பல
வருடங்களுக்குப் பிறகு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
சனிக்கிழமை என்பதால் கூட்டம் எக்கச்சக்கம். கடைகள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது.
புத்தகங்களை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகக் கூடியது போல தெரிகிறது. வருபவர்களுக்கு
வசதிகள் செய்து கொடுத்திருப்பதில்தான் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டது போல் தெரியவில்லை.
வம்சி
பதிப்பகத்தில் ஒரே ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் இந்த முறை
கண்காட்சிக்குள் நுழைந்தேன். ஒவ்வொரு வரிசையிலும் நுழைவிலேயே என்னென்ன கடைகள் இருக்கின்றன
என்று தட்டி வைத்திருக்கிறார்கள். இது நல்ல ஏற்பாடு. 10 நிமிடத்திற்குள் வம்சியைக்
கண்டு பிடித்து புத்தகத்தை வாங்கி விட்டேன். கூடவே, பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின்
“சிதம்பர ஸ்மரண” என்ற படைப்பின் “சிதம்பர நினைவுகள்” எனும் தமிழாக்கத்தையும் வாங்கி
வந்தேன்.
இன்று
ஞாயிறு. சென்னையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூர் வழியாகப் பயணம். அதிகாலை தொடங்கிய
பயணம் என்பதால் தேவாலயத்திற்குப் போக முடியாது என்று தெரியும். தேவாலயத்தில் கடவுளைத்
தெரிந்து கொள்வதை விட, வழிபடுவதை விட, இயற்கையில், ஒரு இலையின் அசைவில், ஒரு மலரின்
அழகில், ஒரு பறவையின் சிறகில், அவரை அதிகம் தெரிந்து கொள்கிறேன், வழிபடுகிறேன் என்றாலும்
கூட ஏதாவது ஒரு ஞாயிறு தேவாலயத்திற்குப் போக முடியவில்லையென்றால் சற்று உறுத்தலாக இருக்கும்.
சிதம்பர
நினைவுகளைப் படிக்க, படிக்க அந்த உறுத்துதல் மறைந்ததை உணர்ந்தேன். நேற்று புத்தகத்தை
வாங்கிய போது சரியாகக் கவனிக்காததால் அதை ஒரு சிறுகதைத் தொகுப்பு என்றுதான் நினைத்திருந்தேன்.
இன்றுதான் கவனித்தேன் அது அவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை விவரிக்கும் பல கட்டுரைகளின்
தொகுப்பு என்று. படிக்கும் போதுதான் உணர்ந்தேன் அது வெறும் விவரிப்பு கிடையாது, அவரது
வாழ்வையே ஒளிவு, மறைவின்றி வெளியரங்கமாக்கி மானுடத்திற்கு படைக்கப்பட்ட ஒரு உன்னதம்
என்று. ஏறக்குறைய ஒவ்வொரு கட்டுரையும் எளிமையான மொழியில், சிக்கனமான வாக்கியங்களில்,
நம் மனதின், இயல்பின் சிக்கல்களைப் புரிய வைக்கிறது.
சிதம்பர
நினைவுகளின் ஓரிடத்தில் பகவத் கீதையிலிருந்து காட்டப்பட்ட ஒரு மேற்கோளின் மீது என்
மனம் இன்னும் குவிந்து கொண்டிருக்கிறது:
“பிரியமில்லாவிட்டாலும்,
பலமாக நிர்பந்திக்கப்பட்டவன் போல இந்த மனிதன் ஏன் இப்படி தொடர்ந்து பாவம் செய்து கொண்டே
இருக்கிறான்?”
கிறித்தவத்திலும்
இதற்கிணையான சிந்தனை இருக்கிறது. பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் இப்படிச் சொல்கிறார்:
“நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை.
நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; மாறாக விரும்பாத தீமையையே செய்கிறேன்.”
7 comments:
Nice I like it.....
"தேவாலயத்தில் கடவுளைத் தெரிந்து கொள்வதை விட, வழிபடுவதை விட, இயற்கையில், ஒரு இலையின் அசைவில், ஒரு மலரின் அழகில், ஒரு பறவையின் சிறகில், அவரை அதிகம் தெரிந்து கொள்கிறேன்"
Well said Suresh! Ur narrative style is so impressive. Y dont u write frequetly? Awaiting ur next post.
Very nice sir. I love those quotes from Geethai and Bible.
நீங்கள் தமிழில் மீண்டும் எழுத தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி
நீங்கள் தமிழில் மீண்டும் எழுத தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி -- லவ்சன் எட்வர்ட்
“பேனாவின் நோக்கம் என்ன?” என்று நான் உங்களைக் கேட்டால், “எழுதுவது” என்பதே உங்கள் பதிலாக அமையும். “அப்படி ஒரு பேனா எழுதாவிட்டால் அதை நான் என்ன செய்யவேண்டும்?” என்று நான் மேலும் உங்களைக் கேட்டால் “அதைக் குப்பையில் எறிந்துவிடு” என்பதே நிச்சயமாக உங்க்ள் பதிலாக அமையும்.மதமும் அப்படித்தான்.
“மதத்தின் நோக்கம் என்ன?” என்று நான் மனிதரைக் கேட்டால், “மன நிம்மதி பெற”, “நான் இறந்ததும் பரலோகம் செல்வேன் என்பதை உறுதிசெய்ய” என்ற பதில்களையே அவர்கள் வழக்கமாகக் கூறுவார்கள்.
பெரும்பாலான மதங்கள் நாம் பரலோகம் செல்லவேண்டுமானால் நான் நன்மை செய்யவேண்டும்; என்றே போதிக்கின்றன. இது உண்மையானால், அந்தப் பொறுப்பு நம்மையே சேரும். அதாவது, நாம் பரலோகம் சென்றடைய தவறினால் அது நமது தவறாகும். ஆயினும் நாம் எவ்வளவு சிறந்த நன்மை செய்தாலும் நாம் பரலோகம் செல்வோம் என்ற நிச்சயம் இல்லை. எவ்வளவு நன்மை போதுமான நன்மையாகும் ஏனெனில் “எவ்வளவு நன்மை போதுமான நன்மையாகுமா?” என்ற கேள்விக்கு பதில் இல்லை. “…எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது” (ஏசாயா 64:6) என்று வேதாகமம் கூறுகிறது. அதாவது நாம் போதுமான நன்மை செய்வது முடியாத காரியமாகும்.
எப்படி சுரேஷ் இவ்வளவு அழகாக, கோர்வையாக எழுத முடிகிறது? எனக்கு பொறாமையாக இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் தூத்துக்குடி 'தபால்' பெட்டிக்குள் நுழைந்து முத்தெடுத்திருக்கிறேன்!!!!!!! அருமை ...தொடருட்டும் பணி !!!!
Post a Comment