Sunday, February 12, 2012

கொத்தவரை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா?


Food Chemistry என்ற அறிவியல் பத்திரிகையில் வரவிருக்கும் சில கட்டுரைகளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது கவனத்தை ஈர்த்தது மைசூர் மத்திய உணவு ஆய்வு நிறுவனத்திலிருந்து சுப்ரா பாண்டே, கிருஷ்ணப்புரா ஸ்ரீனிவாசன் என்ற இரு அறிவியலாளர்கள் எழுதிய ஒரு கட்டுரை. இது கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்; பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும் என்கிறது.
பொதுவாகவே நார்ச் சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும் அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாமல், மலத்திற்குப் போய் உடம்பிற்கு வெளியே போய் விடுகிறது.  
கொத்தவரங்காயைப் பொறுத்த வரையில் அதன் நார்ச் சத்து தவிர, மாவுச் சத்திலும் ஒரு கொழகொழாப் பிசின் தன்மை இருக்கிறதாம். அதுவும் கொலஸ்ட்ராலைச் சுருக்கு வலை போட்டுக் கட்டி, தரதரவென்று இழுத்துக் கொண்டு உடம்பிற்கு வெளியே கொண்டு போய் விடுகிறதாம்.
பூண்டு, வெங்காயம், வெந்தயம், சிவப்பு மிளகாய், மஞ்சள் ஆகியவற்றிற்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருப்பதால், கொத்தவரங்காயோ, பூண்டோ தனித்தனியாக குறைப்பதை விட இரண்டும் கூட்டணி சேர்ந்தால் அதிகம் குறைக்குமோ என்று சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் குறைந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சி முடிவை நாம் அப்படியே எடுத்து உபயோகிப்பதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, இந்த ஆராய்ச்சி எலிகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எலிகளுக்கு ரொம்ப தாராளமாக கொத்தவரங்காய் வழங்கியிருக்கிறார்கள். கொத்தவரங்காயைக் காய வைத்து, 10ற்கு ஒரு பாகமான பொடியாக மாற்றி, அந்தப் பொடியை உணவில் 15 சதவிகிதம் கலந்திருக்கிறார்கள். தினமும் 1 கிலோ உணவு சாப்பிடுகிறவர், கூடவே இன்னொரு கிலோவிற்கு மேலேயெ கொத்தவரங்காய் சாப்பிடுவதற்குச் சமமானது இது.
ஆராய்ச்சி என்றால் இப்படித்தான் சமயங்களில் இருக்கும். இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கொத்தவரங்காய் கிடைக்குமென்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள். சுவைக்கு சுவை, உடல்நலத்திற்கு உடல்நலம்.                           

8 comments:

Anonymous said...

Naan kooda kothavarangaai piriyan than , en thoppaiyum pongi vazhiyathaan seigiradhu ungal katturaiyai padiththadhilirundhu kothavarangaiyayi kaadhalikka aarambithu vitten . paaraatukkal nanbare.

Victor Suresh said...

Facebookல் நண்பர் ஜகதீஷ் சந்திரா கொத்தவரங்காயை தென் தமிழ்நாட்டில் சீனி அவரைக்காய் என்று அழைப்பதை குறிப்பிட்டிருக்கிறார். நான் தென் தமிழகத்தில் இரண்டு பெயர்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்னையில் சீனி அவரைக்காய் என்றால் தெரிவதில்லை.

படுக்காளி said...

பிரமாதம்... அற்புதமான பதிவு....

//// கொத்தவரங்காயைப் பொறுத்த வரையில் அதன் நார்ச் சத்து தவிர, மாவுச் சத்திலும் ஒரு கொழகொழாப் பிசின் தன்மை இருக்கிறதாம். அதுவும் கொலஸ்ட்ராலைச் சுருக்கு வலை போட்டுக் கட்டி, தரதரவென்று இழுத்துக் கொண்டு உடம்பிற்கு வெளியே கொண்டு போய் விடுகிறதாம்./////

நசைச்சுவையுடன் சொன்ன இந்த தகவல் சுருக்கென நினைவில் பதிய உதவியது... சூப்பர்.... நன்றிகள் பல...

கொத்தவரங்கா பத்திய பதிவு அலேக்...

சீனி அவரைக்காய் என தென்னகத்திலும், கொத்தவரங்கா... என வெளியிடங்களிலும் அழைப்பதை குறிப்பிட்டிருந்தீர்கள்... அருமை...

ஒரு வேளை, தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் வேறு ஏதேனும் பெயர்கள் வழங்கப்படுகிறதா... இல்லை இந்த இரு பெயர்கள் தானா....

Thangavel Manickam said...

ஆரோக்கியத் தகவல் !

vascharles said...

Charles, coimbatore

Kothavarangai thuvaram is very nice to eat... my father prepares very well this with coconut mixture...

but most of the tamil people did not buy kothavarangai for some reason... but anyway good article to know its value and now needed for me to reduce collestrol...

தருமி said...

//இன்னொரு கிலோவிற்கு மேலேயெ கொத்தவரங்காய் சாப்பிடுவதற்குச் சமமானது இது. //

கொத்தவரங்காய் பிரியாணி என்று ஏதாவது செஞ்சு கிலோக்கணக்குக் இறக்கிர வேண்டியதுதான்!

தருமி said...

அடப் பாவமே! July 13, 2012 12:09 PM அன்று போட்ட பின்னூட்டம் வர 27.8.12; 9:24 வரை காத்திருக்க வேண்டியதிருக்கு!

இதுக்குத்தான் பிசியான ஆளுக பதிவுகளுக்குப் போறதில்லை!!!

இந்த பின்னூட்டம் எப்போ வருமோ?

:-(

Victor Suresh said...

தருமி அய்யா,

"பிசியான" என்ற இடத்தில் "சோம்பேறியான" என்று போட்டுக் கொள்ளவும்.

நீங்கள் சாட்டையைச் சுழற்றிய பின் வேறென்ன வழி? உடனே பிரசுரித்து விட்டேன்.