முதல்
பகுதி இங்கு.
“பார்ப்பன
அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு” என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
பார்க்க முடியாத ஒன்றுதான் எனது முதல் கட்டுரையாக உருவாகியது. அந்தக் காலத்தில் தென்
தமிழக மாவட்டங்களில் இலங்கையின் அரசு நிறுவனமான ரூபவாகினியின் தொலைக்காட்சி சேவை மட்டுமே
கிடைத்து வந்தது. தூத்துக்குடி போன்ற கடலோர நகர்களில் பெரும்பாலான நேரங்களில் இச்சேவை
நன்றாக இருக்கும். படம் தெளிவாகத் தெரியும். சில நேரங்களில் ஒன்றுமே தெரியாது. புரியாத
சிங்கள மொழிச் சேவை தெளிவாகத் தெரிவதாகவும், விரும்பிப் பார்க்கும் தமிழ், மற்றும்
ஆங்கில மொழிச் சேவைகள் தெளிவாகத் தெரியாததாகவும் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
இந்தியா-பாகிஸ்தான்
இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியாவின் கை ஓங்க, ஓங்க, படம் தெளிவு
குறைந்து கொண்டே போய், ஒன்றும் தெரியாமலாகிவிட்ட கடுப்பில் “ட்ரான்ஸ்மிட்டரின் சக்தியைக்
கூட்டியும் குறைத்தும் நம் உணர்வுகளுடன் விளையாடுகிறது ரூபவாகினி” என்று ஒரு கட்டுரை
எழுதி அனுப்பினேன். அது அடுத்த வாரம் ‘ரூபவாகினியின்
கோர தாண்டவம்’ என்ற தலைப்பில் மதன் அவர்களின் கார்ட்டூனுடன் ஒருபக்கக் கட்டுரையாக பிரசுரமானது.
யாரிடமும் எந்த ஒரு அபிப்பிராயமும் கேட்காமல், வெறும் அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட
கட்டுரை பிரசுரமானது அந்தக் காலத்திலேயே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உண்மையை
விட உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய சுவாரஸ்யத்திற்கே தமிழகப் புலனாய்வுப் பத்திரிகைகள்
அன்றும், இன்றும் முதலிடம் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் ஜூனியர் விகடன் தமிழக முதல்வர்
ஸ்ரீரங்கம் சென்று திரும்பியதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில்
அவர் விமான நிலையத்திற்குத் திரும்பும் வழியில் திருச்சி சிறைச்சாலையைக் கண் கொட்டாமல்
பார்த்து வந்ததாகவும், காரணம் அந்தச் சிறைக்குள்தான் அவரது முன்னாள் தோழியின் உறவினர்
அடைக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. முதல்வரின் வாகன ஓட்டியோ, அல்லது வாகனத்தில்
பயணித்த வேறு யாராவதோ சொல்லியிருந்தாலொழிய அவர் அப்படி சிறைச்சாலையைக் கண்கொட்டாமல்
பார்த்தாரா இல்லையா என்று தெரியாது. அப்படி முதல்வரின் வாகன ஓட்டியோ, அல்லது வாகனத்தில்
பயணத்தில் வேறு யாரோ விகடன் நிருபரிடம் சொல்லக் கூடிய வாய்ப்புகள் குறைவு. எனவே, ஸ்ரீரங்கத்திலிருந்து
திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் சிறைச்சாலை இருக்கிறது, உள்ளே முன்னாள் தோழியின்
உறவினர் இருக்கிறார் என்ற இரண்டு உண்மைகளுக்கு நடுவில் அனுமானத்தின் அடிப்படையில் யாரும்
ஒத்துக் கொள்ளவோ, மறுக்கவோ முன்வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் ஒரு உடான்ஸை செருகியிருக்கிறார்
பத்திரிகையாளர்.
