Sunday, February 12, 2012

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள்


என் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்த முக்கியமான ஒரு பத்து அனுபவங்கள் உண்டென்றால், அவற்றில் ஒன்று விகடன் மாணவப் பத்திரிகையாளாரப் பயிற்சி பெற்ற ஓராண்டு அனுபவம்.
மாணவப் பத்திரிகையாளர் திட்டம் எப்போது தொடங்கப்பட்டதென்று சரியாக நினைவில்லை. அநேகமாக 1982-ஓ 1983-ஓ ஆக இருக்கலாம். ஆனால், அது குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியடைந்த ஒரு திட்டம் என்பது நினைவிருக்கிறது. விகடன் குழுமத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஜூனியர் விகடன் இதழ் தனது புலனாய்வுக் கட்டுரைகளின் மூலம் மத்தியதர வாசக வட்டங்களில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலம். சௌபா, அசோகன், அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி போன்ற நிருபர்கள் தங்களது துணிச்சலான கட்டுரைகள் வாயிலாக ஹீரோக்களாக அறிமுகமாயிருந்தனர். அவர்களெல்லாம் மாணவப் பத்திரிகையாளராக அறிமுகமானவர்கள். தமிழில் எழுத ஆர்வமுள்ள எந்தக் கல்லூரி மாணவனுக்கும் விகடனின் பயிற்சி ஒரு கனவுத் திட்டமாக இருந்த காலம். 1984-ல் கல்லூரியில் நுழைந்தது முதல் விகடன் மாணவப் பத்திரிகையளாராக வேண்டும் என்பதே என் பெரிய கனவாக இருந்தது. பள்ளியில் எனக்கு முன்னோடியான ஃப்ரிட்ஸ் மிராண்டா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலிருந்து மாணவப் புகைப்பட நிருபராக தேர்வு செய்யப்பட்டு, அருள்செழியனுடன் இணைந்து சிறப்பாகப் பணிபுரிந்ததும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.
1985-ல் அந்த வாய்ப்பு கிடைத்தது. “வாருங்கள் மாணப் பத்திரிகையாளர்களே” என்று திட்டத்திற்கான அறிவிப்பு வந்தவுடனேயே முனைப்பாக வேலையைத் தொடங்கினேன். விண்ணப்ப படிவத்தையும், ஒரு கட்டுரையையும் அனுப்பி வைக்க வேண்டும். தூத்துக்குடி அந்தக் காலத்தில் ரௌடியிசத்திற்கு பெயர் பெற்றிருந்தது. பழிக்குப் பழி, பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டிக் கொலை, நாட்டு வெடிகுண்டு வீச்சு, ரௌடிகள் நடத்தும் சாகசங்கள் என்று எழுதுவதற்குப் பஞ்சமில்லாமல் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. கடற்கரைச் சாலைக்கு மிதி வண்டியில் போய் அப்போதைய காவல்துறை உயர் அதிகாரியைச் சந்தித்து பேட்டி கண்டு அதையும் கட்டுரையில் இணைத்திருந்தேன். கட்டுரையை வாசித்துப் பார்த்த போது திருப்தியாக இருந்தது, அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
நேர்முகத் தேர்வு சென்னையில். மதுரைக்குத் தெற்கே இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்திருந்தார்கள். ஒரு மாவட்டத்திற்கு 1-2 நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அப்போது தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதி. