Tuesday, November 23, 2010

ஸ்பெக்ட்ரம்: பிரபல பதிவர்களின் கருத்துக்கள் சரியா?

எந்தத் தீமைக்குள்ளும் ஒரு சிறு நன்மை உண்டு. ஸ்பெக்டரம் விஷயத்தில் அது என்னவென்றால் பலரைச் சில காலமும், சிலரைப் பல காலமும் ஏமாற்றலாம்; ஆனால் எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணம் ஆனது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது இது வரை இந்தியாவில் நடந்த பெரிய ஊழல்களிலேயே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட முதல் ஊழலாக அநேகமாக அமையும். இந்த ஊழலால் நாட்டிற்கெற்பட்ட இழப்பு 1.71 லட்ச கோடிகளாக இருக்கலாம். அதற்குக் குறைவாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆதாரங்களை வெளிக் கொண்டு வர உதவியவர்களில் பிரதானமானவர்கள் இந்த ஊழலால் பாதிக்கப்பட்ட பல தனியார் நிறுவனங்களாகவே இருக்கக்கூடும். அதிகார, அரசியல், சட்ட வாய்க்கால்கள் வழியாக இந்த ஆதாரங்கள் மெல்ல, மெல்ல நகர்ந்து இறுதியாக ஆ. ராசாவை அவரது நாற்காலியிலிருந்து நகர்த்தியிருக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் பல பரிமாணங்களில் ஒன்று ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியானது. ராடியா – ராசா, ராடியா-கனிமொழி தொலைபேசி உரையாடல்களில் சில டெய்லி பயனியரில் பல மாதங்களுக்கு முன்னர் வெளியான போது, இந்த விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அச்சு ஊடகங்களும் சரி, தொலைக்காட்சி ஊடகங்களும் சரி, இந்த உரையாடல்களை மூடி மறைக்கவே முயற்சி செய்தன. இதற்கு ஊகமாகச் சொல்லப்பட்ட காரணம்: இந்த உரையாடல்கள் டாடாவிற்கும், அம்பானி சகோதரர்களுக்கும் ஏற்படுத்தும் சங்கடங்கள் ஊடகங்களைப் பழி வாங்குவதில் கொண்டு முடியும். அதாவது, டாடா, அம்பானி நிறுவனங்கள் பத்திரிகைகளுக்கும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கும் வழங்கும் விளம்பரங்களை நிறுத்தி இழப்பை ஏற்படுத்தும் என்பது. இப்போது வெளியாகி வரும் உண்மைகளோ, அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் டாடா, அம்பானிகளின் கோபத்திற்கு அஞ்சுவதை விட, தங்களது உடுப்புகளே உரியப்படுமென்று நடுநடுங்கிதான் அமைதி காத்தார்கள் என்று உணர்த்துகின்றன.



என்.டி. டிவியின் பர்கா தத், இந்துஸ்தான் டைம்சின் வீர் சிங்வி, இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, மற்றும் சில பிரபல பத்திரிகையாளர்கள் ராடியா என்னும் அதிகாரத் தரகருக்கு உபதரகு வேலை பார்த்திருப்பது இப்போது வெளியாகும் உரையாடல்களிலிருந்து வெளியாகிறது. உரையாடல்களை வெளியிட்ட ஓப்பன் மாகசீனுக்கு என்.டி. டிவி எழுதியிருக்கும் எதிர்ப்புக் கடிதத்தின் சாராம்சம் என்னவென்றால் பர்கா தத்திற்கு பதிலளிக்க வாய்ப்பு தராமல் உரையாடல்களை வெளியிட்டது பத்திரிகா தர்மத்தை மீறுவதாம். என்.டி. டிவி யாராவது செய்யும் தப்பை வெளியாக்கப் போகிறதென்றால் அந்த நபரிடம் போய் உங்களுடைய தப்பை வெளியே கொண்டு வருகிறோம், அதற்கு பதிலளிக்கும் வாய்ப்பை முன்னதாகவே தருகிறோம் என்றா கேட்டுக் கொண்டிருக்கிறது? இப்படி, இந்த உரையாடல்களின் வெளியீடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த பலரை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. புனிதர்களாக முன்னே அறியப்பட்ட சிலருக்கோ அங்கிகள் மட்டுமல்ல கௌபீனங்களே கழற்றப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் வழி வகுத்துக் கொடுத்திருப்பது இணையமென்னும் கட்டற்ற பெருவெளியே.

