Sunday, November 28, 2010

சோனி சைபர்ஷாட் வழியாக ஒரு நீள் பார்வை



நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு சபதம். சோனி கேமரா வாங்குவதில்லை என்று. வாங்கிய முதல் டிஜிட்டல் கேமரா சோனி சைபர்ஷாட். 2001ல், 3.x மெகா பிக்சல்கள். 350 அமெரிக்க டாலர்கள் என்ற ஞாபகம். இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அதில் ஏதோ பிரச்சினை. அதைத் தள்ளி வைத்து விட்டு, புதிதாக வந்திருந்த 4.x மெகா பிக்சல் சைபர் ஷாட் வாங்கினேன். அதிலும் சொற்ப காலத்திற்குள்ளேயே ஏதேதோ பிரச்சினைகள் வந்தன. பாட்டரி பழுது. சார்ஜர் உடைந்தது. லென்ஸ் மூடி திறக்காது. திறந்தால் மூடாது. அதை ஒதுக்கி வைத்து விட்டு இனிமேல் சோனி வாங்குவதில்லை என்று முடிவு செய்து பானசோனிக் செமி எஸ்.எல்.ஆர் மாடல்கள் ஒன்றிற்கு மாறினேன். நல்ல கேமராதான். ஆனால் அதைத் தூக்கிச் சுமக்க முடியாமல் பல கோடாக் தருணங்களை நழுவ விட வேண்டியதாயிற்று. எனவே மறுபடியும் கையடக்கமான மாடல் ஒன்றைத் தேட வேண்டியதாயிற்று. பார்னம் என்ற அமெரிக்க சர்க்கஸ் முதலாளி “ஒவ்வொரு நிமிடமும் ஒரு மடையன் பிறந்து கொண்டிருக்கிறான்” என்றார். அந்த வகையில் நான் இந்த பூமியில் பல அவதாரங்கள் எடுத்து விட்டேன். சாம்சங்கில் ஒரு மாடல் வாங்க வேண்டும் என்று போனவன் மறுபடியும் ஒரு சோனி சைபர்ஷாட்டிற்காக விழுந்து விட்டேன். வீழ்த்தியது இந்தக் கேமராவில் இருக்கும் ‘ஸ்வீப் பனோரமா’ என்ற சங்கதி. பனோரமிக் எனப்படும் நீழ் காட்சிகளை படமாக்க பிரத்தியேகமான கேமராக்களும், ஃபில்மும் ஒரு காலத்தில் தேவைப்பட்டது. டிஜிட்டல் கேமராவில் இதை சாஃப்ட்வேர் வழியாகத் தீர்வு பண்ணிக் கொண்டிருந்தார்கள். புகைப்பட எடிட்டிங் செய்யும் சாஃப்ட்வேர் துண்டு துண்டாக எடுக்கப்படும் படங்களை ஒட்டி பனோரமிக் படமாக மாற்றி விடும். இப்போது சோனி அந்த தொழில்நுட்பத்தை கேமராவுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டது.



ஸ்வீப் பனோரமா எடுத்த படங்கள் ப்ளாகில் எப்படிக் காட்சியளிக்கும் என்று தெரியாததால் கீழ்க் கண்ட முயற்சி. சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

1.சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். இங்கேதான் கேமராவை வாங்கினேன்



2.டோக்கியோவின் நரிற்றா விமான நிலையம்



3.குவாய் (ஹவாய் தீவுகளில் ஒன்று) கெக்காஹா மீன் பண்ணை



4.புக்கெற் (வெளிச்சப் பிரச்சினையால் பின்னாலுள்ள கடல் சரியாகத் தெரியவில்லை)



5.கோலலம்பூர் பெத்ரோனாஸ் கோபுரங்கள்



6.ஹோச்சிமின் ஏழாம் மாவட்ட இரவுக் காட்சி



கேமரா வாங்கி சுமார் ஐந்து மாதம் ஆகப் போகிறது. இது வரை திருப்தியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா சந்தர்ப்பங்களிலும் நினைத்தது போல பனோரமிக் காட்சிகளை எடுக்க முடியவில்லை. பனோரமிக் எடுக்கும் போது கேமராவை இடதிருந்து வலமாகவோ, கீழிருந்து மேலாகவா ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் பனோரமிக் எடுக்க முடியவில்லையென்று சொல்லி விடுகிறது. ஒளி குறைவாக இருக்கும் போதும் சரி வருவதில்லை. பனோரமிக் அல்லது சாதா காட்சிகளும் நன்றாகவே எடுக்கிறது. பளிச்சென்று படங்கள் வரவேண்டும் என்ற முனைப்பில் சின்னச் சின்ன டீட்டெய்ல்ஸ் எல்லாவற்றையும் பூசி மெழுகி விடுகிறது. மற்றபடி கேமரா பரவாயில்லை. ரொம்ப கைக்கடக்கமாக இருப்பதால் பொத்தான்கள் எல்லாம் ரொம்ப குட்டி, குட்டியாக இருக்கின்றன. முரட்டுத்தனமான உபயோகத்திற்கு உகந்தது என்று தோன்றவில்லை. பேட்டரி இது வரைக்கும் நீடித்து உழைத்துக் கொண்டிருக்கிறது. சோனி மெமரி கார்டுதான் உபயோகிக்க வேண்டும் என்று அடம் பிடிக்காமல், எஸ்.டி. மெமரி கார்டும் உபயோகிக்கலாம் என்பது ஒரு அனுகூலம். 14.1 மெகா பிக்சல் கேமரா, 250 அமெரிக்க டாலர்கள் விலை.

2 comments:

ரிஷபன்Meena said...

திரு.ஏ.வி.எஸ்,

நான் முதன் முதலில் வாங்கியது 4.1 சைபர் ஷாட் காமிரா தான்.ஆனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் தராமல் இன்று வரை சமத்தாக இருக்கிறது. நைட் மோட்-ல் எடுக்கும் போதும் மனுவல் மோட்-ல் எடுக்கும் போதும் ”ட்ரை பாட்” உபயோகித்தால் படம் கலைவதில்லை.

இருந்தாலும் பெரிய போட்டோ விற்பன்னர் மாதிரி, ஒரு வருடத்துக்கு முன் நிக்கான் டி60 என்ற எஸ் எல் ஆர் வாங்கினேன். இன்று வரை அதை முழுமையாய் பயன்படுத்தவில்லை மனுவல் படித்துக் கற்றுக்கொள்ள சோம்பேறித்தனம்.மேலும் நீங்க சொன்ன மாதிரி தூக்கி சுமக்க முடியலை

Victor Suresh said...

ரிஷபன், உங்களுக்கு வாய்த்த சோனி நல்லூழ் எனக்கும் வாய்க்கட்டும். நிக்கான் டி60 அருமையான எஸ்எல்ஆர். அதைப் பல தடவை பார்த்து ஜொள் விட்டிருக்கிறேன். இந்த மாதிரி படா கேமராவெல்லாம் படமெடுப்பதில் உயிராக இருப்பவர்கள்தான் சங்கடப்படாமல் எங்கே வேண்டுமானாலும் தூக்கிப் போகிறார்கள். என்னுடைய செமி-எஸ்எல்ஆர் இப்போதெல்லாம் வீட்டுக்கு உள்ளே, வீட்டிலிருந்து 100 மீற்றருக்குள் வெளியே, அவ்வளவுதான்.