Saturday, May 22, 2010

கூடு விட்டுக் கூடு பாய்வது சாத்தியமா?

எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் செய்தி வந்த போது மனதிற்குள் பிரமிப்பு ஏற்பட்டது.

க்ரெய்க் வென்ற்றர், ஹாமில்ற்றன் ஸ்மித் என்ற இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் செயற்கை உயிரினம் ஒன்றை உருவாக்கியதாக உலகிற்கு அறிவித்ததுதான் கடந்த வாரத்தின் மிகப் பெரிய செய்தி.

மூலக்கூறு உயிரியலில் வென்ற்றர் & ஸ்மித் செய்து காட்டியிருக்கும் சாதனை ஒரு மாபெரும் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. சென்ற நூற்றாண்டின் அணுபிளப்பு பரிசோதனையின் வெற்றி எப்படி இயற்பியலின் சிகரமோ, அப்படியே இது உயிரியலின் சிகரம் என்கிறார்கள் சிலர். இல்லை செயற்கை உயிரியலின் ஆரம்பமே, உச்சம் அல்ல என்று சொல்கிறார்கள் சிலர். நான் பின்னவர்களின் கட்சி.

க்ரெய்க் வென்ற்றர் & ஹாமில்ற்றன் ஸ்மித் கண்டுபிடிப்புதான் என்ன? அதைப் பார்க்குமுன் சில முன்குறிப்புகள்.

1. வென்ற்றர் & ஸ்மித் கண்டுபிடிப்பு என்று பிரபலப்படுத்தப்பட்டாலும், கிப்சன் என்பவரும், வென்ற்றர், ஸ்மித் உட்பட 24 சக விஞ்ஞானிகளும், சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் விளைவுதான் மேற்சொல்லப்பட்ட கண்டுபிடிப்பு. இவர்களில் சஞ்சய் வஷீ, ராதா கிருஷ்ணகுமார், ப்ரஷாந்த் பார்மர் என்ற மூன்று இந்தியப் பெயர் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘சயின்ஸ்’ பத்திரிகை இதை யாரும் படித்துக் கொள்ளும் வகையில் ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைக்கான இணைப்பு: http://www.sciencemag.org/cgi/rapidpdf/science.1190719v1.pdf

2. கட்டுரையை எழுதிய 25 விஞ்ஞானிகளில் மிகப் பிரபலமானவர் க்ரெய்க் வென்ற்றர்தான். வென்ற்றர் ஏற்கனவே ஒரு பெரிய சாதனையை நடத்திக் காட்டியிருக்கிறார். மனித க்ரோமசோம்களின் மரபணு (டி.என்.ஏ) எழுத்து வரிசை (human genome code) முழுவதுமாக கண்டுபிடிக்கப்படுவதில் அவராற்றிய பங்கே அச் சாதனை. பல்கலைக்கழக மற்றும் அரசு சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிய வென்ற்றர், தனியார் நிறுவனங்களுக்குத் தாவி (பின்னாட்களில் சொந்தமாக தனியார் நிறுவனங்களைத் தொடங்கி), பிறகு வெளிப்படையாகவே “உங்களை விட நான் சீக்கிரத்தில், குறைந்த செலவில் இன்னின்ன சாதனைகளை நிறைவேற்றுவேன்” என்று பல்கலைக்கழக மற்றும் அரசு சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சவால் விட்டு சாதித்தும் காட்டியவர். சக விஞ்ஞானிகளின் பொறாமை, வயிற்றெரிச்சல், மற்ற வகை எரிச்சல், மரியாதை, மதிப்பு எல்லாவற்றையும் ஒரு சேர சம்பாதித்து வருபவர்தான் இந்த ஜான் க்ரெய்க் வென்ற்றர்.

3. தி ஜே. க்ரெய்க் வென்ற்றர் இன்ஸ்ட்டிட்யூட் என்ற தனியார் நிறுவனத்தில் செய்யப்பட்டதுதான் மேற் சொல்லப்பட்ட கண்டுபிடிப்பு.

