Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Friday, February 19, 2010

திரு. ரஃபேல் வாய்ஸ்: அஞ்சலி

மணப்பாடு புனித வளன் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு. ரஃபேல் வாய்ஸ் அவர்கள் நேற்று (ஃபெப்ரவரி 18, 2010) மறைந்தார். அவரது உடல் ஃபெப்ரவரி 21 மணப்பாட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

திரு. வாய்ஸ் அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். அந்த விருது பெற எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருந்தன. அவரிடம் நான் ஓராண்டு கணிதம் பயின்ற மாணவன். சுவாரஸ்யமாக கணிதத்தைப் போதிப்பதில் அவருக்கு இணையான ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் வகுப்பெடுக்கும் ஒரு மணி நேரமும், ஐந்து நிமிடங்கள் போல் கழிந்து விடும். சூத்திரங்களை மாணவர்கள் மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். “சூத்திரம் தெரியலைனா அவன் தொலைஞ்சான்” என்பது அவர் தாரக மந்திரமாக இருந்தது. அதை வகுப்புகள்தோறும் சொல்லுபவர் அவர். ஆனால் சூத்திரங்களை வெறுமனே மனனம் செய்வது அவருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. சூத்திரங்களின் அடிப்படையை விளக்குவதை சிரத்தையாக செய்வார். ஜியோமெட்ரிதான் அவருக்குப் பிடித்த கணிதப் பிரிவு என்று இப்போது தோன்றுகிறது. உருளை, கூம்பு, கோளம் போன்ற வடிவங்களின் பரப்பளவும், கொள்ளளவும் கண்டு பிடிக்கும் சூத்திரங்களும், அதன் அடிப்படைகளும் 27 ஆண்டுகளுக்குப் பின்னரும் எனக்கு நினைவிருக்கின்றன. இந்த அளவிற்கு தாக்கத்தை உண்டு பண்ணிய ஆசிரியர்கள் வெகு சிலரே.

திரு. வாய்ஸ் அவர்கள் என் வகுப்பிற்கு கணித ஆசிரியர். முழுப் பள்ளிக்கும் தலைமையாசிரியர். அவருடைய கண்டிப்பிற்கு பள்ளியே நடுங்கும். முழுக்கை சட்டை, சட்டைக்கு மேலே கட்டப்பட்ட வேஷ்டி, ஒரு ட்வீட் கோட், கையிலிருந்து மறைவாகத் தொங்கும் ஒரு குடைக் கம்பு, பரந்த நெற்றியில் மேலெழுந்து சீராக வாரப்பட்ட முடி, மெலிந்த ஆனால் ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான நடை – இதுதான் அவர் பள்ளிக்கு வரும் தினசரிக் காட்சி. பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில் இளமையாகவே அவர் இருந்தார். சில சக ஆசிரியர்களால “நித்ய மார்கண்டேயன்” என்று சற்றுப் பொறாமையுடன் அவர் அழைக்கப்பட்டார்.

அவரது குடைக் கம்பின் வீச்சிற்கு அஞ்சி நடுங்காத மாணவர்களே கிடையாது. தினந்தோறும் அசெம்ப்ளி நடத்துவார். ஏதாவது பெரிய தவறு நடந்திருந்ததென்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அசெம்ப்ளியிலேயே குடைக் கம்பு பிரயோகம் நடைபெறும். ஒரு வருடத்தில் மிஞ்சிப் போனால் 4-5 முறைதான் இது நடக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் அதைப் பற்றிய ஒரு அச்சம் நிலவும்.

அவர் வகுப்பெடுக்கும் வரும் நேரத்தில் அவரைப் பற்றிய அச்சமெல்லாம் மறைந்து விடும். மெல்லிய ஒரு புன்னகையுடன், அவருக்கே உரித்த அங்கத உணர்வுடன் நகைச்சுவையாக பேசிக் கொண்டே வகுப்பு நடத்துவார். என்னுடைய வகுப்பில் இருந்த பல வால்களில் ஒருவனான ஐஸ்வின் என்ற மாணவனுக்கு வாயை அடக்குவது முடியாத விஷயம். ஒரு முறை திரு. வாய்ஸ் அவர்கள் “ஒருத்தனுக்கு சூத்திரம் தெரியலைனா” என்று தொடங்கிய போது, சத்தமாக “அவன் தொலைஞ்சான்” என்று முடித்தான் இவன் (அநேகமாக அவனை அறியாமலேதான் அந்த வார்த்தைகள் வந்திருக்க வேண்டும்). வகுப்பு ஒரு கணம் சப்தமாக சிரித்து விட்டு, உடனே அமைதியாகி விட்டது. எங்கே குடைக்கம்பு வருமோ என்று சொன்னவன் உட்பட அனைவரும் அவரைப் பார்க்க, அவர் சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்து “எல, எல!” என்று தொனியிலேயே லேசாக எச்சரித்து விட்டு விட்டார்.

