Monday, October 22, 2007

தமிழரின் பணிவும் குழைவும்

சில புத்தகங்கள் வாங்க கடந்த வாரம் நாகர்கோவிலிலுள்ள காலச்சுவடு பதிப்பக அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். பதிப்பக நிறுவனரும், தமிழ் எழுத்தாளருமான காலம் சென்ற சுந்தர ராமசாமி அவர்களது இல்லத்தின் முன்பகுதி பதிப்பக அலுவலகமாக இயங்குகிறது.

ஓடு வேய்ந்த முகப்பு பகுதியில் நின்றிருந்த ஒருவர் நட்புடன் புன்னகைத்து என் தேவையைக் கேட்டார். கட்டிடத்தின் வலது புறமிருந்த முன்னறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, பதிப்பகத்தின் விலைப்பட்டியலைக் கொடுத்தார். எனக்கு தேவையான புத்தகங்களை தெரிவு செய்து விட்டு, அவை எடுத்துக் கொடுக்கப்படும் வரையில் காத்திருந்த போது, அந்த அலுவலகத்தின் அலமாரி ஒன்றின் கீழ்ப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தாள் என் கவனத்தை ஈர்த்தது. அது அந்த அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பட்டியல். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த தாளில் பெயர்கள் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தப்பட்டிருந்தன:

Sudarshan Stores
Sudarshan Books
Sir
Madamமுதலாளியின் பெயரைத் தட்டச்சு செய்தால் கூட அவரது மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடுமென அஞ்சி “Sir” என்று விளித்த, அந்த முகமறியா ஊழியர் தமிழர்கள் காட்டும் மிதமிஞ்சிய பணிவின் அடையாளமாக எனக்குத் தோன்றினார்.

இறைவனையும் தோழனாகப் பாவித்து, நீ, அவன் என்று அழைத்த தமிழ் சமுதாயம் தனக்கு மேலிருக்கும் மனிதர்களிடம் மிதமிஞ்சிய பணிவினைக் காட்டத் தொடங்கியது எப்போது என்று தெரியவில்லை.

நம் மண்ணில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த சாதியமைப்பும், நிலவுடமையாளர் ஆதிக்கமும், பின்னர் காலனியாதிக்கமும், அதன் விளைவாகப் பிறந்த அதிகார வர்க்கமும் இந்த மனநிலைக்கு காரணமாக இருப்பதில் சந்தேகமில்லை. உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களின் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் கூட, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதியவர்களின் பெயர் சொல்லி, ஒருமையில் அழைப்பதை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன். எனது நண்பரொருவர் காவல் துறையில் உயர்ந்த நிலை பதவி ஒன்றில் இருக்கிறார். அவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவராதலால் அனைவரிடமும் பணிவாக, இனிமையாக பழகுபவர். ஒரு முறை அவர் அலுவலகத்தில் இருக்கும் போது வயது முதிர்ந்த காவலர் ஒருவரை “நீ, போ” என்று ஒருமையில் அழைப்பதை வியந்து பார்த்த போது “இங்கயெல்லாம் இதுதான் வழக்கம். இப்படி நடத்தலேனா நம்ம தலைக்கு மேல ஏறி உக்காந்துருவாங்க” என்றார். நமது தமிழ்ச் சமுதாயத்தின் பணிவும் மரியாதையும் பெரும்பாலும் மனித நேயத்தில் விளைவதில்லை; ஒரு வித அச்சத்திலும், அடிமையுணர்விலுமே விளைகிறது. முகத்திற்கு முன்னால் பணிவும் குழைவும் காட்டும் பலர், முகம் மறைந்ததும் சம்பந்தப்பட்ட நபரை சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சிப்பதை நாம் பல தடவை பார்த்திருக்கலாம்.

