Sunday, January 15, 2012

எக்ஸைலுக்கு மாமல்லன் எழுதிய விமர்சனம்


தமிழ் புத்தக விமர்சனங்களைப் படித்து நாளாகிவிட்டது. முன்னெல்லாம், விமர்சனங்கள் ஆங்காங்கு தட்டுப்படும். அவற்றில் பெரும்பாலும் சாரமாகவும் இருக்கும். எழுத்தாளர்களே ஒருவர் படைப்பைப் பற்றி மற்றவர் எழுதினார்கள். உதாரணமாக, புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன் முதலான தமிழின் பெரிய இலக்கியக் குடுமிகளையே சாரு நிருவேதிதா கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார். இப்போதெல்லாம், விமர்சனங்களும் குறைந்து விட்டன; அவற்றிலிருந்த சாரமும் குறைந்து விட்டது. “நான் உன் முதுகைச் சொரிந்து விடுகிறேன், நீ என் முதுகைச் சொரிந்து விடு” என்கிற மாதிரி நிலைமை வந்து விட்டது. விளைவாக, தமிழில் எழுதப்படும் எல்லாப் படைப்புகளுமே “ஆகச் சிறந்த” படைப்புகள்தான் என்பது போல் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாரு நிவேதிதாவே இந்த மாதிரி தில்லாலங்கடி வேலைகளைச் செய்வது மாமல்லன் எழுதிய ஒரு பதிவில் தெரிய வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மாமல்லன் எழுதி வரும் பல இலக்கிய விமர்சனங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. ஒரு நவீன நக்கீரராக இவர் எல்லாத் திசைகளிலும் வாள் சுழற்றி வருகிறார். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் முதலான பெரும் தற்காலப் படைப்பாளிகளை கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கியிருக்கிறார். சமயங்களில் அந்த விமர்சனங்கள் சிறு, சிறு எழுத்து, இலக்கண, மற்றும் புரிதல் பிழைகளை பூதாகாரப்படுத்தி எரிச்சலுண்டாக்கலாம். ஆனால், அவரது நுண்ணிய அவதானத்தில் ஒரு பிரமிப்பு எழுவது தவிர்க்க முடியாதது.
சாரு நிவேதிதாவின் எக்ஸைலுக்கு மாமல்லன் எழுதிய விமர்சனம் அவரது மற்ற விமர்சனங்களிலிருந்து வேறுபட்டது. முதலாவது, இவர் எக்ஸைலின் முதலிருபது பக்கங்கள் வரைக்கும்தான் வாசித்திருக்கிறார். அதற்கு மேல், வாசிக்க முடியவில்லை, இனி வாசிக்கும் தருணமும் வரப்போவதில்லை என்கிறார். படித்தது வரையிலான விமர்சனமும் கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கிறது: “சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர் தம் வலைத்தளத்தில் ஏற்கெனவே பொங்கிய ஊசிப்போன பொங்கலை எல்லாம் உதயாவின் எண்ணங்களாக அதீத தர்மாவேசங்களாகக் கிழக்கு தொண்ணையில் விநியோகிப்பதைப் பார்க்க, இவ்வளவு வறட்சியா எனப் பரிதாபப்படுவதற்கு பதிலாக, கண்டதையும் கலந்துகட்டி புக்கு தேற்றும் புத்திசாலித்தனத்தைப் பார்த்து எரிச்சல்தான் வருகிறது.”  சாரு நிவேதிதாவின் முந்தைய நாவல்களைப் படித்தவர்களுக்கு, இந்த விமர்சனத்திலிருந்து பிடிபடுவது என்னவென்றால் எக்ஸைல் புதிய தலைப்பில், புதிய அட்டைக்குள், புதிய பதிப்பகத்திலிருந்து பழைய படைப்பு என்பது. ஆக ஸீரோ டிகிரிக்குப் பின்னர் சாரு நிவேதிதா எதையும் புதிதாகப் படைக்கவில்லை என்று தோன்றுகிறது.
