தமிழக அரசியல், அதிகார வர்க்கங்களில் நடக்கும் முறைகேடுகளை துணிச்சலாக வெளிப்படுத்தும் சவுக்கு.நெட் (www.savukku.net) இன்று என் கவனத்திற்கு வந்தது.
கடந்த 15-20 வருடங்களாக தமிழகம் கடுமையாக சூறையாடப்பட்டு வருகிறது என்பதை கற்றவர்களாகிய நாம் அறிவோம். முன்னேற்றப் பாதையில் இருந்த தமிழகம் அநேகமாக ஒவ்வொரு துறையிலும் தேக்க நிலையையோ, பின் தங்குவதையோ உணர்ந்து வருகிறோம். அதே வேளையில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், அதிகாரப் பொறுப்புகளில் உள்ளவர்களும் கற்பனைக்கும் மீறிய வகையில் பொதுச் சொத்துகளைச் சுரண்டி சம்பாதித்து வருகிறார்கள் என்பதும், இப்படிச் சேர்க்கப்படும் செல்வம் நாளை நமது சந்ததியினரின் எதிர்காலத்தை அவர்கள் அபகரித்துக் கொள்ள வழி வகுக்கும் என்பதும் மிகுந்த கலக்கத்தை உண்டாக்கும் போக்குகளாகும்.
முறைகேடுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடுவது சிரமமும், அபாயமும் மிகுந்த ஒன்று. தமிழகத்தில் இருக்கும் எந்த செய்தித் தாளும், பத்திரிகையும், தொலைக்காட்சியமைப்பும் இதைச் செய்யப் போவதில்லை. ஏனென்றால், பல ஊடக நிறுவனங்கள் அரசியல், அதிகார வர்க்கங்களாலேயே நடத்தப்படுகின்றன. அப்படி நடத்தப்படாத நிறுவனங்களும் விளம்பரங்களுக்காக அதிகார வர்க்கத்தையே நாடியிருப்பதால் அவை அதிகார வர்க்கத்தில் நடக்கும் பெரிய முறைகேடுகளை வெளிப்படுத்த முன்வரா. இது தவிர, அதிகார வர்க்கத்திற்கு துணையாக நின்று, முறைகேடுகளை நடத்தும் பத்திரிகைகளும் உள்ளன.
இப்படி மக்களின் சுதந்தரமும், நல வாழ்வும், நாலா பக்கங்களிலிருந்தும் தொடர்ந்து நெருக்கப்படும் சூழ்நிலையில், தெளிவும், விடிவும் காண ஒரே ஒரு ஊடகம்தான் உள்ளது. அதுதான் இணையம் என்னும் ஊடகம். அதில் துணிவுடன் பணியாற்ற இது வரை யாரும் வந்தது போல் தெரியவில்லை. ஆனால், இப்போது சவுக்கு.நெட் தளத்தை வாசித்துப் பார்க்கும் போது ஒரு நம்பிக்கை எழுகிறது.
இந்த தளத்தின் பல பதிவுகளை வாசித்துப் பார்க்கும் போது இதன் ஆசிரியருக்கு என்ன நேரிடுமோ என்று பயமாக உள்ளது. அந்த அளவுக்கு துணிச்சலாக எழுதுகிறார். என்னைப் போல் நம்மில் பலருக்கு அவரைப் போல் ஆதாரங்கள் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் எழுதும் துணிச்சல் இருக்காது. ஆனால் குறைந்த பட்சம், இந்தத் தளத்தை பரவலாகக் கொண்டு சேர்ப்பதில் நாம் ஈடுபடலாம். மக்கள் ஆதரவு இது போன்ற முயற்சிகளுக்கு உண்டு என்றால் அதிகார வர்க்கம் அஞ்சும்.
எனவே சவுக்கு.நெட் ((www.savukku.net) தளத்தைப் பாருங்கள். உங்கள் பின்னூட்டங்களை இடுங்கள். அதைப் பற்றி பதிவெழுதுங்கள். மற்றவர்களிடம் சொல்லுங்கள்.
நன்றி.