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 4-5 பேர்கள் வந்ததாக நினைவு. பள்ளி நாட்களிலிருந்தே நண்பரும், கல்லூரியில் எனக்கு முன்னோடியுமான கழுகாசலமூர்த்தியும் என்னோடு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஒரு எழுத்துத் தேர்வு. பிறகு கலந்துரையாடல் வடிவில் நேர்முகத் தேர்வு. மதிய உணவிற்குப் பின் அலுவலகத்திற்கு வெளியில் எங்காவது சென்று, ஒரு அனுபவத்தைப் பெற்று வந்து கட்டுரையாக எழுதிக் கொடுக்க வேண்டும். அப்போதைய விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களும், இணை ஆசிரியர் மதன் அவர்களும்தான் நேர்முகம் நடத்தினர். மதியம் விகடன் அலுவலகத்திற்கு வெளியே இருந்த அண்ணா சாலை டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த முதல் பேருந்தில் மெரினா கடற்கரையில் சென்று இறங்கினேன். சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. என்ன செய்வது என்று தெளிவான ஒரு திட்டம் இல்லாமல் கடற்கரையில் கால் போனபடி நடந்தேன். ஒரு இடத்தில் கருவாடு காயப் போட்டிருந்தார்கள். அங்கே சென்று அந்தக் காட்சியை ஒரு புகைப்படம் எடுத்தேன். அங்கே இருந்த நபர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். அந்தக் காலத்தில் கடற்கரையை அழகு படுத்தும் திட்டம் ஒன்று அரசிடம் இருந்தது. அதில் மீனவர்கள் கடற்கரையை பயன்படுத்துவதில் பல தடைகளை உருவாக்கப் போவதாக ஐயங்கள் எழவே, மீனவர்கள் வெகுண்டு போராடத் தொடங்கியிருந்தார்கள். ஆக, அந்தக் கருவாடு காயப்போட்டிருந்த நபரிடமே அந்தப் போராட்டங்கள் தொடர்பாக பேட்டியைத் தொடங்கி விசாரிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்குள் கட்டுரை எழுத போதுமான சரக்கு கிடைத்தது. மறுபடி பேருந்து பிடித்து அலுவலகம் சென்று கட்டுரையை எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
சில வாரங்களுக்குள் நான் ஆவலாக எதிர்பார்த்த செய்தியும் வந்தது. வாழ்க்கையில் அதற்கு முன்னும், பின்னும் எந்த தேர்வு வெற்றியும் அளித்திராத ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்; இன்னின்ன தேதிகளில் சென்னையில் பயிற்சி; மாதாமாதம் உதவித் தொகையாக ரூ. 50 போன்ற செய்திகளை அடங்கிய கடிதத்தை நூறு முறைகளாவது படித்துப் பார்த்திருப்பேன். விரைவிலேயே புகைப்படம், பெயர் போட்டு ஆனந்த விகடனிலும், ஜூனியர் விகடனிலும் செய்தி வந்தது. கடிதத்தையே நூறு தடவை வாசித்தேன்; அந்தச் செய்தியை ஆயிரம் தடவை பார்த்திருப்பேன்.
சென்னை தியாகராய நகரில் ஒரு திருமண மண்டபத்தில்தான் பயிற்சி முகாம் நடைபெற்றது. உறங்க, குளிக்க அங்கே என்னென்ன வசதிகள் செய்திருந்தார்கள் என்று நினைவில்லை. மதியம் பேருந்தில் நல்ல உணவகங்களுக்குச் சென்று உணவருந்தியது நினைவிருக்கிறது. ஒரு நாள் விகடன் அச்சகம் அழைத்துச் சென்று எப்படி பத்திரிகைகள் வடிவமைக்கப்படுகின்றன, அச்சிடப்படுகின்றன என்பதைக் காண்பித்தார்கள். பெரும்பாலும் திருமண மண்டபத்திலேயே வகுப்புகள் நடைபெற்றன. ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திட்டத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். பேச்சுத் தமிழில், நகைச்சுவையோடு, பல உதாரணங்களையும் கொடுத்துப் பேசினார். நாங்கள் தேர்வில் எப்படி செய்திருந்தோம் என்றும் கூறினார். அப்போதெல்லாம், விகடனில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், குறிப்பாக தெளிவின்மை கட்டுரைகளில் வந்து விடக் கூடாது என்பதில் கறாராக இருப்பார்கள். இந்த விஷயத்தை சோதித்தறிய தேர்வில் ஒரு பகுதி இருந்தது. ‘அதில் தூத்துக்குடில இருந்து வந்திருக்கிற அருள் விக்டர் சுரேஷ் மட்டும்தான் முழுசா மார்க் எடுத்துருக்கிறார்’ என்ற ரீதியில் அவர் சொல்ல, அப்படியே ஜிவ்வென்று வானத்திற்குப் போனேன்.
