Sunday, February 2, 2014

6174: தமிழ் புதினத்தின் ஒரு முக்கியமான மைல்கல்

சிற்சில தடைகளைத் தாண்டி வாசித்து முடித்து விட்டேன் 6174ஐ.

2012ன் இறுதியில் 6174ன் ஆசிரியர் க. சுதாகருடன் தொடர்பு வளையத்திற்குள் வந்தேன். அவரும் நானும் ஒரே வகுப்பில் பள்ளியிறுதி (+2) முடித்தவர்கள். அப்போதெல்லாம் சுதாகருக்கு எழுத்தார்வம் இருந்ததாக நினைவில்லை. எனவே அவர் ஒரு புதினம் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்த போது அதை வாசிக்க ஆவலானேன். ஜெயமோகன் அதைத் தமிழின் முதல் அறிவியல் புதினம் என்று விவரித்து 2012ல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களில் ஒன்றாக பரிந்துரைத்த போது ஆர்வம் அதிகரித்தது. சென்னைக்குச் செல்லும் போது வழக்கமான புத்தகக் கடைகளில் தேடி, கிடைக்கவில்லை என்று வம்சி புக்ஸ் இணைய தளத்தில் வாங்கி, பணம் செலுத்தி, அந்த பணம் வம்சியைச் சென்றடையாமல் என் வங்கிக் கணக்கிற்கே திரும்பி வந்து, கடைசியில் 2014 புத்தகக் கண்காட்சியில் நேராக வம்சி ஸ்டாலுக்கே சென்று புத்தகத்தை வாங்கி வந்தேன். மேற்கூறியது நடந்த சுமார் ஓராண்டு இடைவெளியில் 6174 குறித்த பல குறு விமர்சனங்களை இணையவெளியில் காண நேர்ந்தது. அனைத்தும் பாராட்டுதல்களே. தமிழர்கள் நமது வழக்கப்படியே சுதாகருக்கு தமிழின் டான் ப்ரௌன், றாம் க்ளான்ஸி என்றெல்லாம் பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். மெத்த மகிழ்ச்சி.

சுதாகருடன் எனக்கு முன்பழக்கம் இல்லையென்றாலும் கூட 6174 தமிழ் புதினத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறியிருப்பேன். ஏனென்றால் கணிதப் புதிர், அறிவியல் தத்துவங்கள் அடைப்படையில் 400 பக்கங்களுக்கு தமிழில் எழுத ஒரு தெனாவட்டு வேண்டும். அதுவும் தமிழ் புத்தக உலகில் முன்னே பின்னே அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளருக்கு. அப்படிப்பட்ட புதினத்தைப் பிரசுரிக்க ஒரு பதிப்பகத்திற்கு பெரிய அளவில் தில் வேண்டும். இவையனத்திற்கும் மேலாக அது வெற்றிகரமான ஒரு படைப்பாக வேண்டுமென்றால் எழுதுபவருக்கு அசாதாரணமான திறமை வேண்டும். அந்தத் திறமை சுதாகருக்கு நிறையவே இருப்பது நூலில் தெரிகிறது.

6174ல் சுதாகரின் மிகப் பெரிய வெற்றி என்று நான் கருதுவது சிக்கல்கள் நிறைந்த களத்தில் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை சீராக செலுத்துவதுதான். வாசகனைக் கொஞ்சம் சலிப்படைய வைத்தாலும், இந்தப் புதினம் முழு தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம். லெமூரியக் காலம் தொடங்கி, இந்நாள் வரை, அமெரிக்கா, தென்னமரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ரஷ்யா, இந்தியா, மியன்மார் என்று உலகம் முழுவதும் விரிந்து, பக்கத்திற்குப் பக்கம் புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு செல்லும் ஒரு புதினம் மூளைக்கு வேலை வைப்பதுடன், அறுவையாகவுமல்லவா இருக்கிறது என்று மூடி வைத்து விட்டால், அவ்வளவுதான். பிறகு திறந்து வாசிப்பது அரிதாகிவிடும். ஆனால், 6174ன் ஒவ்வொரு பக்கத்திலும் சின்னச் சின்ன மர்ம முடிச்சுகளை இடுவதும், விடுவிப்பதுமான உத்தி அதைக் கடைசி வரை ஆர்வத்துடன் வாசிக்க வைத்து விடுகிறது. இந்த நூல் பரந்த ஒரு வாசகத் தளத்தை வெற்றிகரமாக அடைந்ததற்கு இது ஒரு பிரதான காரணமாக இருக்கலாம்.

