தர் அவரோட டாய்லெட்ட கொண்டு போறார். அதை அவரோட பதாகை மாதிரின்னு டாமினிக் லாப்பியர் அவன் புஸ்தகத்தில சொல்றான். கம்பு வச்சிண்டிருக்க காந்தியை சிலையா நிக்க வைக்கிறோம். கக்கூஸ் க்ளீன் பண்ற குச்சியோட நிக்கிற காந்தியையன்னா வைக்கணும்….அவருக்கு இந்த மக்களோட பிரச்சினை என்னான்னு தெரியும். அதுக்கு உள்ளுணர்வெல்லாம் ஒண்ணும் காரணமில்ல. அவர் இங்கெல்லாம் வந்தார். இந்த ஜனங்க கிட்ட பேசினார். அவ்ளவுதான். இன்னைக்கும் சுதந்திரம் கிடைச்சு அரை நூற்றாண்டுக்கு அப்புறமும் நாம இங்க வர ஆரம்பிக்கலை. நம்ம அரசாங்கம் இந்த மக்களுக்கு கோடிக்கணக்கில பணம் செலவு பண்ணி நலத் திட்டங்களைப் போடறாங்க. ஆனா இவங்க கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேக்கிறதில்ல. வெட்டினரி டாக்டர்னா நம்ம அரசியல்வாதிங்க…இதெல்லாம் ஆடுமாடுங்க….” என்றார். இருளில் ஏதோ ஒரு சாலைக்கு வந்து பஸ் பிடித்து வீடு திரும்பினோம். “இங்க இருந்த அமைப்புகள்லாம் தாறுமாறாப் போச்சு. புதிய அமைப்பை இத்தனை வருஷம் கழிச்சும் சரியா உருவாக்க முடியலை. இந்த அளவுக்குப் பெரிய தேசத்தில கீழ் மட்டத்தை மேல் மட்டம் நேரடியா ஆளணுமானா அந்தத் தொலைவை இணைக்கிற அளவுக்கு அதிபிரமாண்டமான அதிகார வர்க்கம் தேவை. அதை வெள்ளைக்காரன் உருவாக்கினான். நேருவும், அம்பேத்கரும் அதே மையப்படுத்தற போக்கைப் பின்பற்றினதனால அந்த அதிகார அமைப்பு பெரிய பூதம் மாதிரி வளந்து போச்சு. அதுதான் இன்னைக்கு இந்தியாவோட மிகப் பெரிய சாபம். வீட்டு முன்னாடி மரம் நிக்கற மாதிரி அரசாங்கத்துக்குப் பக்கத்தில அதிகார அமைப்பு நிக்கணும். இங்க என்னன்னா மரத்துமேல வீடு இருக்கற மாதிரி இருக்கு…அதை அரசாங்கம் ஒண்ணுமே செய்ய முடியாது, மக்களும் ஒண்ணும் செய்ய முடியாது…உண்மையில் இங்க சுதந்திரம் கிடைச்சது அவங்களுக்கு மட்டும்தான்”

மேற்காணும் பத்தி என் மனதில் நீண்ட நாட்களாகவே நிற்கும் ஒன்று. காந்தி பிறந்த தினமான இன்று இதைப் பதிய விரும்பினேன். இதன் மூலம்: பக்கங்கள் 105-106, ஜெயமோகன் எழுதிய “சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்” புத்தகம். உயிர்மை பதிப்பக தயாரிப்பான இப் புத்தகம் 2005ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலமானபோது வெளியிடப்பட்டது. தமிழில் அஞ்சலியாக எழுதப்பட்டவற்றில் வெகு சிறப்பானது. சுந்தர ராமசாமியின் வாழ்வையும் படைப்புக்களையும் மட்டுமின்றி, அவரது சமகாலத்தில் சமூகத்தைப் பாதித்த நபர்களையும், போக்குகளையும், நிகழ்வுகளையும் பற்றிய அவரது சிந்தனைகளை எடுத்து வைக்கிறது இந்த நூல்.

3 comments:

மு. மயூரன் said...

//அவர் ஒரு கிராமத்துக்குப் போறச்ச பின்னால ஒருத்தர் அவரோட டாய்லெட்ட கொண்டு போறார். //

அந்த கக்கூசை தூக்குறது யார்?

பிறகு அதை சுத்தப்படுத்திறது யார்?

காந்தியா?

Victor Suresh said...

// அந்த கக்கூசை தூக்குறது யார்?
பிறகு அதை சுத்தப்படுத்திறது யார்?
காந்தியா? //

ஆம், பெரும்பாலும் அவர்தான். மு. மயூரன், நீங்கள் அவர் எழுதிய “சத்திய சோதனை” படித்தால் விளங்கும்.

Thamizhan said...

இன்றும் பெரிய விமான நிலையத்தில் இறங்கினாலும் சரி,ரயில் நிலையத்தில் இறங்கினாலும் சரி முதல் தரிசனம்
மல்ங்கழிப்பதோ,நீர் பாய்ச்சுவதோ தான்!
கிராமங்களில் ரயில் பாதைகள் போவதோ அங்கே காலையிலும் மாலையிலும் கழிப்பதற்குத்தான்.

கழிவறைகள் இல்லாத வீடுகள் நிறைய உள்ளன.ஆனால் தொல்லைக் காட்சி இல்லாத வீடுகளே இல்லை.

அரசு பல திட்டங்கள் கழிவறைக் கட்டித்தர வைத்துள்ளது.ஆனால் கழுவுவதற்குத் தண்ணீர் வேண்டுமே.
கிராம முன்னேற்றம் உயர்நிலைப் பள்ளி,கல்லூரி மாணவர்களின் கட்டாய சேவையாக இரண்டு வாரங்கள் வைத்தால் அவர்கள் சொல்வதையாவது மக்கள், கிராம அதிகாரிகள் கேட்பார்கள்.