திரு. வாய்ஸ் தலைமையாசிரியாராக இருந்ததால் ஒரே ஒரு வகுப்புக்குத்தான் பாடம் எடுத்தார். என்னுடைய அதிர்ஷ்டம் நான் அவர் பாடம் எடுக்கும் வகுப்பில் இருந்தது. தலைமையாசிரியர் என்ற பாரம் இல்லையென்றால் இவர் இன்னும் பல நூறு மாணவர்களுக்கு கணிதத்தில் ஆர்வம் உண்டு பண்ணியிருப்பார்.

நான் பத்தாமாண்டு தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக வந்திருந்தேன். தேர்வு முடிவுகள் வந்து அவரைப் பார்க்கச் சென்ற போது, அவரது அறையில் என்னைத் தெரிந்த இன்னொரு நபரும் இருந்தார். அவர் என்னைப் பாராட்டி விட்டு, “என்ன எஞ்சினியராகப் போகிறாயா, அல்லது டாக்டரா?” என்று கேட்டார். அப்போது திரு. வாய்ஸ் அவர்கள் சொன்னது “அவன் கையைப் பாருங்கள். அது சிறியதாக இருக்கிறது. இவன் கை வைத்து வேலை செய்வதை விட மூளையை வைத்து வேலை செய்வதைத்தான் விரும்புவான். நல்ல ஆசிரியராக வருவான்” என்றார். முதுநிலை, முனைவர் என்று கல்வியிலே என் முன்னேற்றமெல்லாம் பல்கலைக் கழக ஆசிரியனாக வேண்டும் என்ற இலக்கை நோக்கியே நகர்ந்தது. நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்குமல்லவா. அப்படித்தான் நானும் ஆசிரியத் தொழில் கனவுகளுக்கு விடை சொல்லி விட்டு தனியார் தொழில் துறைக்குள் நுழைந்ததும். ஆனால் திரு. ரஃபேல் வாய்ஸ் அவர்களின் அவதானிப்புத் திறனையும், கணிப்புக் கூர்மையையும் எண்ணிப் பலமுறை வியந்திருக்கிறேன்.

திரு. ரஃபேல் வாய்ஸ் அவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பதை உறுதியாக நம்பியவர் அவர். ஊர் முழுக்க பிரசித்தமானது அவர் பிள்ளைகள் எந்தெந்த வகுப்புகளில் படிக்கிறார்கள் என்பதை அவர் ஒரு போதும் நினைவில் வைத்திராதது. பிள்ளைகளின் பெயர்கள் கூட சமயத்தில் மறந்து விடும் என்று கூட ஒரு வதந்தி உண்டு. ஆனால் தொலைக்காட்சியும், சீரியல்களும் இல்லாத அந்தக் கால மணப்பாட்டில் வதந்திகள் தீவிரமான பொழுது போக்கு சாதனமாக இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எப்படியாயினும் திரு. வாய்ஸ் அவர்களின் வாரிசுகள் அத்தனை பேரும் திறமைசாலிகளாக இருந்தார்கள். இசை அவர்களது குடும்பத்தின், வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. அவரது மகன் அருட்திரு. டென்னிஸ் வாய்ஸ், தமிழகத்தில் கிறிஸ்தவ இசையறிந்த வட்டங்களில் வெகுபரிட்சயமான இசையமைப்பாளர்களில் ஒருவர். அவரது இன்னொரு மகன் ஜெஃப்ரி எனது நெருங்கிய நண்பர். சிறு வயது முதலே எலக்ட்ரானிக்சில் ஆர்வம் கொண்டவர். இப்போது அனிமேஷன் துறையில் பணிபுரிகிறார். திரு. ரஃபேல் வாய்ஸ் மணப்பாட்டின் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் பாடகர் குழுவின் தலைவராகவும், ஆர்கன் வாத்தியமிசைப்பவராகவும் இருந்தார். அவரது மனைவி திருமதி. இசபேல் வாய்ஸ் அவர்களும் அப் பாடல் குழுவில் இருந்தார்.