‘ரூபவாகினியின்
கோர தாண்டவம்’ பிரசுரமான சமயத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. எம். வசீகரன் என்பவர்
நான் மாணவ நிருபராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து, என்னை வந்து சந்திக்கும்
விருப்பத்தை சொல்லியிருந்தார். அவரும், அவரது நண்பர் கண்ணனும் ஒரு நாள் என்னை வந்து
சந்தித்தார்கள். வசீகரன் என்னை விடச் சில ஆண்டுகள் மூத்தவர். கருப்புச் சட்டை அணிந்திருந்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பகுதிநேரப் பணியும், புகைப்படக் கலைஞராக பகுதிநேரப் பணியும்
செய்து கொண்டிருந்தார். திராவிட கழகத்திலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். பத்திரிகைப்
பணியில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரிடம் ஸ்கூட்டரும், கேமராவும் இருந்தன. என்னிடம்
பத்திரிகையாளன் என்ற அங்கீகார அட்டையும், பேனாவும், காகிதமும் இருந்தன. இருவருக்கும்
பத்திரிகைத் துறையில் ஆர்வம் இருந்தது. எனவே, கூட்டணி சேர்ந்து விட்டோம். அன்று முதல்
பாரதிராஜா படப்பிடிப்புகளுக்கு கண்ணனின் கண்களை எடுத்துச் செல்வது போல எனது பத்திரிகைப்
பணிகளுக்கெல்லாம் வசீகரனின் கண்களைத்தான் எடுத்துச் சென்றேன். என்னை அவரது ஸ்கூட்டர்
சுமந்து சென்றது.
தமிழகத்தின்
புகழ்பெற்ற வைணவத் தலமான தென்திருப்பேரை கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற
செய்தி கேள்விப்பட்டு நானும், வசீகரனும் தென்திருப்பேரைக்கு விரைந்தோம். ஏற்கனவே திருச்செந்தூர்
கோவிலில் செந்திலாண்டவனுக்கு சாத்தப்பட்ட வைர வேலொன்றை அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வைச்
சேர்ந்த ஒரு பிரமுகர் அபேஸ் செய்ததாகவும், அதைத் தட்டிக் கேட்ட சுப்பிரமணிய பிள்ளை
என்னும் ஆலய அதிகாரியைக் கொன்று விட்டு, உண்டியலில் விழுந்த பணத்தை அவர் திருடி, கையும்,
களவுமாக பிடிபட்டு, அவர் அவமானத்தால் தூக்கிலிட்டு இறந்து விட்டதாக கதை கட்டியதாகவும்
ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. கருணாநிதி இந்த சம்பவத்தை முன்னிட்டு “நீதி கேட்டு
நெடும்பயணம்” என்ற பெயரில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரை நடைப் பயணமாக வந்து
தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். தென்திருப்பேரை கொள்ளையிலும் அ.தி.மு.க.வைச்
சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியதால், இக் கொள்ளைக்கு அரசியல்
முக்கியத்துவமும் சேர்ந்திருந்தது.
நானும்,
வசீகரனும் கொள்ளைச் செய்தியை சராசரி ஜூனியர் விகடன் பாணியிலேயே மேற்கொண்டோம். சம்பவம்
நடந்த இடத்திற்கு செல்வது. புகைப்படங்கள் எடுப்பது. கோவில் நிர்வாகிகளுடன் பேட்டி.
கோவில் தெருவில் வசிப்பவர்களுடன் பேட்டி. புலனாய்வு செய்யும் அதிகாரிகளுடன் பேட்டி.
இவற்றின் அடிப்படையில் ஒரு கட்டுரை. நமக்கு என்ன தோன்றுகிறதோ அதன் அடிப்படையில், கூடவே
ஏதாவது நீதியைச் சொல்லி கொளகொளா என்று முடிவுரை.
அடுத்த
வாரம் தென்திருப்பேரை கோவில் கொள்ளை பற்றிய கட்டுரை ஜூனியர் விகடனில் வந்தது. அது நானெழுதிய
கட்டுரை மாதிரியும் இருந்தது; இல்லாமலிருந்தது போலவும் இருந்தது. அப்போதெல்லாம் கையினால்
கட்டுரை எழுதி, பிரதி எடுத்து வைக்காமல் அனுப்புவதால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
ஆனால், கட்டுரையில் பிரசுரமான புகைப்படம் வசீகரன் எடுத்தது. அவர் பெயர் பிரசுரமாகவில்லை.