இன்னொரு காரணம் எண்-எழுத்துப் புதிர், அறிவியல் தத்துவங்களைத் தாண்டி இந்தப் புதினம் நடமாட விடும் கதாபாத்திரங்கள், அவர்களின் பின்னணி வரலாறுகள் ஆகியவற்றை சுவாரஸ்யமாக சொல்லும் விதம். ஒரு சராசரியான, பொழுதுபோக்கு த்ரில்லர் வகை நாவல் கூட சுவாரஸ்யமாக கதாபாத்திரங்களை உருவாக்கி உலவ விடலாம். ஆனால், சுதாகரின் பாத்திரப் படைப்பிலும், அவர்களுக்கிடையே இருக்கும் உறவுகளின் சித்திரத்திலிமிருக்கும் ஆழம் சராசரியான, பொழுதுபோக்கு த்ரில்லர் வகை நாவல்களில் காண முடியாதது.

6174ஐ வாசிக்கும் போது “இது என்ன வகை புதினம்?” என்று அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வது போல் இதை அறிவியல் புதினம் என்று அழைக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது. வரலாறு, கணிதம், புவியியல், உயிரியல், மற்றும் நவீன தொழில் நுட்பம் என பல துறைகளிலும் அறிவார்த்தமாக கதை பயணிக்கிறது என்றாலும், இதன் மைய இழை பல்வகைப் புதிர்களை (எண் புதிர்கள், வார்த்தைப் புதிர்கள், வடிவப் புதிர்கள்) அவிழ்த்து அறிவியலாளர்கள் சிலர் எப்படி அழிய இருக்கும் உலகைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே. எனவே, 6174 த்ரில்லர் வகையிலான ஒரு படைப்பு என்றே கருதுகிறேன். இந்த வகையில் சுதாகரை தமிழின் டான் ப்ரௌன் என்றழைப்பது எனக்கு சரியானதாகவே படுகிறது.  இருப்பினும், இருத்தல் குறித்த அறிவியல் தத்துவங்களை இரண்டு மூன்று பக்கத்திற்கு விவாதிக்கும் ஒரு புதினத்தை அறிவியல் புதினமில்லையென்று ஒதுக்கவும் மனம் ஒப்பவில்லை. 

6174 குறித்து நான் வாசித்த விமர்சனங்களனைத்தும் பாராட்டுதல்களே என்பதால் நூலில் கண்ட சில குறைகளையும் பதிவிட விரும்புகிறேன். ஓரளவிற்குப் பெரிய குறையாக நான் பார்ப்பது, கடைசி 50 பக்கங்களில் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற ரீதியில் கதை நகர்த்தப்பட்ட உணர்வு ஏற்படுவதுதான். இந்த பக்கங்களில் ஆசிரியரின் தடுமாற்றங்கள் சில இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, மிங்குன் பகோடாவில் நேரக் கணக்குகள்; அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையைப் பற்றிய விவரணைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கதாசிரியர் ஏற்படுத்திய பல முடிச்சுகளில் சில அவிழ்க்கப்படாமல் போன ஒரு உணர்வையும் தவிர்க்க முடியவில்லை. இதை ஊர்ஜிதம் செய்ய நாவலை முதலில் இருந்து மறுபடியும் படிக்க வேண்டும்.

