Monday, October 29, 2007

தலித்திய விமர்சனம்

கடந்த வார இறுதியில் வாசித்தது ராஜ் கௌதமன் எழுதிய “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” (காலச்சுவடு பதிப்பகம், 2005 வெளிவந்த இரண்டாவது பதிப்பு, ரூ 90).

இப் புத்தகத்தை வாங்கியதற்கு பல காரணங்கள் உண்டு. ராஜ் கௌதமன் அவர்களை “சிலுவைராஜ் சரித்திரம்” என்ற அவரது நூலின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்டேன். சுயசரிதையினடிப்படையில் பின்னப்பட்ட புதினமான அந்நூல் என்னுடைய மனதைக் கவரவே, தொடர்ந்து அவரது “காலச்சுமை” என்ற நூலையும் வாங்கி வாசித்தேன். இது “சிலுவைராஜ் சரித்திரம்” நூலின் தொடர்ச்சியே. இந்த இரண்டு நூல்களும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளில் சிலவற்றை நான் புரிந்து கொள்ள உதவி செய்யவே, ராஜ் கௌதமன் எழுத்துக்களை மேலும் வாசிக்கும் எண்ணம் எழுந்தது. கூடவே, நமது சமூகத்தில் சாதியமைப்பின் எதிர்காலம் பற்றி எனது மனதில் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும் கேள்விகளில் சிலவற்றிற்காவது “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” நூலில் விடைகள் இருக்கலாம் என்று தோன்றியது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

“தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” 15 கட்டுரைகள் அடங்கிய 185 பக்கப் புத்தகம். 1991லிருந்து 2002 முடிய எழுதப்பட்ட கட்டுரைகள் கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று ரணஜித் குகா என்பவர் எழுதிய ஆங்கில நூலின் சுருக்கமான தமிழ் தொகுப்பு. ஒன்பது நூல் விமர்சனங்கள். இவை தவிர இரண்டு கட்டுரைகள் தீவிர இலக்கியம் சார்ந்தவை. இவற்றில் “பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்” என்பதையும், “குடும்பம், பெண்ணியம்” ஆகிய இரண்டு கட்டுரைகளையும் என்னால் வாசிக்க முடியவில்லை. மிகவும் செறிவு வாய்ந்த என் கபாலத்திற்குள் மிகவும் செறிவு வாய்ந்த அக் கட்டுரைகள் இறங்க மறுத்து விட்டன.

“தலித்தியப் பார்வையில் பாரதி,” “காலம் பார்த்து வந்த ‘தோட்டியின் மகன்’,” “புனித ஆறுமுகம்” மற்றும் “புதுமைப்பித்தன்: விமர்சனமும் சாதியமும்” ஆகிய நான்கும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகள். ராஜ் கௌதமனின் எள்ளல் தெறிக்கும் உற்சாக நடை எல்லாக் கட்டுரைகளிலும் இருக்கிறதென்றாலும், அது உச்சாணியை எட்டுவது “ஒரு டவுசர் கிழிந்த கதை” என்ற கடைசிக் கட்டுரையில்தான். அக்கட்டுரையின் பொருளுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கதை நடக்கும் ஊர்தான் எனது முன்னோர்களின் கிராமம். அந்த டவுசரின் வலது காலை அணிந்திருந்தவர்கள்தான் எனது முன்னோர்கள். இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.

நூலின் முதல் கட்டுரையான “தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்” என்ற கட்டுரை தேசிய விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் வழிவந்த இலக்கிய முயற்சிகள் எல்லாம் தலித் சமுதாயத்தை ஒடுக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டன என்று சொல்லிவிட்டு, தலித் இலக்கியம் என்றால் என்ன என்று வரையிட முயற்சி செய்கிறது:

எல்லா வகையிலுமுள்ள ஒடுக்கு முறைகளை எதிர்த்து, இனி தனக்குக் கீழ் ஒடுக்குவதற்கு எதுவும் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்குடைய இலக்கியத்தைத்தான் தலித் இலக்கியம் என்று கூறலாம்” என்று சொல்லி விட்டு “இனியொரு சாதியோ, மதமோ, குடும்பமோ, சுரண்டலோ உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம். இத்தகைய அரசியலை மேற்கொண்ட, கருத்தியல் ரீதியில் தலித்துக்களான அனைவராலும் இத்தகு தலித் இலக்கியத்தைப் படைக்க முடியும்” என்கிறது இக் கட்டுரை.

