Sunday, February 2, 2014

6174: தமிழ் புதினத்தின் ஒரு முக்கியமான மைல்கல்

சிற்சில தடைகளைத் தாண்டி வாசித்து முடித்து விட்டேன் 6174ஐ.

2012ன் இறுதியில் 6174ன் ஆசிரியர் க. சுதாகருடன் தொடர்பு வளையத்திற்குள் வந்தேன். அவரும் நானும் ஒரே வகுப்பில் பள்ளியிறுதி (+2) முடித்தவர்கள். அப்போதெல்லாம் சுதாகருக்கு எழுத்தார்வம் இருந்ததாக நினைவில்லை. எனவே அவர் ஒரு புதினம் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்த போது அதை வாசிக்க ஆவலானேன். ஜெயமோகன் அதைத் தமிழின் முதல் அறிவியல் புதினம் என்று விவரித்து 2012ல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களில் ஒன்றாக பரிந்துரைத்த போது ஆர்வம் அதிகரித்தது. சென்னைக்குச் செல்லும் போது வழக்கமான புத்தகக் கடைகளில் தேடி, கிடைக்கவில்லை என்று வம்சி புக்ஸ் இணைய தளத்தில் வாங்கி, பணம் செலுத்தி, அந்த பணம் வம்சியைச் சென்றடையாமல் என் வங்கிக் கணக்கிற்கே திரும்பி வந்து, கடைசியில் 2014 புத்தகக் கண்காட்சியில் நேராக வம்சி ஸ்டாலுக்கே சென்று புத்தகத்தை வாங்கி வந்தேன். மேற்கூறியது நடந்த சுமார் ஓராண்டு இடைவெளியில் 6174 குறித்த பல குறு விமர்சனங்களை இணையவெளியில் காண நேர்ந்தது. அனைத்தும் பாராட்டுதல்களே. தமிழர்கள் நமது வழக்கப்படியே சுதாகருக்கு தமிழின் டான் ப்ரௌன், றாம் க்ளான்ஸி என்றெல்லாம் பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். மெத்த மகிழ்ச்சி.

சுதாகருடன் எனக்கு முன்பழக்கம் இல்லையென்றாலும் கூட 6174 தமிழ் புதினத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறியிருப்பேன். ஏனென்றால் கணிதப் புதிர், அறிவியல் தத்துவங்கள் அடைப்படையில் 400 பக்கங்களுக்கு தமிழில் எழுத ஒரு தெனாவட்டு வேண்டும். அதுவும் தமிழ் புத்தக உலகில் முன்னே பின்னே அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளருக்கு. அப்படிப்பட்ட புதினத்தைப் பிரசுரிக்க ஒரு பதிப்பகத்திற்கு பெரிய அளவில் தில் வேண்டும். இவையனத்திற்கும் மேலாக அது வெற்றிகரமான ஒரு படைப்பாக வேண்டுமென்றால் எழுதுபவருக்கு அசாதாரணமான திறமை வேண்டும். அந்தத் திறமை சுதாகருக்கு நிறையவே இருப்பது நூலில் தெரிகிறது.

6174ல் சுதாகரின் மிகப் பெரிய வெற்றி என்று நான் கருதுவது சிக்கல்கள் நிறைந்த களத்தில் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை சீராக செலுத்துவதுதான். வாசகனைக் கொஞ்சம் சலிப்படைய வைத்தாலும், இந்தப் புதினம் முழு தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம். லெமூரியக் காலம் தொடங்கி, இந்நாள் வரை, அமெரிக்கா, தென்னமரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ரஷ்யா, இந்தியா, மியன்மார் என்று உலகம் முழுவதும் விரிந்து, பக்கத்திற்குப் பக்கம் புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு செல்லும் ஒரு புதினம் மூளைக்கு வேலை வைப்பதுடன், அறுவையாகவுமல்லவா இருக்கிறது என்று மூடி வைத்து விட்டால், அவ்வளவுதான். பிறகு திறந்து வாசிப்பது அரிதாகிவிடும். ஆனால், 6174ன் ஒவ்வொரு பக்கத்திலும் சின்னச் சின்ன மர்ம முடிச்சுகளை இடுவதும், விடுவிப்பதுமான உத்தி அதைக் கடைசி வரை ஆர்வத்துடன் வாசிக்க வைத்து விடுகிறது. இந்த நூல் பரந்த ஒரு வாசகத் தளத்தை வெற்றிகரமாக அடைந்ததற்கு இது ஒரு பிரதான காரணமாக இருக்கலாம்.

