எழுத்தாளர்
மாமல்லன் ‘தி இந்து’ தமிழ் தினசரியில் 2016 பொங்கல் சிறப்பு மலரில் “கோடு” என்ற தலைப்பில்
சிறுகதை ஒன்று எழுதியுள்ளார். கூகிள் பிளஸ்ஸில் அவரை நான் தொடர்வதால், அவர் கொடுத்த
சுட்டி மூலமாக கதையைப் படித்தேன் (http://www.maamallan.com/2016/01/blog-post_15.html).
சுருக்கம்
இதுதான்:
1980களின்
பெசன்ட் நகர். அரசு ஊழியர்களின் குடியிருப்புகளாக வளரத் தொடங்கிய அன்றைய சென்னையின்
புறநகர்.
அங்கே
பார்ப்பன அதிகாரி ஒருவரின் வீட்டில் மேற்கத்திய வகைக் கழிப்பிடம் மாட்டச் செல்கிறார்
ஒரு முஸ்லீம் ப்ளம்பர்.
வேலை
நடக்கும் போது அன்றைய அரசியல் நிலவரங்களோடு பொருத்தி சுவாரஸ்யமாக கதை சொல்லும் ஒரு
பாகவதரின் உரையை பார்ப்பன அதிகாரி கேசட் ப்ளேயரில் கேட்கிறார். கதை வாழை இலை நடுவில்
கோடு எப்படி வந்தது என்பதைப் பற்றியது. ராமன் இலங்கையிலிருந்து வரும்போது பரத்வாஜ முனிவரின்
குடிலில் விருந்துண்கிறார். பந்தியில் உட்காரும் போது அனுமனையும் தன் இலையிலேயே சாப்பிட
அழைக்கிறார். அப்படிச் செய்யும் போது இது என்
பகுதி, அது உன் பகுதி என்று தெரிவிக்க ஒரு கோட்டைப் போடுகிறார்.
கதை முடியும்
நேரத்தில் ப்ளம்பரின் வேலையும் முடிந்து விடுகிறது. குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்.
அதிகாரி பாத்ரூமில் தண்ணீர் பிடித்துக் கொடுக்கிறார். ப்ளம்பர் “நீங்கள் அங்கிருந்துதான்
குடிக்கத் தண்ணீர் எடுப்பீர்களா” என்று கேட்கிறார். அதிகாரி “நீங்கள் வாய் வைத்துக்
குடிப்பீர்கள் என்பதால்தான் அப்படிக் கொடுத்தேன்” என்று சால்ஜாப்பு சொல்கிறார். நீயும்
வேணாம், உன் தண்ணியும் வேணாம் என்று கோபித்துக் கொண்டு போகும் பாய், அனுமனையே நீ குரங்கு
என்றுதானே கோட்டைப் போட்டார் உங்கள் ராமர் என்று சொல்லி அதிகாரியைத் திகைக்க வைக்கிறார்.
நீண்ட
நாட்களுக்குப் பிறகு படித்த நல்ல ஒரு சிறுகதை. ஹீரோவை ஓவர் நல்லவனாகவும், வில்லைனை
ஆகக் கொடியவனாகவும் காட்டும் சினிமாத்தனத்தை அடக்கி, பாரதிராஜா வகை நாடகத்தன்மையை குறைத்திருந்தால்
இந்தக் கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். கூகில் ப்ளஸ்ஸில் “அபாரம்” என்று கருத்து சொல்லி
விட்டு, பிழையாகப் பட்ட ஒரு பகுதியையும் சுட்டிக் காட்டியிருந்தேன். பிழை சிறிய இலக்கணப்
பிழைதான். சொற்பிழை மன்னிக்கப்படலாம் என்று சொன்ன ஏ.பி. நாகராஜன் இலக்கணப் பிழையைப்
பற்றி குறிப்பாக சொல்லா விட்டாலும் இந்த வகை இலக்கணப் பிழையும் மன்னிக்கப்படலாமாகத்தான்
இருக்கும். இருந்தாலும் சுட்டிக் காட்ட விரும்பினேன். ஏனென்றால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு
முன் இணையத்தில் பிரபலமாக இருக்கும் அத்தனை இலக்கியவாதிகளின் சொல், இலக்கண, பொருட்பிழைகளையும்
கிழி, கிழி என்று கிழித்து பதிவுகள் போட்டு தான் பிறந்ததன் நோக்கத்தை அடைந்தவர் போல்
மகிழ்ந்தவர்தான் இந்த மாமல்லன். அவரால் தொங்கவிடப்பட்ட
இலக்கியவாதிகளில் ஒருவர் காலேஜ் ட்ராப் அவுட். இன்னொருவர் ஆங்கில இலக்கிய பட்டதாரி.
நம்மவரோ மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரானாலும் கல்லூரியில் தமிழ் மேஜர். தனது
மொழிப் புலமையைப் பெருமையாக அணிந்து கொள்பவர். அவர் இப்படிப்பட்ட ஒரு பிழையைச் செய்திருக்கிறார்
என்று ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் அது எடிட்டரால் கவனிக்கப்படாமல் போனது. இந்து தமிழ்
தினசரியின் ஆசிரியர் கே. அசோகன் விகடனிலிருந்து வந்தவர். விகடன் ஆசிரியர் காலம் சென்ற
பாலசுப்பிரமணியன் ஒரு கறாரான எடிட்டர். இன்று விகடனில் எடிட்டிங் தரம் சீரழிந்து விட்டது.
ஆனால் பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆசிரியராக இருக்கும் வரையில் விகடன் இதழ்களில் பிழைகளைக்
காண்பது அரிதாக இருக்கும். அவர் வளர்த்த அசோகன் ஆசிரியராக இருக்கும் இதழில் எப்படி
இந்த பிழை வந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.
பிழையைச்
சுட்டிக் காட்டாமல் பிழையுள்ள பகுதியைச் சுட்டிக் காட்டினால் போதும் என்று அந்தப் பகுதியை
மட்டும் வெட்டி, ஒட்டிக் காட்டியிருந்தேன். அது கீழே:
“பெஸண்ட்
நகர் பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து இருந்தது அந்த மத்திய அரசுக் குடியிருப்பு. பார்க்கப்
போனால், இரண்டொரு முக்கியமான தடங்களில் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம்தான் அது
என்றாலும் வெறும் கடல் மண் பரந்து கிடக்கும் இடத்திற்கு எப்படி டெப்போ என்கிற அந்தஸ்தை
அளிக்க முடியும்.”
அடிப்படை
மொழியறிவு உள்ளவர்களுக்கு மேலே உள்ள பகுதியில் உள்ள பிழை என்ன என்பது தெரிந்திருக்கும்.
இல்லாதவர்கள் Pronoun Precedent Agreement என்றால் என்ன என்று கூகிளில் தேடி தெரிந்து
கொள்ளலாம். அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்தப் பதிவின் பின்குறிப்பில் பார்த்து
தெரிந்து கொள்ளலாம்.
எனது
பதிவிற்கு, மாமல்லன் என்ன பிழை என்று கேட்டிருந்தார். நான் பதில் சொல்லும் முன்னரே
பஸ் டிப்போவை, பஸ் ஸ்டாண்ட் என்று அழைத்தது பிழையா, எல்லாவற்றையும் விம் போட்டு விளக்கிச்
சொல்ல வேண்டுமா என்று ஒரு பதிவு போட்டார். மனிதர் தான் இழைத்த பிழை என்னதென்று தெரியாமலே
இப்படி எகிறுகிறாரே என்று நினைத்துக் கொண்டு “அதுவல்ல பிழை, ஆனால் “அது”தான் பிழை.