மேலை நாடுகளில் இருப்பது போன்று புத்தக ஆசிரியர் (புக் எடிட்டர்) ஒருவர் இருந்திருந்தால் 6174 இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று கருதுகிறேன். தன்னுடைய இயற்பியல் துறை சம்பந்தப்பட்ட கலைச் சொற்களை தமிழில் சொல்லும் சுதாகர் (உதாரணம்: நுண்துளைக் குழாய்), அயல் துறையான உயிரியலில் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவது நெருடலாக இருக்கிறது, உதாரணம்: ஜெயண்ட் ஸ்க்யுட் (ராட்சதக் கணவாய்). தமிழாக்கம் செய்த இடங்களில் தவறாகவும் வந்திருக்கிறது. உதாரணம் catfish என்பது பூனைமீன் அல்ல; கெளிறு அல்லது கெளுத்தி என்பதுதான் சரி. நீலத்துடுப்பு சூறை மீன்களை வலை வீசிப் பிடிப்பதில்லை; தூண்டில் போட்டே பிடிக்கிறார்கள். அப்படிச் செய்தால்தான் அந்த வகை மீனை ஜப்பானிய முறைப்படி பச்சையாக உண்ண முடியும். ஜானகி அமெரிக்காவில் போஸ்ட் டாக்டரேட் செய்ய ஜிஆர்ஈ தேர்வு எழுதியதாக ஓரிடத்தில் வருகிறது. மாஸ்டர்ஸ், பிஎச்டி போல போஸ்ட் டாக்டரேட் என்பது ஒரு பட்டப் படிப்பல்ல; பயிற்சியனுபவம்தான். எனவே போஸ்ட் டாக்டரேட் செய்ய ஜிஆர்ஈ தேவையில்லை. இது போன்ற சிறு தவறுகளை புக் எடிட்டர் ஒருவர் இருந்திருந்தால் சரி செய்திருக்கலாம். 
              

6174ன் வெற்றியைத் தொடர்ந்து சுதாகர் மேலும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவரது அடுத்த புதினம் 6174ஐயும் விஞ்சும் என்றும் எதிர்பார்க்கிறேன். 

Sunday, January 26, 2014

அதிர்ஷ்டசாலி எழுத்தாளர்கள்

கோவில் திருவிழா வரும் போதெல்லாம் குத்தாட்டக் குழு வருவதைப் போல சென்னையில் புத்தகக் கண்காட்சி வரும் போதெல்லாம் எழுத்தாளர்களுக்குள் குஸ்திச் சண்டையும் வந்து விடுகிறது. சண்டைகளில் இரண்டு வகை உண்டு. இந்தியா-பாக்கிஸ்தான், ஈரான்-இஸ்ரேல், வட கொரியா-தென் கொரியா என்று நீண்ட நெடுங்காலப் பகை கொண்ட நாடுகளிக்கிடையில் சண்டை மூள்வது எதிர்பார்க்கப்படும் சண்டை. ஆனால் சற்றும் எதிர்பாராமல் இரண்டு நாடுகளுக்கிடையில் சண்டைகள் வரலாம். இங்கிலாந்தும் அர்ஜெண்டினாவும் போட்ட சண்டை போல. இது எப்போதாவதுதான் நிகழும். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இரண்டாவது வகை சண்டை எப்போதும் நிகழும் சண்டையாகி விட்டது. யார், யாரோடு சண்டை போடப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கே தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.  இந்த பொங்கலுக்கு மாமல்லனும் மனுஷ்யபுத்திரனும் களத்தில் நிற்கிறார்கள். மாமல்லன் எழுத்தில் காட்டும் சிக்கனத்தை ஏச்சில் காட்ட மாட்டார் என்பதால் களம் கலங்கிப் போய் நிற்கிறது.

தனது படைப்புக்கள் அச்சில் புத்தக வடிவில் பதிக்கப்பட்டிருப்பினும் PDF வடிவில் தானே வெளியிடுவது தவறில்லை என்பதிலும், பதிப்பாளர் எழுத்தாளரின் புத்தகம் எத்தனை பிரதிகள் அச்சாக்கப்பட்டு விற்பனையாகியுள்ளது என்ற தகவலை எழுத்தாளரிடம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார் என்ற வகையிலும் மாமல்லன் பக்கம்தான் நியாயமிருக்கிறது. மேற்படையாகப் பார்க்க ம.பு. நாகரிக மொழியில் உரையாடுவதாகவும், மாமல்லன் குழாயடிச் சண்டை பாஷையில் பேசுவதாகவும் தோன்றலாம். ஆனால், மாமல்லன் நியாயமான தனது கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறார்; ம.பு. கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்கிறார், மாமல்லன் மீது தனிமனிதத் தாக்குதல் நடத்த முற்படுகிறார் என்பதைப் பார்க்கும் போது மாமல்லன் பக்கத்து நியாயம் இன்னும் வலுவாகத் தோன்றுகிறது.