ஸ்பெக்ட்ரம் தீமைக்குள் நன்மை என்னவென்று தெரிகிறது. ஆனால் அந்த நன்மைக்குள் ஒரு பெரும் தீமையும் தெரிகிறது. அது, இவ்வளவு தூரம் உண்மைகள் வெளியாகியும் நம்மில் பலர் இவற்றை வெகு சாதாரணமாக உதறி விட்டுப் போய்க் கொண்டிருப்பது. லக்கிலுக், கிழக்கு பதிப்பகம் பத்ரி போன்ற வலுவான சிந்தனையும், மொழித் திறனும் கொண்ட பதிவர்களே நாட்டிற்கு இழப்பு 1.71 லட்சம் கோடிகளாக இருக்காது; அப்படியே இருந்தாலும் அவ்வளவு பணத்தையும் ராசாவே அடித்திருக்க முடியாது என்ற வகையில் எழுதினார்கள். பின்னூட்டமிடும் கணவான்களில் பலர் தேனெடுப்பவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்பது போல் எழுதினார்கள். ஜெயலலிதா ராசாவைக் கைது செய்யுங்கள் என்று சொன்னது ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே சொல்லப்பட்டது போல சற்றேறக்குறைய எல்லோராலும் பார்க்கப் பட்டது. சற்று யோசித்துப் பார்ப்போம். கள்ளக் கணக்கு காட்டியதன் மூலம் பங்குதாரர்களுக்கு 14,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜூ சகோதரர்கள் விசாரணைக்கும், வழக்கிற்கும் குந்தகம் ஏற்படுத்துவார்கள் என்ற காரணத்தால் ஏறக்கறைய இரண்டாண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள். நாட்டிற்கு அதை விட பன்னிரண்டு மடங்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா சென்னை விமான நிலையத்தில் கதாநாயகன் போல வந்திறங்குகிறார். அவரை மானமிகு தலைவர் என்கிறார் வீரமணி.



அகில இந்திய அளவில் ராசாவின் ஊழலும், ராடியாவின் தொலைபேசி உரையாடல்களும் நாட்டில் அரசியல், அதிகார, வணிக, ஊடகத் துறைகள் சராசரி மனிதனை எவ்வளவு தூரம் மடையனாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் முக்கியத்துவம் பெறுவதோ கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் நாடகங்கள். கிழக்கு பதிப்பகம் பத்ரி, உண்மைத் தமிழன், சவுக்கு போன்ற பதிவர்கள் இந்த நாடகங்களை முதன்மைப்படுத்தியே கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த வகை வியாக்யானங்களின் பலவீனம் என்னவென்றால், இந்த உரையாடல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சத்தியசீலர்கள், இவர்கள் ஒருவருக்கொருவரிடம் உண்மையை மட்டுமே பேசிக் கொள்கிறார்கள் என்ற அனுமானம்தான். உதாரணமாக, ராடியா மாறன் இப்படிச் செய்தார், அப்படிச் செய்தார் என்று சொல்லுவது அனைத்தையுமே மாறன் செய்திருப்பார் என்று எடுத்துக் கொள்ளும் அனுமானம். ஆனால், எல்லா உரையாடல்களையும் ஊன்றிக் கவனித்தால், ராடியாவிற்கு மாறனை ஒழிக்க வேண்டும் என்ற தீவிரம் இருப்பது புரியும். அனேகமாக, இது டாடா ராடியாவிற்கு கொடுத்த வேலைகளுள் ஒன்றாக இருக்கலாம். ஏற்கனவே டாடாவிற்கும் மாறனுக்கும் முட்டிக் கொண்டது அறிந்ததே. இந்த வேலையின் ஒரு பகுதியாகவே ராடியா கனிமொழி மற்றும் ராசாவிடம் மாறனைப் பற்றி போட்டுக் கொடுப்பது, அழகிரியை மாறனை வீழ்த்தும் ஆயுதமாக செயல்படுத்துவது முதலான தந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதைப் போல் தோன்றுகிறது.