திரு. ரஃபேல் வாய்ஸ் பற்றி இன்னொரு பசுமையான நினைவும் எனக்கிருக்கிறது. மணப்பாட்டில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் பின்னால் ஒரு கல்லறைத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அங்கு காலைத் திருப்பலி முடித்து விட்டு கல்லறைத் தோட்டத்தில் அந்த தேதியில் இறந்தவர்களுக்காக ஒரு சிறு வழிபாடு நடத்துவார்கள். அதில் ஒரு பாடல் பாடுவார்கள். உலக இறுதியில் நடக்கும் சம்பவங்களை “அந்த நாள் கடைசி நாள், படுபயங்கரமான நாள்” என்று வர்ணித்து விட்டு, மனிதனின் உயிர்ப்பையும், நியாயத் தீர்ப்பையும் பற்றி கூறும் ஒரு பாடல். அந்தப் பாடலின் வரிகள் அத்தனையும் இப்போது நினைவில்லாவிட்டாலும், அதன் ராகமும், அதைப் பாடும் திரு. வாய்ஸ் அவர்களின் முகமும் இன்னமும் அப்படியே நினைவிலிருக்கிறது.

டாக்டர் கேரி ஷ்வார்ட்சின் ‘தி ஆஃப்டர் லைஃப் எக்ஸ்பெரிமென்ற்ஸ்” புத்தகத்தைப் படித்த பின்னர் மனிதனின் மரணத்திற்குப் பின்னாலுள்ள வாழ்வு பற்றிய எனது கருத்துக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வந்தாலும், திரு. ரஃபேல் வாய்ஸ் போன்ற ஆசிரியர்கள் மாற்றுச் சிந்தனைகள் எதற்கும் இடம் இல்லாமலேயே அவர்கள் இறந்து நெடுநாளைக்குப் பின்னரும் வாழ்வர் என்பதை அறிவேன். அந்த அளவுக்கு அவர்கள் தாங்கள் வாழும் காலங்களில் மாணவர்கள் மீது ஒரு ஆழ்ந்த தாக்கத்தைப் பதித்து விடுகிறார்கள். இதுவே ஆசிரியப் பணியின் உன்னதம். திரு. ரஃபேல் வாய்ஸ் என் எதிர்காலத்தைப் பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனம் பலிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அவ்வப்போது எழுவதும் இதனாலேயே.

Saturday, February 13, 2010

அப்போதிலிருந்து இப்போது வரை: 2. பாதித்த மூன்று மரணங்கள்

அமானுஷ்யம். நாம் ஒன்றைப் பற்றி நினைக்கும் போது அது உடனே நடந்து விட்டால் ஒரு மாதிரி உடல் திடுக்கிடுகிறதே அது நடந்தது எழுத்தாளர் சுஜாதாவின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட போது. அதற்கு சில தினங்களுக்கு முன்னர் நற்செய்தியாளர் டி.ஜி.எஸ். தினகரன் மரணமடைந்த செய்தி வந்தது. டி.ஜி.எஸ். அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன். அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். மெல்லிய இறகுகளை வைத்து விசிறுவது போன்ற பேச்சு அவருடையது. அவர் மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னால் அவரது பாடல்கள் கொண்ட குறுந்தகடு ஒன்று கிடைத்தது. அதை என் ஐ-பாடில் வைத்துக் கேட்கும் போது அவரது குரலின் பரிவும், அது ஆன்மாவில் ஏற்படுத்தும் கிளர்ச்ச்சியும் என்னை பிரமிப்படைய வைத்தது. ஒரு முறை விகடனில் எழுதிய கட்டுரையொன்றில் சுஜாதா தமிழில் சிறப்பான பேச்சாளர்கள் ஒலியைல்லாம் பதிந்து, தொகுத்து, பராமரிக்க வேண்டும் என்றும் americanrhetoric.com என்ற தளம் அப்படிச் செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதில் சிறந்த பேச்சாளர்கள் என்று வரிசைப்படுத்திவர்களில் டி.ஜி.எஸ். தினகரனும் அடக்கம். தினகரன் இறந்த போது சுஜாதாவின் கட்டுரைதான் என் நினைவுக்கு வந்தது. அந்த நினைவினூடாகவே, சுஜாதாவிற்கும் டி.ஜி.எஸ் வயதிருக்குமே, அவருக்கும் உடல்நலக் குறைவுகள் உண்டே, இன்னும் அவருக்கு எத்தனை ஆண்டுகளோ என்ற நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சில நாட்களில் சுஜாதா மறைவான போது பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

