Sunday, January 26, 2014

அதிர்ஷ்டசாலி எழுத்தாளர்கள்

கோவில் திருவிழா வரும் போதெல்லாம் குத்தாட்டக் குழு வருவதைப் போல சென்னையில் புத்தகக் கண்காட்சி வரும் போதெல்லாம் எழுத்தாளர்களுக்குள் குஸ்திச் சண்டையும் வந்து விடுகிறது. சண்டைகளில் இரண்டு வகை உண்டு. இந்தியா-பாக்கிஸ்தான், ஈரான்-இஸ்ரேல், வட கொரியா-தென் கொரியா என்று நீண்ட நெடுங்காலப் பகை கொண்ட நாடுகளிக்கிடையில் சண்டை மூள்வது எதிர்பார்க்கப்படும் சண்டை. ஆனால் சற்றும் எதிர்பாராமல் இரண்டு நாடுகளுக்கிடையில் சண்டைகள் வரலாம். இங்கிலாந்தும் அர்ஜெண்டினாவும் போட்ட சண்டை போல. இது எப்போதாவதுதான் நிகழும். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இரண்டாவது வகை சண்டை எப்போதும் நிகழும் சண்டையாகி விட்டது. யார், யாரோடு சண்டை போடப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கே தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.  இந்த பொங்கலுக்கு மாமல்லனும் மனுஷ்யபுத்திரனும் களத்தில் நிற்கிறார்கள். மாமல்லன் எழுத்தில் காட்டும் சிக்கனத்தை ஏச்சில் காட்ட மாட்டார் என்பதால் களம் கலங்கிப் போய் நிற்கிறது.

தனது படைப்புக்கள் அச்சில் புத்தக வடிவில் பதிக்கப்பட்டிருப்பினும் PDF வடிவில் தானே வெளியிடுவது தவறில்லை என்பதிலும், பதிப்பாளர் எழுத்தாளரின் புத்தகம் எத்தனை பிரதிகள் அச்சாக்கப்பட்டு விற்பனையாகியுள்ளது என்ற தகவலை எழுத்தாளரிடம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார் என்ற வகையிலும் மாமல்லன் பக்கம்தான் நியாயமிருக்கிறது. மேற்படையாகப் பார்க்க ம.பு. நாகரிக மொழியில் உரையாடுவதாகவும், மாமல்லன் குழாயடிச் சண்டை பாஷையில் பேசுவதாகவும் தோன்றலாம். ஆனால், மாமல்லன் நியாயமான தனது கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறார்; ம.பு. கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்கிறார், மாமல்லன் மீது தனிமனிதத் தாக்குதல் நடத்த முற்படுகிறார் என்பதைப் பார்க்கும் போது மாமல்லன் பக்கத்து நியாயம் இன்னும் வலுவாகத் தோன்றுகிறது.

தமிழில் படைப்புகள் முதலில் இணையத்திலும் அதன் பிறகு அச்சிலும் வெளிவருவது பரவலாகி வரும் நிலையில், உலக அளவில் பதிப்பகங்களையும், வெளியீட்டு நிறுவனங்களையும் புறக்கணித்து, படைப்பாளிகளே நேரடியாக மக்களுக்கு தங்களுடைய படைப்புக்களை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதையும் பார்க்கும் போது, மனுஷ்யபுத்திரன் “நாம் எந்த விதமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?” என்பதை இன்னும் ஒரு தடவை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆனாலும் … இலக்கியப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள் ஐயாயிரத்தைத் தாண்ட மாட்டார்கள் என்று கணிக்கப்படும் தமிழ்ச் சூழலில் உயிர்ம்மை போன்ற பதிப்பகங்கள் என்ன லாபத்தைச் சம்பாதித்து விட முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சராசரி புத்தகத்தின் விலை ரூ 300 என்று வைத்துக் கொள்ளலாம். அதில் பதிப்பகத்திற்கு நிகர லாபம் 35%, அதாவது ரூ 105 என்று உத்தேசித்துக் கொள்வோம். பதிப்பகத்திற்கு 100 புத்தகங்கள் உள்ளன; ஆண்டிற்கு 200 பிரதிகள் விற்கின்றன என்றால் லாபம் சுமார் 31 லட்சம் வருகிறது. இன்றைய வணிகச் சூழலில் இது பெரிய லாபமாக தோன்றவில்லை.

ஆனாலும் … மனுஷ்யபுத்திரன் ஏன் எல்லாப் பிரதிகளையும் விற்றுத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் புரியவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு சாரு நிவேதிதாவும் தனது எக்சைலை விற்பதில் உயிர்ம்மை ஆர்வம் காட்டவில்லையென்று ம.பு.வுடன் மல்லுக்கு நின்றார் என்று நினைவிருக்கிறது. குறைவான எண்ணிக்கையில் பொருட்களை சந்தைப்படுத்தி, பொருட்களின் மவுசை உயர்த்த விழையும் வியாபார உத்தியா இது? Does not make any sense.

ஆனாலும் … இந்த சண்டையிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஒன்று. ஒரு வகையில் பார்த்தால் எழுத்தாளர்கள் அதிர்ஷ்டசாலிகள். ராயல்ட்டி கிடைக்கிறதோ இல்லையோ, எழுதியதற்கு காப்பி ரைட் அவர்களிடம்தான் இருக்கிறது. எங்கள் அறிவியல் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். பாடுபட்டு ஆய்வு செய்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் காப்புரிமையை பதிப்பாளர்களுக்கு எழுதிக் கொடுத்த பிறகுதான் கட்டுரைகளை வெளியிடுவதா வேண்டாமா என்று பரிசீலிக்கவே தொடங்குவார்கள். அச்சானால், அந்தக் கட்டுரையின் அச்சு நகலின் மீது கூட கட்டுரை ஆசிரியருக்கு உரிமை கிடையாது. ஒன்று பல்லாயிரம் ஏன் சில லட்சங்கள் கூட கொடுத்து சஞ்சிகையை வாங்க வேண்டும், அல்லது இரண்டாயிரம் மூவாயிரம் கொடுத்து ஒரு தனிக் கட்டுரையை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முன்னணிப் பதிப்பகங்கள் பல மில்லியன் டாலர் வருமானத்தில் 30-35% நிகர லாபம் ஈட்டுகின்றன. ஆனால் கட்டுரை ஆசிரியருக்கு சல்லிப் பைசா கிடையாது. சில பதிப்பகங்கள் கட்டுரை ஆசியரிடமிருந்து பதிப்பீட்டுக் கட்டணமும் பெற்றுக் கொள்கின்றன. சஞ்சிகைகளுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான அறிவியல் நூல்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாசியர்களுக்கும் கூட இதே நிலைதான். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வற்புறுத்துதலின் பேரில் ஒரு துறை நூலின் ஆசிரியராக ஒத்துக் கொண்டேன். சுமார் 400 பக்க நூல். ஜூனில் முடித்துக் கொடுக்க வேண்டும். எப்படியும் ஒரு மாதத்தை விழுங்கி விடும். தம்பிடி தேறாது. துறைக்காற்றிய சேவையாக எண்ணி, நம்மையே தேற்றிக் கொள்ளலாம், அவ்வளவுதான்.   

No comments: