Sunday, July 22, 2007

இது என் முதல் ஞாயிறு தபால்

கடந்த வாரம் பெரும்பாலும் சென்னையில் பல்வேறு பணிகள் நிமித்தமாக.

கல்லூரி நண்பர் சையது யாஹியா தாய்லாந்து, ஜப்பான், நார்வே, நியுசிலாந்து என்று பல இடங்களில் படிப்பும், பணியனுபவமும் பெற்று திரும்பியிருக்கிறார். சென்னையில் அவரோடு சில மணி நேரங்களைக் கழித்தேன். அவரது சகோதரரின் மனிதவள நிறுவனத்தை ஒரு புறம் கவனித்துக் கொண்டு, இன்னொரு புறம் ஒரு பயோடெக் நிறுவனத்தை தொடங்கும் முயற்சிகளில் இருக்கிறார். நிறைய கனவுகளுடனும், திட்டங்களுடனும், பல ஆண்டுகள் வெளிநாடுகளில் வசித்து விட்டு இந்தியாவிற்கு திரும்பி சில மாதங்களே ஆன எல்லோருக்கும் ஏற்படும் சில சந்தேகங்களுடனும் இருக்கின்றார்.

"நான் கார் ஓட்டுறதப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்கங்க" என்றார். சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வந்தால்தான் வண்டியை நகர்த்துவேன் என்ற பிடிவாதம்தான் நகைப்புக்குக் காரணமாம். இதை நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய ஸ்கார்ப்பியோவில் மேற்கு மாம்பலத்தின் ஒரு குறுகலான தெருவில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தோம். வாகனத்தின் சாரதி அந்த தெருவில் ஒரு U-வட்டமடித்து திருப்ப முயன்றார். தெருவின் அகலம், வாகனத்தின் அகலம் ஆகிய இரண்டு காரணங்களாலும் அது U-திருப்பமாக இல்லாமல் ஒரு மாதிரி முன்னும் பின்னும் நகர்த்தி ஒரு W-திருப்பமாக, சுமார் ஒரு நிமிடமாவது எடுத்திருக்கும். சாலையின் இரு பக்கங்களிலும் 2-3 கார்கள், சில இரு சக்கர வாகனங்கள் நமது சாரதி தனது W-திருப்பத்தை முடிக்கும் வரையில் நாரச ஒலியெழுப்பாமல் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தனர். நண்பருக்கு சுட்டிக் காட்டி சொன்னேன்: “இதுதான் நம்ம ஊர். கொஞ்ச நாளில் புரிந்து கொண்டு பழகிக் கொள்வீர்கள்.”

ooo

சனிக்கிழமை, ஜுலை 21, அதிகாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் நாகர்கோவில் ரயில் நிலையம் அடைந்தேன். அங்குள்ள புத்தகக்கடையில் ஜூலை 2007 'காலச்சுவடு' தென்பட்டது. வாங்கினேன். “அரசியல், ஊடக வன்புணர்ச்சியின் கதை” என்ற துணைத் தலைப்பில் கண்ணன் அதில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் (இணையத்தில்: www.kalachuvadu.com/issue-91/katturai01.asp). தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் வன்முறை சம்பவங்களின் பின்விளைவுகளை அலசும் ஒரு முயற்சி இந்தக் கட்டுரை எனலாம். கட்டுரை இரண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளிலும் ‘தினகரன்’ சம்பவத்திற்கு தமிழக ஊடக, இலக்கிய, அரசியல் வட்டங்கள் காட்டிய பலவீனமான அணுகுமுறை கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பகுதி, இந்த பலவீனமான அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான காரணமாக மாறன் சகோதரர்களின் போக்கினை வர்ணிக்கிறது. ஆனால் எழுதப்பட்ட தொனி ஒரு விதத்தில் இந்த அணுகுமுறையையே நியாயப்படுத்த முயல்வது போல் உள்ளது. மிகவும் குறிப்பாக, “தினகரன் தாக்குதலில் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது விவாதத்திற்குரியது” என்று கட்டுரையாசிரியர் கூறுவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. இதே கருத்து சோ ராமசாமி அவர்களாலும் வெளிப்படுத்தப்பட்டது.

“உன்னுடைய கருத்து எனக்கு ஏற்புடையதல்ல எனினும் அதை நீ சுதந்திரமாக சொல்ல என் உயிரையும் கொடுப்பேன்” என்ற கருத்துச் சுதந்திர தத்துவத்தின் அடிப்படையிலே அமைந்ததுதான் பத்திரிகை சுதந்திரம். அதற்கு நேரெதிரான “உன்னுடைய கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அதை நீ சொன்னால் உன் உயிரையும் எடுப்பேன்” என்ற மிரட்டல்தான் மதுரை சம்பவம். பத்திரிகைச் சுதந்திரத்தை இச் சம்பவம் பாதித்துள்ளதா என்பது எந்த விதத்தில் விவாதத்திற்குரியது என்று புரியவில்லை. கண்ணனும் இதை விளக்க முற்படவில்லை. மாறாக அவர் கூறுவது: “சன் குழுமத்தினர் ஊடகச் சுதந்திரத்தையோ கருத்துச் சுதந்திரத்தையோ எந்த விதத்திலும் ஆதரித்தவர்கள் அல்ல.” இந்த குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் வழங்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, கண்ணனின் குற்றச்சாட்டு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் கருத்துச் சுதந்திரம் மட்டுமே பேணிக் காக்கப்பட வேண்டுமா? மனித உரிமைகளுக்காக போராடுபவர்களின் மனித உரிமைகள் மட்டுமே மதிக்கப்பட வேண்டுமா?

