Sunday, December 11, 2011

துளுவின் பேரழகிகள்


யூட்யூபில் அந்த பிரபல, பேரழகி நடிகையின் பேட்டியொன்றைக் காண நேர்ந்தது. பேட்டியெடுப்பவர் படு நக்கல் பேர்வழி. தெரியாத்தனமாக வாயைக் கொடுத்து விட்டால் உண்டு இல்லையென்று பண்ணி விடுபவர். அவரை நடிகை சாதுர்யமாகக் கையாளுவதைப் பார்த்து அசந்து விட்டேன். பேட்டியில் இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. நடிகைக்கு எத்தனை இந்திய மொழிகள் தெரிகிறதென்று கேட்கப்படுகிறது. நான்கு என்கிறார் அவர். ஹிந்தி, கன்னடம் தவிர வேறென்ன மொழிகள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவர் “ஹிந்தி, இந்திய தேசிய மொழி; மராத்தி;  என்னுடைய தாய் மொழியான துளு; கொஞ்சம் உடைந்த தமிழ்” என்கிறார். பட்டியலில் கன்னடம் விடுபட்டுப் போனதும், தமிழ் சேர்க்கப்பட்டதுமே வியப்பிற்குக் காரணம்.
துளு பேசப்படும் தென் கடலோர கர்நாடகா எனும் சிறிய பிராந்தியத்திலிருந்து ஷெட்டி, ரை என்ற குடும்பப் பேர்களைக் கொண்ட பேரழகிகள் இந்தியத் திரைப்படத் துறையெங்கும் நிரம்பியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா, ஷில்பா, அனுஷ்கா தற்கால உதாரணங்கள். எப்படி இந்த சிறு பிராந்தியம் இத்தனை அழகை உற்பத்தி செய்கிறதென்று மலைப்பாக இருக்கிறது.  
பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நண்பர் ஒருவரை இந்தியாவில் சந்திக்க நேர்ந்தது. நண்பருக்கு ஒரு மலையாள நண்பர் இருந்திருக்கிறார். இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் ஒரு பிராந்தியம் இருப்பதாகவும், அங்கே பெண்களெல்லாம் பேரழகிகள், ஆனால் ஆண்கள் எல்லாம் பார்க்க அசிங்கமாக இருப்பார்களென்றும் அவருடைய மலையாள நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். நண்பருக்கு பிராந்தியத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆனால், அங்கே சென்றிருக்கிறேன் என்றார். மலையாள நண்பர் சொன்னது போலவே அங்கே பெண்களெல்லாம் வெகு அழகு, ஆண்கள் அசிங்கமான முரடர்கள் என்றார். கேட்டுக் கொண்டிருந்தவர்களெல்லாம் அது என்ன பகுதியாக இருக்கும் என்று தலையை உடைத்துக் கொண்டோம். இப்போது அது ஒரு வேளை துளு நாடாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால், எனக்குத் தெரிந்த சில துளு பகுதி ஆண்கள் அழகர்களே. பிரகாஷ் ரை (தற்போதைய பெயர் பிரகாஷ் ராஜ்) கூட பார்க்க அசிங்கமாகவா இருக்கிறார்?   
 

Sunday, December 4, 2011

நாட்டின் மேல் மரியாதை இருக்கிறதா?

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

நண்பர் மேலை நாட்டுக்காரர். தொழில் சம்பந்தமாக அடிக்கடி இந்தியா சென்று வருபவர். பந்தாவோ, அகம்பாவமோ துளிக்கூட இல்லாதவர்.

இந்த முறை இந்தியா பற்றி பேச்செழுந்தது. நண்பர் ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்தியாவில் இருந்து விட்டு வந்திருந்தார். “நானொன்று சொன்னால் தப்பாக நினைக்க மாட்டாயே?” என்றார். “இல்லை.”

“I have been thinking about this. You Indians do not respect your country” என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார் “You respect your culture. You respect your religions. But, you don’t simply respect your country.”

இதைப் பற்றி இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு நல்ல பேட்டியை நான் இன்று வாசித்தேன். “நாம் சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஏதோ தன்மையை இழந்துவிட்டோம்” என்று முத்துக்குமாரசாமி சொல்வதற்கும், நண்பர் சொல்வதற்கும் எதோ தொடர்பு இருக்கிறதென்றே தோன்றுகிறது.

--

யுவகிருஷ்ணா ராக்ஸ்டார் பற்றிய விமரிசனம் நன்றாக எழுதியிருக்கிறார். அந்தப் படத்திலிருந்து சில பாடல்களை யூட்யூபில் கேட்டேன். ரொம்பப் பிடித்திருந்தது.

என்னிடமிருந்த “பிருந்தாவனம்” குறுந்தட்டை நண்பர் ஒருவருக்குக் கொடுத்து திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்டிருந்தேன். அது திரும்பி வரவில்லை. அதிலிருந்து “கனிகள் கொண்டு தரும்” பாடலை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது அது யூட்யூபில் ஏற்றப்பட்டுள்ளது.