இவ்வளவு விரிவாக சொன்ன பிறகும் தலித்திய இலக்கியம் என்றால் என்ன என்பதை என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியாததற்கு என் கபால ஓட்டின் செறிவு ஒரு காரணமென்றாலும், “எவர்தான் ராஜ் கௌதமன் அவர்கள் தலித் இலக்கியம் புனைவோருக்கு விதிக்கும் மிகக் கடினமான தகுதியினை எட்ட முடியும்?” என்ற மலைப்பும் ஒரு காரணம். இன்னொரு இடத்தில் (தலித்தியப் பார்வையில் பாரதி, பக்கம் 149) “சாதி, அரசியல், நாடு, இனம், மொழி, மதம், பால், பொருளாதாரம் முதலிய பல்வேறு நிலைகளில் ஏதாவது ஒரு சிலவற்றால் மனிதர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்களே” என்கிறார். இதனுடைய இன்னொரு பக்கம், எவ்வளவுதான் ஒடுக்கப்பட்டாலும், மனிதன் தன் தன்மையிலேயே ஒடுக்குபவனாகவும் இருக்கிறான். இது மனிதனுக்கு மட்டுமல்ல மனுசிக்கும் பொருந்துவதுதான். எனவேதான் ராஜ் கௌதமன் அவர்களின் தகுதிக்கு உட்பட்டு யார் இலக்கியம் படைக்க முடியும் என்று தோன்றுகிறது. மேலும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம் என்பதும் விவாதத்திற்குரியதாகிறது. இம் மூன்றில் மதமும், குடும்பமும் உருவாகதபடி செய்வதன் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே. ஒரு வேளை சுரண்டலுக்குட்படுத்தும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடியான செயல்பாட்டையே ஆசிரியர் குறிப்பிடுகிறாரோ என்னவோ. மூன்றாவது வரையறையான தலித்துகள்தான் தலித் இலக்கியத்தைப் படைக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பது மட்டுமே எனக்கு தெளிவாக புரிகிறது.

தலித் இலக்கியம் பற்றி ஒரு தெளிவான பார்வை ராஜ் கவுதமன் அவர்களது கட்டுரையில் எனக்கு கிட்டவில்லை என்பதற்கு இக்கட்டுரை எழுதப்பட்ட காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். இது எழுதப்பட்ட 1991ல் தலித் இலக்கியம் என்று ஒன்று உருவாக்கப்படவில்லை என்றே ராஜ் கவுதமன் கருதுகிறார். இல்லாத ஒன்றைப் பற்றி தெளிவான பார்வையை எப்படி உருவாக்க முடியும்? ஆனால் பிற்காலத்தில் தலித்திய இலக்கியம் உருவெடுக்க ஆரம்பித்தபின் தனது கருத்துக்களை தெளிவு படுத்தியிருக்கலாம். தனது குறுகிய முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்:

இங்கு பிரசுரமாகும் கட்டுரைகளில் நான் கை வைக்கவில்லை. அந்தந்தக் காலத்தில் வெளிவந்த தடயங்கள் இருக்கட்டும் என்பது என் விருப்பம். இந்தப் பத்தாண்டு காலத்தில் சில கருத்துக்களை நான் மாற்றிக் கொண்டிருக்கலாம்; சில வளர்க்கப்பட்டிருக்கலாம்; சில கைவிடப்பட்டிருக்கலாம்

இருக்கலாம், ஆனால் புத்தகத்தின் தலைப்பை வலியுறுத்தும் முதல் கட்டுரையிலாவது, குறைந்த பட்சம் ஒரு பின்குறிப்பு மூலமாகவாவது தனது கருத்துக்களை ஆசிரியர் தெளிவு படுத்தியிருந்திருக்கலாம். அல்லது பின்னர் எழுதப்பட்ட “புனித ஆறுமுகம்”, “சனதருமபோதினி: சின்னக் கதையாடல்கள்” போன்ற விமரிசனங்களிலாவது தலித் இலக்கியம் என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கியிருக்கலாம்.

“புனித ஆறுமுகம்” என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். இமையம் என்பவர் எழுதி, க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஆறுமுகம்’ என்ற புதினத்தின் விமர்சனமே இக்கட்டுரை. தலித் ஒருவன் நாயகனாக இருப்பதால் ஒரு நூல் தலித் இலக்கியமாகி விட முடியாது என்பது இக்கட்டுரையில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் இருக்கிறதாக கருதுகிறேன். இக்கட்டுரையை நான் தமிழில் படித்த நூல் விமர்சனங்களில் சிறப்பானதாகக் கருதுகிறேன். தவறுகளைக் காணும் போது, நாவலாசிரியர் தனது படைப்புச் சுதந்திரத்தை முன்னிட்டு தப்பிப்போக இடமுள்ள இடங்களில் கூட அவரை நழுவ விடாமல் நறுக்கென்று தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்யும் ராஜ் கவுதமன், நாவலின் சிறப்புக்களையும் வெகு உற்சாகமாக பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. இதைப் போன்றே, அல்லது இதை விடச் சிறப்பாகவே புதுமைப்பித்தன் அவர்களது மற்றும் புதுமைப்பித்தன் பற்றிய படைப்புக்களையும் அணுகியிருக்கிறார். புதுமைப்பித்தன் மீது ராஜ் கவுதமனுக்கு ஒரு பெரும் கிறக்கமே இருக்கிறது இக்கட்டுரைகளில் புலனாகிறது. இருப்பினும், அவர் மீது கறாரான விமர்சனங்களை வைக்க தயங்குவதில்லை. புதுமைப்பித்தன் ஸ்ரீராமாநுஜலு நாயுடு என்பவரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதினார் சொல்லிவிட்டு, இது புதுமைப்பித்தனுக்கும் பொருந்தும் என்கிறார்.