முகாமில் பேச சில பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். புகைப்படப் பயிற்சிக்கு சுபா சுந்தரம் அழைக்கப்பட்டிருந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பல அபூர்வ புகைப்படங்களைக் காண்பித்துப் பேசினார். பெரியார் எப்படி புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிப்பார்; எம்.ஜி.ஆர். ஒரு முறை அவிழ்ந்த வேஷ்டியைக் கட்டுவதைப் படமெடுத்த புகைப்படக் கலைஞரை, மேடையிலிருந்து கீழே குதித்து, காமெராவைப் பிடுங்கி, படச்சுருளைக் கழற்றினார்; இறுதியாக கருணாநிதி கருப்புக் கண்ணாடி அணியாமலும், எம்.ஜி.ஆர் தொப்பி அணியாமலும் இணைந்து எடுத்து எப்படி படம் எடுத்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் படங்கள் பலவற்றையும் காட்டினார். அவருடைய அப்போதைய உதவியாளர் சுபா ரவிசங்கர் எவரிடமும் சுலபமாகவும், இனிமையாகவும் பழகுபவர். அவரிடம் நாங்கள் ஒட்டிக் கொண்டோம். புலிகள் முகாம் எங்கே நடக்கிறது என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்து விட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் சுபா சுந்தரம் உடன் இருந்தவர் என்பதாலேயே பெரும் தொந்தரவுகளுக்கு ஆளானவர் ரவிஷங்கர்.
முகாமிற்கு சுஜாதா வந்திருந்தார். நாங்கள் அச்சகத்திற்குப் போய் வந்ததைப் பற்றி ஒரு பத்தி எழுதச் சொன்னார். எழுதி முடித்த பின்னால், எத்தனை பெயர் கூட்டன்பெர்க் பெயரை எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அச்சகத்தில் ஒரு மாதிரி மை வாசம் அடிக்குமே, அதை எத்தனை பேர் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். க்ளினிக்கல் ரைட்டிங் என்பதைப் பற்றி ஒரு உரையாற்றினார்.
முகாமின் இறுதிநாள் ஏற்கனவே பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கும் நிகழ்ச்சி. அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி, ரமேஷ் பிரபா போன்றவர்களெல்லாம் அதில் சிறந்த பத்திரிகையாளர்களாக விருது பெற்றதாக நினைவு. ரமேஷ் பிரபா பேசியது மட்டும்தான் நினைவிருக்கிறது. ஐ.ஐ.எம். கல்கத்தாவில் படித்துக் கொண்டே மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றவர் அவர். மேலாண்மை, நிர்வாகம், வணிகம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. கல்கத்தாவின் போக்குவரத்து நெரிசலில் களத்திற்குச் சென்று செய்தி திரட்டுவது என்பது கணிசமான நேரத்தைத் தின்று விடும் என்ற ரீதியில் அவர் பேசியது இன்றும் நினைவிருக்கிறது.
முகாம் முடித்து திருப்தியோடு தூத்துக்குடி வந்தேன். மாணவப் பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டை, விசிட்டிங் கார்டுகள், இவற்றை வைத்துக் கொள்ள வெளிர் பச்சை நிறத்தில், குஷன் வைத்து, ஜிப் போட்ட ஒரு file folder முதலானவைதான் எங்களுக்கு அளிக்கப்பட்ட உபகரணங்கள். கையில் சுத்தியல் வைத்திருப்பவனுக்கு உலகமே ஆணியாகத் தோன்றுவது போல், பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு. பேனாவைப் பார்க்கும் போதெல்லாம், சமூக அநீதிகளை வேரறுக்கும் வாளைத்தான் கண்டேன். இளம்பச்சை file folderல் சிரித்துக் கொண்டிருக்கும் விகடன் தாத்தாவைப் பார்த்து அவ்வப்போது பெருமையுடன் புன்னகைப்பேன். அவரது உச்சித்தலை கூர்மையாக நீண்டிருக்கும்; எனது தலை பெருமிதத்தால் வீங்கியிருந்தது.
(இன்ஷால்லா தொடர்வேன்)                     