ரோபோர்ட்டோ பெனினியின் “Life is beautiful” படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் பெனினி அவரது மாமா நடத்தும் விடுதி ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் சேர செல்வார். அவரது மாமா அவரிடம் பல கேள்விகள் கேட்பார். அதில் ஒன்று எப்படி விடுதிக்கு உணவருந்த வருகிறவர்களிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டுமென்பது, குறிப்பாக தலையை எப்படி தாழ்த்த வேண்டுமென்பது. பெனினி முதலில் லேசாக தலையைத் தாழ்த்துவார். அதற்கு அவர் மாமா எதுவும் சொல்லாமல் இருக்கவே, தாழ்த்தி, தாழ்த்தி இடுப்பை வளைத்து வணங்குமளவுக்கு போய் விடுவார். அதற்கு அவர் மாமா சொல்வது:

“முட்டாள், சூரியகாந்தி மலர்களைப் பார்த்திருக்கிறாயா? அவை சூரியனுக்கு முன்னால் லேசாகத் தலை வணங்கி நிற்கின்றனவே. அப்படி செய்தால் போதுமானது. ஒரேடியாக சூரியகாந்தி தலையை சாய்த்து விட்டதென்றால் அது செத்துப் போய் விட்டதென்று அர்த்தம். நீ பரிமாறுபவன். பணிவிடைக்காரன் அல்ல (You serve. You are not a servant). பரிமாறுவது என்பது உன்னதமான ஒரு கலை. கடவுள்தான் மனிதனின் முதல் பரிசாரகன். கடவுள் மனிதனுக்கு பரிமாறுகிறார். ஆனால் பணிவிடைக்காரன் ஆவதில்லை”

காலச்சுவடு பதிப்பகத்தில் நான் கடந்த வாரம் வாங்கி வந்த புத்தகங்களில் ஒன்று “ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்” என்பது. இது சுமார் 70 வயதான சுந்தர ராமசாமி அவர்கள், சுமார் 30 வயதுள்ள தடா கைதியான ஏழுமலை என்பவருக்கு எழுதிய பல்வேறு கடிதங்களின் தொகுப்பாகும். இதில் 31.03.03 தேதியிட்ட கடிதத்தில் சுந்தர ராமசாமி பின்வருமாறு எழுதுகிறார்:

“நீங்கள் என்னை ஐயா என்று அழைத்தீர்களானால் அது எனக்குக் கூச்சத்தையே தரும். என் பெயர் சொல்லியே அழைக்கலாம். நட்பும் மதிப்பும் நம் மனதிற்குள் இருந்தால் பிற விஷயங்கள் எல்லாம் சம்பிரதாயமே.”

5 comments:

ஜீவி said...

நண்பரே,

நல்லதொரு பதிவு.

தாங்கள் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளும் நன்று.

இப்பொழுதெல்லாம் அலுவலகங்களில், யாருக்கு யார் "காலைவணக்கம்-மாலை வணக்கம்" சொல்கிறார்கள் என்பதை வைத்துக்கொண்டு, மூன்றாமவர், இவர்கள் இருவரின் பதவி ஏற்ற-தாழ்வுகளைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு இந்த 'குட் மார்னிங்- குட் ஈவினிங்" மாறிப் போயிருக்கிறது. வயது வித்தியாசங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதாவது வயதான மூத்த அலுவலர் கூட, தன்னைவிட மிகவும் வயதுகுறைந்த அதிகாரிக்கு கைதூக்கி காலைவணக்கம் சொல்வார்.இயல்பாக ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் இந்த வாழ்த்துக்களில் கூட அதிகார வித்தியாசங்கள் புலப்படும். அதிகாரி லேசாகத்தலையை ஆட்டி அதை கண்டுகொண்டதாகக்காட்டிக்கொள்வாரே தவிர,அவரும் பதில் வணக்கம் சொல்ல மாட்டார். சில சமயங்களில் இவரது வணக்கத்தை அவர் கண்டுகொள்ளாமல் போவதும் உண்டு. கேட்டால், இது "மேனேஜ்மெண்ட் கலாச்சாரம்" என்பார்கள். யாராவது மேலாண்மைத்துறை படிப்பு படித்தவர்கள் தான் இதற்கு விளக்கமும், காரணமும் சொல்லவேண்டும்.