விம் போட்டு விளக்கிச் சொல்ல விரும்பவில்லை. சொந்த முயற்சியிலேயே தெரிந்து கொள்ளுங்கள்”
என்று ஒரு பதிவைப் போட்டேன். அடுத்தாற்போல் ஒரு புது பதிவைப் போட்டார்: எழுத்தாளனின்
ஆகப் பெரிய சவால் ஆனந்த விகடன்தான் இலக்கியத் தரத்திற்கான ISI என்று கருதும் இணைய அச்சுபிச்சுகளின்
தொந்தரவுதான். எனக்கு என்னவோ நகரம் படத்தில் ஆட்டோவில் இறங்கி வரும் வடிவேலு “சச்சே,
ஒரு மனுசன் வெளியே போயிட்டு வீட்டுக்குத் திரும்புறதுக்குள்ள எத்தன சலசலப்புகள், சச்சரவுகள
சந்திக்க வேண்டியிருக்கு” என்று சொல்வதுதான் நினைவிற்கு வர அந்தப் பதிவிற்கு நக்கலாக
ஒரு பதில் கொடுத்தேன். எதிர்வினையாக கூகுள் ப்ளஸ்ஸில் அவரைப் பின்தொடர்பவர்களிலிருந்து
என்னைத் துரத்தி விட்டார். அவரது பதிவுகள் ஒன்றையும் எனது ப்ளஸ்ஸில் பார்க்க முடியவில்லை.
நமது
தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் சொல்வதை யாரும் வாங்குவதில்லை; இலவசமாக இணையத்தில் போட்டால்கூட
படிப்பதில்லை என்கிறார்கள். யாராவது படித்து விட்டுப் பாராட்டினால் குளிர்ந்து போகிறார்கள்.
ஆனால் பிழை இருக்கிறது என்று சொன்னால் அவர்களுக்கு கடுப்பு வந்து விடுகிறது. என்னுடைய
எழுத்தைப் படிக்காதே என்று டூ போட்டு விடுகிறார்கள். நல்ல வேளையாக மாமல்லனுடைய கதைகளும்,
கட்டுரைகளும் ப்ளஸ்ஸில் மட்டும் வருவதில்லை. அவருடைய www.maamallan.com தளத்திலும்
பதிவாகின்றன. அங்கே படித்துக் கொள்கிறேன்.
பின்குறிப்பு:
பிழை
“அது”தான். பத்தியின் முதல் வரி இப்படி இருக்கிறது: “பெஸண்ட் நகர் பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து இருந்தது அந்த
மத்திய அரசுக் குடியிருப்பு” அப்படியென்றால் இரண்டாவது வரியில் வரும் “அது” முதல் வரியின்
கதாநாயகனான “அந்த” குடியிருப்பைத்தான் சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர தோழனான பஸ் ஸ்டாண்டைச்
சுட்டுவதாக இருந்திருக்கக் கூடாது. இரண்டாவது வரியில் பஸ் ஸ்டாண்ட்டை விவரிக்க விரும்பியிருந்தால்
சற்று மாற்றி எழுதியிருக்கலாம். உதாரணமாக:
“அந்த
மத்திய அரசுக் குடியிருப்பு பெஸண்ட் நகர் பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து இருந்தது. இரண்டொரு
முக்கியமான தடங்களில் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்திற்கு பெயர் பஸ் ஸ்டாண்ட்
என்று இருந்தாலும் வெறும் கடல் மண் பரந்து கிடக்கும் இடத்திற்கு டெப்போ என்கிற அந்தஸ்து
சற்று அதிகம்தான்” என்றால் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
திருநெல்வேலி
அல்வா மாதிரி கதை ஸ்மூத்தாக உள்ளே போய்க் கொண்டிருக்கும் போது, பத்தியின் இரண்டாவது
வரி நெருடி, மீண்டும் முதல் வரியை வாசிக்க வைப்பது எவ்வளவு சிறிய அசவுகரியமென்றாலும்
பிழை பிழைதான். அதுவும் மற்றவன் எழுத்தையெல்லாம்
நொள்ளை சொல்லும் விமலாதித்த மாமல்லன் இப்படி எழுதுவதை விமர்சிக்கமால் இருக்க முடியவில்லை.
அதற்கு அவர் கோபித்துக் கொள்ளும் போது வரும் புன்னகையை அடக்கவும் முடியவில்லை.
1 comment:
Post a Comment