இளவயதில் சுஜாதாவின் தீவிர வாசகனாயிருந்தேன். விகடன் மாணவ பத்திரிகையாளரில் பயிற்சி பெற்ற போது அப் பயிற்சி முகாமில் அவர் பேசினார். அதுவே அவரை முதலும் கடைசியுமாகப் பார்த்தது. காலப் போக்கில் அவரது படைப்புகளைத் தேடிப் பிடித்து வாசிப்பது குறைந்தது என்றாலும், அவர் தமிழ் கலாசார உலகில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றிய எண்ணங்களில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எதை எழுதினாலும் சுவாராசியமாக எழுதுவது, யாரும் முயற்சிக்காத விஷயங்களையெல்லாம் படித்தோ, அனுபவித்தோ தெரிந்து கொண்டு அதைப் பற்றி எழுதுவது, எல்லா வகை எழுத்துக்களையும் எழுதிப் பார்ப்பது, சக கலைஞர்களை ஊக்குவிப்பது என்று ரொம்ப தீவிரமாக இயங்கிய ஒரு நபர் அவர். சமீபத்தில் நானும் ப்ரகாஷும் சான் ஃப்ரான்சிஸ்கோவில் காரில் போகும் போது டாலஸ் நகரம் பற்றிய ஒரு பேச்சு வந்தது. ப்ரகாஷ் அங்கு கொஞ்சக் காலம் இருந்திருக்கிறான். “அங்க ஜான் கென்னடி சுட்ட இடத்தை சுற்றுலாப் பயணிகள் போய் பார்க்கிற மாதிரி செய்திருக்கிறார்கள். அமெரிக்கர்கள் பண விஷயத்தில் கெட்டி. அதற்கும் பணம் வசூலித்து விடுகிறார்கள்” என்றான். "தெரியுமே, சுஜாதா எழுதியிருக்கிறாரே:

கென்னடியைச்

சுட்டுக் கொன்ற ஜன்னலின் வழியே

எட்டிப் பார்க்க

துட்டுக் கேட்கிறார்கள்” என்றேன்.

அதுதான் சுஜாதா.

மூன்றாவது மரணம் வேலுப்பிள்ளை பிரபாகரனுடையது. அந்த சமயம் இந்தோனேசியாவின் சுறபயா நகரில் இருந்தேன். சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஆஃப்கானிஸ்தானில் உள்ள விஷயம் தெரிந்த ஒரு நண்பர் மூலமாக இலங்கைப் படையினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டார்கள்; முடித்து விடுவார்கள் என்று அறியக் கிடைத்தது. இருப்பினும் செய்தி வந்த போது மனது உடைந்து விட்டது. இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. பிரபாகரனது வழிமுறைகளில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மாபெரும் வீரன், ஓப்பீடு இல்லாத அறிவுக் கூர்மை கொண்ட ஒரு நபர், தன்னுடைய இலட்சியத்திற்கு நூறு சதவிகிதம் உண்மையாக வாழ்ந்தவர், அவர் என் தமிழ் பேசும் ஒருவர் – அவர் நிரந்தரமாக இந்த உலகை விட்டுச் சென்று விட்டார் எனும் போது எழும் ஆற்றாமையை தேற்ற முடியவில்லை. கூடவே, சிங்களவர்கள் மட்டும் நீதியோடு நடந்து கொண்டிருந்தால் பிரபாகரன் இலங்கையை எந்த அளவிற்கு உயர்த்தியிருக்கலாம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. பிரபாகரன் மறைந்த நாள் தமிழர்களுக்கு தரும் துக்கத்தை விட, தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒரு மாபெரும் வாய்ப்பை கைவிட்ட சிங்களவர்களுக்கு அதிக துக்கத்தைத் தர வேண்டும். அதை அவர்கள் ஒரு நாள் உணருவார்கள். It will probably be too late, then.