வென்ற்றர் குழுவினரின் கண்டுபிடிப்பு என்னவென்றால் ஒரு பாக்டீரியாவின் க்ரோமோசோம் முழுவதையும் சோதனைச்சாலையிலேயே தயாரித்து விட்டு, பிறகு அந்த பாக்டீரியாவின் நெருங்கிய சொந்தக்கார இனமான இன்னொரு பாக்டீரியாவிற்குள் இருந்த க்ரோமோசோமை எடுத்து விட்டு செயற்கை க்ரோமோசோமை உள்ளே திணித்து இரண்டாவது பாக்டீரியாவை மீண்டும் செயல்பட வைத்தது. இந்தக் கூடு விட்டு கூடு மாற்றும் பரிசோதனையில் புதிய ‘செயற்கை’ பாக்டீரியா முழுவதும் முதலாவது பாக்டீரியா போலவே செயல்படுகிறது. இதனால்தான் இதை “செயற்கை உயிரினம்” என்று அழைக்கிறார்கள்.

மேற்சொன்ன சாதனையில் க்ரோமோசோம் மட்டுமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டது. மற்ற எல்லா செல் பாகங்களுமே இயற்கையாகவே அமைந்தவையே. ஆனால், செயற்கை க்ரோமோசோம் இயற்கை க்ரோமோசோம் போலவே செயல்பட்டு புதிய பாக்டீரியா மூச்சு விடுவது, சாப்பிடுவது, கழிவுகளை வெளியேற்றுவது, இனப்பெருக்கம் செய்வது முதலான உயிரினத்தின் பணிகளை செய்ய வைக்கிறது.

புதிய பாக்டீரியாவில் க்ரோமோசோம் தவிர்த்த மற்ற எல்லா பாகங்களுமே இயற்கையாக அமைந்தவை என்பதால் புதிய பாக்டீரியாவை செயற்கை உயிரினம் என்று அழைக்க முடியாது என்று ஆய்வுக் கட்டுரையே சொல்கிறது. வெறும் மூலக்கூறுகளிலிருந்து முழுக்க, முழுக்க ஒரு உயிரினத்தை சோதனைச் சாலையிலேயே உருவாக்க முடியுமா என்பதை விட அந்தச் சாதனையைச் செய்ய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகலாம் என்பதுதான் சரியான கேள்வியாக இருக்கும். இன்னும் இருபதாண்டுகள் ஆகலாம் என்பது என் கணிப்பு. ஆனால் அப்போதும் க்ரோமோசோமை வடிவமைத்துக் கொடுத்த பிறகுதான் உயிரினம் உருவாகுமே ஒழிய, மூலக்கூறுகளிலிருந்து க்ரோமோசோமே தானாக வடிவமைத்துக் கொள்வது நடக்காது. அப்படி மூலக்கூறுகளிலிருந்து க்ரோமோசோமே தானாக வடிவமைத்துக் கொள்வது எப்போது நடக்கும்? இதை எழுதிய காலத்தில் வாசித்தவர்களின் தலைமுறையில் அல்ல என்று மட்டுமே நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இந்த தொழில் நுட்பத்தின் நன்மை, தீமைகளைப் பற்றிய சூடான விவாதங்கள் ஆரம்பமாகி விட்டன. கண்டுபிடிப்பின் செய்தி வெளியாகி 24 மணிநேரம் முடிவதற்கு முன்பாகவே, இதைப் பற்றி கடவுள் நம்பிக்கையாளர்கள் இது பற்றி எதுவும் சொல்லவில்லை, எனவே கடவுள் இருக்கிறார் என்ற அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது என்றெல்லாம் பலர் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பால் அவ்வளவு சீக்கிரமாக நன்மை-தீமைகள் நடக்கப் போவதுமில்லை; கடவுள் மறுக்கப்படவும் இயலாது. பொறுமைக்கு நிறைய இடம் இருக்கிறது.

7 comments:

Victor Suresh said...

செயற்கை உயிரினம் குறித்து இன்னொரு பதிவரும் எழுதியிருக்கிறார்: http://ennacchamayal.blogspot.com/2010/05/blog-post.html

இதில் பின்னூட்டமிட்ட அரசு என்பவர் சொல்லியிருந்த தகவல்: "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நுண்ணியிர் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்த ராதா கிருஷ்ணகுமார் இந்தக் கண்டுபிடிப்பில் பங்குபெற்றிருக்கிறார்."

கையேடு said...

செயற்கை உயிரினம் குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.

ஆனால், கடவுளைத் தாண்டி இவ்வகையான செயற்கை உயிரிகளினது கண்டுபிடிப்புகளில் சமூகம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டியவை பலவும் உள்ளன. இவ்வகையினதான ஆராய்ச்சிகளின் நெறிமுறை, அதன் பயன்பாடு மற்றும் அரசின் தீவிரக் கண்காணிப்பு , இதன் நன்மை தீமைகள் என அது கடவுளின் இருப்பைவிட முக்கியமானதாகக் கூட இருக்கலாம்.