கருத்துச் சுதந்திரமும், மனித உரிமைகளும் தமிழகத்தில் தொடர்ந்து மீறப்பட்டு வருவதற்கு மூல காரணம் கண்ணனுடைய அணுகுமுறை போன்றே நாம் பலரின் அணுகுமுறையும் இருப்பதே. தினகரன் சம்பவத்தில் மட்டுமல்ல, குஷ்பு சம்பவத்தில், சங்கராச்சாரியர் கைது விவகாரத்தில், நக்கீரன் கோபால் கைது விஷயத்தில், இப்படி பல உதாரணங்களை அடுக்கலாம் – இவை அனைத்திலுமே இதில் பாதிக்கப்பட்டவர்களையும் குற்றம் சாட்ட சமூகத்தில் ஒரு பெரும் சாரார் எப்போதும் முனைந்து நிற்கிறார்கள். நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட போது “இவருக்கு வேண்டும்” என்று அவருக்கெதிரான உரிமை நசுக்கல்களை ஆதரித்தவர்கள், சங்கராச்சாரியார் மீதான நடவடிக்கைகளில் அதே மீறல்களை கண்டு திகைத்ததை அறிவேன். சங்கராச்சாரியாரின் மீதான நடவடிக்கைகளை நக்கீரன் எப்படி களிப்புடன் நோக்கியது என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி கோட்பாட்டின் (principle) அடிப்படையில் அல்லாமல், தனி நபர் அல்லது குழும/குழுக்கள் விருப்பு-வெறுப்பு அடிப்படையில் மீறல்களைக் குறித்த நமது நிலையற்ற அணுகுமுறைகளே நமது அதிகார மையங்களுக்கு நாம் மீறல்களை நடத்த அளித்துள்ள உரிமங்களாகும். இந்த மூல காரணத்தை கண்ணன் போன்ற சிந்தனையாளர்கள் கூட புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

ooo

Principle என்பதன் சரியான தமிழ்ப்பதம் என்ன என்று தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் இங்கு பதிவு செய்யுங்கள். என்னிடம் இரண்டு தமிழ் அகராதிகள் உள்ளன. LIFCOவின் அகராதி கொள்கை அல்லது நியதி என்கிறது. அது சரியாக தோன்றவில்லை. க்ரியாவின் அகராதி தமிழ்-தமிழ்-ஆங்கிலம். எனவே, இந்த விஷயத்தில் பயனில்லை. http://www.lanka.info/ –வின் ஆன்லைன் அகராதி அடிப்படைக் கோட்பாடு என்கிறது. அது ஓரளவு சரியாகப்பட்டது, ஆனால் அதை விடப் பொருத்தமாக ஒரு சொல் இருக்கும் எனத் தோன்றுகிறது.

ooo

அடுத்த ஞாயிறு சந்திப்போம்.

3 comments:

ரவி said...

ஞாயிறு ஞாயிறு தான் பதிவா....

காலச்சுவடு எல்லாம் காசு கொடுத்து வாங்குறீங்க...நெறைய வாசிப்பனுபவம் இருக்கும் போல...

எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்க...

(நாங்க எல்லாம் ச்ச்சும்மா மொக்கையிலேயே காலத்தை தள்றவங்க :)) )

Victor Suresh said...

ஞாயிறுதோறும் வெளியிட எண்ணிதான் தொடங்கினேன். ஆனால் இரண்டாவது பதிப்பிலேயே அந்த திட்டம் முறிந்து விட்டது. இனிமேல் வாரம் ஒரு முறையேனும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

லாண்டரித் துணிகளுக்கிடையில் வைக்கப்படும் துண்டு தினத்தாள்கள், மனைவிக்கு வரும் ஃபெமினா, பிள்ளைகள் வாங்கும் காமிக்ஸ் புத்தகங்கள், உறவினர்கள் வீட்டில் இருக்கும் மலையாள வாராந்திரிகைகள் (சுத்தமாக மலையாளம் வராது எனக்கு) என்று கைக்கு கிடைப்பதை தராதரம் தெரியாமல் வாசிப்பவன்/வாசிக்க முயற்சிப்பவன் நான். காலச்சுவடும் அவ்வப்போது வாசிக்கிறேன்.

காலச்சுவடு ஆன்லைனிலேயே இலவசமாகக் கிடைக்கிறது. ஆனாலும் காகிதத்தில் படிக்கும் சுகம் கணிணியில் இல்லை.

வடுவூர் குமார் said...

அடிப்படைக் கோட்பாடு- இங்கு அப்படித்தான் மொழிபெயர்கிறார்கள்.