ராசா ஆடை எதையும் உடுத்தவில்லை என்பது சிறுவன் சொல்லித்தான் உலகிற்கு தெரிந்தது. சாரு நிவேதிதாவின் சமீபத்திய படைப்புக்களில் இலக்கியம் இல்லை என்பது புலனானாலும், அது ஏன் என்பது தெரியாமலிருந்தது. மாமல்லன் காரணத்தை சர்வ எளிமையாக விளக்கி விடுகிறார்: “தான் வாழ்ந்த வாழ்வை எவ்வளவுதூரம் ஜோடனை செய்யாமல் உண்மையாகப் பார்க்கிறான். அவனையும் மீறி அவனுக்கு எதிரானவற்றை எழுத்தில் வெளிப்பட தன்னை எழுத்துக்கு எவ்வளவுதூரம் திறந்து வைத்திருக்கிறான் என்பதே எனக்கு முக்கியம்.”
இந்த விமர்சனத்தை பிச்சைக்காரன் என்ற பதிவர் தன் தளத்தில் தரக்குறைவாக விமர்சிக்க, அதற்கு பதிலாக மாமல்லன் எழுதிய பதிவும் முக்கியமானது. இதில் சாரு நிவேதிதாவின் இலக்கியப் படைப்புலகத்தையே சில வரிகளுக்குள் முழுமையாக விமர்சித்து விடுகிறார் மாமல்லன். முதலாவது
பேர் சொல்லப்படாத ஒருவருக்கும் இவருக்கும் நடக்கும் தொலைபேசி உரையாடல்:
பே.சொ.ஒ.: இல்ல சார். பொதுவாவே ஜெயமோகன் எஸ்.ரா மாதிரி இல்லாம சாருவை நீங்க சாஃப்ட்டா டீல் பண்றீங்கன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அது அப்படி இல்லேன்னு காட்ட இது ஒரு சான்ஸ் இல்லையா?
மாமல்லன்: ஏம்பா! ஜெயமோகனையும் எஸ்.ராவையும் பத்தி எழுதறேன்னா அவங்க கட்டுரை எழுதறாங்க இல்லாட்டா சிறுகதை எழுதறாங்க. அதைப் படிச்சா எனக்கு ஏதாவது சொல்ல இருக்கு. சாருவோட தளத்துல அப்பிடி என்ன இருக்கு? அப்படி இருந்து சொல்லாமப்போனாதான நான் சாருவை மட்டும் சாஃப்ட்டா டீல் பண்றதா சொல்லலாம்?”
அதன் பின்னர் இது: “கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்.
சாரு நிவேதிதா தம் இணைய சாம்ராஜ்ஜியத்தில் நான்கே நான்கு உருப்படியான வாசகர்களையாவது உருவாக்கியிருக்கிறாரா? அப்புறம் என்ன இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு. மெளனிக்கு வாசகர்களாக இருந்தோரில்  பெரும்பாலோர் எழுத்தாளர்கள். அது உச்சபட்சம். அதை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பது முடியாத காரியம். குறைந்தபட்சமாய் நான்கு விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் அளவிற்கு நல்ல வாசகர்களை உருவாக்குவதுதான் எந்த எழுத்தாளனின் இலக்கியப் பயன்பாடுமாய் இருக்கவேண்டும். சும்மா கும்பலைக் கூட்டி வைத்துக்கொண்டு சூடத்தைக் கையில் ஏந்தி தன் முகத்துக்கே தீபாராதனை காட்டிக்கொள்வதறகுப் போய்க் கொண்டாடு கொண்டாடு என ஏனிந்தக் கொலைவெறிக் கூப்பாடு?”

மேற்கண்ட விஷயத்தில் மாமல்லன் கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன் மூவருமே வெகுவாக எழுதியவர்களே, ஆனால் சுஜாதா போன்று அவர்கள் வாசகர்களுக்கு இலக்கிய அறிமுகம் செய்து வைத்ததாகத் தோன்றவில்லை. அந்த விஷயத்தில் சுஜாதா ஒரு முன்னோடி. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா முதலியோர் அதை ஓரளவுக்குப் பின்பற்றி வந்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். நபக்காவ், யோசா, காபி போன்ற எழுத்தாளர்களை சாரு தீவிரமாகவே அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவை இப்போது கவனம் பெறவில்லை என்பதற்குக் காரணம் சாரு நிவேதிதா ஆடும் பலவித தில்லாலங்கடி விளையாட்டுகள் அம்பலமாகி வருவதுதான்.  இருப்பினும், எழுத்தாளர்களும், படைப்புக்களும் இன்னும் கூர்மையாக அலசப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே மாமல்லன் இது போன்ற விமர்சனங்களை மேலும் எழுத வேண்டுமென விரும்புகிறேன்.
--
கண்மணி குணசேகரனின் சிறுகதைகள்
கண்மணி குணசேகரனின் எழுத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை வாசிக்க ஆவலாக இருந்தேன். சமீபத்தில் “வெள்ளெருக்கு” என்ற சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. முதல் நான்கு கதைகளை வாசித்த பிறகு கை தவறுதலாக அத் தொகுப்பை எங்கோ வைத்து விட்டேன். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வாசித்த வரை நான்கு சிறுகதைகளுமே அபாரமான கதைகள். முதலாவது எல்லாக் கதைகளிலுமே ஒரு வலுவான “கதை” இருக்கிறது. வெறும் மொழியை வைத்துக் கொண்டு சிலம்பாட்டம் போடுவதையோ, ஏதோவொரு தத்துவத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதையோ காண முடியவில்லை. இரத்தமும், சதையுமான மனிதர்கள் வருகிறார்கள். ஒரு ஊரும், சமுதாயமும் இருக்கிறது. சம்பவங்கள் நடக்கின்றன. சில கதைகளில் மிருகங்கள் கதாநாயகர்கள் ஆகி விடுகின்றன. “புள்ளிப் பொட்ட” என்ற கதையில் ஒரு பெட்டைக் கோழி அதை வளர்க்கும் தம்பதிகளை விட அதிகமாக சொல்லப்படுகிறது. ஆனால் கதையின் இறுதியில், அதிகம் சொல்லப்படாத அத் தம்பதிகளின் பெண் குழந்தை மீதுதான் நமது பரிதாபம் குவிகிறது.
வெள்ளெருக்கையும், கண்மணி குணசேகரனின் மற்ற படைப்புக்களையும் வாசிக்க வேண்டும்.
--
தங்கார் பச்சானின் “பள்ளிக்கூடம்”
தற்செயலாக சன் டி.வி.யில் காண நேர்ந்தது. அப்படியே மூன்று மணி நேரம் கட்டிப் போட்டு விட்டது. சென்ட்டிமென்ட்டல் காட்சிகளும், நாடகத்தனமான அமைப்புகளும் படத்தில் நிறைய இருந்தாலும், கதையை எடுத்துச் செல்லும் விதமும், பல நடிகர்களின் இயல்பான நடிப்பும் திரைப்படத்தைச் சிறப்பாக்கி விடுகின்றது. தங்கார்பச்சானின் நடிப்பு கவனத்தை ஈர்க்கின்றது. உச்ச நடிப்பு சிநேகாவுடையது. பள்ளி விழா மேடையில் கோபமும், வெறுப்பும், கையாலாகாததனமும் வெளிப்படுத்திக் கொண்டு ஒரு உணர்ச்சிக் கலவையில் உட்கார்ந்திருப்பது அதற்கு ஒரு உதாரணம். படம் வெளிவந்த தருணத்தில் வெற்றிகரமாக ஓடியதா என்று தெரியவில்லை. இப்படம் தோல்வியடைந்திருந்தால், அது தமிழ் மக்களின் தோல்வியே.        

1 comment:

தருமி said...

ஒரு பதிவின் வழியே பல பதிவுகளுக்கு வழிகாட்டியுள்ளீர்கள். நன்றி.

எழுத்தின் மீதான உங்கள் வேட்கை நன்கு புலனாகிறது.

வளர்க ..