இது வரை வெளியான உரையாடல்கள் ஒட்டுக் கேட்டு பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் ஒரு சிறு பங்கே. எல்லா உரையாடல்களையும் தாங்கிய நூற்றிற்கும் மேற்பட்ட குறுந்தகடுகளை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளார். குறுந்தகடுகளிலுள்ள உரையாடல்கள் ஓப்பன் மாகசின் மற்றும் அவுட்லுக் இணைய தளங்களிலும் கேட்கக் கிடைக்கின்றன. இந்த விவகாரத்தைத் தோண்டத் தோண்ட இன்னமும் பல பூதங்கள் வெளியே வரும் என்று நம்பலாம். இதன் இறுதி பலன் இனிமேல் இது போன்ற பெரிய அளவு ஊழல்கள் துணிகரமாக செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக இருக்கலாம். அப்படி நடந்தால் 1.71 லட்சம் கோடி ரூபாய் அதற்கு நாம் கொடுத்த விலையென்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

4 comments:

hariharan said...

நல்ல இடுகை..

இன்னும் பிரசாந்த் பூஷன் போன்ற சமூக ஆர்வலர்கல் இருப்பதால் நம்பிக்கை ஏற்ப்டுகிறது.

Victor Suresh said...

நன்றி ஹரிஹரன். பூஷண் போன்ற துணிச்சல்காரர்கள் இருப்பதால்தான் நமது சீரழிவு இன்னமும் முழுமை பெறாமல் இருக்கிறது. பெரிய சகோதரனைக் கண்காணிப்பிற்குள் கொண்டு வரவைத்த இணையம், தகவலறியும் சட்டம் ஆகியவற்றையும், மனசாட்சிப்படி நடந்து கொள்ள விழையும் சில அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் நாம் மறந்து விட முடியாது.

ரிஷபன்Meena said...

திரு.ஏ.வி.எஸ்,

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பதிவர்களில் ஒரு சிலர் தான் இதை சரியா அனுகி இருக்காங்க.

//லக்கிலுக், கிழக்கு பதிப்பகம் பத்ரி போன்ற வலுவான சிந்தனையும், மொழித் திறனும் கொண்ட பதிவர்களே நாட்டிற்கு இழப்பு 1.71 லட்சம் கோடிகளாக இருக்காது; அப்படியே இருந்தாலும் அவ்வளவு பணத்தையும் ராசாவே அடித்திருக்க முடியாது என்ற வகையில் எழுதினார்கள்//

இவர்களும், இவர்களை சப்போர்ட் செய்யும் பின்னூட்டர்களும் தங்கள் வீட்டு பணத்துக்கு இந்த மாதிரி ஞாயம் பேசுவார்களா என்ன ?

வலைத்தளத்தில் எழுதுவதால் பண ஆதாயம் ஏதும் கிட்டாது என்று தான் நினைத்திருந்தேன். அப்படி கிடைக்கவும் செய்கிறதோ என்னவோ ?

நல்ல மொழிநடை இருப்பவர்கள் ஏன் தான் இப்படி எழுதி தங்கள் மேல் புழுதியை அப்பிக் கொள்கிறார்களோ தெரியலை.

Victor Suresh said...

ரிஷபன்,

தங்கள் கருத்திற்கு நன்றி. தமிழக அரசு கிழக்கு பதிப்பகத்திடமிருந்து நூல்களை வாங்க வேண்டும் என்பதற்காக பத்ரி அப்படி எழுதினார் என்ற வகையில் பலர் பின்னூட்டமிட்டதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். லக்கிலுக் பகிரங்க திமுக ஆதரவாளர். எனவே அவருடைய கருத்தின் பின்புலத்தை ஊகித்துக் கொள்ளலாம். இவர்களுக்கு பண ஆதாய நோக்கம் இருக்கிறதோ, இல்லையோ, ஆனால் இவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்த துணிகரம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாங்களே தங்கள் மேல் சேறை எடுத்துப் பூசிக் கொண்டார்கள் என்ற மட்டிலும் இதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். நல்ல வேளை 1.71 லட்சம் கோடிகளை எந்த சூட்கேசில் எடுத்துச் சென்றார் என்று வீரமணி வினவியது போல் இவர்கள் கேட்கவில்லையே என்று ஆறுதல் படுவோம்.