Victor Suresh said...

ரஞ்சித் (கையேடு): உங்கள் பதிவிற்கு நன்றி. உங்களது கருத்தோடு உடன்படுகிறேன். இந்தக் கண்டுபிடிப்பு முழுக்க, முழுக்க செயற்கை உயிரின் ஜனனம் என்ற ஒரு இலக்கை நோக்கிய ஒரு மைல்கல் என்றே நான் பார்க்கிறேன். இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் தாண்டி இருக்கும் அந்த இலக்கை அடைவதற்குள் நீங்கள் குறிப்பிடும் நெறிமுறைகளும், கண்காணிப்புகளும் உருவாக்கப்படும் என்றே நம்புகிறேன். தற்போதிருக்கும் நிலையில், இப்போது உருவாக்கப்பட்டுள்ள செயற்கை உயிரினம் பெரும் தீமையொன்றை விளைவிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு என்பதே என் நம்பிக்கை.

Victor Suresh said...

கீழ்க்கண்டது சக பதிவரும், உறவினரும், நண்பருமான படுக்காளியிடமிருந்து மின்னஞ்சல் மூலம் பெற்றது:

பிரமாதம். சூப்பர்.



இது மாதிரி ஒரு நல்ல விசயத்தை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்பது ரொம்ப நல்லா இருக்கு. மிக ஆரோக்கியமான விஷயம். இருந்தாலும் முழுக்க புரியல. ஒரு மாதிரி பத்துக்கு அஞ்சு புரிஞ்சுச்சு. இன்னும் விரிவாய் விளக்க முடியுமா.



முழுக்க புரியலக்கு காரணம், தங்களின் ஆழமான அடிப்படை அறிவு.



டி என் எ என்றதும், ஒ இதுதானே!!!! என தெரிந்ததால் கோடு போட்டா ரோடு போடும் சூட்டிப்பு , அதற்கு மேல் வண்டி ஒட்டி செல்லும் உங்கள் வலிவு எங்களுக்கு இல்லை. எங்களுக்கு பில்டிங்கு ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்கு.



இந்த கிரோமொசோம என்பதே உடல் உறுப்புகளின் அடிப்படையாய் மட்டுமே பார்க்கும் துர்பாக்கியம் சாமானியனுக்கு உண்டு. அதில் மெமரி உண்டா.


மனிதன் என்பவன் உடல், மனம், மெமரி, இயக்கம் / உயிர் என பல சேர்ந்த கலவை தானே.
ராமசாமி எனும் போது சொட்டை தலை, நொட்டை சொல் இரண்டும் இருக்க வேண்டும் அல்லவா.

இயக்கம் அல்லது உயிர் என்பது என்ன, அது சக்தியா, திடப் பொருளா,

உயிர் பிரித்தெடுக்க முடியுமா... மற்றதில் செலுத்த முடியுமா...

விக்கிரமாதித்தன் கேட்டால் ரொம்ப சந்தோசபடுவான்....

Victor Suresh said...

படுக்காளி,

எனது துறை அறிவியல் என்பதால்தான் ரோடு, கோடெல்லாம் போட முடிகிறது. உங்களது துறையான பொறியியலில் என்றால் ரோட்டில் விழுந்து கிடந்திருப்பேன். என்னைச் சுற்றித்தான் கோடு போட்டிருப்பார்கள்.

டி.என்.ஏ. பற்றி எல்லோரும் அறிந்து கொள்ளும்படியாக ஜேம்ஸ் வாட்சன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத் தலைப்பும் டி.என்.ஏ. தான். வாங்கிப் படியுங்கள். ரொம்ப சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர் டி.என்.ஏ. அமைப்பைக் கண்டு பிடித்தவரான இந்த விஞ்ஞானி.

தருமி said...

செயற்கை உயிரினம் பற்றிய நல்ல முன்னுரை இவ்விடுகை
அதற்கு நன்றியும் பாராட்டும்.

அதென்ன .. பதிவின் தலைப்பு - ஞாயிறு தபால். ஆனால் இவ்விடுகை இட்டது சனிக்கிழமை !!!

Victor Suresh said...

தருமி, நல்ல கேள்வி. பிரதி ஞாயிறுதோறும் என்னுடைய எழுத்தால் தமிழ்ச் சமூகத்தை உய்விக்கத்தான் ஆசை. ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் தேவையில்லையே. அதனால்தான் சில சமயம் சனி, சில சமயம் திங்கள், பல சமயம் எந்த நாட்களிலுமே இல்லை.