கட்டுரையின் ஆசிரியர் ‘நமது நிருபர்’. பிறகு விசாரித்ததில் தெரிய வந்தது விகடனின் மூத்த
பத்திரிகையாளர்களில் ஒருவரான சுதாங்கனுக்கு சொந்த ஊர் தென்திருப்பேரையாம். அவரும் சென்னையிலிருந்து
ஊருக்குப் போய் செய்தி திரட்டி அனுப்பியிருக்கிறார். எனவே, கட்டுரையாளர்களின் பெயர்
குறிப்பிடப்படாமலே கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.
வீட்டில்
இருந்து டி.வி. பார்த்து விட்டு, அனுமானத்தின் அடிப்படையில் ஏதோ ஒன்றை எழுதினால் பிரசுரமாகிறது.
விடுமுறை எடுத்துக் கொண்டு, நாள் பூராவும் திரிந்து செய்தி சேகரித்து அனுப்பினால்,
அது நம் பெயரில் பிரசுரமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை உணர்ந்த போது உற்சாகம்
வடிய ஆரம்பித்தது. இந்த அனுபவம் ஒரு முறை மட்டுமல்ல. மீண்டும், மீண்டும் தொடர்ந்தது.
(இன்ஷால்லா
தொடர்வேன்)
3 comments:
ம்... வெகு சுவாரசியமான இரண்டாவது பகுதி..சூடு பிடிக்க துவங்கி விட்டது....
நேர்மை, துணிவு, இயல்பு என பல பரிமாணங்களில் விரிந்து விசை கூட்டுகிறது.... உண்மையும் சில திரை மறைவு பின்புலன்களும் எளிமையாக விளக்கப் படுகின்றன.
இரண்டு உதாரணங்களால் சொல்லும் சேதியின் வலு கூட்டப்பட்டிருக்கிறது.
தங்கள் ஆளுமையும், செயல் எழுச்சியும், வாசிப்பவருக்கு உத்வேகம் தருகிறது. வரும் தலைமுறைக்கான நல்ல ஒரு ஊக்கம் இதில் மின்னுகின்றன....
எப்போதுமே நான் இப்படி நினைப்பதுண்டு.... Modest and Honesty are rare commodities...
அரசியலிலோ, ஊடகங்களிலோ இன்று நாம் காண்பது அத்தகைய மனிதர்கள் இல்லை..
சுய விளம்பரங்கள்,சுய லாபங்கள், பலவான்களுக்கு ஜால்ராக்கள்.... இப்படித்தான் பார்க்கிறோமே அல்லாது.... தெளிவும் திடமும் நேர்மையும் கலந்த தொலை தூரப் பார்வையாளர்கள் குறைவோ என .....
தங்கள் எழுத்து அவர்களை சாடுகிறது... சாட்டையால் தாக்குகிறது...
வாழ்த்துக்கள்... அன்புடன்...
அப்புறம் ஒரு டவுட்டு.....
அதென்ன இன்ஷால்லா தொடருவேன் .....
புதிய வார்த்தை பிரயோகமாகவும் உள்ளதே....
தன்னை முன்னிலைப்படுத்தாது, படைத்தவனை சொல்லி, அவனே எல்லாவற்றிற்கும் என... காரணம் சொல்லும் இந்த பதம்....
இந்த கட்டுரைக்கு உயயோகிப்பதில் ஏதேனும் பிரத்யேகம் உண்டோ...
ஒரு ஆழ்ந்த உட்கருத்தை சொல்கிறதோ...
Nice and bold article. Keep it up.
இந்த வட்டத்தை வந்து பாருங்க. இது சாருவ விமர்சிக்கற வட்டம்
https://www.facebook.com/groups/charuvimarsagar/
Post a Comment