RATHNESH said...

ஏவிஎஸ் சார்,

30 வயது இளைஞர் தன்னை மரியாதையுடன் ஐயா என்று அழைத்ததை மறுதலித்தவரின் இல்லத்தில் / அலுவலகத்தில் அவர் பெயரைக் கூட டைப் அடிக்கக் கைகூசிய டைப்பிஸ்ட் இருந்தது வித்தியாசமான முரண்.

மரியாதை தருவது என்று மனதார முடிவாகி விட்டால் அதை யாருக்குத் தருகிறோமோ அவர் விரும்பிய வழியில் தந்து விட்டுப் போவதில் என்ன குறைந்து விடப் போகிறோம்? நான் இப்படித் தான் மரியாதை கொடுப்பேன் என்கிற எல்லைக்கோடு வரைந்தாலே மரியாதையின் பொருள் கொஞ்சம் மட்டுப் படுகிறதே.

மரியாதை தருதல், பணிதல், குழைதல் மூன்றும் வெவ்வேறு தளத்திலானவை; இவை இடம் மாறிக் காட்டப்படும் போதெல்லாம் அனர்த்தமாகிறது.

Victor Suresh said...

ஜீவா, தங்களது அலுவலக அனுபவம் தனியார் நிறுவனம் சார்ந்ததா? அங்கு அரசு அலுவலக அளவில் “மரியாதை” பிரச்சினைகள் இருக்காதென்று கருதுகிறேன். தவறானால் திருத்துங்கள்.

Victor Suresh said...

திரு. ரத்னேஷ்,
// மரியாதை தருதல், பணிதல், குழைதல் மூன்றும் வெவ்வேறு தளத்திலானவை; இவை இடம் மாறிக் காட்டப்படும் போதெல்லாம் அனர்த்தமாகிறது.//

மிக அருமையான கருத்து. என்னைப் பொறுத்த வரையில் மரியாதை என்பது வயது, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுவது என்றாலும் இது மனது மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டது. பணிதல் என்பது முதிர்ந்த மனதொன்றின் ஒரு புற அடையாளம், கலாசாரத்தின் உச்சாணி. ஆனால், இதில் சில போலி வகைகளும் உண்டு. குழைதல் இதில் ஒரு வகை. எல்லாப் போலிகளையும் போல போலி பணிவையும் அடையாளம் காட்ட தேவையானது சற்று கால அவகாசமும் நிறைய அனுபவ அறிவும்.

வழிப்போக்கன் said...

அரசு அலுவலங்களில் எழுதப்படாத சட்டம் ஒன்று இருக்கிறது. மேலதிகாரிகளுடன் பேசும்போது படர்க்கையில் தான் குறிப்பிடவேண்டும் என்பது தான் அது. தமிழில் பேசும்போது "நீங்கள்" என்று சொல்லுவதற்குப் பதிலாக "தாங்கள்" என்று சொல்லி சமாளித்து விடலாம். ஆங்கிலத்தில் "you" சொல்லுவது அவமரியாதையாகக் கருதப்படுகிறது. அதனால், "மானேஜர்" சொல்வது சரிதான். "டைரக்டர்" கையெழுத்து இடவேண்டும் என்று கூனிக்குறுகிப் படர்க்கையில் சொல்லுவது பணிவா? கூழைக்கும்பிடா? நான் பேசும்போது "You have said, Sir" என்று சொன்னதைக்கேட்ட சக அலுவலர் பதறிப்போய்விட்டார்.
அதேபோல், சிவமடத்துப் பண்டாரசன்னதிகளுடன் பேசும்போது அவர் என்ன சொன்னாலும் "சாமி" "சாமி" என்று பின்பாட்டுப்பாடுவதும் இன்றும் நிலவுகிறது.
இதெல்லாம் எழுதப்படாத சட்டம். குனி என்றால் காலில்விழுந்து கும்பிடும் அடிமை மனப்பான்மை வேறூன்றியதின் விளைவு.
முகில்வண்ணன்