ஸ்ரீராமாநுஜலுநாயுடு கதை சொல்வதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த்தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞர் என்பதை நாம் மறந்து விடுகிறோமா? அம்மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்

இந்தப் பார்வை ராஜ் கவுதமனுக்கு வாய்த்திருப்பது அவரது விமரிசனங்களிலெல்லாம் வெளிப்படுகிறது. “தலித்தியப் பார்வையில் பாரதி” என்ற கட்டுரையில் அவர் பாரதியை மூன்று நிலைகளில் பார்க்கின்றார். ஒன்று, தான் பிறந்த சாதியின் கொள்கைக்கு மாறான கொள்கையை பின்பற்றியதால் அந்த சாதியால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பாரதி. இரண்டாவது, சொந்தச் சாதியின் ஒடுக்குமுறைகளைக் கடுமையாக விமர்சித்த பாரதி. மூன்றாவது, தலித் விடுதலை பற்றிய ஆர்வம் கொண்ட பாரதி. இரண்டாவது, மூன்றாவது அணுகுமுறைகளில் பாரதியின் கருத்துக்களில் இருந்த பிழைகளை சுட்டிக் காட்டத் தயங்கவில்லை. அவரது காலத்தின் பிடிக்குள்ளிருந்து பாரதியால் முற்றிலுமாக மீள முடியவில்லை என்றும், வருணம், சாதிபேதம் பற்றி இந்து அறிவுலகம் கூறி வந்ததை பாரதியும் பிரதிபலித்தார் என்று கூறும் ராஜ் கௌதமன், சமத்துவத்தை நிலவ வேண்டும் என்பதில் பாரதியிடம் வெளிப்படுத்திய விதத்தை “உள்ளார்ந்த ஆர்வத்தை, நேர்மையை, ஒரு குழந்தையின் கபடமின்மையை, ஒரு கவிஞனின் கனவை, ஒரு பித்தனின் கற்பனையை யாராலும் சந்தேகிக்க முடியாது” என்று விவரிப்பது ராஜ் கௌதமனின் உள்ளத்தைத் திறந்து கொட்டும் வார்த்தைகளாகத் தோன்றுகிறது.

தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும், நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்.” என்று முதல் கட்டுரையில் வரைந்த தலித்திலக்கியத் தகுதியனடிப்படையில் ராஜ் கௌதமனின் “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” தலித்திலயக்கியம் ஆகாது. இப்புத்தகம் சுகமான வாசிப்பனுபவத்தைத் தருவது மட்டுமல்ல, தனது நிதானமான, அறிவுபூர்வமான பார்வையிலும், அழகான, தெளிவான நடையிலும், ஆங்காங்கு கொப்பளிக்கின்ற குறும்பிலும், உற்சாகத்திலும், உணர்விலும் வாசிப்பவர்களிடம் செறிவான கருத்துத் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

தமிழ் பேராசிரியர் என்பதாலோ என்னவோ, சில நூல் விமர்சனங்களில் நூலில் கண்ட சிறு பிழைகளை கூட குறிப்பிட ராஜ் கௌதமன் மறப்பதில்லை. ஒரு நூலின் ஒற்றுப் பிழைகள் கூட கடும் கண்டனத்துக்குள்ளாகின்றன. அது போன்றே, காலச்சுவடு நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் இந் நூலில் முதல் கட்டுரையில் பின்குறிப்புகள் ஒன்று (குறிப்பு எண் 5) விட்டுப் போனது, குறிப்பு எண் 13 வரை குழப்பங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
Posted by Picasa

2 comments:

Badri Seshadri said...

http://thoughtsintamil.blogspot.com/2004/07/1.html

நான் பல மாதங்கள் முன் எழுதியது. மேற்கொண்டு எழுத நினைத்து ஆனால் எழுதப்படாமலேயே விட்டுவைத்திருக்கும் ஒன்று.

உங்கள் அறிமுகம் மேலும் பலரை, இந்தப் புத்தகத்தைப் படிக்க வைக்கும் என நம்புகிறேன்.

Victor Suresh said...

பத்ரி, தங்கள் கருத்துக்கு நன்றி. எனது கருத்துக்களை எழுது முன்னர் புத்தகத்தின் தலைப்பை கூகிளில் கொடுத்து தேடிய போது தங்களது பதிவுத் தளத்தைக் கண்டேன். தங்களது பதிவையும் வாசித்தேன். முதல் கட்டுரையைப் பற்றி விபரமாக எழுதியுள்ளீர்கள். மிகுந்த உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட கட்டுரை அது. ஆனால், எழுதப்பட்டு 15 ஆண்டுகளைத் தாண்டிய இன்றைய காலகட்டத்தில் அதிலுள்ள கருத்துக்கள் எத்தனை நிலை பெற்று நிற்கின்றன என்பது தெரியவில்லை.