தமிழில் படைப்புகள் முதலில் இணையத்திலும் அதன் பிறகு அச்சிலும் வெளிவருவது பரவலாகி வரும் நிலையில், உலக அளவில் பதிப்பகங்களையும், வெளியீட்டு நிறுவனங்களையும் புறக்கணித்து, படைப்பாளிகளே நேரடியாக மக்களுக்கு தங்களுடைய படைப்புக்களை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதையும் பார்க்கும் போது, மனுஷ்யபுத்திரன் “நாம் எந்த விதமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?” என்பதை இன்னும் ஒரு தடவை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆனாலும் … இலக்கியப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள் ஐயாயிரத்தைத் தாண்ட மாட்டார்கள் என்று கணிக்கப்படும் தமிழ்ச் சூழலில் உயிர்ம்மை போன்ற பதிப்பகங்கள் என்ன லாபத்தைச் சம்பாதித்து விட முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சராசரி புத்தகத்தின் விலை ரூ 300 என்று வைத்துக் கொள்ளலாம். அதில் பதிப்பகத்திற்கு நிகர லாபம் 35%, அதாவது ரூ 105 என்று உத்தேசித்துக் கொள்வோம். பதிப்பகத்திற்கு 100 புத்தகங்கள் உள்ளன; ஆண்டிற்கு 200 பிரதிகள் விற்கின்றன என்றால் லாபம் சுமார் 31 லட்சம் வருகிறது. இன்றைய வணிகச் சூழலில் இது பெரிய லாபமாக தோன்றவில்லை.

ஆனாலும் … மனுஷ்யபுத்திரன் ஏன் எல்லாப் பிரதிகளையும் விற்றுத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் புரியவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு சாரு நிவேதிதாவும் தனது எக்சைலை விற்பதில் உயிர்ம்மை ஆர்வம் காட்டவில்லையென்று ம.பு.வுடன் மல்லுக்கு நின்றார் என்று நினைவிருக்கிறது. குறைவான எண்ணிக்கையில் பொருட்களை சந்தைப்படுத்தி, பொருட்களின் மவுசை உயர்த்த விழையும் வியாபார உத்தியா இது? Does not make any sense.

ஆனாலும் … இந்த சண்டையிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஒன்று. ஒரு வகையில் பார்த்தால் எழுத்தாளர்கள் அதிர்ஷ்டசாலிகள். ராயல்ட்டி கிடைக்கிறதோ இல்லையோ, எழுதியதற்கு காப்பி ரைட் அவர்களிடம்தான் இருக்கிறது. எங்கள் அறிவியல் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். பாடுபட்டு ஆய்வு செய்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் காப்புரிமையை பதிப்பாளர்களுக்கு எழுதிக் கொடுத்த பிறகுதான் கட்டுரைகளை வெளியிடுவதா வேண்டாமா என்று பரிசீலிக்கவே தொடங்குவார்கள். அச்சானால், அந்தக் கட்டுரையின் அச்சு நகலின் மீது கூட கட்டுரை ஆசிரியருக்கு உரிமை கிடையாது. ஒன்று பல்லாயிரம் ஏன் சில லட்சங்கள் கூட கொடுத்து சஞ்சிகையை வாங்க வேண்டும், அல்லது இரண்டாயிரம் மூவாயிரம் கொடுத்து ஒரு தனிக் கட்டுரையை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முன்னணிப் பதிப்பகங்கள் பல மில்லியன் டாலர் வருமானத்தில் 30-35% நிகர லாபம் ஈட்டுகின்றன. ஆனால் கட்டுரை ஆசிரியருக்கு சல்லிப் பைசா கிடையாது. சில பதிப்பகங்கள் கட்டுரை ஆசியரிடமிருந்து பதிப்பீட்டுக் கட்டணமும் பெற்றுக் கொள்கின்றன. சஞ்சிகைகளுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான அறிவியல் நூல்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாசியர்களுக்கும் கூட இதே நிலைதான். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வற்புறுத்துதலின் பேரில் ஒரு துறை நூலின் ஆசிரியராக ஒத்துக் கொண்டேன். சுமார் 400 பக்க நூல். ஜூனில் முடித்துக் கொடுக்க வேண்டும். எப்படியும் ஒரு மாதத்தை விழுங்கி விடும். தம்பிடி தேறாது. துறைக்காற்றிய சேவையாக எண்ணி, நம்மையே தேற்றிக் கொள்ளலாம், அவ்வளவுதான்.   

Sunday, January 19, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2014

பல வருடங்களுக்குப் பிறகு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சனிக்கிழமை என்பதால் கூட்டம் எக்கச்சக்கம். கடைகள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. புத்தகங்களை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகக் கூடியது போல தெரிகிறது. வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பதில்தான் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டது போல் தெரியவில்லை.

வம்சி பதிப்பகத்தில் ஒரே ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் இந்த முறை கண்காட்சிக்குள் நுழைந்தேன். ஒவ்வொரு வரிசையிலும் நுழைவிலேயே என்னென்ன கடைகள் இருக்கின்றன என்று தட்டி வைத்திருக்கிறார்கள். இது நல்ல ஏற்பாடு. 10 நிமிடத்திற்குள் வம்சியைக் கண்டு பிடித்து புத்தகத்தை வாங்கி விட்டேன். கூடவே, பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் “சிதம்பர ஸ்மரண” என்ற படைப்பின் “சிதம்பர நினைவுகள்” எனும் தமிழாக்கத்தையும் வாங்கி வந்தேன்.

இன்று ஞாயிறு. சென்னையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூர் வழியாகப் பயணம். அதிகாலை தொடங்கிய பயணம் என்பதால் தேவாலயத்திற்குப் போக முடியாது என்று தெரியும். தேவாலயத்தில் கடவுளைத் தெரிந்து கொள்வதை விட, வழிபடுவதை விட, இயற்கையில், ஒரு இலையின் அசைவில், ஒரு மலரின் அழகில், ஒரு பறவையின் சிறகில், அவரை அதிகம் தெரிந்து கொள்கிறேன், வழிபடுகிறேன் என்றாலும் கூட ஏதாவது ஒரு ஞாயிறு தேவாலயத்திற்குப் போக முடியவில்லையென்றால் சற்று உறுத்தலாக இருக்கும்.

சிதம்பர நினைவுகளைப் படிக்க, படிக்க அந்த உறுத்துதல் மறைந்ததை உணர்ந்தேன். நேற்று புத்தகத்தை வாங்கிய போது சரியாகக் கவனிக்காததால் அதை ஒரு சிறுகதைத் தொகுப்பு என்றுதான் நினைத்திருந்தேன். இன்றுதான் கவனித்தேன் அது அவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை விவரிக்கும் பல கட்டுரைகளின் தொகுப்பு என்று. படிக்கும் போதுதான் உணர்ந்தேன் அது வெறும் விவரிப்பு கிடையாது, அவரது வாழ்வையே ஒளிவு, மறைவின்றி வெளியரங்கமாக்கி மானுடத்திற்கு படைக்கப்பட்ட ஒரு உன்னதம் என்று. ஏறக்குறைய ஒவ்வொரு கட்டுரையும் எளிமையான மொழியில், சிக்கனமான வாக்கியங்களில், நம் மனதின், இயல்பின் சிக்கல்களைப் புரிய வைக்கிறது.

சிதம்பர நினைவுகளின் ஓரிடத்தில் பகவத் கீதையிலிருந்து காட்டப்பட்ட ஒரு மேற்கோளின் மீது என் மனம் இன்னும் குவிந்து கொண்டிருக்கிறது:

“பிரியமில்லாவிட்டாலும், பலமாக நிர்பந்திக்கப்பட்டவன் போல இந்த மனிதன் ஏன் இப்படி தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருக்கிறான்?”

கிறித்தவத்திலும் இதற்கிணையான சிந்தனை இருக்கிறது. பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் இப்படிச் சொல்கிறார்: “நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; மாறாக விரும்பாத தீமையையே செய்கிறேன்.”

சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் எவ்வளவு உண்மை!