9 comments:

Durairaj Sukumar said...

"கையில் சுத்தியல் வைத்திருப்பவனுக்கு உலகமே ஆணியாகத் தோன்றுவது போல், பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு. பேனாவைப் பார்க்கும் போதெல்லாம், சமூக அநீதிகளை வேரறுக்கும் வாளைத்தான் கண்டேன்"
அருமையான வரிகள்! நானும் அந்த கால நினைவுகளில் மூழ்கினேன்!

Amudhavan said...

விகடனுடனான உங்களின் ஆரம்பகால நினைவுகளை மிக அருமையாக விவரித்துள்ளீர்கள். இப்போதெல்லாம் பத்திரிகைகளில் நீங்கள் எழுதுவதில்லையா? கொஞ்சநாட்கள் முன்பு சௌபாவை திண்டுக்கல்லில் சந்தித்தேன். நீங்கள் குறிப்பிட்ட காலங்களில் ஜூனியரில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் நண்பர் ஜே.விநாதன்.தொடர்ந்து தங்கள் பத்திரிகை உலக அனுபவங்களை எழுதுங்கள்.

ஏவிஎஸ் said...

அமுதவன் அவர்களே, பத்திரிகைகளில் ஏன் எழுதுவதில்லை என்பதை இந்தத் தொடரில் எழுதுகிறேன். ஜே.வி. நாதன் எங்கள் பயிற்சியாளர் முகாமிற்கு வந்து பேசியதாக ஞாபகம். அந்தக் காலத்தில் ஜே.வி. நாதன் நிறைய எழுதிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் மாணவப் பயிற்சியாளர் திட்டத்தின் மூலம் வந்தவரில்லை என்று நினைக்கிறேன்.

மோகன் குமார் said...

Very good write up. I came upto Interview level & could not get selected.

I think your blog does not have follower widget. Pl. include it so that it will be easy to follow ur blog

Mohan kumar

http://veeduthirumbal.blogspot.in

படுக்காளி said...

அருமை.... அருமை.... வெகுவாக ரசித்தேன்....

ஏன் .....?????

இதன் வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது... வெறும் ஒரு அனுபவக் குறிப்பாக இல்லாமல், தெளிவான ஒரு கண்ணோட்டமே இதன் பலம். ஒரு கட்டுரையின் மிக சரியான வடிவமாக, ஏன் எதற்கு எப்படி, என விளக்கங்கள் தந்து, ஆற்று நீர் போன்ற நடை.... பின்னர் வார்த்தை பிரயோகங்கள் என உங்கள் எழுத்து மின்னுகிறது... அதுவே இந்த கட்டுரையின் ஈர்ப்பு...

//// என் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்த முக்கியமான ஒரு பத்து அனுபவங்கள் உண்டென்றால், அவற்றில் ஒன்று விகடன் மாணவப் பத்திரிகையாளாரப் பயிற்சி பெற்ற ஓராண்டு அனுபவம் ////

அதே போல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என அறியாத நிலை வரும்போது, தனியனாய், இலக்கு தேடி, அமிழும் அந்த கணங்கள் அற்புதமானவை, புனிதமானவை... அதை உணர்ந்தது மட்டுமல்லாமல் உணர்த்தியதும்..... சூப்பர்...

//// கிடைத்த முதல் பேருந்தில் மெரினா கடற்கரையில் சென்று இறங்கினேன். சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. என்ன செய்வது என்று தெளிவான ஒரு திட்டம் இல்லாமல் கடற்கரையில் கால் போனபடி நடந்தேன். ////

அதே போல்....

//// வாழ்க்கையில் அதற்கு முன்னும், பின்னும் எந்த தேர்வு வெற்றியும் அளித்திராத ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன்.கடிதத்தை நூறு முறைகளாவது படித்துப் பார்த்திருப்பேன். விரைவிலேயே புகைப்படம், பெயர் போட்டு ஆனந்த விகடனிலும், ஜூனியர் விகடனிலும் செய்தி வந்தது. கடிதத்தையே நூறு தடவை வாசித்தேன்; அந்தச் செய்தியை ஆயிரம் தடவை பார்த்திருப்பேன். /////

ஆம் பெருமை மிக்க, தருணங்கள் உங்களுக்கும் எங்களுக்கும்...

//// அவரது உச்சித்தலை கூர்மையாக நீண்டிருக்கும்; எனது தலை பெருமிதத்தால் வீங்கியிருந்தது.////

இதையே கேப்ஷனா போடலாமே...

பிரமாதம்.... அடுத்த பகுதிக்கு வாசிக்க செல்லுகிறேன்...

எழுதும் தங்கள் திறமைகளை விட வேண்டாம்.... தொடர்ந்து எழுதுங்கள்...

தருமி said...

ம்ம்...ம்.. impressive..

VP said...

Fantastic! The flow is exemplary. I sank in my past!

Srimangai(K.Sudhakar) said...

Nice to see this Suresh. You had always shown the creative spirit from school days. It is nostalgic not only for you.. Keep writing.
Anpudan
K.Sudhakar

Srimangai(K.Sudhakar) said...

Nice to see this Suresh. You had always shown the creative spirit from school days. It is nostalgic not only for you.. Keep writing.
Anpudan
K.Sudhakar