இன்னொரு காரணம் எண்-எழுத்துப் புதிர், அறிவியல் தத்துவங்களைத் தாண்டி இந்தப் புதினம் நடமாட விடும் கதாபாத்திரங்கள், அவர்களின் பின்னணி வரலாறுகள் ஆகியவற்றை சுவாரஸ்யமாக சொல்லும் விதம். ஒரு சராசரியான, பொழுதுபோக்கு த்ரில்லர் வகை நாவல் கூட சுவாரஸ்யமாக கதாபாத்திரங்களை உருவாக்கி உலவ விடலாம். ஆனால், சுதாகரின் பாத்திரப் படைப்பிலும், அவர்களுக்கிடையே இருக்கும் உறவுகளின் சித்திரத்திலிமிருக்கும் ஆழம் சராசரியான, பொழுதுபோக்கு த்ரில்லர் வகை நாவல்களில் காண முடியாதது.

6174ஐ வாசிக்கும் போது “இது என்ன வகை புதினம்?” என்று அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வது போல் இதை அறிவியல் புதினம் என்று அழைக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது. வரலாறு, கணிதம், புவியியல், உயிரியல், மற்றும் நவீன தொழில் நுட்பம் என பல துறைகளிலும் அறிவார்த்தமாக கதை பயணிக்கிறது என்றாலும், இதன் மைய இழை பல்வகைப் புதிர்களை (எண் புதிர்கள், வார்த்தைப் புதிர்கள், வடிவப் புதிர்கள்) அவிழ்த்து அறிவியலாளர்கள் சிலர் எப்படி அழிய இருக்கும் உலகைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே. எனவே, 6174 த்ரில்லர் வகையிலான ஒரு படைப்பு என்றே கருதுகிறேன். இந்த வகையில் சுதாகரை தமிழின் டான் ப்ரௌன் என்றழைப்பது எனக்கு சரியானதாகவே படுகிறது.  இருப்பினும், இருத்தல் குறித்த அறிவியல் தத்துவங்களை இரண்டு மூன்று பக்கத்திற்கு விவாதிக்கும் ஒரு புதினத்தை அறிவியல் புதினமில்லையென்று ஒதுக்கவும் மனம் ஒப்பவில்லை. 

6174 குறித்து நான் வாசித்த விமர்சனங்களனைத்தும் பாராட்டுதல்களே என்பதால் நூலில் கண்ட சில குறைகளையும் பதிவிட விரும்புகிறேன். ஓரளவிற்குப் பெரிய குறையாக நான் பார்ப்பது, கடைசி 50 பக்கங்களில் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற ரீதியில் கதை நகர்த்தப்பட்ட உணர்வு ஏற்படுவதுதான். இந்த பக்கங்களில் ஆசிரியரின் தடுமாற்றங்கள் சில இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, மிங்குன் பகோடாவில் நேரக் கணக்குகள்; அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையைப் பற்றிய விவரணைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கதாசிரியர் ஏற்படுத்திய பல முடிச்சுகளில் சில அவிழ்க்கப்படாமல் போன ஒரு உணர்வையும் தவிர்க்க முடியவில்லை. இதை ஊர்ஜிதம் செய்ய நாவலை முதலில் இருந்து மறுபடியும் படிக்க வேண்டும்.

மேலை நாடுகளில் இருப்பது போன்று புத்தக ஆசிரியர் (புக் எடிட்டர்) ஒருவர் இருந்திருந்தால் 6174 இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று கருதுகிறேன். தன்னுடைய இயற்பியல் துறை சம்பந்தப்பட்ட கலைச் சொற்களை தமிழில் சொல்லும் சுதாகர் (உதாரணம்: நுண்துளைக் குழாய்), அயல் துறையான உயிரியலில் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவது நெருடலாக இருக்கிறது, உதாரணம்: ஜெயண்ட் ஸ்க்யுட் (ராட்சதக் கணவாய்). தமிழாக்கம் செய்த இடங்களில் தவறாகவும் வந்திருக்கிறது. உதாரணம் catfish என்பது பூனைமீன் அல்ல; கெளிறு அல்லது கெளுத்தி என்பதுதான் சரி. நீலத்துடுப்பு சூறை மீன்களை வலை வீசிப் பிடிப்பதில்லை; தூண்டில் போட்டே பிடிக்கிறார்கள். அப்படிச் செய்தால்தான் அந்த வகை மீனை ஜப்பானிய முறைப்படி பச்சையாக உண்ண முடியும். ஜானகி அமெரிக்காவில் போஸ்ட் டாக்டரேட் செய்ய ஜிஆர்ஈ தேர்வு எழுதியதாக ஓரிடத்தில் வருகிறது. மாஸ்டர்ஸ், பிஎச்டி போல போஸ்ட் டாக்டரேட் என்பது ஒரு பட்டப் படிப்பல்ல; பயிற்சியனுபவம்தான். எனவே போஸ்ட் டாக்டரேட் செய்ய ஜிஆர்ஈ தேவையில்லை. இது போன்ற சிறு தவறுகளை புக் எடிட்டர் ஒருவர் இருந்திருந்தால் சரி செய்திருக்கலாம். 
              

6174ன் வெற்றியைத் தொடர்ந்து சுதாகர் மேலும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவரது அடுத்த புதினம் 6174ஐயும் விஞ்சும் என்றும் எதிர்பார்க்கிறேன்.