Monday, July 26, 2010

சவுக்கு.நெட்டிற்கு ஆதரவு திரட்ட வேண்டுகோள்

தமிழக அரசியல், அதிகார வர்க்கங்களில் நடக்கும் முறைகேடுகளை துணிச்சலாக வெளிப்படுத்தும் சவுக்கு.நெட் (www.savukku.net) இன்று என் கவனத்திற்கு வந்தது.

கடந்த 15-20 வருடங்களாக தமிழகம் கடுமையாக சூறையாடப்பட்டு வருகிறது என்பதை கற்றவர்களாகிய நாம் அறிவோம். முன்னேற்றப் பாதையில் இருந்த தமிழகம் அநேகமாக ஒவ்வொரு துறையிலும் தேக்க நிலையையோ, பின் தங்குவதையோ உணர்ந்து வருகிறோம். அதே வேளையில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், அதிகாரப் பொறுப்புகளில் உள்ளவர்களும் கற்பனைக்கும் மீறிய வகையில் பொதுச் சொத்துகளைச் சுரண்டி சம்பாதித்து வருகிறார்கள் என்பதும், இப்படிச் சேர்க்கப்படும் செல்வம் நாளை நமது சந்ததியினரின் எதிர்காலத்தை அவர்கள் அபகரித்துக் கொள்ள வழி வகுக்கும் என்பதும் மிகுந்த கலக்கத்தை உண்டாக்கும் போக்குகளாகும்.

முறைகேடுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடுவது சிரமமும், அபாயமும் மிகுந்த ஒன்று. தமிழகத்தில் இருக்கும் எந்த செய்தித் தாளும், பத்திரிகையும், தொலைக்காட்சியமைப்பும் இதைச் செய்யப் போவதில்லை. ஏனென்றால், பல ஊடக நிறுவனங்கள் அரசியல், அதிகார வர்க்கங்களாலேயே நடத்தப்படுகின்றன. அப்படி நடத்தப்படாத நிறுவனங்களும் விளம்பரங்களுக்காக அதிகார வர்க்கத்தையே நாடியிருப்பதால் அவை அதிகார வர்க்கத்தில் நடக்கும் பெரிய முறைகேடுகளை வெளிப்படுத்த முன்வரா. இது தவிர, அதிகார வர்க்கத்திற்கு துணையாக நின்று, முறைகேடுகளை நடத்தும் பத்திரிகைகளும் உள்ளன.

இப்படி மக்களின் சுதந்தரமும், நல வாழ்வும், நாலா பக்கங்களிலிருந்தும் தொடர்ந்து நெருக்கப்படும் சூழ்நிலையில், தெளிவும், விடிவும் காண ஒரே ஒரு ஊடகம்தான் உள்ளது. அதுதான் இணையம் என்னும் ஊடகம். அதில் துணிவுடன் பணியாற்ற இது வரை யாரும் வந்தது போல் தெரியவில்லை. ஆனால், இப்போது சவுக்கு.நெட் தளத்தை வாசித்துப் பார்க்கும் போது ஒரு நம்பிக்கை எழுகிறது.

இந்த தளத்தின் பல பதிவுகளை வாசித்துப் பார்க்கும் போது இதன் ஆசிரியருக்கு என்ன நேரிடுமோ என்று பயமாக உள்ளது. அந்த அளவுக்கு துணிச்சலாக எழுதுகிறார். என்னைப் போல் நம்மில் பலருக்கு அவரைப் போல் ஆதாரங்கள் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் எழுதும் துணிச்சல் இருக்காது. ஆனால் குறைந்த பட்சம், இந்தத் தளத்தை பரவலாகக் கொண்டு சேர்ப்பதில் நாம் ஈடுபடலாம். மக்கள் ஆதரவு இது போன்ற முயற்சிகளுக்கு உண்டு என்றால் அதிகார வர்க்கம் அஞ்சும்.

எனவே சவுக்கு.நெட் ((www.savukku.net) தளத்தைப் பாருங்கள். உங்கள் பின்னூட்டங்களை இடுங்கள். அதைப் பற்றி பதிவெழுதுங்கள். மற்றவர்களிடம் சொல்லுங்கள்.

நன்றி.

4 comments:

ஜோதிஜி said...

இந்த தளத்தின் பல பதிவுகளை வாசித்துப் பார்க்கும் போது இதன் ஆசிரியருக்கு என்ன நேரிடுமோ என்று பயமாக உள்ளது. அந்த அளவுக்கு துணிச்சலாக எழுதுகிறார்.

என்னுடைய உணர்வும் இதே தான்.

Victor Suresh said...

ஜோதிஜி,

நிறைய பேர் பார்த்துக் கொண்டிருக்கும் போது திருடனுக்கும் பயமாகதான் இருக்கும். எனவே, முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Victor Suresh said...

கீழ்க்கண்டது சவுக்கு தளத்தில் சமீபத்தில் நானிட்ட பின்னூட்டம். "அடுத்து என்ன செய்வது" என்ற தலைப்பிலான பதிவிற்கு (http://www.savukku.net/2010/09/blog-post_05.html) எனது பதில்.

நண்பரே,

உங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அதிகார வர்க்கம் மட்டும் கெட்டுப் போயிருந்தால் மக்கள் சக்தி மூலமாக அந்த நிலையை மாற்றியமைக்க முடியும். மக்களே கெட்டுப் போயிருந்தால் என்ன செய்ய முடியும்? இது பிரச்சினைதான், ஆனால் தீர்வும் இதில்தான் அடங்கியிருக்கிறது.

நீங்கள் பெரும்பாலும் காவல் துறையை, அதிலும் குறிப்பாக சில அதிகாரிகளை, இன்னமும் குறிப்பாக ஜாஃபர் சேட் என்னும் ஒரு அதிகாரியை குறிவைத்து எழுதி வருகிறீர்கள். இதற்கான பின்னணியும், காரணங்களும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தெரியாத எங்களைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் தனிமனித தாக்குதல்கள் நாளடைவில் அயற்சியையே ஏற்படுத்தும். அந்த ரீதியிலான பின்னூட்டங்கள் பலவற்றை ஏற்கனவே கண்டிருக்கிறீர்கள்தானே. என்னைப் பொறுத்தவரை, அயற்சியைவிட உங்கள் உயிருக்கான அச்சமே அதிகம். ஏனென்றால், தனிமனித விரோதங்களில் எப்போதுமே ஆபத்து உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமோ மனித உயிருக்கும் உரிமைகளுக்கும் எந்த வித மதிப்பும் தராத ஒரு காலம்.

இந்த சூழ்நிலையில் உங்கள் திறமைக்கும், எண்ணங்களுக்கும், குறிக்கோள்களுக்கும் தகுதியான செயல் என்று நான் மதிப்பிடுவது, மக்கள் மனதை மாற்றுவது. எனவே, நீங்கள் அதிகாரவர்க்கத்தின் கேட்டை எப்படி வெளிக் கொண்டு வருவது என்ற அக்கறையை இப்போதைக்கு தள்ளி வைத்து விட்டு பொது மக்களை எப்படி மாற்றலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அகில இந்திய அளவிலே காந்தியடிகளும், தமிழக அளவிலே தந்தை பெரியாரும் ஏற்படுத்திய பொதுமக்கள் இயக்கத்திற்குப் பின்னர் வெற்றிகரமான மக்கள் இயக்கங்கள் எதுவும் ஏற்படவில்லையே. உங்களைப் போன்றவர்களால் அவர்கள் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது" என்று வள்ளுவன் சொன்னதில் சொல் வன்மை, அஞ்சாமை இரண்டும் உங்களிடத்தில் உள்ளதைக் கண் கூடாகக் காண்கிறோம். சோர்ந்து விடாமல் போராடினால் உங்களை யாரும் வெல்ல இயலாது.

தாரளமயமான பொருளாதார சூழலில் மக்கள் ஊரை, உலையில் போட்டுத்தான் வாழ வேண்டுமென்பதில்லை. உழைப்பிலே அதைவிட உயர்வு உண்டு. நாமெல்லாம் சகோதரராக வாழ்ந்து, சீரிய ஒரு சமூகமாக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்றே தீவிரமாக நம்புகிறேன். உங்கள் நம்பிக்கை தளாரதிருக்க நீங்கள் நம்பாத கடவுளிடமும் அருள் வேண்டுகிறேன்.

இறுதியாக: பத்திரிகை உலகையும், தொலைக்காட்சியையும், திரைப்படத்தையும் அரசியல் ஆக்கிரமித்து விட்ட நிலையில் சுதந்திரமாக இருக்கும் ஒரே ஊடக வெளி இணையம்தான். நக்கீரன் போன்ற சமூகவிரோத பத்திரிகைகளுக்கு மாற்றாக சவுக்கு வந்திருப்பதை போல, சன், ஜெயா செய்திகளுக்கு மாற்றாக யூ-ட்யூபில் மாற்று ஒன்று உருவாகலாம்; முடிந்தால் நீங்களே அதை உருவாக்கலாம்.

Unknown said...

நானும் தங்கள் பின்னூட்டத்தை படித்தேன்... அந்த கருத்தை அமோதிக்கிறேன்... விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்போம்... முழு முயற்சியும் சொல் வன்மையும் அஞ்சாமையும் இணையும் இடத்தில வெற்றி நம் வசம் ஆகிறது... எதிரி எந்த ரூபத்தில் இருந்தாலும் அகன்று செல்வான், அழிவான்...